வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
நிகம–கல்ப–தரோர் கலிதம் பலம்
ஷுக–முகாத் அம்ருத–த்ரவ–ஸம்யுதம்
பிபத பாகவதம் ரஸம் ஆலயம்
முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா:
“சிந்தனை நிறைந்த வல்லுநர்களே, வேத இலக்கியங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகிய ஸ்ரீமத் பாகவதத்தை அனுபவியுங்கள். அமிர்தம் போன்ற இந்த ஸ்ரீமத் பாகவத ரஸம், முக்தி பெற்ற ஆத்மாக்கள் உட்பட அனைவராலும் ஏற்கனவே அனுபவிக்கக்கூடியதாக இருந்தபோதிலும், தற்போது ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமியின் திருவாயிலிருந்து மலர்ந்திருப்பதால் மேலும் சுவையுடையதாகியுள்ளது.” (ஸ்ரீமத் பாகவதம் 1.1.3)
கற்பக விருட்சம்
ஸ்ரீமத் பாகவதம் வேத இலக்கியங்களின் கனிந்த பழமாகும். வேத இலக்கியம் கற்பக மரத்துடன் (கல்ப–தருவுடன்) ஒப்பிடப்படுகின்றது. கல்ப என்றால் “விருப்பம்” என்றும், தரு என்றால் “மரம்” என்றும் பொருள். பௌதிக உலகில் வாழும் நமக்கு கல்ப–தருவைப் பற்றிய அனுபவம் ஏதும் இல்லை; கல்ப–தருவானது ஆன்மீக உலகமான கிருஷ்ண லோகத்தில் காணப்படக்கூடியதாகும். பௌதிக உலகில் மாமரத்திலிருந்து மாம்பழங்களை மட்டுமே பெற முடியும், இதர பழங்களைப் பெற முடியாது. ஆனால் கல்ப–தருவிடமிருந்து எல்லா வகையான பழங்களையும் பெற முடியும்.
கிருஷ்ண லோகத்தின் வர்ணனை
மேலும், கிருஷ்ணருடைய லோகம் சிந்தாமணி கற்களால் ஆனது; சிந்தாமணி கல்லினைக் கொண்டு இரும்பைத் தொடும்போது அது தங்கமாக மாறி விடும். ஆன்மீக உலகிலும் வீடுகள், மரங்கள், பசுக்கள் முதலியவை உள்ளன. அங்கு கிருஷ்ணர் தமது சகாக்களுடன் வீற்றிருக்கின்றார். கிருஷ்ண லோகத்தைக் குறித்த இத்தகைய வர்ணனைகள் பிரம்ம சம்ஹிதையில் உள்ளன.
எனவே, நாங்கள் செயற்கையாக கற்பனை செய்து கிருஷ்ணரை உருவாக்கியுள்ளதாக நினைக்க வேண்டாம். கிருஷ்ணரும் அவருடைய லோகமும் வேத இலக்கியங்களில், குறிப்பாக பிரம்ம சம்ஹிதையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளன. நாம் வாழும் இந்த உலகமும் கிருஷ்ணருடைய இடமே. ஆயினும், கிருஷ்ணரை மறந்ததன் விளைவாக நாம் இதனை பௌதிகமானதாகக் கருதுகிறோம்.
மன அமைதிக்கான வழி
நாட்டிலுள்ள எல்லா இடங்களும் எவ்வாறு அரசருக்குச் சொந்தமானதோ, அவ்வாறே பௌதிக உலகம், ஆன்மீக உலகம் என எல்லா உலகங்களும் கிருஷ்ணருக்குச் சொந்தமானவை. இதனை பகவத் கீதையில் (5.29) கிருஷ்ணர் கூறுகின்றார்:
போக்தாரம் யஜ்ஞ–தபஸாம்
ஸர்வ–லோக–மஹேஷ்வரம்
ஸுஹ்ருதம் ஸர்வ–பூதானாம்
ஜ்ஞாத்வா மாம் ஷாந்திம் ருச்சதி
“கிருஷ்ணரே அனைத்தையும் அனுபவிப்பவர், அனைத்திற்கும் உரிமையாளர், அனைவருக்கும் உற்ற நண்பர்,” என்னும் மூன்று விஷயங்களை அமைதியையும் மகிழ்ச்சியையும் விரும்புபவர் அறிந்திருக்க வேண்டும்.
