ருத்ர கணங்களால் தாக்கப்பட்ட புரோகிதர்களும் தேவர்களும் மிகுந்த பயத்துடன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட, பிரம்மதேவர் பதிலளித்தார், சிவபெருமானுக்கு வேள்வியின் அவிர்பாகத்தை வழங்காமல் பெறும் தவறை இழைத்துவிட்டீர்கள். இருப்பினும், அவர் எளிதில் திருப்தியுறும் தன்மை கொண்டவர் என்பதால், அவரது திருவடிகளைப் பற்றி மன்னிப்பு கோருங்கள். தக்ஷனுடைய சொல் அம்புகளால் புண்பட்ட அவர் தற்போது தமது மனைவியையும் இழந்துள்ளார். ஆகவே, அவர் கோபம் கொண்டால் அனைத்து உலகங்களும் அழிவுறுவது திண்ணம். உங்களது யாகம் சரிவர நிறைவேற வேண்டுமெனில், அவரிடம் சென்று மன்னிப்பை யாசியுங்கள்.” இவ்வாறு தேவர்களுக்குக் கட்டளையிட்ட பிரம்மதேவர், அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு கைலாசத்தை நோக்கிப் புறப்பட்டார்.