பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ள மூன்று யோகங்களில் ஒரு யோகமே முழுமையான அறிவை வழங்குகிறது.
வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
ஸ்ரீ பகவான் உவாச
மய்யாஸக்த-மனா: பார்த
யோகம் யுஞ்ஜன் மத்-ஆஷ்ரய:
அஸம்ஷயம் ஸமக்ரம் மாம்
யதா ஜ்ஞாஸ்யஸி தச் ச்ருணு
பகவான் கூறினார்: என்னிடம் பற்றுதல் கொண்ட மனதுடன், என்னைப் பற்றிய முழு உணர்வில் யோகத்தைப் பயில்வதன் மூலம் என்னை நீ எவ்வாறு சந்தேகமின்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம் என்பதை இனி கேட்பாயாக.” (பகவத் கீதை 7.1)
நான் பகவத் கீதையிலிருந்து உபன்யாசம் வழங்கிக் கொண்டுள்ளேன். நீங்கள் அனைவரும் இந்த புத்தகம்குறித்து அறிவீர்கள் என்று நினைக்கிறேன். கீதை” என்னும் சொல்லை கடவுளின் பாடல்” என்று மொழிபெயர்க்கலாம், கடவுளின் உரையாடல் என்றும் கூறலாம்.
நான்கு வித குறைபாடுகள்
மன அனுமானத்தின் மூலமாக கடவுளை அறிந்துகொள்ள இயலாது. நமது அறிவு ஓர் எல்லைக்கு உட்பட்டுள்ளதாக இருப்பதால், நம்மால் இந்த பௌதிக உலகின் கிரக அமைப்புகளைக் கூட புரிந்துகொள்ள முடிவதில்லை. நாம் அனைவரும் நான்குவித குறைபாடுகளைக் கொண்டுள்ளோம்.
தவறிழைத்தல் என்பது முதல் குறைபாடு. உலகில் எவ்வளவு பெரிய மனிதனாக இருப்பினும், அவன் தவறிழைப்பவனே. இரண்டாவது குறைபாடு, மாயையின் வசப்படுதல். மாயை என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணுவதாகும். எடுத்துக்காட்டாக, நமது உடலுடன் நம்மை அடையாளம் காணுதலைக் கூறலாம். தன்னை உடலாகக் கருதுபவனை வேத சாஸ்திரங்கள் விலங்கு” என்று கூறுகின்றன. அதாவது, ஒருவன் தன்னை அமெரிக்கன், இந்தியன், இந்து, முஸ்லீம் என அடையாளம் காண்பதும், வேத சாஸ்திரங்களின்படி விலங்குகளின் நிலையாகும்.
மூன்றாவது குறைபாடு, ஏமாற்றும் தன்மை. பலர் தங்களது குறைந்த அறிவினை மறைத்து, தம்மை பண்டிதனாகக் காட்டிக்கொள்ள முயல்கின்றனர்; இவை ஏமாற்றுவதேயாகும்.
நான்காவது குறை, குறைபாடுள்ள புலன்கள். நமது புலன்களைப் பற்றி நாம் பெருமைப்படுகிறோம். ஆனால் நமது புலன்கள் குறைபாடுகளுள்ளவை, சுதந்திரமானவை அல்ல. கடவுளை உங்களால் காட்ட முடியுமா?” என்று நாஸ்திகர்கள் சவால் விடுகிறார்கள். ஆனால் கடவுளைக் காணும் தகுதியுடைய கண்களை அவர்கள் பெற்றிருக்கிறார்களா? தங்களது கண்களுக்கு அந்த சக்தி உள்ளதா என்பதைக்கூட அவர்கள் சிந்திப்பதில்லை. இந்த அறையின் விளக்கு அணைக்கப்பட்டு அறை இருட்டாகிவிட்டால், உங்களால் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள இயலாது. அப்போது உங்கள் கண்களுக்கு மதிப்பு என்ன? உங்களது கண்களால் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் மட்டுமே பொருட்களைக் காணவியலும், குறிப்பிட்ட சூழ்நிலையில் மட்டுமே உங்கள் நாசியினால் நுகரவியலும், காதுகளால் கேட்கவியலும். ஆகவேதான், உங்களது வாழ்க்கை கட்டுண்ட வாழ்க்கை” எனப்படுகிறது.
