வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்
மனம் போல் வாழ்வு, மனதில் உறுதி வேண்டும், முகமே மனதின் கண்ணாடி என மக்கள் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். மனதின் ஆழத்தை கவிஞர்களாலும், தத்துவவாதிகளாலும்கூட அறிய முடிவதில்லை. நம்முடன் எப்போதும் உழன்று கொண்டிருக்கும் மனதின் தன்மையையும் சக்தியையும் செயல்பாட்டையும் சற்றேனும் தெரிந்துகொள்வதே வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாகும்.
மனதின் தன்மை
பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மனதை அடக்குவதற்கு அர்ஜுனனிடம் யோகப் பயிற்சியை பரிந்துரைத்தார். அதற்கு அர்ஜுனனோ, “கிருஷ்ணா, மனம் அமைதியற்றதும், குழப்பம் நிறைந்ததும், அடங்காததும், சக்தி மிகுந்ததுமாயிற்றே, வீசும் காற்றை அடக்குவதை விட மனதை அடக்குவது கடினமானதாக எனக்குத் தோன்றுகிறது.” என்று கூறினான் (பகவத் கீதை 6.34). பௌதிக உலகில் மனம் பொதுவாக மனைவி, கணவன், குழந்தைகள் என உடல் சம்பந்தமான உறவுகளில் மூழ்கியிருக்கிறது. மனமானது பொதுவாக தன் வட்டத்திற்கு உட்பட்ட பொருட்கள்மீது மிகுந்த பற்றுதலை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.
ஏற்றல், நிராகரித்தல் என்ற மனதின் இரு தன்மைகளே எல்லா செயல்களிலும் வெளிப்படுகிறது. நாணயத்திற்கு எப்போதும் இரு பக்கங்கள் இருப்பதைப் போன்று, மனதிற்கும் பிடிப்பு, பிடிப்பற்ற தன்மை என்று இரு பக்கங்கள் இருக்கின்றன. இதற்கு சிறந்த உதாரணம், இந்த நபருடன்தான் வாழ்க்கை நடத்துவேன் என அடம்பிடிக்கின்ற மனம் சில காலத்திற்கு பிறகு அவருடன் வாழ மாட்டேன் எனவும் அடம்பிடிக்கிறது. இதன் மூலம் வாழ்க்கை என்பது மனம் மூலமாகவே இயக்கப்படுகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். இதன் அடிப்படையிலேயே ஒருவன் நண்பனாகவோ எதிரியாகவோ புலப்படுகிறார். விருப்பும் வெறுப்பும் மனதின் இரு பக்கங்களாகும்.
மனதின் செயல்பாடுகள்
மனதில் தோன்றும் சிந்தனைகளே வார்த்தைகளாக வெளிப்படுகிறது. வார்த்தைகளே செயல்பாடுகளாக வெளிப்படுகிறது. செயல்பாடுகளே நாளடைவில் பழக்கவழக்கமாக மாறுகிறது. பழக்கவழக்கங்களே ஒருவனது ஒழுக்கமாக வெளிப்படுகிறது. ஒழுக்கமே தலைவிதியை நிர்ணயிக்கிறது. இதன் மூலம் நல்ல சிந்தனைகளே ஒருவரை வாழ்வில் மேம்படுத்துகிறது, தீய சிந்தனைகள் வீழ்ச்சியடையச் செய்கிறது என தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
மனதை வென்றவனுக்கு மனமே சிறந்த நண்பனாகவும், அவ்வாறு செய்ய தவறுபவனுக்கு மனமே மிகப்பெரிய விரோதியாகவும் ஆகிறது (பகவத் கீதை 6.6). தினந்தோறும் ஒருவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள், மன ஓட்டத்தையே படம்பிடித்துக் காட்டுகிறது. மனம் இயற்கையாகவே புலனுகர்ச்சி பொருட்கள்மீது பற்று கொண்டு தரம் தாழ்ந்த செயல்களில் நாட்டத்தை வெளிப்படுத்துகிறது. மனதின் தூண்டுதலால் ஒருவர் சண்டை, காதல், வெறுப்பு, நட்பு போன்றவற்றில் ஈடுபடுகிறார்.
