மனிதப் பிறவி பற்பல கோடிக்கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சிக்குப்பின் பெறப்பட்டுள்ளது. பத்ம புராணத்தின்படி 84,00,000 உயிரின வகைகள் உள்ளன என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். ஆத்மா மனிதப் பிறவிகளில் மட்டுமே உள்ளது என்பதல்ல. நாம் எல்லாரும்—மிருகங்கள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள், மரங்கள், செடிகள், நீர்வாழ் இனங்கள் என அனைவருமே ஆத்மாக்களே. ஆத்மா பல வகையான உடைகளால் மறைக்கப்பட்டுள்ளது. இஃது உங்களில் சிலர் சிவப்பு நிறத்திலும் சிலர் பச்சை, வெள்ளை நிறங்களிலும் வகைவகையாக உடை அணிந்திருப்பதைப் போன்றது. ஆனால் நாங்கள் உடைகளுக்கு (உடலுக்கு) முக்கியத்துவம் கொடுப்பதில்லை; ஆத்மாவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
கிருஷ்ணருடன் இருந்த ஜீவன், இந்த பெளதிக உலகில் எவ்வாறு வீழ்ச்சியடைந்தான் என்னும் வினாவினை பலரும் வினவுகின்றனர். அதற்கான விடை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஜீவனின் நிலையானது ஜட சக்தியில் அவன் மயக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது; உண்மையில், அவன் வீழ்ச்சியடையவில்லை. மேகக் கூட்டம் நகரும்போது அதற்குப் பின்னால் உள்ள நிலாவும் சேர்ந்து நகருவதைப் போன்று தோன்றலாம். ஆனால் உண்மையில் நிலா நகருவதே இல்லை. அதுபோலவே, பரமனின் ஆன்மீகப் பொறியாகிய ஜீவன் வீழ்ச்சியடைவதே இல்லை. ஆயினும், “நான் வீழ்ச்சியடைந்துள்ளேன், நான் பெளதிகமானவன், நான் இந்த உடல்,” என்று அவன் நினைத்துக் கொண்டுள்ளான்.
பௌதிக உலகில் உயிர்வாழி எவ்வாறு அறியாமையினால் மறைக்கப்பட்டுள்ளான் என்பதுகுறித்த விவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது. கனவில், நான் இன்னார், இப்படிப்பட்டவன், எனக்கு வங்கியில் இவ்வளவு பணம் உள்ளது,” என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் நாம் மறந்துவிடுவது வழக்கமே. கனவிலும் சரி, நினைவிலும் சரி, நாம் எப்போதும் செயல்களில் ஈடுபட்டுள்ளோம். கனவிலும் நாமே செயல்படுகிறோம், விழித்திருக்கும் நிலையிலும் நாமே செயல்படுகிறோம். கனவு, நினைவு என்று சூழ்நிலைகள் மாறும்போதிலும், இவற்றை உணரக்கூடிய ஆத்மா எனும் நாம் மட்டும் அப்படியே மாறாது இருக்கிறோம், ஆனால் காண்பவற்றை மறந்துவிடுகிறோம்.
குறைபாடுகளுடைய புலன்களால் குறைபாடுடைய அறிவையே தர முடியும். விஞ்ஞான அறிவு என்று நீங்கள் கூறுவது போலியாகும். ஏனெனில், அந்த அறிவினை உண்டாக்கிய மனிதர்கள் குறையுடையவர்கள். குறையுள்ள மனிதர்களிடமிருந்து குறையற்ற அறிவை எவ்வாறு பெற முடியும்?
பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு மனித உடலை அடைவது மிகமிக கடினமாகும், அப்படியே அடைந்தாலும், அதை எந்த நொடியிலும் இழந்துவிடக் கூடும். ஆனால் மனித வாழ்வைப் பெற்றவர்கள்கூட, வைகுண்ட நாதருக்கு பிரியமான தூய பக்தர்களின் சகவாசத்தை அரிதாகவே பெறுகின்றனர்.” (ஸ்ரீமத் பாகவதம் 11.2.29)
பற்பல பிறவிகளைக் கடந்தபின், உண்மையான அறிவுடையவன் எல்லா காரணங்களுக்கும் காரணமாக, எல்லாமாக என்னை அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா மிகவும் அரிதானவன்.” (பகவத்கீதை 7.19)