கலி யுகத்தின் தர்மமான ஹரிநாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார். வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களான அனைவரையும் விடுவிக்கும் திருப்பணியில் அவர் தன்னுடைய அந்தரங்க சேவகர்கள் பலரையும் ஈடுபடுத்தினார். அவர்களில் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீல ரூப கோஸ்வாமி.
கௌடீய சம்பிரதாயம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடமிருந்து தொடங்குகிறது, அவர் மாபெரும் பண்டிதராகத் திகழ்ந்தார் என்றபோதிலும், சிக்ஷாஷ்டகம் என்னும் எட்டு பாடல்களைத் தவிர அவர் வேறு எதையும் எழுதவில்லை. ஸம்பிரதாயத்தை நிலைநாட்டுவதற்குத் தேவையான எழுத்துப் பணியினை அவர் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளிடம் ஒப்படைத்தார். அதிலும் குறிப்பாக, ரூப கோஸ்வாமிக்கும் ஸநாதன கோஸ்வாமிக்கும் அப்பணி ஒப்படைக்கப்பட்டது. எனவே, கௌடீய சம்பிரதாயத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ள போதிலும் ரூப கோஸ்வாமியைப் பின்பற்றுபவர்கள் ரூபானுகர்கள் என்று அழைக்கப்பட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.