மாமன்னர் பிருது தமது நகரத்திற்குத் திரும்பியபொழுது, அந்நகரம் முத்துக்களாலும் மலர்களாலும் பொன்னாலும் அழகிய துணிமணிகளாலும், வாழை மரம், பாக்கு மரம் முதலிய மங்கல பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டு, தூப தீபங்களின் நறுமணம் கமழ, காண்போர் கண்களைக் கவரும் வண்ணம் இனிமையாகத் திகழ்ந்தது. குடிமக்கள் அனைவரும் தீபம், மலர், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தானியங்கள், குங்குமம் முதலிய மங்கல பொருட்களை கைகளில் ஏந்தி, நன்கு அலங்கரிக்கப்பட்ட இளம் சிறுமிகள் முன்னே நிற்க, வாத்தியங்களும் வேத மந்திரங்களும் முழங்க தமது மன்னரை இதயபூர்வமாக வரவேற்றனர்.
தம்மைப் புகழ்வதை தடுத்து நிறுத்திய பிருது மன்னர் முழுமுதற் கடவுளின் ஓர் அவதாரம் என்பதை மாமுனிவர்களிடமிருந்தும் மகான்களிடமிருந்தும் கேட்டறிந்த இசைக் கலைஞர்கள் ஆனந்தத்தில் திளைத்தனர். பிருது மன்னர் தங்களிடம் புன்னகையோடு உரையாடியதை எண்ணி மகிழ்ந்தனர். சூதர்கள், மாகதர்கள் போன்ற இசைக் கலைஞர்கள் முனிவர்களின் அறிவுரைப்படி அவரைத் தொடர்ந்து புகழ்ந்தனர்.