குறைபாடுள்ள புலன்களைக் கொண்டு கடவுளை அறியவியலாது. கடவுளை அறிவதற்கான மிக உபயோகமான புலனாக செவி திகழ்கின்றது. உறங்கிக் கொண்டிருப்பவனைக் கொல்வதற்கு ஒருவன் முற்படும்போது, அருகிலிருப்பவன் எழுந்திரு! எழுந்திரு! கொல்ல வருகிறான்,” என்று கத்தும்போது, உறங்குபவன் உடனடியாக விழித்தெழுகிறான். இவ்வாறாக, அனைத்து புலன்களும் செயலற்ற நிலையில் இருக்கும்போதிலும், செவியானது செயல்பாட்டில் உள்ளது. ஆகவே, இறைவனை அறிவதற்கு நாம் செவியை உபயோகிக்கின்றோம். செவி வழியாக நாம் மந்திரத்தைப் பெறும்போது, அது செயல்படுகிறது.
முதல்தர யோகம்
முதல்தர யோகமாகிய பக்தி யோகம் குறித்து பகவத் கீதையின் ஏழாம் அத்தியாயத்திலிருந்து உரையாடிக் கொண்டுள்ளேன். இதற்கு முன்னால், ஆறாவது அத்தியாயத்தில் தியான யோகத்தைக் குறித்து விவரிக்கப்பட்டது. யோகத்தைப் பயில புனிதமான தனிமையான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கழுத்து, முதுகு ஆகியவற்றை நேராக வைத்து அமர்ந்து பகவான் விஷ்ணுவை தியானிக்க வேண்டும். வேறு எதைப் பற்றியும் சிந்திக்காது மிகவும் கவனத்துடன் விஷ்ணுவை தியானிக்க வேண்டும். யோக இந்த்ரிய-ஸம்யம, புலன்களைக் கட்டுப்படுத்துவதற்கு யோகம் என்று பெயர் என பதஞ்சலி யோக முறை கூறுகின்றது. புலன்களைக் கட்டுப்படுத்தாத வரை மனம் இங்குமங்கும் அலை பாயும். மனமே அனைத்து புலன்களின் தலைவனாகும். மனதைக் கட்டுப்படுத்தி பகவானை தியானித்தல் யோகமாகும்.
இவ்வாறாக, தியான யோக முறையைக் குறித்து பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கூறியபோது, இந்த யோக முறை மிகவும் கடினமாக உள்ளது, என்னால் பயிற்சி செய்ய இயலாது,” என்று அர்ஜுனன் கூறினான். அர்ஜுனன் ஒன்றும் சாதாரண மனிதனல்ல, பகவான் கிருஷ்ணரின் நண்பன். அவனே, இந்த யோக முறையை என்னால் பயிற்சி செய்ய இயலாது” என்று கூறினான். அந்த சூழ்நிலையில், கிருஷ்ணர், கவலை வேண்டாம், பக்தியோகம் எனும் மற்றொரு யோக முறை உள்ளது,” என்றார்.
எல்லா யோகிகளுக்கு மத்தியில், எவனொருவன் பெரும் நம்பிக்கையுடன் எப்போதும் என்னில் நிலைத்து, தன்னுள் என்னை எண்ணி, எனக்கு திவ்யமான அன்புத் தொண்டு புரிகின்றானோ, அவனே யோகத்தில் என்னுடன் மிகவும் நெருங்கியவனும் எல்லாரையும் விட உயர்ந்தவனும் ஆவான். இதுவே எனது அபிப்பிராயம்.” என்று கீதையின் ஆறாவது அத்தியாயத்தில் பக்தி யோகம் பற்றி கிருஷ்ணர் கூறுகிறார்.
பூரண உண்மையை அருவமானவர் என்று நினைப்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால் பூரண உண்மை, உண்மையில் ஒரு நபர். பூரண உண்மையைப் பற்றிய அருவ உணர்வு அதன் ஒரு சிறு பகுதியே. அதுவே முழுமையான உணர்வு அல்ல. ஆகவே, இங்கே, யோகம் யுஞ்ஜன் மத்-ஆஷ்ரய என்று கூறப்பட்டுள்ளது. யோகம் அருவமானதல்ல என்பதை இஃது எடுத்துரைக்கிறது. மேலும், பகவான் உவாச, பகவான் கூறுகிறார்” என்றும், அஸம்ஷயம், சந்தேகத்திற்கு இடமின்றி” என்றும், ஸமக்ரம் முழுமையாக” என்றும் கூறப்பட்டுள்ளது.
