வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்னாத்மா
ந ஷோசதி ந காங்க்ஷதி
ஸம: ஸர்வேஷு பூதேஷு
மத்-பக்திம் லபதே பராம்
“தெய்வீகத்தில் நிலைபெற்றவன் உடனடியாக பரபிரம்மனை உணர்ந்து இன்பம் நிறைந்தவனாகிறான். அவன் என்றும் கவலைப்படுவதில்லை, எதையும் அடைய வேண்டும் என்று விரும்புவதும் இல்லை. எல்லா உயிர்வாழிகளிடமும் அவன் சமநோக்கு கொள்கிறான். அத்தகு நிலையில் அவன் எனது தூய பக்தித் தொண்டை அடைகிறான்.” (பகவத் கீதை 18.54)
கிருஷ்ண பக்தி ஆனந்தமயமானது
கிருஷ்ண உணர்வு முற்றிலும் ஆனந்தம் நிறைந்தது; ஏனெனில், அனைத்து பெளதிகத் துன்பங்களிலிருந்தும் விடுதலைப் பெற்ற பின்னரே ஒருவன் இந்நிலையை அடைகிறான். இதுவே ப்ரஹ்ம-பூத நிலை என்று அறியப்படுகிறது. பன்னெடுங் காலமாக சிறைச்சாலையில் துன்பப்படுபவன் திடீரென விடுதலையடையும்போது மிகுந்த மகிழ்ச்சியை உணர்வதைப் போலவே, ப்ரஹ்ம-பூத நிலையை அடைபவன் ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.
ஆனந்தத்தின் இயல்பான நிலை என்ன? ந ஷோசதி, மாபெரும் நஷ்டத்தை அடைந்தாலும், அதனால் துன்புறுவதில்லை. ந காங்க்ஷதி, மாபெரும் இலாபத்திற்காக ஏங்குவதுமில்லை. மேலும், அத்தகு நிலையில் ஒருவன் அனைத்து உயிர்வாழிகளையும் ஆன்மீக நிலையில் சமமாகக் காண்கிறான். பகவத் கீதையின் மற்றோர் இடத்தில் பண்டித: ஸம-தர்ஷின:, “கற்றறிந்தவன் அனைவரையும் ஆன்மீக நிலையில் சமமாகக் காண்கிறான்,” என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில் இந்நிலையிலிருந்தே கிருஷ்ண உணர்வு ஆரம்பமாகிறது. ஆகவே, கிருஷ்ண உணர்வென்பது முக்தி பெற்ற நிலையிலுள்ள உயிர்வாழிக்கான செயல்பாடாகும்.
அனைவரும் பெளதிகத் துன்பத்திலிருந்து விடுதலைப் பெற முயல்கின்றனர். புத்தரின் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் நிர்வாணத்தை அடைவதன் மூலமாக பௌதிகத் துன்பங்களிலிருந்து விடுதலைப் பெற விரும்புகின்றனர். நிர்வாண என்பதற்கு “எதுவும் இல்லாத நிலை” என்று பொருள். அதாவது, பௌத்தர்கள் ஏதுமற்ற சூன்யத்தையே விரும்புகின்றனர். இதுவே பௌத்த கொள்கையின் சாராம்சமாகும். மாயாவாதிகளின் கொள்கையும் ஏறக்குறைய பௌத்த கொள்கையை ஒத்ததே. பௌத்தர்கள் அனைத்தையும் சூன்யமாக்குவதற்கு விரும்புகின்றனர், மாயாவாதிகள் பிரம்மத்தை மட்டும் வைத்துக் கொண்டு பௌதிக பன்முகத் தன்மையை சூன்யமாக்குகின்றனர். அதுவே அவர்கள் செய்யும் தவறு. உயிர் இருக்கும் இடத்தில் பன்முகத் தன்மை இருக்கவே செய்யும்; பன்முகத் தன்மையற்ற உயிர் சாத்தியமற்றதாகும். இதுவே மாயாவாத கொள்கையின் குறைபாடாகும்.
