பக்தி யோகத்தின் விதிகளை ஒருவனால் பயிற்சி செய்ய முடியாவிடில், கிருஷ்ணருக்காக மட்டும் வேலை செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். இத்தகைய நிலையில் இருப்பவன், கிருஷ்ண பக்தியின் செயல்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்யலாம்; அவ்வாறு செயல்படுபவனும் படிப்படியாக பக்குவநிலையை அடைய முடியும்.
“விஸ்வரூபம்” என்னும் தலைப்பைக் கொண்ட பதினொன்றாம் அத்தியாயம், கிருஷ்ணர் கூறிய பரம இரகசியங்களைக் கேட்டதால் தனது மயக்கம் தெளிவடைந்து விட்டதாக அர்ஜுனன் அறிவிப்பதுடன் தொடங்குகின்றது. கிருஷ்ணரின் அழிவற்ற பெருமைகளை முற்றிலுமாக ஏற்றபோதிலும், அவர் தமது திருவாயினால் கூறிய வைபவங்கள் அனைத்தையும் அவரது விஸ்வரூபத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆவலை அர்ஜுனன் முன்வைத்தான்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கிருஷ்ணரை சிலர் மதிக்காமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி இயற்கையாக எழலாம். அவர் மனிதர்களுக்கு மத்தியில் தோன்றுவதால், அவரது தெய்வீக இயற்கையை உணராத முட்டாள்கள் அவரை ஏளனம் செய்கின்றனர். கிருஷ்ணரை உள்ளபடி ஏற்றுக் கொள்ளாமல், அவரை ஒரு சக்தியுடைய மனிதனாகவோ, கர்மத்தினாலும் தவத்தினாலும் அற்புத ரூபம் பெற்றவராகவோ, அருவமான அவர் ரூபத்தைத் தாங்கி வருவதாகவோ அந்த முட்டாள்கள் கற்பனை செய்கின்றனர். மனிதரைப் போல தோன்றினாலும், அவர் சாதாரண மனிதரல்ல; அவரது திருமேனி நித்தியமானது, அறிவு நிரம்பியது, மற்றும் ஆனந்தமயமானது. அவர் இவ்வுலகில் தோன்றும்போது, தனது நித்திய உருவில் தனது அந்தரங்க சக்தியின் மூலமாகத் தோன்றுகிறார். இதைப் புரிந்துகொள்ளாத மூடர்கள், ராட்சசத்தனமான கருத்துக்களாலும் நாத்திகக் கருத்துக்களாலும் கவரப்பட்டு, தங்களது முக்திக்கான ஆசைகள், கர்மங்கள், அறிவுப் பயிற்சிகள் என அனைத்திலும் தோல்வியை சந்திக்கின்றனர்.
கிருஷ்ணரிடம் சரணடைந்தால் மாயையை எளிதில் கடக்க முடியும்; இருப்பினும், பலர் கிருஷ்ணரிடம் சரணடைவது இல்லை, ஏன்? ஏனெனில், அவர்கள் சற்றும் அறிவற்ற மூடர்களாகவும், மனிதரில் கடைநிலை யோராகவும், மாயையிடம் அறிவை இழந்தவர்களாகவும், அசுரர்களின் நாத்திகத் தன்மையை ஏற்றவர்களாகவும் உள்ளனர். இந்த நான்கு துஷ்டர்களும் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை.
மூடர்கள்: இவர்கள் இரவு பகலாக கழுதையைப் போன்று புலனின்பத் திற்காக உழைக்கின்றனர். ஆன்மீக விஷயங்களுக்கு ‘நேரமில்லை’ என்று கூறிவிட்டு, பணப் பைத்தியம் பிடித்து அலையும் முதலாளிகளுக்குத் தொண்டு செய்வதில் இவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர், ஆனால் உன்னத முதலாளியான கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. மனிதக் கழிவுகளை தின்று வாழும் பன்றி, நெய்யாலும் சர்க்கரையாலும் செய்யப் பட்ட இனிப்புகளை மதிப்பதில்லை; அதுபோல, புலனின்பத்தில் சலிப்பின்றி மூழ்கியிருக்கும் இத்தகு முட்டாள்கள் கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதற்கு, நேரம் குறைவாக உள்ளது என்பர்.