அர்ஜுனன் தன்னிடம் சரணடைந்த சீடன் என்பதால், நட்பு ரீதியிலான அனைத்து வார்த்தைகளையும் கைவிட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், உடனடியாக குருவின் ஸ்தானத்தை ஏற்று, பண்டிதனைப் போல நீ பேசினாலும், வருத்தப்பட வேண்டாதவற்றிற்காக வருத்தப்படுவதால், உண்மையில் நீ ஒரு முட்டாள்; அறிஞர்கள் இருப்பவர்களுக்காகவும் இறந்தவர்களுக்காகவும் வருந்துவதில்லை” என்று தனது சீடனைக் கண்டிக்கின்றார். போரினால் உறவினர்கள் இறந்துவிடுவர் என்று நினைத்த அர்ஜுனனிடம், நீயோ, நானோ, இங்குள்ள மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை, இனி இருக்கப்போவதும் இல்லை,” என்று கூறி, உடல் மட்டுமே அழிவிற்கு உட்பட்டது என்றும், உடலுக்குள் இருக்கும் ஆத்மா அழிவற்றது என்றும் விளக்கினார்.