உனக்கே நாம் ஆட்செய்வோம் என்று கண்ணணின் கழலினையே நன்னும் மனமுடையவளின் தெய்வீகத்தையும், அவள் அருளிய பகவத் விஷய ஞானத்தையும், அவளின் பக்தியையும் தூக்கியெறிந்து விட்டு, அதிலுள்ள தமிழின் ஆட்சிமையையும் கவிதை நயத்தையும் மட்டும் பிரித்தெடுத்து கொண்டாட நினைக்கும் மக்களின் அணுகுமுறை உயிரைக் கொன்று விட்டு வெறும் எலும்புக்கூட்டைக் கொண்டாடுவதைப் போன்றதாகும். ஆண்டாளை பக்தியுடன் அணுகும் விதத்தை இக்கட்டுரையில் அறிய முயல்வோம்.
ஆண்டாளைப் பற்றிய தரமற்ற விமர்சனம் நெஞ்சில் ஈட்டி பாய்ந்ததைப் போல இருந்ததால், கண்டனம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். அதுவும் ஆண்டாளைப் புகழ்வதற்கென்று அமைக்கப்பட்ட மேடையில் ஆண்டாளின் சிறப்புமிக்க மார்கழி மாதத்தில், இச்செயல் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது, வேதனையளிக்கிறது. கடுமையாகக் கண்டிக்கின்றோம், பேசியவனின் சொற்களில் உள்ள அடிப்படைப் பிழைகளையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.