ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், பிப்ரவரி 28, 1972
வாழ்வின் உண்மையான இலக்கு
ஸ்ரீல பிரபுபாதர்: இந்த இயக்கம் மனிதன் தனது வாழ்வின் உண்மையான இலக்கை அடைய உதவுகிறது. அதற்காகவே இஃது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாப்: கடவுளை அறிவதே வாழ்வின் உண்மையான இலக்கா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். மீண்டும் முழுமுதற் கடவுளிடம் திரும்பிச்செல்வதே வாழ்வின் உண்மையான இலக்காகும். கடலிலிருந்து வரும் நீர் மேகங்களாகிறது, மேகங்கள் மழையாகின்றன, அவை நதியின் வழியே மிதந்து மீண்டும் கடலுக்குள் புகுகின்றன–இதுவே உண்மையான இலட்சியம். கடவுளிடமிருந்து வந்துள்ள நாம் ஜட வாழ்வினால் களங்கியுள்ளோம். எனவே, இந்தக் களங்கத்திலிருந்து விடுபட்டு மீண்டும் இறைவனைச் சென்றடைவதே, நமது வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இதுவே உண்மையான இலக்கு.
நாப்னுவந்தி மஹாத்மான:ஸம்ஸித்திம் பரமாம் கதா:
“பக்தியில் யோகிகளான சிறந்த ஆத்மாக்கள் என்னை அடைந்த பிறகு துன்பம் நிறைந்த இந்தத் தற்காலிகமான உலகிற்குத் திரும்பி வருவதேயில்லை. ஏனெனில், அவர்கள் மிகவுயர்ந்த பக்குவத்தை அடைந்து விடுகின்றனர்,” என்று கிருஷ்ணர் பகவத் கீதை (8.15) கூறுகிறது. இந்த உலகம், து:காலயம், அஷாஸ்வதம், “துன்பங்கள் நிறைந்த தற்காலிகமான இடம்” என்று கூறப்படுகிறது. இதனை அனைவரும் அறிவர்; ஆயினும், தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மக்கள் எல்லாரையும் முட்டாள்களாக்கி வைத்திருக்கிறார்கள்.
இவ்வுலக வாழ்க்கை துயரங்கள் நிறைந்தது என்று கிருஷ்ணர் சொல்கிறார்; மேலும், இவ்விடம் அஷாஸ்வதம், தற்காலிகமானதும்கூட. சரி. துன்பகரமானதாக இருந்துவிட்டுப் போகட்டும். நான் இங்கேயே ஓர் அமெரிக்கனாகவோ இந்தியனாகவோ வாழ்ந்து விடுகிறேன் என்று நீங்கள் சரிகட்ட முடியாது. நீங்கள் எக்காலத்துக்கும் அமெரிக்கனாகவே இருப்பது சாத்தியமில்லை. அந்நிலையிலிருந்து நீங்கள் உதைத்து வெளியேற்றப்படுவது நிச்சயம்.
பாப்: ஆனால், கடவுளைப் பற்றிய அறிவு ஓரளவு இருந்தால், வாழ்வு அவ்வளவு துன்பகரமாக இருக்காதல்லவா?
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியல்ல! ஓரளவு அறிவு இருந்தால் போதாது, நிறைவான அறிவு வேண்டும். ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத:. தத்த்வத: என்றால் நிறைவாக” என்று பொருள். பகவத் கீதையில் முழுமையான அறிவு போதிக்கப்படுகிறது. எனவே, சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு மக்களும் பகவத் கீதையை அதன் உண்மையுருவில் கற்று தன் வாழ்வை நிறைவுபடுத்துவதற்கான வாய்ப்பை நாங்கள் வழங்கி வருகிறோம். இதுவே கிருஷ்ண பக்தி இயக்கம்.
