வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
உலக ஒற்றுமை, உலக அமைதி என்பது பலரும் விரும்பக்கூடிய ஒன்று. சர்வதேச மாணவ சமுதாயத்தினரிடையேஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய கீழ்காணும் உரை, நடைமுறைக்கு உகந்த, எளிமையான, தெளிவான வழிமுறையினைஉலக ஒற்றுமைக்காக எடுத்துரைக்கின்றது.
எங்களுடன் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் பங்கு கொள்ள வந்துள்ளவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி. இந்த சமுதாயம் சர்வதேச மாணவ சமுதாயம் என்று அழைக்கப்படுவதாக உணர்கின்றேன். இதுபோல பல்வேறு சர்வதேச சமுதாயங்கள் உள்ளன, (எ.கா) ஐக்கிய நாடுகள் சபை. சர்வதேச சமுதாயம் என்னும் திட்டமானது மிகவும் அருமையானதே. இருப்பினும், சர்வதேச சமுதாயத்தின் மையக் கருத்து என்னவாக இருக்க வேண்டும் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
வாழ்வின் மையத்தை அறிதல்
குளத்தின் மையத்தில் ஒரு கல்லை எறிந்தால், அதனால் உண்டாகும் வட்டமானது கரையின் எல்லை வரை விரிவடையும். அதுபோல, ரேடியோ அலைகளும் வட்டமாக விரிவடைகின்றன. நீங்கள் அந்த அலைகளை ரேடியோவின் மூலமாக இழுக்கும்போது, உங்களால் செய்திகளைக் கேட்க இயலும். இவ்விதமாக நமது அன்பு உணர்ச்சிகளும் விரிவடைய முடியும்.
நமது வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில், நாம் உண்ணுவதை மட்டுமே விரும்புகின்றோம். ஒரு குழந்தை எதைக் கைப்பற்றினாலும் அதை உண்ண விரும்புகிறது. அது தன்னுடைய சுயநலனில் மட்டுமே விருப்பம் கொண்டுள்ளது. பின்னர், அக்குழந்தை சிறிது வளரும்போது, தனது சகோதர சகோதரிகளிடம், “சரி, நீயும் இதில் கொஞ்சம் எடுத்துக்கொள்,” என்று பகிர்ந்து கொள்ள முயற்சிக்கின்றது. அதாவது அதன் தோழமை உணர்ச்சி அதிகரிக்கின்றது. அக்குழந்தை மேலும் வளர்ச்சி பெறும்போது, தனது பெற்றோர்களை நேசிக்கத் தொடங்குகிறான், அதன்பின் தனது சமூகம், தனது நாடு என இறுதியில் அனைத்து நாடுகளையும் நேசிக்கத் தொடங்குகிறான். ஆனால், மையம் சரியாக இல்லாவிடில், இத்தகைய உணர்வுகளின் விரிவுகள்–தேசிய அளவில் இருந்தாலும், சர்வதேச அளவில் இருந்தாலும்–அவை பக்குவமானவை அல்ல.
உதாரணமாக, குடிமகன் என்னும் வார்த்தைக்கு, “ஒரு குறிப்பிட்ட நாட்டில் பிறந்தவர்” என்று பொருள். நீங்கள் மற்ற அமெரிக்கர்களைக் கண்டு வருந்துகிறீர்கள்; ஏனெனில், அவர்களும் இந்த நாட்டில் பிறந்தவர்கள். நீங்கள் உங்களது வாழ்வைக் கூட தேசத்திற்காக தியாகம் செய்யலாம். ஆனால் இங்கே ஒரு குறைபாடு உள்ளது: குடிமகன் என்னும் வார்த்தைக்கு, “ஒரு குறிப்பிட்ட நாட்டில் பிறந்தவன்” என்ற விளக்கத்தை ஏற்கும்போது, அமெரிக்காவில் பிறந்த மிருகங்களை ஏன் அமெரிக்கர்களாகக் கருதுவதில்லை? பிரச்சனை என்னவெனில், நாம் நமது எண்ணங்களை மனித சமுதாயத்திற்கு அப்பால் கொண்டு செல்வதில்லை. மிருகங் களும் நமது நாட்டின் பிரஜைகளே என்ற எண்ணம் இல்லாத காரணத்தினால், அவற்றை நாம் கசாப்புக் கூடங்களுக்கு அனுப்புகின்றோம்.