நீங்கள் யாகம், தானம், தவம் மற்றும் விரதத்தை மேற்கொள்ளலாம், அவற்றால் அடையப்படும் பலன்கள் யாவும் கிருஷ்ணரால் அனுபவிக்கப்பட வேண்டியவை. இதுவே கிருஷ்ண உணர்வு. ஆனால், “நானே அனுபவிப்பாளன், ஏன் மற்றவர்கள் அனுபவிக்க வேண்டும்?” என்று அனைவரும் எண்ணுகின்றனர். இது பௌதிகமான சிந்தனை. கிருஷ்ண பக்தி இயக்கத்திலோ இத்தகைய உணர்வை மாற்றியமைக்க முயல்கின்றோம். நீங்கள் விருப்பம்போல் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்; ஆயினும், கிருஷ்ணரே அதன் அனுபவிப்பாளராக இருக்க வேண்டும், நீங்கள் அனுபவிப்பாளர் இல்லை—இதையே கிருஷ்ண பக்தி இயக்கம் கற்றுத் தருகிறது. இத்தகைய சிந்தனையே கிருஷ்ண உணர்வு.
கிருஷ்ணருடைய இருப்பிடமாகிய சிந்தாமணி தாமத்தில், அனைவரும் கிருஷ்ணரது ஆனந்தத்திற்காக மட்டுமே செயல்படுகின்றனர். இங்குள்ளவர்களோ தங்களது சொந்த ஆனந்தத்திற்காகவே முயல்கின்றனர். எனவே, இங்கு மனிதர்களுக்கு இடையிலும் குடும்பங்களுக்கு இடையிலும் சமுதாயங்களுக்கு இடையிலும் நாடுகளுக்கு இடையிலும் போட்டி மனப்பான்மை எப்போதும் காணப்படுகிறது. நாம் கிருஷ்ண பக்தர்களாகும்போது—அதாவது “நாம் உரிமையாளர் கிடையாது, கிருஷ்ணரே உரிமையாளர்,” என்பதை உணரும்போது—அத்தகைய போட்டி மனப்பான்மை
யிலிருந்து விடுபடுகிறோம். இதுவே அமைதிக்கான அடித்தளமாகும்.
நமது உற்ற நண்பர்
மேலும், கிருஷ்ணரே அனைவருக்கும் உற்ற நண்பர் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர் அனைவரின் இதயத்திலும் நண்பராக வீற்றிருக்கின்றார் என்று உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: உடலானது ஒரு மரத்துடனும் ஆத்மாவும் பரமாத்மாவும் அந்த மரத்திலுள்ள பறவைகளுடனும் ஒப்பிடப்படுகின்றனர். ஒரு பறவை (ஆத்மா) மரத்தின் பழங்களைப் புசித்துக் கொண்டுள்ளது, மற்றொரு பறவையோ (பரமாத்மாவோ) நண்பனாகவும் சாட்சியாகவும் உள்ளது.
பரமாத்மாவே நமது உற்ற நண்பர், அவர் நம்மை தமது திருநாட்டிற்கு மீண்டும் அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார். அவர் நமது இதயத்தில் வீற்றிருப்பது மட்டுமின்றி, கிருஷ்ணராக அவதரித்து பிரச்சாரமும் செய்கிறார்: ஸர்வ–தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ, “ஏன் பெயரளவிலான கடமைகளில் ஈடுபட்டுள்ளாய்? என்னிடம் மட்டுமே சரணடைவாயாக.” (பகவத் கீதை 18.66)
நாமோ லெளகீகத்தில் மூழ்கியுள்ளதால் கிருஷ்ணரின் உபதேசங்களை ஏற்க மறுக்கின்றோம். எனவே, அவர் ஒரு பக்தரின் வடிவில், பகவான் ஸ்ரீ சைதன்யராக மீண்டும் அவதரித்து, “சரணடைவது எவ்வாறு” என்பதை நடைமுறையில் காண்பிக்கின்றார். கற்பக மரங்களும் சிந்தாமணி கற்களும் நிறைந்த நித்திய ஆனந்தத்துடன்கூடிய ஆன்மீக லோகத்திற்கு வருமாறு நம்மிடம் பிரச்சாரம் செய்வதற்காக, அவர் தாமே பரம புருஷராகத் தோன்றுகிறார், பக்தராக அவதரிக்கின்றார், தமது பிரதிநிதிகளையும் அனுப்பி வைக்கின்றார்.
வேதாந்தம்—இறுதியான அறிவு
வேத இலக்கியங்கள் ஆன்மீக உலகைப் பற்றிய அறிவை வழங்குகின்றன. வேதம் என்றால் “அறிவு” என்று பொருள். வேத்தி வேத விதோ ஜ்ஞானம், “அறிவை வழங்குவது எதுவாகிலும் அது வேதமாகும்.” நாம் வேதங்களிலிருந்து மிகவுயர்ந்த அறிவைப் பெற வேண்டும். அன்றாட வாழ்வில் நாம் பலவித அறிவினைப் பெறுகின்றோம். ஆயினும், இறுதியான அறிவு எது? வேதாந்தமே இறுதி அறிவாகும், இது பரம்பொருளைப் பற்றிய அறிவாகும்.
