சந்தன மரம் எங்கு வேண்டுமானாலும் வளரலாம், ஆனால் முன்பு மலேசியாவில் அதிக அளவில் சந்தன மரம் வளர்ந்தமையால் அது மலய சந்தனம் என்று அறியப்பட்டது. அதுபோல, பகவான் கிருஷ்ணரால் எங்கு வேண்டுமானாலும் அவதரிக்க இயலும் என்றபோதிலும், அவர் விருஷ்ணி குலத்தில் அவதரித்தார். முதலில் பலராமரும், பின்னர் கிருஷ்ணரும் தோன்றினர். விருஷ்ணி குலத்தில் தோன்றியதால் கிருஷ்ணருக்கு வார்ஷ்ணேய என்ற நாமமும் வழங்கப்படுகிறது.
நமது ஜன்னலுக்கு வெளிப்புறத்தில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களின் ஒலியினை நாம் செவியுறுகின்றோம். ஆனால், இந்த வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட தடத்தின் எல்லைக்குள் கவனமாகச் செல்கின்றன, தடம் மாறிச் சென்றால் அவை ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்படும். அதுபோலவே, கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் வரையறுக்கப்பட்ட வேகம் உண்டு. கோடிக்கணக்கான கிரகங்கள் சுற்றிக் கொண்டுள்ளன. ஆனால், அவை மோதிக்கொள்வதில்லை. இந்த ஒழுங்குமுறை எவ்வாறு வடிவமைக்கப்பட்டது? யார் இந்த திறந்தவெளியில் கிரகங்கள் பயணிப்பதற்கான தடத்தினை அமைத்தது?
நாம் அனைவரும் ஜட இயற்கையின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நமது நிலையினை கயிற்றினால் கட்டப்பட்ட குதிரை அல்லது காளையைப் போன்றதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஓட்டுநர் கயிற்றை இழுப்பதற்கு தகுந்தாற்போல அந்த விலங்கு செல்லும். அதற்கு சுதந்திரம் என்பதே கிடையாது. நாம் சுதந்திரமானவர்கள் என்று கருதி, “கடவுள் இல்லை. கட்டுப்படுத்துபவரும் இல்லை. நாம் விரும்பியதைச் செய்யலாம்” என்று கூறுவதெல்லாம் அறியாமையே. அறியாமையினால் நாம் பல பாவ காரியங்களைச் செய்கின்றோம்.
பகவான் விஷ்ணுவின் கருணையைப் பெறுவதே வாழ்வின் ஒரே குறிக்கோள். ஓம் தத் விஷ்ணோ: பரமம் பதம், “பகவான் விஷ்ணுவின் வாசஸ்தலமே உன்னத இலக்கு,” என்று ரிக் வேதம் கூறுகின்றது. ஆனால் மக்களோ வாழ்வின் குறிக்கோள் என்னவென்பதை அறிவதில்லை.
வாழ்வின் நோக்கத்தை அறியாத சமுதாயம் அறியாமையில் உள்ளது. பெளதிகமான விஷயங்களைச் சரிசெய்வதன் மூலம் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ முயல்கின்றனர். சமூகம், அரசியல், பொருளாதாரம், அல்லது மத ரீதியிலான விஷயங்களைச் சரிசெய்வதன் மூலம் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் மகிழ்விக்க தலைவர்கள் முயல்கின்றனர். ஆனால், துராஷயா யே பஹிர்-அர்த-மானின:, அவர்கள் முழுமுதற் கடவுளின் பௌதிக சக்தியிடமிருந்து மகிழ்ச்சியைப் பெற முயல்வதால், அவர்களது நம்பிக்கை ஒருபோதும் நிறைவேறாது என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
இப்போது நாம் அந்த முழுமுதற் கடவுளின் இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும், எவ்வாறு அங்கு செல்வது, எவ்வாறு வீடுபேறு அடைவது என்பதை அறிய வேண்டும். அதுவே மனித வாழ்வின் குறிக்கோள். நாம் ஏன் இந்த பௌதிக உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்பதை ஆராய வேண்டியதில்லை. வேத இலக்கியங்களின் வழிகாட்டுதல்கள் ஜோதிடரின் அறிவுரையைப் போன்றவை, அவற்றைக் கொண்டு வீடுபேறு அடைவதற்கான வழியைத் தேட வேண்டும். ஜோதிடர் எவ்வாறு ஏழைக்கு குறிப்புகளைத் தருகிறாரோ, அவ்வாறே வேத நூல்கள் நமக்கு குறிப்புகளைத் தருகின்றன. அதன் மூலமாக நமது தந்தையுடனான இழந்த உறவைப் புதுப்பித்து நாம் பெரும் செல்வந்தர்களாக முடியும்.