முதல் மாதத்தில் தலையும், இரு மாதங்களின் முடிவில் கை, கால் மற்றும் பிற உறுப்புகளும் வடிவம் பெறுகின்றன. மூன்று மாதங்களில் நகங்கள், எலும்பு, தோல், உரோமம், பிறப்புறுப்பு, கண்கள், காதுகள், மூக்குத் துவாரம், வாய், மலவாய் ஆகியவை தோன்றுகின்றன. கருவுற்ற நான்கு மாதங்களில் ஏழு தாதுக்களும் (வெள்ளை நிணநீர், குருதி, சதை, கொழுப்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை, சுக்லம் அல்லது சோணிதம்), ஐந்தாம் மாதத்தில் பசி-தாகம் முதலியவையும் தோன்றுகின்றன. ஆறு மாதங்களில் கருவானது அதைச் சுற்றியுள்ள சவ்வினால் மூடப்படுகிறது. ஆணாக இருந்தால் வலப்பக்கமாகவும், பெண்ணாக இருந்தால் இடப்பக்கமாகவும் அசையத் தொடங்குகிறது.
உடல், வீடு, நிலம், செல்வம் ஆகிய நிலையற்ற பொருட்களை நிலையானவை என எண்ணி மக்கள் அறியாமையில் உள்ளனர். எந்த உயிரினத்தில் பிறந்தாலும் அந்த உயிரினத்தில் அதற்கென்று நியமிக்கப்பட்ட இன்பத்தை ஒருவர் அடைகிறார். அவர் அந்நிலை அடைந்ததற்காக ஒருபோதும் வருந்துவதில்லை. உதாரணமாக, பன்றி மலத்தை உண்டு அருவருக்கத்தக்க இடங்களில் வாழ்ந்தாலும், அந்த உயிரினத்திற்கான மகிழ்ச்சியில் அது திருப்தியடைகிறது.
பக்தன் எப்போதும் தனது நேரத்தை பகவானின் புனித நாமங்களை உச்சரிப்பதிலும் பகவானின் பெருமைகளைக் கேட்பதிலும் பயன்படுத்த வேண்டும். தன் நடத்தையில் ஒளிவுமறைவின்றி எளிமையாக புலனடக்கத்துடன் இருக்க வேண்டும். அனைவரிடமும் நட்பு பாராட்டும் அதே சமயத்தில் பக்தரல்லாதோரிடம் நட்பைத் தவிர்க்க வேண்டும்.
பகவான் கபிலர் தனது அன்னையிடம் தொடர்ந்து விளக்கினார். மனதை ஒருமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யோகப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒருவர் மகிழ்ச்சியடைய முடியும், பரம புருஷ பகவானைப் புரிந்துகொள்ளும் வழியில் முன்னேற முடியும். ஒருவர் தனக்கென்று விதிக்கப்பட்டுள்ள கடமைகளை தனது முழுத் திறனையும் பயன்படுத்தி நிறைவேற்ற வேண்டும்.
கிருஷ்ணர் தேவகியின் எட்டாவது மகனாகப் பிறந்து கம்சனை வதம் செய்தார் என்பதும், தேவகிக்கு முதலில் பிறந்த ஆறு குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டனர் என்பதும் தெரிந்த கதை. அக்குழந்தைகள் யார் அவர்கள் ஏன் கம்சனால் கொல்லப்பட்டனர் என்பது தெரியாத துணுக்கு.