பூரண உண்மையை அறிந்துகொள்வதற்கான பெரும் முயற்சியே யோகம் எனப்படுகிறது. நான் ஒரு நபர், இறைவனும் ஒரு நபர். இருவரும் இணையும்போது, அது பக்தி யோகம் எனப்படுகிறது. பக்தி என்பதற்கு பரமனுடன் இணைவதற்கான வழிமுறை என்று பொருள். பக்தி எனும் சொல்லை நாம் கேட்ட மாத்திரத்தில் பக்தன், பகவான் ஆகியோர் அங்கே இருந்தாக வேண்டும். பக்தனான அர்ஜுனனுக்கு சந்தேகமின்றி தம்மை முழுமையாக உணர்வது எவ்வாறு என்பதை பகவான் கிருஷ்ணர் உபதேசிக்கின்றார்.
பூரண உண்மையின் தோற்றங்கள்
பூரண உண்மையானது மூன்று தோற்றங்களில் உணரப்படுகிறது. வேத இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது,
வதந்தி தத் தத்த்வ-விதஸ்
தத்த்வம் யஜ் ஜ்ஞானம் அத்வயம்
ப்ரஹ்மேதி பரமாத்மேதி
பகவான் இதி ஷப்த்யதே
பூரண உண்மை ஒன்றே எனினும், அது பிரம்மன், பரமாத்மா, பகவான் என்னும் மூன்று விதங்களில் உணரப்படுவதாக அந்த பூரண உண்மையை அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதன்படி, பூரண உண்மையை அறிபவர்கள் மூன்று வகைப்படுவர்: யூகங்களில் ஈடுபடுபவர்கள் அருவத் தன்மையான பிரம்மன் நிலைவரை உணர்கின்றனர், யோகிகள் அனைவரது இதயங்களிலும் வீற்றிருக்கும் பரமாத்மா தோற்றத்தை உணர்கின்றனர், மூன்றாவதான பக்தர்கள் பரம புருஷ பகவானை முழுமையாக உணர்கின்றனர்.
ஞானிகளாலும் யோகிகளாலும் பகவானை முழுமையாக அறியவியலாது. பகவான் உன்னதமானவர், நித்தியமான அறிவு, நித்திய இருப்பு, நித்திய ஆனந்தம் ஆகியவற்றை உடையவர். மூன்று ஆன்மீகவாதிகளுக்கும் இலக்கு ஒன்றாக இருப்பினும், அந்த இலக்கானது மூன்று விதங்களில் அணுகப்படுகின்றது. சூரியக் கதிர், சூரிய கிரகம், சூரிய கிரகத்தின் அதிபதி என்னும் மூன்று நிலைகளை இத்துடன் ஒப்பிடலாம். சூரியக் கதிரில் வெப்பமும் ஒளியும் உள்ளது, சூரிய கிரகத்திலும் வெப்பமும் ஒளியும் உள்ளது, சூரிய கிரகத்தின் அதிபதியான சூரியதேவனும் வெப்பம் மற்றும் ஒளியை உடையவர். ஆயினும், இந்த வெப்பமும் ஒளியும் இம்மூன்றிலும் வெவ்வேறு விகிதங்களில் உள்ளது. சூரியக் கதிரிலுள்ள வெப்பம் மற்றும் ஒளியானது, சூரிய கிரகத்திலுள்ள வெப்பம் மற்றும் ஒளியைக் காட்டிலும் குறைந்தது. சூரிய கிரகத்தின் வெப்பம் மற்றும் ஒளியானது சூரிய தேவனின் வெப்பம் மற்றும் ஒளியைக் காட்டிலும் குறைந்த விகிதமுடையது.
சூரியனை நாம் முழுமையாக அறியும்பொழுது, இந்த வெப்பத்தையும் ஒளியையும் நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலும். பகவானை அறிவதும் அதுபோன்றே முழுமையான உணர்வாகும். ஆகவேதான், இங்கே அஸம்ஷயம் ஸமக்ரம், என்னை எவ்வித சந்தேகமுமின்றி முழுமையாக அறியலாம்” எனும் வார்த்தை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, பூரண உண்மையை முழுமையாக அறிய விரும்புபவன் பக்தி யோகத்தை மேற்கொள்ள வேண்டும். பூரண உண்மையை ஞான மார்க்கத்திலோ யோக மார்க்கத்திலோ முழுமையாக அறியவியலாது.
