பகவானிற்கு இரு சக்திகள் உள்ளன. ஒன்று பௌதிக சக்தி, மற்றொன்று ஆன்மீக சக்தி. பௌதிகம், ஆன்மீகம் ஆகிய இரு சக்திகளில், ஆன்மீக சக்தி உயர்ந்தது, பௌதிக சக்தி தாழ்ந்தது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, மற்றும் அஹங்காரத்தால் ஆனது பௌதிக சக்தி. ஆன்மீக சக்தியானது உயிருள்ளதாகும். நாம் அனைவரும் இவ்விரு சக்திகளின் கலவைகளே. இது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது: யயேதம் தார்யதே ஜகத். இந்த மொத்த உலகமும் இவ்விரு சக்திகளால் இயங்குகிறது. வெப்பமும் ஒளியும் சூரியனிலிருந்து வருவதைப் போல இவ்விரு சக்திகளும் ஒரே மூலத்திலிருந்து வருகின்றன.
பௌதிக உலகில் இன்பம் கிடையாது, துன்பம் மட்டுமே உண்டு என்பதை அறிவதே ஆன்மீக உணர்வின் முதல்படியாகும். வாழ்க்கைப் போராட்டத்தில் துன்பத்தை சிறிதளவேனும் குறைக்க முடிந்தால், அதையே நாம் இன்பமாக நினைக்கிறோம்; ஆனால் உண்மையில் இன்பம் என்று ஏதுமில்லை. பகவத் கீதையில் பரம அதிகாரியான கிருஷ்ணர், இந்த ஜடவுலகத்தினை து:காலயம், துன்பம் நிறைந்த இடம்,” என்று கூறுகிறார். இதுவே உண்மை.
கிருஷ்ணரிடம் பிரேமை (தூய அன்பு) உடையவர்கள் மட்டுமே அவரைக் காண இயலும். கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துவதற்கான விருப்பம் நம்மிடம் ஏற்கனவே உள்ளது. ஆனால் அதை நாம் மாயைக்கு மாற்றம் செய்துவிட்டோம். மாயையிடம் உள்ள அன்பை மீண்டும் கிருஷ்ணரிடம் செலுத்துவதே கிருஷ்ண உணர்வின் ஒட்டுமொத்த செயல்முறையாகும். இதுவே கிருஷ்ண உணர்வைப் பற்றிய எளிமையான விளக்கம். கிருஷ்ணருக்கான அன்பு நம்மிடம் உள்ளது, ஆனால் அந்த அன்பு தற்போது தவறான இடத்தில், மாயையிடம் உள்ளது. கிருஷ்ணரல்லாத ஒன்றிடம், மாயையிடம் அன்பு செலுத்த நாம் முயற்சிக்கிறோம். இது கிருஷ்ணரது மாயையாகும்.
பக்தனானவன் ஒருபோதும் அபாயங்களால் சஞ்சலமடைவதில்லை, துயரங்களும் வாழ்வின் சிக்கல்களும் அவனை சஞ்சலப்படுத்துவதில்லை. மாறாக, அவன் அவற்றை வரவேற்கின்றான். அவன் சரணடைந்த ஆத்மாவாக இருப்பதால் அபாயங்களும் நன்மைகளும் கிருஷ்ணரால் வழங்கப்படும் பல்வேறு தோற்றங்களே என்பதை அவன் அறிந்துள்ளான்.
கிருஷ்ணரை எப்பொழுதும் எவ்வாறு நினைப்பது என்பதைக் கற்றுக் கொடுப்பதற்காகவே இந்த தீக்ஷை நிகழ்ச்சி. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஙுஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம. ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரிப்பதே மிகச்சிறந்த வழியாகும். நாம் கிருஷ்ணரை “ஹரே கிருஷ்ண” உச்சாடனத்தின் மூலமாக நினைப்பதற்கு பயிற்சி செய்ய வேண்டும்.