ஆதாரமற்றதும் நடைமுறைக்கு ஒத்துவராததுமான அத்தகு கூற்றுகளை எடுத்துரைக்கும் நபர்களுக்கு பதிலளிக்கும் வகையில், சாஸ்திரங்களின் முக்கியத்துவத்தை பகவத் தரிசனத்தின் சென்ற இதழில் வெளியிட்டிருந் தோம். ஆன்மீகத் தன்னுணர்வைப் பெறுவதில் குருவின் அவசியத்தை இந்த இதழில் காணலாம்.
முறையான குருவிற்கான சிறிதளவு தகுதிகளையும் இல்லாத இவர்கள், விளம்பர உத்திகளின் மூலமாக பிரபலமடைந்து மக்களை வசதியாக ஏமாற்றுகின்றனர். காலில் விழுவதற்கு ரூ. 10,000, கட்டிப் பிடிப்பதற்கு ரூ. 50,000, வீட்டிற்கு வருவதற்கு ஒரு இலட்சம், தீக்ஷை அளிப்பதற்கு ஐந்து இலட்சம் என்றெல்லாம் ஆன்மீகத்தைப் பட்டியல்போட்டு விளம்பரப்படுத்தி சொகுசாக வாழ்கின்றனர்.
மாதா, பிதா ஆகிய இரண்டும், குரு மற்றும் தெய்வத்திற்கு முன்பாக வருவதால், பெற்றோர்கள் தெய்வத்தைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்று கூறுவோர் பலர். மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் சொற்களுக்கு உண்மையான பொருளைக் காண்பதற்கு முன்பாக, பெற்றோர்கள் தெய்வத்தைக் காட்டிலும் உயர்ந்தவர்களா என்பதைக் காண்போம்.