ஊழல், தீவிரவாதம், பாலியல் முறைகேடு, கொலை, விவாகரத்து, குற்றங்கள் என இவை அனைத்தும் மனதின் செயல்பாடுகளே, நற்குடியில் பிறந்தவர்களையும் மனமானது கீழ்தரமான செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறது. அதனால், விவேகமான அறிவைப் பெற்றவர்கள் தினந்தோறும் மனப்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
மனதிற்கான பயிற்சி
கட்டுப்பாட்டை இழந்த மனமும் பயிற்சி பெறாத மனமும் ஒருவனை குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகிறது. அறியாமையே அனைத்து குற்றங்களுக்கும் மூல காரணமாகத் திகழ்கிறது. சுருக்கமாகக் கூறினால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நினைவிற்கொள்வதே மனதிற்கான சிறந்த பயிற்சியாகும். பரிணாம சுழற்சியில் ஆத்மாவிற்கு மனிதப் பிறவி கிடைப்பது மிகவும் அரிது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நினைவிற்கொள்வதற்கு முயற்சி செய்யும்போதே மன அழுத்தம், மன உளைச்சல், மன விரக்தி போன்றவை இயற்கையாக நீங்கிவிடுகிறது.
மனம் காட்டு விலங்குகளுக்கு சமமாக ஒப்பிடப்படுகிறது. ஸ்ரீல பிரபுபாதரின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் மனதை தினமும் காலையில் எழுந்தவுடன் நூறு முறை காலணியால் அடிக்க வேண்டும் என்றும் தூங்குவதற்கு முன் நூறு முறை துடைப்பத்தால் அடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். இது கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் அந்த அளவிற்கு மனமானது ஒருவரை படுபாதாளத்தில் தள்ளும் தன்மையைக் கொண்டது. மனதை நம்பி கையைச் சுட்டுக் கொண்டவர்கள் சரித்திரத்தில் ஏராளம்.
பக்தித் தொண்டு எனும் பயிற்சியில் ஈடுபட மனம் பல சாக்குபோக்குகளைக் கூறினாலும் அதனை நிராகரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கலி யுகத்தில் ஸத்ஸங்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு நேரத்தை திருட தெரிந்த மனமே, சிறந்த பயிற்சி பெற்ற மனமாக கருதப்பட வேண்டும்.
இரகசியமாக கண்காணித்தல்
இவ்வுலகில் பல விஷயங்களைக் கண்காணிப்பதற்கு நவீன கண்டுபிடிப்புகள் வந்திருப்பதைப் போன்று மனதையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர்களின் மன ஓட்டத்தை பார்வையாளர்கள்போன்று கண்காணிக்க வேண்டும். மனம் இயற்கையாகவே ஏதாவதொரு காரணத்தைத் தேடிக் கண்டுபிடித்து திருப்தியற்ற நிலைக்குச் செல்லும் இயல்பு கொண்டது.
தற்போதைய சூழ்நிலையே பக்தித் தொண்டில் ஈடுபடுவதற்கு சிறந்தது என மனம் எண்ணும்போது ஆன்மீக பாதையில் வெகுவாக முன்னேறலாம். எளிமையான வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையும் (கிருஷ்ண உணர்வு) பக்தி செய்வதற்கு ஸ்திரமான நிலையாகக் கருதப்படுகிறது. தேனீக்கள் தேனைப் பருகுவதற்கு மலர்விட்டு மலர் தாவுவதைப் போன்று மனமானது ஒரு பொருளில் இன்பம் கிடைக்காதபோது மற்றொரு பொருளுக்கு தாவுகின்றது. கிருஷ்ணரே நம்மை மகிழ்விக்க முடியும் என மனம் உறுதிகொள்ளும்போது, இதர பொருட்கள் மீது மனம் நாட்டம் கொள்ளாது.
