கல்லில் வடித்த வடிவமும் கிருஷ்ணரே
ஸ்ரீல பிரபுபாதருக்கும் அவரது சீடர்கள் சிலருக்கும் இடையிலான இந்த உரையாடல் விக்ரஹ வழிபாடு குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறது.
பக்தர்: இரண்டு நாள்களுக்கு முன்பு நமது கோயிலுக்கு வந்த ஒருவர், மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளதா என்பதை உறுதியாகக் கூற முடியாது. எனவே, அதற்காக ஏன் கவலைப்பட வேண்டும்? வளமான சமுதாயத்தை உருவாக்கலாம். அதுவே சிறந்த செயல்,” என்று கூறினார்.
ஸ்ரீல பிரபுபாதர்: மரணத்திற்கு பிறகு ஆத்மா மறுவுடலை எடுப்பதைப் பற்றி அவர் அறியாமல் இருக்கலாம், ஆனால் தற்போதைய உடலைக் கைவிடும்படி அவர் வலியுறுத்தப்படுவார், அதை அவர் அறிவாரல்லவா?
பக்தர்: பொருளாதார முன்னேற்றத்தில் ஈடுபடுவதே மிகவும் முக்கியம் என்று அவர் நினைக்கிறார்.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியென்றால் அவர் ஒரு முட்டாள். நான் பாரிஸிற்கு வருகிறேன், நீங்கள் என்னிடம், உங்கள் விசா முடிந்தவுடன் நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள்” என்று கூறுகிறீர்கள். இச்சூழ்நிலையில் இங்கு நான் பெரிதாக எதையும் செய்வதற்கு ஆர்வம் காட்டுவேனா? இரு மாதங்களில் நான் வெளியேற்றப்படுவேன், பிறகு எதற்காக நான் ஒரு பெரிய கட்டிடத்தை கட்ட வேண்டும்? மூடனும் அயோக்கியனுமே அவ்வாறு செய்வான். தான் விரட்டியடிக்கப்படுவேன் என்பதை அந்த அயோக்கியன் அறிவான், இருப்பினும் இரவுபகலாக உழைத்து கல்லையும் செங்கல்லையும் சேமித்து பெரிய மனிதன்” ஆகிறான். மூடன் அல்லது அயோக்கியனே பெரிய மனிதனாகக் கருதப்படுவான். ஸ்வ-வித்-வர-ஹோஸ்ட்ர-கரை: ஸம்ஸ்துத: புருஷ: பஷு: நாய், பன்றி, ஒட்டகம், கழுதை போன்ற மனிதனே பக்தனல்லாத முட்டாளையும் அயோக்கியனையும் புகழ்வான்,” என்று பாகவதம் கூறுகிறது,
பக்தர்: கடவுள் நமக்கு புலன்களை வழங்கியிருப்பதால் நாம் அவற்றை அனுபவிக்க வேண்டும் என்று மக்கள் வாதிடுகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: அவ்வாறு வாதிடும் மக்களை நான் கேட்கிறேன், நாய் கூடத்தான் புலன்களை அனுபவிக்கிறது. நாய் அனுபவிக்காததையா நீங்கள் அனுபவிக்கிறீர்கள்?
கடவுள் உங்களுக்கு புத்தியை வழங்கியுள்ளார். அதை வைத்து கடவுள் மிகப் பெரியவர், நான் அவரது சேவகன்,” என்று அறிவதே புத்திசாலித்தனம். இல்லையெனில், உங்களுக்கும் நாய்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
பக்தர்: கடவுள் மடிந்துவிட்டார் என்று சில மக்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: கடவுள் மடியவில்லை, உங்களது புத்திதான் மடிந்துவிட்டது. நீங்கள் ஒரு பிணத்தைப் பிடித்துக் கொண்டு வாழ்கிறீர்கள், அதில் கர்வமும் கொள்கிறீர்கள். உடலானது ஒரு காரைப் போன்றது, கார் உயிரற்றது, ஓட்டுநர் இல்லாவிடில் அஃது இயங்காது. அதுபோலவே, ஆத்மாவாகிய நீங்கள் இந்த உடலை விட்டு நீங்கியதும் இந்த உடல் இயங்குவதில்லை. இதன் பொருள் என்னவெனில், நீங்கள் ஒரு பிணத்தில் குடியிருக்கிறீர்கள். நீங்கள் இருக்கும் வரை மட்டுமே இவ்வுடல் இயக்கத்தில் இருக்கும், உண்மையில் உடலானது ஒரு பிணமே. அந்த பிணத்திற்குதான் நீங்கள் அலங்காரம் செய்கிறீர்கள். நீங்கள் பெற்றுள்ள அனைத்தும் பிணத்திற்கான அலங்காரமே. அப்ராணஸ்யேவ தேஹஸ்ய மண்டனம் லோக-ரஞ்ஜனம். அயோக்கியன் மட்டுமே நீங்கள் மிகவும் புத்திசாலி, உங்களது உடலை நன்கு அலங்கரிக்கிறீர்கள்” என பாராட்டுவான். ஆனால் புத்திசாலியோ, பிணத்தை அலங்கரிப்பவன் எத்தகைய மூடன்” என்றே கூறுவான்.
பக்தர்: கோயிலில் இருக்கும் விக்ரஹத்தை எதற்கு அலங்கரிக்கிறோம் என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஏனெனில், அஃது உயிரற்றதல்ல, உயிரோட்டமுள்ளது. நாம் உயிரோட்டமுள்ள திருமேனியையே அலங்கரிக்கிறோம் என்பதை அவர்கள் அறிவதில்லை.