இவர்களின் நிலையினை வியாதியினால் அவதியுறும் நோயாளியின் நிலையுடன் ஒப்பிடலாம். நோயாளி ஒருவன் மருத்துவரிடம், “தயவுசெய்து எனது துன்பத்திற்கு முடிவு கட்டுங்கள், என்னைக் கொன்று விடுங்கள்! என்னைக் கொன்று விடுங்கள்!” என்று கதறுகிறான். வியாதியால் துன்புறுபவர்கள் சில நேரங்களில் இதுபோன்று கூறுவதுண்டு.
மருத்துவரோ, “உங்களைக் கொல்ல வேண்டிய அவசியமில்லை, உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்வைத் தருகிறேன்.”என்று கூறுகிறார்.
ஆனால், பொறுமை இழந்த நோயாளியோ, “இல்லை, இல்லை. என்னால் வலியைத் தாங்க முடியவில்லை, தயவுசெய்து என்னைக் கொன்று விடுங்கள்,” என்று கூறுகிறான்.
மாயாவாதிகளும் பௌத்தர்களும் அத்தகு நோயாளியைப் போன்றவர்களே. அவர்கள் கூறுகின்றனர், “நாங்கள் இறப்பதற்கு விரும்புகிறோம், ஏதுமற்ற சூன்யமாக விரும்புகிறோம்.” பௌதிகத் துன்பங்களால் மிகுந்த தொந்தரவிற்கு ஆளாகும் அவர்கள் விரக்தியுற்று வாழ்வை சூன்யமாக்குவதற்கு விரும்புகின்றனர்.
கிருஷ்ண உணர்வென்பது அதுபோன்றதல்ல. கிருஷ்ண உணர்வு உங்களை உண்மையான வாழ்விற்கு அழைத்துச் செல்கிறது.
எளிமையானது மற்றும் கடினமானது
கிருஷ்ண பக்தி சில நேரங்களில் புரிந்துகொள்வதற்குக் கடினமானதாகும். ஏன்? ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது, மதிர் ந க்ருஷ்ணே பரத: ஸ்வதோ வா மிதோ ’பிபத்யேத க்ருஹ-வ்ரதானாம். க்ருஹ என்றால் “வீடு” என்றும் வ்ரத என்றால் “விரதம்” என்றும் பொருள். “குடும்பத்தைப் பராமரிப்பதில் மட்டுமே மும்முரமாக இருப்பவனால், கிருஷ்ண உணர்வின் தத்துவத்தைப் புரிந்துகொள்ள இயலாது.” நல்ல மனைவி, வீடு, வங்கி இருப்பு முதலியவற்றை அடைவதிலேயே மக்கள் எப்போதும் ஆர்வமாக உள்ளனர். மனிதன் தனது உடலைப் பராமரிப்பதில் ஆர்வமாக இருக்கிறான்.
க்ருஹ என்பதற்கு வசிப்பிடம் என்றும் பொருள். நான் ஓர் ஆத்மா, இந்த உடல் எனது முதல் வசிப்பிடமாக உள்ளது. எனவே, உடலையும் க்ருஹ என்று கூறலாம். நான் ஒரு வீட்டில் வசிக்கலாம். அதற்காக நானே அந்த வீடு அல்ல. வீடு வேறு, நான் வேறு. அதுபோலவே, நான் இந்த உடலில் வசிக்கிறேன், நானே இந்த உடல் அல்ல. இந்தப் புரிந்துணர்வே ஆன்மீகக் கல்வியின் ஆரம்பமாகும். ஒருவன் தான் இந்த உடல் அல்ல, ஆத்மா என்பதை அறியாத வரை, ஆன்மீகக் கல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை; ஏனெனில், அத்தகையவனால் ஆன்மீக உருவத்திற்கும் பௌதிக உருவத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அறிய இயலாது.
