பகவானிற்கு இரு சக்திகள் உள்ளன. ஒன்று பௌதிக சக்தி, மற்றொன்று ஆன்மீக சக்தி. பௌதிகம், ஆன்மீகம் ஆகிய இரு சக்திகளில், ஆன்மீக சக்தி உயர்ந்தது, பௌதிக சக்தி தாழ்ந்தது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, மற்றும் அஹங்காரத்தால் ஆனது பௌதிக சக்தி. ஆன்மீக சக்தியானது உயிருள்ளதாகும். நாம் அனைவரும் இவ்விரு சக்திகளின் கலவைகளே. இது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது: யயேதம் தார்யதே ஜகத். இந்த மொத்த உலகமும் இவ்விரு சக்திகளால் இயங்குகிறது. வெப்பமும் ஒளியும் சூரியனிலிருந்து வருவதைப் போல இவ்விரு சக்திகளும் ஒரே மூலத்திலிருந்து வருகின்றன.
இந்த ஜடவுலகம் நமக்குப் பொருத்தமில்லாத இடம். இங்கு ஒவ்வொருவரும் நிச்சயமற்ற நிலையில் வாழ்கிறோம். நீங்கள் எவ்வளவு செல்வமுடையவராக இருந்தாலும், எவ்வளவு சக்தி வாய்ந்த நபராக இருந்தாலும், உறுதியற்ற நிலைகள் கண்டிப்பாக உண்டு.