சூரியனுக்கு கீழே 80,000 மைல் தொலைவில் இராகு கிரகம் உள்ளது. சிம்ஹிகா என்பவரின் மைந்தன் தேவராக இருப்பதற்கும் கிரகத்தின் அதிபதியாக இருப்பதற்கும் முற்றிலும் தகுதியற்றவன் என்றபோதிலும், முழுமுதற் கடவுளின் அருளால் அவன் இராகு கிரகத்திற்கு அதிபதியாக விளங்குகிறான்.
பகவான் மோஹினி ரூபம் ஏற்று தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கியபோது, இராகு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே தொந்தரவு செய்து அவர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் தடுத்தான்.சூரியன் மற்றும் சந்திரனுக்கு இராகு இடையூறு செய்யும் காலமே கிரகண காலம் என்று அழைக்கப்படுகிறது.
வரும் செப்டம்பர் 7, 2019, பாரத மக்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நாளாகும். ஆம்! அன்றைய தினம் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) செலுத்திய சந்திராயன் 2 சந்திரனில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திர மண்டல ஆராய்ச்சியில் சரித்திரம் படைத்த அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் குழுவில் இந்தியாவும் சேர்ந்து சாதனை படைத்து பேரும் புகழும் பெறும் நாள் வெகு அருகில் உள்ளது என்பதை எண்ணி இந்தியர்கள் பேராவலுடனும் எதிர்பார்ப்புடனும் உள்ளனர். நவீன அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம், வலிமை முதலிய பல கோணங்களிலிருந்து பார்க்கையில் இந்த சாதனையை இந்தியா படைக்குமேயாயின் இஃது இந்தியாவிற்கு உலக நாடுகள் மத்தியில் மாபெரும் செல்வாக்கை வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.