கலி யுகம் 4,32,000 வருடங்களைக் கொண்டது. தற்போது 5,000 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மீதமுள்ள 4,27,000 வருடங்களில் தர்மம் மேன்மேலும் படிப்படியாகக் குறைந்து, கலி புருஷன் அதர்மச் செயல்களை உச்ச நிலையில் தலை தூக்கி அரங்கேற்றுவான் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் துவாபர யுகத்தின் இறுதியில் தன் திவ்யமான லீலைகளை முடித்த பிறகு மீண்டும் ஆன்மீக உலகிற்குச் சென்றார். அதன் பிறகு தோன்றிய கலி புருஷன், ஒருநாள் மூன்று கால்களை இழந்து ஒற்றைக் காலுடன் நின்று கொண்டிருந்த எருதினை மேலும் துன்புறுத்தியபடி, அதன் மீதமிருந்த காலையும் உடைத்துக் கொண்டிருந்தான். (கலி புருஷனின் இச்செயலானது, கலி யுகத்தில் தர்மம் 25 சதவீதத்தில் தொடங்கி, இறுதியில் சூன்யமாகிவிடும் என்பதைக் காட்டுகின்றது) நாட்டைக் காவல் காப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாமன்னர் பரீக்ஷித் அக்காட்சியைக் காண நேர்ந்தது. ஒரு சூத்திரன் மன்னரைப் போல உடையணிந்து கொண்டு எருதை வதைப்பதையும் அதனைக் கண்டு பசு கண்ணீர் விட்டு அழுது கொண்டிருப்பதையும் பார்த்த மாத்திரத்தில், மாமன்னர் அவனைக் கொல்வதற்காக வாளை உருவினார்.
பரீக்ஷித் கலியை தண்டித்ததைப் பற்றி கேள்விப்பட்ட சௌனக ரிஷி, அவ்விஷயம் கிருஷ்ணரோடு தொடர்புடையதாக இருப்பின் விரிவாக விளக்குமாறு வேண்டினார். பகவத் பக்தர்கள் பகவானின் தாமரைப் பாதங்களிலிருந்து கிடைக்கும் தேனைச் சுவைப்பதில் பழக்கப்பட்டவர்கள். பகவானின் புனித நாமம் மற்றும் லீலைகளை கேட்பதும் பாடுவதும் மரணத்தின் பிடியிலிருந்து தப்புவதற்குரிய ஒரே வழியாகும். எமராஜன் பகவானின் மிகச்சிறந்த பக்தர் என்பதால், பகவானின் பக்தித் தொண்டில் இடைவிடாமல் ஈடுபட்டுள்ள தூய பக்தர்களின் கீர்த்தனங்களுக்கும் யக்ஞங்களுக்கும் அழைக்கப்படுவதை அவர் பெரிதும் விரும்புகிறார். எனவே, சௌனகரைத் தலைமையாகக் கொண்ட பெரும் முனிவர்கள் நைமிஷாரண்யத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட யாகத்திற்கு எமராஜரையும் அழைத்திருந்தனர். மரணமடைய விரும்பாத வர்களுக்கு அது நல்ல பலனை அளித்தது.