“இன்றைய நாளிதழில் என்ன உள்ளது? நாட்டில் என்ன நடக்கிறது?” என்று நாம் வினவுகின்றோம். இத்தகைய வினாக்களுக்கான விடைகளும் அறிவே. ஆனால் இவை இறுதியான அறிவல்ல. இறுதியான அறிவு என்பது கிருஷ்ணரைப் பற்றிய அறிவே. எனவே, பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகின்றார், வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய:, “எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே.”
அறிவைப் பெற விரும்புவோர் கிருஷ்ணரை அறிந்திராத பெயரளவிலான வேதாந்திகளை நாடுகின்றனர். ஆனால் கிருஷ்ணரைப் பற்றி அறிந்திருப்பவரே உண்மையான வேதாந்தியாவார். சில வருடங்களுக்கு முன்பு எனக்கு “பக்திவேதாந்தர்” என்னும் பட்டத்தை வைஷ்ணவர்கள் சிலர் வழங்கினர். வேதாந்தத்தின் இறுதி உண்மை பக்தியே, அருவமல்ல—இதுவே பக்திவேதாந்த என்பதன் பொருளாகும்.
நிகம–கல்ப–தரோர் கலிதம் பலம், ஸ்ரீமத் பாகவதம் வேத அறிவின் கனிந்த பழமாகும். வேதங்கள் அனைத்தும் வேதாந்த சூத்திரத்தில் அடங்கியுள்ளன. ஸ்ரீமத் பாகவதம் அந்த வேதாந்த சூத்திரத்தின் விளக்கவுரையாகும். எனவேதான், ஸ்ரீமத் பாகவதத்தின் தொடக்கத்திலேயே வேதாந்த சூத்திரத்தின் ஒரு வாக்கியத்தினை நாம் காண்கின்றோம், ஜன்மாத்யஸ்ய யத:.
பரம்பொருளின் மூன்று நிலைகள்
பரம்பொருளைப் பற்றிய ஆராய்ச்சியில் பல நிலைகள் இருப்பதாக பாகவதத்தில் (1.2.11) விளக்கப்பட்டுள்ளது:
வதந்தி தத் தத்த்வ–விதஸ்
தத்த்வம் யஜ் ஜ்ஞானம் அத்வயம்
ப்ரஹ்மேதி பரமாத்மேதி
பகவான் இதி ஷப்த்யதே
பரம்பொருள் ஒருவரே; ஆயினும், அந்த பரம்பொருளை சிலர் அருவ பிரம்மனாகவும், சிலர் உள்ளுறையும் பரமாத்மாவாகவும், வேறு சிலர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாகவும்—கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவாக—ஏற்கின்றனர்.
கிருஷ்ண பக்தி இயக்கம் பரம்பொருளின் இறுதிநிலையை அறிவதற்கானது; அதாவது, பரம்பொருளை பரம புருஷராக அறிவதற்கானது. பாகவதம் அந்த பரம்பொருளை தொடக்கத்திலேயே விவரிக்கின்றது: ஓம் நமோ பகவதே வாஸுதேவாய, “எனது மரியாதைக்குரிய வணக்கங்களை வாஸுதேவருக்கு அர்ப்பணிக்கின்றேன்.” வாஸுதேவர் என்றால், வஸுதேவரின் மைந்தராகிய கிருஷ்ணரைக் குறிக்கிறது. கிருஷ்ணர் வஸுதேவரின் மைந்தராக அவதரித்துள்ளார். வஸுதேவ என்றால் சுத்த-ஸத்வம் (தூய-ஸத்வம்) என்றும் பொருளாகும். வஸுதேவ நிலையை—தூய்மையான நிலையை—அடையாத நபரால் வாஸுதேவராகிய கிருஷ்ணரை அறிய முடியாது.
சுத்த-ஸத்வம்
இந்த பௌதிக உலகில் மூன்று தன்மைகள் உள்ளன: ஸத்வம், ரஜோ மற்றும் தமோ குணங்கள். இதில் தமோ குணமும் ரஜோ குணமும் முற்றிலும் பௌதிகமானவை. பேராசையும் காமமும் தமோ மற்றும் ரஜோ குணங்களின் அறிகுறிகளாகும். பேராசைக்கும் காமத்திற்கும் அப்பாற்பட்டதே வேதாந்த நிலையாகும். அத்தகைய ஸத்வ குண நிலையில் உள்ளவர்களால் அனைத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். அந்த பௌதிக ஸத்வத்திற்கும் அப்பாற்பட்டது சுத்த-ஸத்வமாகும்.
