நிரந்தரமற்ற துன்பமயமான இவ்வுலகில் பலர் வாழும் கலை பற்றி போதிக்கின்றனர். ஆனால் ஒருவரும் சாகும் கலை பற்றி சொல்வதேயில்லை. மரணம் என்று ஒன்று இருப்பதையே மறந்து விட்டு மனிதர்கள் வாழ்கின்றனர். மாமன்னர் யுதிஷ்டிரரிடம், “எது மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயம்?” என்று கேட்ட போது, தினம் தினம் அடுத்தவர் இறப்பதைப் பார்த்தும் தான் சாக மாட்டேன் என்று ஒவ்வொரு மனிதரும் நினைப்பதே மிகவும் ஆச்சரியமான விஷயம் என்று பதிலளித்தார். மரணத்தை எதிர்கொள்வது எப்படி? இறுதி யாத்திரைக்கு தயார் செய்வது எப்படி?
பக்தர்கள் செய்யும் சிறிதளவு பக்தியையும் பகவான் நினைவு கொள்பவர். அவர் கருணை மிக்கவர் என்பதால், நினைவுகொள்ளுங்கள் என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இறக்கும் தருவாயில் பக்தன் மறந்தாலும் கிருஷ்ணர் அவனுக்கு நினைவுபடுத்தி விடுவார்.