பகவான் தம் இருப்பிடத்திற்குச் சென்று விட்டதையும் யது குலத்தின் முடிவையும் கேள்விப்பட்ட யுதிஷ்டிரர் தாமும் பகவானின் நித்ய வாசஸ்தலத்திற்குத் திரும்பி விட முடிவு செய்தார். அதைக் கேட்ட குந்திதேவியும் பரம புருஷரின் பக்தித் தொண்டில் முழு கவனத்துடன் ஈடுபட்டு பௌதிக வாழ்வின் சுழற்சியிலிருந்து விடுபட்டாள்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம் சுய உருவத்துடன் இம்மண்ணுலகை விட்டுச் சென்ற அந்த நாளிலிருந்து, ஏற்கனவே ஒரு பகுதி மட்டும் தோன்றியிருந்த கலி முழுமையாக வெளிப்பட்டது. அதனால் பூமியின் எல்லாப் பகுதிகளிலும் பலவிதமான அமங்களமான சூழ்நிலைகள் உருவாயின. புத்திசாலியான யுதிஷ்டிர மஹாராஜர், பேராசை, பொய்மை, நேர்மையின்மை, மூர்க்கத்தனம் போன்றவை கலி யுகத்தின் ஆதிக்கத்தால் மேலோங்குவதைப் புரிந்து கொண்டார். அவர் தனக்கு நிகரான தகுதியைப் பெற்றிருந்த பேரன் பரீக்ஷித்தை அரியாசனத்தில் அமர்த்தினார். பின்னர், அநிருத்தனின் மகனான வஜ்ரனை சூரசேன நாட்டின் அரசனாக அமர்த்தினார்.