முழுமையாக அறிதல்
எமது கிருஷ்ண பக்தி இயக்கமானது பூரண உண்மையை முழுமையாக எவ்வித சந்தேகமின்றி அறிவதற்கானது. கீதையின் பதினெட்டாவது அத்தியாயத்தில் பகவான் தம்மை முழுமையாக எவ்வித சந்தேகமின்றி அறிவதற்கு, பக்தி யோக வழிமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா
விஷதே தத்-அனந்தரம்
பக்தித் தொண்டால் மட்டுமே என்னை, முழுமுதற் கடவுளாக, உள்ளது உள்ளபடி அறிந்துகொள்ள முடியும். என்னைப் பற்றிய முழுமையான உணர்வை அத்தகு பக்தியினால் அடையும்போது இறைவனின் திருநாட்டிற்குள் நுழைய முடியும்.” (பகவத் கீதை 18.55)
பௌதிக உலகிலிருந்து விடுபட்டு ஆன்மீக உலகிற்கு செல்வதே யோகத்தின் நோக்கமாகும். ஞான யோகி பூரண உண்மையின் அருவ நிலையை உணர்கிறான், தியான யோகி அனைவரது இதயங்களிலும் வீற்றிருக்கும் பரமாத்மாவை உணர்கிறான், ஆனால் பக்தி யோகியானவன் கோலோக விருந்தாவனத்திற்குச் சென்று பரம புருஷருடன் நித்தியமாக ஆனந்தமாக வாழ்கிறான்.
பௌதிக உலகினுள் பலவித கிரகங்கள் உள்ளன. நாம் வாழ்கின்ற லோகமானது பூலோகம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மேல் இருப்பது புவர்லோகம். அதற்கு மேல், ஸ்வர்க லோகம், ஜன லோகம், மஹர லோகம், ஸத்ய லோகம் முதலியவை உள்ளன. இவ்வாறாக, ஏழு மேல் லோகங்களும் ஏழு கீழ் லோகங்களும் உள்ளன. ஞான யோகம், தியான யோகம் ஆகியவற்றின் மூலம் மேலுலகங்களுக்கு ஏற்றம் பெறலாம். ஆனால், பக்தி யோகத்தைப் பயிற்சி செய்வதன் மூலம் ஒருவன் ஆன்மீக உலகிற்குச் சென்று பரம புருஷ பகவானுடன் நேரடியாக தொடர்புகொள்கிறான்.
தியான யோகம் மற்றும் ஞான யோகத்தின் மூலம் ஒருவன் பிரம்மஜோதியை அடையலாம். ஆனால் அங்கிருந்து பௌதிக உலகிற்கு மீண்டும் வீழ்வதற்கான வாய்ப்புள்ளது. பொதுவாக ஞான யோகிகளும் தியான யோகிகளும் பௌதிக சக்திகள் கிடைத்த மாத்திரத்திலேயே இந்த சக்திகளுக்கு வசப்பட்டு தங்களது ஆன்மீக பயிற்சிகளிலிருந்து விலகி இறுதியில் தங்களது நோக்கத்தை அடையாது தோல்வியுறுகின்றனர். ஆனால் பக்தி யோகியோ பகவானது ராஜ்ஜியத்தை அடைகிறான்.
இத்தகு பக்குவமான பக்தி யோகத்தை இங்கே பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, மய்யாஸக்த-மனா: பார்த யோகம் யுஞ்ஜன் மத்-ஆஷ்ரய:, பரம புருஷ பகவான் அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியின் கீழ் பயிற்சி செய்ய வேண்டும். இந்த வழிமுறையைப் பின்பற்றி பரம புருஷரை ஐயத்திற்கு இடமின்றி முழுமையாக அறியலாம். மேற்கொண்டு பயிற்சி செய்யும்போது, இந்த உடலை விட்ட பின்னர் பகவானது ராஜ்ஜியத்திற்குச் செல்ல இயலும்.
நமது கிருஷ்ண பக்தி இயக்கம் மக்களுக்கு கிருஷ்ணரைப் பற்றி உபதேசித்து அவர்களது வாழ்வைப் பக்குவமடையச் செய்வதற்கானது.