பௌதிகத் தளத்திலுள்ள ஸத்வ குணமானது, தமோ மற்றும் ரஜோ குணங்களினால் பாதிக்கப்படலாம். உதாரணமாக, ஒரு தூய பிராமணர் ஸத்வ குணத்தில் நிலைபெற்று, உண்மை, பொறுமை, முழுமையான அறிவு, மனம் மற்றும் புலன் கட்டுப்பாடு முதலிய குணங்களுடன் காணப்படுகிறார். ஆயினும், சில நேரங்களில் அந்த பிராமண குணங்கள், ரஜோ மற்றும் தமோ குணங்களினால் களங்கமடைய நேரிடுகிறது. பிராமண குடும்பத்தில் பிறந்தோர் பலர், ரஜோ மற்றும் தமோ குணங்களினால் களங்கமடைந்துள்ளதை இன்று நம்மால் காண முடிகிறது.
ஏனைய இரு குணங்களால் பாதிக்கப்படும்போது பௌதிக ஸத்வ குணத்தில் இருப்பவரும் இழிவடைய நேரிடுகின்றது. ஆனால் பௌதிக ஸத்வ குணத்தைக் கடந்து சுத்த-ஸத்வ நிலையை அடையும்போது, நீங்கள் வீழ்ச்சியடைவதில்லை. ஸத்த்வம் விஷுத்தம் வஸுதேவ–ஷப்திதம். சுத்த-ஸத்வ குணத்தில் நிலைத்திருப்பதே வஸுதேவ நிலை என்று அறியப்படுகிறது. அந்தத் தூய்மையான ஸத்வ நிலையில், வாஸுதேவராகிய கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முடியும். வாஸுதேவர் எப்போதும் உங்களுடைய இதயத்தில் வீற்றுள்ளார்; இருப்பினும், தூய உணர்வு நிலையை அடையும்போதே அவரது இருப்பை உங்களால் உணர முடிகிறது.
கிளியினால் தீண்டப்பட்ட பழம்
ஸ்ரீமத் பாகவதத்தைக் கற்றறிவதன் மூலமாக, நம்மால் சுத்த-ஸத்வ நிலையை அடைய இயலும். எனவே, ஸ்ரீமத் பாகவதமே வேத ஞானத்தின் கனிந்த பழம் என்று இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது, நிகம–கல்ப–தரோர் கலிதம் பலம். ஸ்ரீமத் பாகவதம் வியாஸதேவரால் எழுதப்பட்டு, அவரின் மைந்தராகிய சுகதேவ கோஸ்வாமியினால் முதன்முறையாகப் பேசப்பட்டது. வியாஸதேவர் தமது ஆன்மீக குருவான நாரத முனிவரின் கட்டளையின்படி பாகவதத்தை எழுதினார். மேலும், அவர் தமது அன்பிற்குரிய மகனாகிய சுகதேவ கோஸ்வாமியிடம், “நான் ஸ்ரீமத் பாகவதத்தை எழுதியுள்ளேன், நீங்கள் இதனை பிரச்சாரம் செய்யுங்கள்,” என்று கூறினார்.
ஆன்மீக குருவின் வார்த்தைகளை சீடர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். இதுவே சீடர்களின் கடமையாகும். சீடரும் குருவைப் போன்று தூய்மையானவராக இருந்தால், சீடரின் பிரச்சாரம் மிகவும் சிறப்பாக அமையும்.
இந்த ஸ்லோகத்திற்கான மற்றொரு விளக்கம்: மரத்திலேயே பழுத்த பழமானது மிகுந்த சுவையுடன் இனிப்பாக இருக்கும். மரத்திலிருந்து பறித்து வீட்டில் வைக்கப்படும் காயும்கூட பழுக்கும், ஆனால் அஃது அவ்வளவு சுவையாக இருப்பதில்லை. மேலும், மரத்தில் பழுத்த பழமானது ஒரு கிளியினால்—சுகதேவரால்—சுவைக்கப்பட்டால், அந்தப் பழம் கூடுதலான சுவையுடன் திகழும். அதுபோலவே, வேத ஞானத்தின் கனிந்த பழமாகிய ஸ்ரீமத் பாகவதம் ஏற்கனவே மிகுந்த சுவையுடன் இருந்தபோதிலும், அது சுகதேவ கோஸ்வாமியின் அதரங்களால் சுவைக்கப்பட்டிருப்பதால், த்ரவ–ஸம்யுதம், மேலும் அதிக சுவையுடன் திகழ்கிறது. எனவே, பிபத பாகவதம் ரஸம், “பாகவதமெனும் கனிந்த பழத்தின் சாறை (ரஸத்தை) பருகுங்கள்” என்று பரிந்துரைக்கப்படுகிறது.