பாப்: என்னுள் நான் கடவுளை உணரவில்லை; ஆனால் கடவுள் இங்கே இருக்கலாம், என்னிலிருந்து தனியாக இருக்கலாம். ஆனால், நான் கடவுளின் ஒரு பகுதியாக இருப்பதால், என்னுள் நான் கடவுளை உணர்வது சாத்தியமாக வேண்டுமல்லவா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். கடவுள் உள்ளும் இருக்கிறார், வெளியிலும் இருக்கிறார்; கடவுள் எங்குமிருக்கிறார். இஃது அறியப்பட வேண்டியதாகும்.
பாப்: உள்ளிருக்கும் கடவுளை எப்படி உணர்வது?
ஸ்ரீல பிரபுபாதர்: இஃது ஆரம்பத்தில் சாத்தியமல்ல. வேத நூல்களிலிருந்து இதை அறிய வேண்டும். பகவத் கீதையில், ஈஷ்வர: ஸர்வ பூதானாம் ஹ்ருதேஷு ’ர்ஜுன திஷ்டதி, கடவுள் ஒவ்வொருவர் உள்ளத்திலுமிருக்கிறார். பரமாணு-சயாந்தர-ஸ்தம், கடவுள் ஒவ்வொரு அணுவினுள்ளும் இருக்கிறார்” என்று சொல்லப்பட்டுள்ளது. இதுவே நாம் பெறக்கூடிய முதல் செய்தி. அதன் பின்னர், யோக முறையின் மூலமாக நீங்கள் அதனை உணர வேண்டும்.
பாப்: ஹரே கிருஷ்ண மந்திரத்தைக் கீர்த்தனம் செய்வது யோக முறையா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அதுவும் ஒரு யோக முறையே.
பாப்: உள்ளிருக்கும் ஆத்மாவை உணர நான் எத்தகைய யோக முறையைப் பயில வேண்டும்?
ஸ்ரீல பிரபுபாதர்: வெவ்வேறு யோக முறைகள் உள்ளன. ஆனால் இந்த யுகத்துக்கு ஹரே கிருஷ்ண உச்சாடனமே மிகவும் உகந்தது.
பாப்: கீர்த்தனம் செய்வது?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.
பாப்: இதன் மூலம் வெளிப்புறமுள்ள கடவுளை மட்டுமல்லாமல் உள்ளிருக்கும் கடவுளையும் உணர முடியுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: கடவுளைப் பற்றிய எல்லாச் செய்திகளையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். கடவுள் எப்படி உள்ளும் புறமும் இருக்கிறார், எப்படிச் செயல்படுகிறார் என்பதையெல்லாம் உணர்வீர்கள். பக்தித் தொண்டின் மனப்பான்மையை நீங்கள் ஏற்றுக் கொண்டால், கடவுள் உங்களுக்கு தன்னை வெளிப்படுத்துவார். உங்களது சொந்த முயற்சியால் மட்டும் நீங்கள் கடவுளை அறிய முடியாது. கடவுள் அவராகவே தன்னைக் காட்டவேண்டும்.
உதாரணமாக, இரவில் சூரியன் கண்ணுக்குத் தெரியாதபோது, டார்ச் வெளிச்சத்தைக் கொண்டோ வேறு வெளிச்சத்தைக் கொண்டோ அதனைப் பார்க்க முடியாது. ஆனால் காலையில் சூரியனை இயல்பான முறையில், எந்தவித வெளிச்சத்தின் உதவியும் இல்லாமல் காண முடியும். அதுபோலவே, கடவுள் தன்னை வெளிப்படுத்தத் தக்க சூழ்நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உங்களை அமர்த்திக்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு வழிமுறையை அனுசரித்து, தயவுசெய்து வாருங்கள். நான் உங்களைப் பார்க்க வேண்டும்” என்று கடவுளிடம் கூற முடியாது. கடவுள் உங்களது கட்டளையை நிறைவேற்றும் பணியாள் அல்ல.
பாப்: கடவுள் தன்னை வெளிப்படுத்துவதற்காக, நாம் அவரை மகிழ்விக்க வேண்டும். சரியா?