எனவே, நான் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவன், குறிப்பிட்ட நாட்டைச் சார்ந்தவன் போன்றவை அனைத்தும் தவறான கருத்துகளாகும். நீங்கள் பெரிய தலைவனாக இருக்கலாம், “எனது உயிர் இந்த நாட்டிற்கானது,” என்று கூறலாம். ஒரு சாதாரண மனிதன், “எனது உயிர் எனது குடும்பத்திற்கானது,” என்று கூறுகிறான். ஒருவனுடைய சுயநலன் அதிலிருந்து மாறி, குடும்ப நலன், சமுதாய நலன், தேச நலன், உலக நலன் என விரிவடையும்போது மக்கள் அதனைப் பாராட்டுகின்றனர். ஆனால் இவையனைத்தும் தவறான கருத்துகளே.
ஏனெனில், நமது வீட்டினை நாம் எவ்வளவு விரிவுபடுத்தினாலும், அதில் குறைபாடு நிச்சயம் உள்ளது. உதாரணமாக, அமெரிக்க தேசியவாதிகள் மனித இனத்திற்கு மட்டுமே தங்களது அன்பைக் காட்டுகின்றனர், மற்ற உயிர்வாழிகளுக்கு அன்பை விரிவுபடுத்துவதில்லை. அமெரிக்காவிலுள்ள மனித இனத்திற்கு மட்டுமே பாதுகாப்பு தேவை என்றும், விலங்குகளுக்கு பாதுகாப்பு தேவை இல்லை என்றும் எண்ணுகின்றனர். ஏன்? பசு உள்ளிட்ட மற்ற விலங்குகளும் அமெரிக்க குடிமக்களே, அவற்றையும் பாதுகாக்க வேண்டுமே. ஆனால் இந்த தேசியவாதிகளுக்கு அத்தகு எண்ணம் ஏதுமில்லை; ஏனெனில், தேசியவாதம் முதலான கருத்துகள் அனைத்தும் குறைபாடுகளைக் கொண்டதும் எல்லைக்கு உட்பட்டதுமாகும்.
குருட்டுத் தலைவர்கள்
மக்களுடைய தலைவர்கள் அனைவரும் ஆன்மீக ஞானமற்ற குருடர்களாக உள்ளனர், வாழ்வின் குறிக்கோளை அறியாதவர்களாக உள்ளனர். மக்களும் சரி, அவர்களை வழிநடத்தும் தலைவர்களும் சரி, இரு தரப்பினரும் குருடர்களாக இருந்தால் அதன் விளைவு என்ன? ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு சாலையைக் கடப்பதில் உதவி புரிந்தால், நிச்சயம் அங்கே விபத்து ஏற்படும். ஆயினும், பார்வையுள்ள தலைவனால் நூற்றுக்கணக்கான மக்களை பாதுகாப்பாக வழிநடத்த இயலும்.
தே ’பீஷ-தந்த்ர்யாம் உரு-தாம்னி பத்தா: “குருட்டுத் தலைவர்களைப் பின்பற்றும் குருடர்களும் பௌதிக இயற்கையின் கடினமான கயிறுகளால் இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளனர்.” அரசியல் தலைவர்கள் வாக்குறுதி அளிக்கின்றனர், “எனதருமை மக்களே, நாட்டிற்கு எனது சேவை தேவைப்படுகிறது, உங்களது பொன்னான வாக்குகளை எனக்கு அளித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள், நான் உங்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி உங்களது பிரச்சனைகளைத் தீர்க்கிறேன்.” ஆனால், தாங்கள் இயற்கையின் கடுமையான விதிகளால் கட்டுண்டிருக்கிறோம் என்பதை இந்தத் தலைவர்கள் அறிவதில்லை. கைகளும் கால்களும் நன்றாக கட்டப்பட்டிருக்கும்போது ஒருவனால் எந்த வேலையும் செய்ய இயலாததைப் போலவே, இயற்கையின் விதிகளால் நாம் கட்டுண்டிருக்கும்பொழுது இயற்கையின் சீற்றத்தை எவ்வாறு கட்டுப்படுத்த இயலும்? அது சாத்தியமில்லை. கடும் நிலநடுக்கம் ஏற்படுவதை உங்களால் தடுக்க இயலுமா? இயலாது. இவ்வாறாக, இயற்கையின் விதிகளால் கட்டுண்டிருக்கும் தலைவர்களால் உயர்ந்த நோக்கத்தை நோக்கி மக்களை வழிநடத்த இயலாது. வாழ்வின் உயர்ந்த நோக்கம் கிருஷ்ணரே. ஆனால் தலைவர்களோ பெளதிக இயற்கையின் பளபளப்பில் மயங்கியுள்ளனர்.
