ஆண்டி முதல் அரசன் வரை அனைவரும் துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழவே விரும்புகின்றனர். நமது இன்பதுன்பங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்ளும்போது. இன்பம் இரட்டிப்பாகும் என்றும், துன்பம் பாதியாகக் குறையும் என்றும் மக்கள் கூறுவது வழக்கம். எனவே, மனித சமுதாயத்தில் கணவன், மனைவி, தாய், தந்தை, குழந்தை, சகோதரன், சகோதரி, தாத்தா, பாட்டி, நண்பன், அக்கம்பக்கத்தினர், உடன் பணிபுரிவோர் என உறவுமுறைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. உறவுகளை அடிப்படையாகக் கொண்டே குடும்பமும் சமுதாயமும் இயங்குகின்றன. பலர் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சியே தமது மகிழ்ச்சி என வாழ்கின்றனர். குடும்ப உறுப்பினர்களிடம் ஒருவர் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாலும், குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக எந்தவொரு தியாகத்தையும் ஏற்கின்றார். இவற்றிலிருந்து உறவுகளில் கிடைக்கும் அன்பு, பாசம், நேசத்திற்கு மனிதன் இயற்கையாகக் கட்டுப்படுகிறான் என்பதை அறிய முடிகிறது.