முழுமுதற் கடவுளின் அறிவுரைக்கேற்ப பிரம்மதேவர் நூறு தேவ வருடங்களுக்கு பகவானின் பக்தித் தொண்டெனும் உயர்ந்த தவத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் பிறகு அவர், தான் அமர்ந்திருந்த தாமரை மலரும், அம்மலருக்கு ஆதாரமாக விளங்கிய நீரும் வலிமையான சூறைக் காற்றினால் ஆடுவதைக் கண்டார். பக்தித் தொண்டால், நடைமுறை அறிவில் முதிர்ச்சியடைந்திருந்த பிரம்மதேவர் அச்சூறைக் காற்றை நீருடன் சேர்த்துப் பருகினார்.
பின்னர், அவர் தான் அமர்ந்திருந்த தாமரையானது பிரபஞ்சம் முழுவதும் பரந்து விரிந்திருந்ததைக் கண்டார். அதை முதலில் மூன்று பிரிவுகளாகவும் பின்னர் பல்வேறு வகையான உயிரினங்கள் வசிப்பதற்காக பதினான்கு கிரக அமைப்புகளைப் படைத்தார். உயிர்வாழிகள் தங்களின் குணங்களுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட கிரகத்தில் குடியமர்த்தப்படுகின்றனர்.
பரம புருஷ பகவான் முக்குணங்களைப் படைக்கிறார், ஆனால் அவற்றால் அவர் பாதிக்கப்படுவதில்லை. இம்மூன்று குணங்களிலிருந்து பொருள், அறிவு, செயல் ஆகியவை உருவாகின்றன. இக்குணங்களின் காரணத்தால், ஜீவராசிகள் தங்களின் நித்திய தன்மையை மறக்கின்றனர்.