நமது உண்மையான மூல கிருஷ்ண உணர்வானது பௌதிக இன்பத்திற்கான உணர்வினால் களங்கமடையும்போது, அதாவது ஜடத்தை அடக்கியாள வேண்டும் என்ற எண்ணத்தினால் களங்கமடையும்போது, நமது துன்பங்கள் ஆரம்பமாகின்றன. உடனடியாக நாம் அறியாமையெனும் மாயையினுள் வீழ்ந்து விடுகிறோம். பௌதிக உலகிலுள்ள ஒவ்வொருவரும், “நான் இந்த உலகில் என்னால் முடிந்தவரை அனுபவிப்பேன்,” என்று எண்ணுகின்றனர். அற்பமான எறும்பிலிருந்து மிகவுயர்ந்த உயிர்வாழியான பிரம்மதேவர் வரை அனைவருமே எஜமானராக வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். உங்களது நாட்டிலும் எண்ணற்ற அரசியல்வாதிகள் தலைவர்களாக வேண்டும் என்று முயன்று கொண்டுள்ளனர். இதற்கான காரணம் என்ன? அனைவருமே எஜமானராக விரும்புகின்றனர்; இதுவே அறியாமை எனப்படுகிறது.