வாழ்வின் இறுதி இலட்சியம்
நாம் அனுபவிக்கும் சுகமும் ரஸம் என்றே அழைக்கப்படுகின்றது. நாம் இத்தகைய ரஸத்தைப் பெறுவதற்காகவே எல்லாச் செயல்களையும் செய்கிறோம். ஓர் ஆண்மகன் இரவுபகல் பாராமல் கடினமாக உழைப்பது எதற்காக? தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகவே. கடுமையாக உழைத்து குடும்பத்தை நிர்வகிப்பதில் அவன் ஒருவிதமான சுவையை அனுபவிக்கின்றான். எந்தவொரு ரஸமோ சுவையோ இல்லாவிடில், அவனால் இரவுபகல் பாராமல் கடுமையாக உழைக்க இயலாது. குடும்பம் இல்லாத அல்லது குடும்பத்தினரிடம் பாசமில்லாத மனிதன் கடுமையாக உழைப்பதில்லை என்பதை நாம் காண்கின்றோம். எனவேதான், வேதப் பண்பாட்டில் இல்லற வாழ்வு பரிந்துரைக்கப்படுகின்றது. இல்லற அன்பின் சுவையை அறியாதவன் குழப்பத்துடன் நம்பிக்கை இழந்தவனாக இருக்கலாம். நாம் செய்யும் செயல்கள் அனைத்திலும் ஒருவிதமான சுவை இருக்கிறது. சுவையில்லாமல் ஒருவரால் வாழ இயலாது.
உண்மையான இன்பம்
ரமந்தே யோகினோ ’னந்தே
ஸத்யானந்தே சித்–ஆத்மனி
இதி ராம–பதேனாஸௌ
பரம் ப்ரஹ்மாபிதீயதே
ராம என்னும் சொல், ரமண, “இன்பம் அனுபவித்தல்” என்னும் சொல்லிலிருந்து வருகிறது. ராம என்பது அனைத்து இன்பத்தின் இருப்பிடமாகிய பரம புருஷ பகவானின் திருநாமமாகும். இந்த பௌதிக உலகில் மக்கள் பாலுறவின் வடிவில் ரமணத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் பகவான் இராமரிடம் அடைக்கலம் பெற்றால், நீங்கள் உண்மையான இன்பத்தை அனுபவிக்கலாம்.
ரமந்தே யோகினோ ’னந்தே, ஆன்மீகப் பக்குவமடைவதில் நாட்டமுடையவர்கள் யோகிகள் அல்லது தெய்வீகமானவர்கள் என்று அறியப்படுகின்றனர். இன்றைய மக்கள் ஹட யோகம் போன்ற ஆரம்பநிலை யோகத்தையே பயில்கின்றனர். ஆனால், இத்தகைய ஆரம்பகட்ட பயிற்சியில்கூட அவர்கள் பக்குவம் அடைவதில்லை எனும்போது, முன்னேறிய பயிற்சிகளைப் பற்றி கூறுவதற்கு என்ன இருக்கின்றது?
பக்தி யோகிகள் பக்தி யோகத்தில் ஈடுபடுகின்றனர். பக்தி யோகம் என்றால் என்ன? கிருஷ்ணரைப் பற்றி கேட்டல், கிருஷ்ணரைப் பற்றி கீர்த்தனம் செய்தல், கிருஷ்ணரை நினைத்தல் முதலிய செயல்களே பக்தி யோகமாகும்.
உங்களை அட்லாண்டிக் கடலில் அழுத்தினால், நீங்கள் கடலில் மூழ்கிவிடுவீர். நீங்கள் கடல்வாழ் உயிரினம் இல்லை என்பதால், உங்களால் நீருக்குள் இன்பமாக இருக்க முடியாது. அதுபோலவே, ஆன்மீகத் தன்மை கொண்ட உங்களால் பௌதிக இருப்பில் ஆனந்தமாக இருக்க முடியாது. நீங்கள் கிருஷ்ண உணர்வுடன் ஆன்மீக இருப்பில் வாழ வேண்டியவர்கள். அப்பொழுதுதான் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். இதுவே பாகவதம் ரஸம் ஆலயம் என்பதற்கான விளக்கமாகும்.