அப்படியெனில், நமது பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன? கிருஷ்ண உணர்வை அடையும் வழி யாது? வாழ்வின் குறிக்கோளை அடைவது எவ்வாறு? அதற்கு பாகவதம் (7.5.32) கூறுகிறது.
நைஷாம் மதிஸ் தாவத் உருக்ரமாங்க்ரிம்
ஸ்ப்ருஷத்யனர்தாபகமோ யத்-அர்த:
மஹீயஸாம் பாத-ரஜோ-’பிஷேகம்
நிஷ்கிஞ்சனானாம் ந வ்ருணீத யாவத்
“பௌதிக கவலைகளிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு (நிஷ்கிஞ்சனானாம்) கிருஷ்ணருக்காக தனது வாழ்வை நூறு சதவிகிதம் அர்ப்பணித்த பக்தரின் (மஹீயஸாம்) பாத தூளியைத் தலையில் வைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு எவருக்கு கிட்டவில்லையோ, அவனால் தனது மனதை கிருஷ்ணரது தாமரைத் திருவடிகளில் பதிக்க இயலாது. அத்தகு உயர்ந்த பக்தரின் கருணையால் கிருஷ்ண உணர்வை அடைய முடியுமே தவிர, வேறு எந்த முறையினாலும் அல்ல.”
ஒருவன் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவை அணுக வேண்டும், அவரது கருணையினால் கிருஷ்ண உணர்வைப் பெற முடியும். அவ்வாறு கிருஷ்ண உணர்வில் நுழைந்தவுடன் ஒருவன் ஆன்மீக திருப்தியை அடைகிறான், பெளதிக நிலையிலிருந்து விடுதலைப் பெறத் தொடங்குகிறான். பிறகு, மேன்மேலும் முன்னேறி உயர்ந்த வாழ்வை அடைகிறான்.
பாவ வாழ்விலிருந்து விடுதலை
கிருஷ்ண உணர்வின் முதல் நன்மை என்னவெனில், கிருஷ்ணருடன் தொடர்பு கொண்டவுடன் அனைத்துவித பௌதிகச் செயல்களையும் ஒருவன் கைவிடுகிறான். உதாரணமாக, எனது சீடர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொண்ட உடனேயே அனைத்துவித பாவச் செயல்களையும் கைவிட்டனர். தகாத பாலுறவு, போதை வஸ்துக்களை ஏற்றல், மாமிசம் உண்ணுதல், சூதாடுதல் ஆகியவை பாவ வாழ்வின் தூண்களாகும். பொதுவாக இத்தகு தீய பழக்கங்களைக் கைவிடுதல் என்பது மக்களுக்கு கடினமானதாகும், அதுவும் மேற்கத்திய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் கடினமானதாகும். ஆயினும், எனது சீடர்கள் இவற்றை மிக எளிதில் கைவிடுகின்றனர். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கிருஷ்ண உணர்வை ஏற்றவுடன் பாவ வாழ்வை மிக எளிதாகக் கைவிடுகின்றனர். இதில் அவர்களுக்கு எந்த சிரமமும் இருப்பதில்லை. இதுவே கிருஷ்ண உணர்வின் முதல் நன்மையாகும்.
பெயரளவிலான யோக மையங்கள் தங்களது மாணவர்களுக்கு பதினைந்து நிமிடத்திலிருந்து முப்பது நிமிடம் வரை ஏதாவதொன்றை வாயில் முணுமுணுத்தவாறு கண்களை மூடி அமரும் தியானத்தையே கற்றுத் தருகின்றன. ஆனால், எமது சீடர்களோ பகவான் கிருஷ்ணரது சேவையில் இருபத்துநான்கு மணி நேரமும் ஈடுபடுகின்றனர். அவர்கள் ஆன்மீக திருப்தியுடன் வாழ்கின்றனர்; இல்லாவிடில், அவர்களால் எவ்வாறு அனைத்தையும் கைவிட்டு கிருஷ்ணருக்கு சேவை செய்ய இயலும்?