சியாமசுந்தர்: அவரை நாம் மகிழ்விக்கிறோம் என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது?
ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் சாப்பிடும்போது பசி நீங்கிப் பலம் பெறுகிறீர்களா என்று யாரையும் கேட்க வேண்டியதில்லை. சாப்பிடும்போது சக்தி உங்கள் உடலில் ஏறுவதை நீங்களே உணர்கிறீர்கள், யாரையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. அதுபோலவே, கடவுளுக்கு நீங்கள் உண்மையான தொண்டாற்றினால், அதன் பலனை நீங்களே அறிந்துகொள்வீர்கள்.
பாப்: பக்தியோடு உண்மையாக பிரார்த்தனை செய்தால் அதைக் கிருஷ்ணர் கேட்கிறாரா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.
பாப்: என்னிடமிருந்து அவருக்குப் போகிறதா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். ஏனென்றால் அவர் உங்களுடைய இதயத்திலேயே இருக்கிறார். அவர் எப்போதும் உங்களுக்குச் செவி சாய்த்துக் கொண்டிருக்கிறார்; நீங்கள் பிரார்த்திக்கும்போது, பிரார்த்திக்காமல் இருக்கும்போது, அசட்டுத்தனமாக ஏதாவது செய்யும்போது என எப்போதும் அவர் உங்களை கவனித்துக் கொண்டுள்ளார். நீங்கள் பிரார்த்தனை செய்தால், அது மிகவும் நல்லது, வரவேற்கத்தக்கது.
பாப்: பிரார்த்தனையின் ஒலியானது மற்ற விஷயங்களின் ஒலியைக் காட்டிலும் கிருஷ்ணரின் காதுகளை எளிமையாக எட்டுகின்றதா?
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியல்ல, கிருஷ்ணர் நிறைவானவர். அவர் அனைத்தையும் அறிந்தவர்; அவர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டுள்ளார். நீங்கள் பேசாவிட்டாலும் சரி, இதைச் செய்வேன்” என்று எண்ணினால்கூட, அவர் அதனைக் கேட்கிறார். ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்ட:, கிருஷ்ணர் எல்லாருடைய இதயத்திலும் வீற்றிருக்கிறார்.
பாப்: ஆனாலும் அவரை நோக்கி பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்படித்தானே?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். பிரார்த்தனை என்பது அவரவர் செய்ய வேண்டிய செயலாகும்.
பாப்: யார் செய்ய வேண்டும்?
ஸ்ரீல பிரபுபாதர்: உயிர் வாழும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியதாகும். அது ஒன்றுதான் வேலை. ஏகோ பஹுனாம் யோ விததாகி காமான், என்று வேதங்கள் சொல்கின்றன.
பாப்: அதன் பொருளென்ன?
ஸ்ரீல பிரபுபாதர்: அவர் (கடவுள்) எல்லாருக்கும் தேவையான எல்லாவற்றையும் வழங்குகிறார். எல்லாருக்கும் உணவு வழங்குபவர் அவரே. ஆனால் அவரிடம் சென்று அன்றாட உணவிற்காக நாம் பிரார்த்திக்கக் கூடாது. கிறிஸ்துவர்கள், அன்றன்றைக்குரிய உணவினை எங்களுக்குத் தாரும்” என்று பிரார்த்திக்கின்றனர். இவ்வாறு பரமபிதாவினை ஏற்றுக் கொண்டு பிரார்த்தனை செய்வது மிக நல்ல காரியம்.
இருப்பினும், வயது வந்த குழந்தைகள் தங்களது தந்தையிடம், இது வேண்டும், அது வேண்டும்” என்று கேட்கக் கூடாது. தந்தைக்கு சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும். அதுவே பக்தி.
பாப்: என் கேள்விகளுக்கெல்லாம் மிகப் பக்குவமாக விடையளிக்கிறீர்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: மிக்க நன்றி.