காலத்தைப் பற்றிய விதுரரின் கேள்விக்கு மைத்ரேயர் பின்வருமாறு தொடர்ந்து விளக்கமளித்தார்இப்பிரபஞ்சம் முழுவதும் அணுவிலிருந்து அண்டம் வரை உயிர்களின் பல்வகைத் தோற்றங்களைக் கொண்டதாகும். உலகப் பொருட்களின் இறுதி மூலக்கூறு, பிரிக்க முடியாத துகளான அணு என்று அழைக்கப் படுகிறது. இவ்வணுக்களின் கூட்டினாலேயே ஜடவுடலும் ஜடவுலகமும் கட்டப்பட்டுள்ளன. அனைத்து வடிவங்கள் அழிக்கப்பட்ட பிறகும் அணுவானது எப்பொழுதும் கண்களுக்குப் புலனாகாத தனித்தன்மை உடையதாக இருக்கிறது.
முழுமுதற் கடவுளின் அறிவுரைக்கேற்ப பிரம்மதேவர் நூறு தேவ வருடங்களுக்கு பகவானின் பக்தித் தொண்டெனும் உயர்ந்த தவத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் பிறகு அவர், தான் அமர்ந்திருந்த தாமரை மலரும், அம்மலருக்கு ஆதாரமாக விளங்கிய நீரும் வலிமையான சூறைக் காற்றினால் ஆடுவதைக் கண்டார். பக்தித் தொண்டால், நடைமுறை அறிவில் முதிர்ச்சியடைந்திருந்த பிரம்மதேவர் அச்சூறைக் காற்றை நீருடன் சேர்த்துப் பருகினார்.
பின்னர், அவர் தான் அமர்ந்திருந்த தாமரையானது பிரபஞ்சம் முழுவதும் பரந்து விரிந்திருந்ததைக் கண்டார். அதை முதலில் மூன்று பிரிவுகளாகவும் பின்னர் பல்வேறு வகையான உயிரினங்கள் வசிப்பதற்காக பதினான்கு கிரக அமைப்புகளைப் படைத்தார். உயிர்வாழிகள் தங்களின் குணங்களுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட கிரகத்தில் குடியமர்த்தப்படுகின்றனர்.
பிரம்மா தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்தார்: “பகவானே, உமது பக்தர்கள் உம்மைப் பற்றி முறையாகக் கேட்கும்போதே உம்மைக் காண்கின்றனர். இதனால் அவர்களது இதயம் தூய்மையடைகிறது. அதில் தாங்கள் கருணையுடன் வந்தமர்ந்து தங்களது நித்ய வடிவத்தில் தரிசனம் தருகிறீர்கள். ஆனால் லௌகீகப் பேராசைகளில் ஆட்பட்டு ஆடம்பரமாக உம்மை வழிபடும் தேவர்களிடம் தாங்கள் மனநிறைவு அடைவதில்லை. மேலும், பக்தரல்லாதோர்க்கு தாங்கள் கானல் நீர்போன்று அவர்கள் காண இயலாத வண்ணம் ஒதுங்கி விடுகிறீர்கள்.