பக்தருக்கு எவ்வித இழப்பும் இல்லை
கிருஷ்ண உணர்வை மனவெழுச்சியினால் ஏற்று வழிமுறையை முழுவதுமாகப் பின்பற்றாமல் பாதியிலே கைவிட்டு செல்பவரின் நிலை என்ன? என்று ஒருவர் வினவலாம். அதற்கான விடையும் ஸ்ரீமத் பாகவதத்தில் (1.5.17) வழங்கப்பட்டுள்ளது.
த்யக்த்வா ஸ்வ-தர்மம் சரணாம்புஜம் ஹரேர்
பஜன்ன் அபக்வோ ’த பதேத் ததோ யதி
யத்ர க்வ வாபத்ரம் அபூத் அமுஷ்ய கிம்
கோ வார்த ஆப்தோ ’பஜதாம் ஸ்வ-தர்மத:
ஸ்வ-தர்ம எனும் வார்த்தைக்கு “விதிக்கப்பட்ட கடமை” என்று பொருள். விதிக்கப்பட்ட கடமை என்பது அனைவருக்கும் இருக்கின்றது. சிலர் அக்கடமையைக் கைவிட்டு கிருஷ்ண உணர்வை ஏற்கலாம். எமது சீடர்கள் அனைவரும் பல்வேறு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆயினும், திடீரென்று அனைத்தையும் கைவிட்டு அவர்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தில் இணைந்தனர். இதுபோன்று யார் வேண்டுமானாலும் செய்யலாம். கிருஷ்ண பக்தி சம்பந்தமான உபன்யாசத்தைக் கேட்ட பின்னர், “நான் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்யப் போகிறேன்,” என்று முடிவு செய்து, ஒருவன் தனது எல்லா கடமைகளையும் துறந்து ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து பக்தியின் ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றலாம். ஆயினும், சில காலம் கழித்து ஏதாவதொரு காரணத்தினாலோ துரதிர்ஷ்டவசத்தாலோ அவனால் கிருஷ்ண பக்தியைத் தொடர இயலாமல் போகலாம். இவ்வாறு பக்குவமின்மையின் காரணமாக ஒருவர் கிருஷ்ண உணர்வைக் கைவிட்டாலும், அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை; ஏனெனில், அடுத்த பிறவியில் பக்தியைத் தொடர்வதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்படும்.
அதே சமயத்தில், கோ வார்த ஆப்தோ ’பஜதாம் ஸ்வ-தர்மத:, “கிருஷ்ண உணர்வில் ஈடுபடாதவன் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகள் எல்லாவற்றையும் முறையாகச் செய்தாலும், அதனால் என்ன இலாபம்?” வாழ்வின் குறிக்கோளை அறியாததால், அவன் ஏமாளியே ஆவான். கிருஷ்ண உணர்வை சில காலம் பயிற்சி செய்து பின்னர் கைவிட்டவனும்கூட, அடுத்த பிறவியில் கைவிட்ட இடத்திலிருந்து மீண்டும் பயிற்சியைத் தொடங்குகிறான். ஆகவே, இதில் அவனுக்கு எந்த இழப்பும் இல்லை. அவன் செய்த சிறு பக்தியும் அவனை மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பதோடு மட்டுமின்றி, அவன் நிச்சயம் இறைவனின் திருநாட்டையும் சென்றடைவான்.
ஆகவே, கிருஷ்ண பக்தியை மேற்கொள்ளுங்கள், முடிந்தவரை கிருஷ்ண உணர்வை மற்றவருக்கு பிரச்சாரம் செய்யுங்கள். இவ்வாறு செய்யும்போது உங்களது இலக்கு தவறாமல் அடையப்படுகிறது. உங்களது சேவை என்றும் வீண்போகாது. கிருஷ்ணர் உங்கள் சேவைக்கு பன்மடங்கு பிரதிபலனை வழங்குவார்.