மன அமைதி
மனதைப் படைத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் நம் மனதை நிலைநிறுத்தினால் எப்பேர்ப்பட்ட மனநோயும் பறந்துவிடும். கிருஷ்ண பக்தர்களே சிறந்த மனநல மருத்துவர்கள். கிருஷ்ணரை நினைவுகொள்வதற்காகவே மனம் படைக்கப்பட்டுள்ளது என உணர்ந்தால், உடனடியாக மன அமைதி ஏற்படுகின்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மறந்து மன உலகில் வாழ்பவர்கள் மனப்போராட்டத்தையே சந்திக்கின்றனர்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மகிழ்விக்க பக்தித் தொண்டில் மனம் ஈடுபடும்போதே மனநிறைவு ஒருவருக்கு இயற்கையாக ஏற்பட்டுவிடுகிறது. முந்தைய காலத்தில் உறவுமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். தற்போதைய காலத்தில் நவீன கண்டுபிடிப்புகள்மீது மக்கள் உறவுமுறையை ஏற்படுத்திக்கொள்கின்றனர். தனது நண்பன் தொலைந்து போனால் கவலை கொள்ளாத மனம் கைபேசியை தொலைத்துவிட்டால் பதட்டமடைந்து விடுகிறது.
உலகத் தலைவர்கள் உலக அமைதிக்காகவும், இல்லத் தலைவர்கள் இல்ல அமைதிக்காகவும் அரும்பாடுபடுகின்றனர். ஆனால் கிருஷ்ணருக்கும் நமக்குமுள்ள நித்திய உறவை உணர்ந்தவர்களுக்கு இம்மாதிரியான பய உணர்வுகள் ஏற்படுவதில்லை.
அடைக்கலம் புகுவது
மனதிற்கு எப்போதும் பிடிமானம் தேவைப்படுகிறது, இல்லாவிடில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணருகிறது. அறியாமையில் ஏற்படுகிற பய உணர்வை அடிப்படையாக வைத்தே இன்றைய காப்பீட்டு துறை செயல்படுகிறது. கிருஷ்ண உணர்வே சிறந்த காப்பீடு என மனம் ஏனோ மறந்துவிடுகிறது. பயமற்ற மனதை அளவுகோலாக வைத்தே ஒருவர் எந்தளவிற்கு ஆன்மீகப் பாதையில் முன்னேறியிருக்கிறார் என அளவிட வேண்டும்.
அமைதியற்ற மனதை அடக்குவது சந்தேகமின்றி மிகவும் கடினமே. ஆனால் தகுந்த பயிற்சியினாலும் பற்றின்மையினாலும் அது சாத்தியமாகும் என கிருஷ்ணர் பகவத் கீதையில் (6.35) தெளிவுபடுத்துகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அடைக்கலம் புகுவதற்கு பயிற்சி மற்றும் பற்றின்மை முக்கிய கோட்பாடுகளாக கருதப்படுகின்றன.
பயிற்சி என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிப்பது, திவ்யமான லீலைகளைக் கேட்பது முதலியவற்றை உள்ளடக்கியதாகும். இப்பயிற்சி புத்தியைக் கூர்மைப்படுத்துகிறது. பற்றின்மை என்பது புலனுகர்ச்சி சிந்தனைகளைத் தவிர்த்து பக்தித் தொண்டில் மனதை ஈடுபடுத்துவதே ஆகும்.
மனதிற்கு சிறந்த மருந்து
தற்காலிகப் பொருட்கள்மீது பற்றுதல் வைத்திருக்கும் மனதை படிப்படியாக பகவான் கிருஷ்ணரின் மீது திசைதிருப்ப வேண்டும். குரங்கு ஒரு மரத்தை விட்டு மற்றொரு மரத்திற்கு அடிக்கடி தாவுவதைப் போன்று மனமானது நிலையில்லா இவ்வுலகில் அழியக்கூடிய பொருட்கள் மீதும், உடல் மீதும் தாவிக் கொண்டே இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், மனம் கிருஷ்ணர்மீது தியானிப்பதை விட கிருஷ்ணரால் படைக்கப்பட்ட பொருட்களின் மீது தியானிக்கிறது. கலி யுகத்தில் மனதை அடக்குவதற்கு சிறந்த வழி தினந்தோறும் துளசிதேவியின் முன் அமர்ந்து, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே” என்னும் மஹா மந்திரத்தை உச்சரிப்பதேயாகும்.