பக்தர்: விக்ரஹம் உயிரோட்டமுள்ளது என்று நீங்கள் கூறலாம். ஆனால், அது கல்லாகவே காட்சியளிக்கின்றது, உயிரோட்டத்திற்கான எந்த அறிகுறிகளும் அதில் தென்படவில்லையே.
ஸ்ரீல பிரபுபாதர்: உயிர் உள்ளது-பரம உயிர்-ஆனால் அதைக் காணும் கண்கள்தான் உங்களுக்கு இல்லை. ப்ரேமாஞ்ஜன-ச்சுரித-பக்தி-விலோசனேன. ஒரு பக்தன் விக்ரஹம் உயிரோட்டமுடன் இருப்பதைக் காண்கிறான். உயிரற்ற உடலை வழிபட நாங்கள் என்ன அயோக்கியர்களா முட்டாள்களா? நாங்கள் பல்வேறு சாஸ்திரங்களைப் படித்த பின்னர், கல்லை வழிபடுவதாக நினைக்கிறீர்களா? உண்மையைக் காண்பதற்கான கண்கள் உங்களிடம்தான் இல்லை. கிருஷ்ணர் விக்ரஹத்தில் இருக்கிறார் என்பதைக் காண உங்களது பார்வையை நீங்கள் புனிதப்படுத்த வேண்டும்.
பக்தர்: பெரும்பாலான மக்கள் ஆத்மாவின் இருப்பையே புரிந்துகொள்ளாதபோது விக்ரஹத்தை எவ்வாறு புரிந்துகொள்ளப் போகிறார்கள்?
ஸ்ரீல பிரபுபாதர்: எனவே. இந்த விஞ்ஞானத்தை அறிவதற்கு அவர்கள் நமது மாணவர்களாக, சீடர்களாக வேண்டும்.அப்போது அவர்களால் கல் விக்ரஹமும் கிருஷ்ணரே என்பதைக் காண இயலும்.
பக்தர்: எனது உடலும் விக்ரஹத்தைப் போல நிலத்தால் ஆனது, அவ்வாறெனில் எனது உடலும் கிருஷ்ணரா?
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, உங்களது உடல் கிருஷ்ணரின் சக்தி. எனவே, அது கிருஷ்ணரது சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இதுவே கிருஷ்ண உணர்வு. உடலானது கிருஷ்ணரது சக்தி என்பதை அறிந்தவுடன் அதனை நீங்கள் அவரது சேவைக்காக அன்றி வேறு எதற்காகவும் உபயோகிக்க மாட்டீர். ஆனால் மக்களுக்கு இந்த உணர்வு இல்லை. அவர்கள் இந்த உடலை தங்களுடையது என்று நினைக்கிறார்கள், அல்லது தானே இந்த உடல் என்றும் நினைக்கிறார்கள். இது மாயையாகும்.
பக்தர்: பரம புருஷர் அனைவரது இதயத்திலும் வீற்றுள்ளார்,” என்பதை பகவத் கீதையில் பயிலும் அருவவாத அறிஞர்கள், கிருஷ்ணர் அனைவரது இதயத்திலும் வீற்றுள்ளதால் அனைத்து உயிர்வாழிகளும் கிருஷ்ணரே என்று வாதிடுகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஏன்? நான் ஓர் அறையில் இருப்பதால் நானே அந்த அறையாகிவிடுவேனா? அவர்களது வாதத்தில் ஏதேனும் அர்த்தமுள்ளதா? கிருஷ்ணர் எனது உடலில் இருக்கிறார், நானும் எனது உடலில் இருக்கிறேன், அதனால் நான் இந்த உடல் என்றோ அல்லது கிருஷ்ணர் இந்த உடல் என்றோ அர்த்தமாகாது. கிருஷ்ணரே எல்லாம், இருப்பினும் இருப்பவை அனைத்திலிருந்தும் அவர் தனித்திருக்கிறார். பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார், மத்-ஸ்தானி-ஸர்வ-பூதானி: அனைத்தும் என்னில் உள்ளது.” ந சாஹம் தேஷ்வவஷ்தித: ஆனால் அனைத்திலிருந்தும் நான் தனித்துள்ளேன்.” இதுவே ஒரே சமயத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் கொண்ட அசிந்திய-பேதாபேத தத்துவமாகும்.
பக்தர்: மற்ற மதங்கள் இத்தகைய செய்திகளை வழங்குவதில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: நாம் மதம் குறித்து பேசவில்லை, அறிவியல் குறித்து பேசுகிறோம். மதத்தைக் கொண்டு வராதீர்கள். மக்களைக் கண்மூடித்தனமாக செயல்படத் தூண்டும் பல்வேறு மதங்கள் உள்ளன. அந்த மதங்களை நாம் பொருட்படுத்துவதில்லை.
பக்தர்: ஒருவன், கல் கிருஷ்ணர் என்றால், ஏன் அனைத்து கற்களையும் வழிபடக் கூடாது?”
ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ணரின் திருவுருவத்தைக் கல்லில் வடித்த பின்னர் அக்கல்லை நாம் வழிபடுகிறோம். ஏதோ ஒரு கல்லை வழிபடவில்லை. கிருஷ்ணர் எல்லாமாக தனது சக்திகளின் மூலம் இருக்கிறார் என்பதற்காக நாயை வழிபட வேண்டும் என்பதில்லை. கிருஷ்ணரை வழிபடுவதே நமது பணி.