இவ்வாறாக, நமது தேசிய உணர்வு அல்லது சர்வதேச உணர்வானது சரியான பொருளின் மீது நிலைநிறுத்தப்படுவது இல்லை. மையம் சரியாக இருக்குமெனில், அதனைச் சுற்றி எத்தனை வட்டங்களை வேண்டுமானாலும் தடைகளின்றி வரையலாம், அவை ஒன்றோடொன்று மோதுவதற்கு வாய்ப்பில்லை. அவை எளிமையான முறையில் வளரும், வளரும், வளர்ந்து கொண்டே இருக்கும். மையம் சரியாக இருந்தால் அவை ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாது. துரதிர்ஷ்டவசமாக, ஒவ்வொருவரும் தேசிய அல்லது சர்வதேச உணர்வுகளுடன் இருந்தாலும் மையத்தை இழந்து நிற்கின்றோம். ஆகவே, உங்களுடைய தேசிய உணர்வும் எனது தேசிய உணர்வும், உங்களுடைய சர்வதேச உணர்வும் எனது சர்வதேச உணர்வும் முரண்பட்டு மோதிக் கொள்கின்றன. எனவே, நமது அன்பு உணர்ச்சிகளுக்கான சரியான மையத்தினை நாம் கண்டறிய வேண்டும். அதன் பின்னர், நீங்கள் அந்த உணர்வின் வட்டத்தினை எவ்வளவு வேண்டுமானாலும் விரிவடையச் செய்யலாம், அந்த வட்டங்கள் ஒன்றையொன்று மோதிக் கொள்ளப் போவதில்லை.
அந்த மையம் கிருஷ்ணரே.
மஹாத்மா என்பதன் விளக்கம்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் எனப்படும் எங்களது சமுதாயம், நமது அன்பிற்கான மையம் கிருஷ்ணராக இருக்க வேண்டும் என்பதை அனைத்து நாட்டு மக்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றது. வேறு விதமாகக் கூறினால், மக்கள் மஹாத்மாக்களாக ஆவதற்கு நாங்கள் கற்று கொடுக்கின்றோம். மஹாத்மா என்னும் வார்த்தையினை நீங்கள் இதற்கு முன்னர் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த சமஸ்கிருத வார்த்தை, எவரது மனம் பரந்து விரிந்துள்ளதோ, எவரது உணர்வுகளின் வட்டம் விரிவாக உள்ளதோ, அவரைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. இதுவே மஹாத்மா என்பதாகும். மஹா என்றால் “பெரிய” அல்லது “உயர்ந்த” என்றும், ஆத்மா என்றால் “உயிர்வாழி” என்றும் பொருள்படும். ஆகவே, எவரொருவர் ஆத்ம உணர்வை பரவலாக விரிவடையச் செய்கின்றாரோ, அவரே மஹாத்மா என்று அழைக்கப்படுகிறார்.
தனது உணர்வுகளை பரவலாக விரிவடையச் செய்த நபரைப் பற்றி பகவத் கீதை (7.19) விவரிக்கின்றது:
பஹூனாம் ஜன்மனாம் அந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே
வாஸுதேவ: ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு–துர்லப:
இந்த ஸ்லோகத்திலுள்ள முதல் கருத்து யாதெனில், பற்பல பிறவிகளுக்குப் பிறகே ஒருவர் மஹாத்மா என்னும் நிலையை அடைய முடியும் (பஹூனாம் ஜன்மனாம் அந்தே). ஆத்மா ஒன்றன்பின் ஒன்றாக பற்பல உடல்களில் பரிமாற்றங்களை மேற்கொள்கின்றது. 84,00,000 வகையான உயிரினங்கள் உள்ளன, நாம் அவை அனைத்தையும் கடந்து, படிப்படியாக வளர்ச்சி பெற்று, இறுதியில் மனிதப் பிறவியைப் பெற்றுள்ளோம். இதன் பிறகே நாம் மஹாத்மாவாக இயலும். அதனால்தான் கிருஷ்ணர், பஹூனாம் ஜன்மனாம் அந்தே, “பற்பல பிறவிகளுக்குப் பிறகு ஒருவர் மஹாத்மாவாகிறார்,” என்று கூறுகிறார்.
மனிதப் பிறவியில் சரணடைய முடியும்
ஸ்ரீமத் பாகவதத்திலும் (11.9.29) இதே போன்ற ஸ்லோகம் காணப்படுகின்றது. லப்த்வா ஸு–துர்லபம் இதம் பஹு ஸம்பவாந்தே, “பற்பல பிறவிகளுக்குப் பிறகே நீங்கள் பெறற்கரிய மனித உடலைப் பெற்றுள்ளீர்.” இந்த மனிதப் பிறவி எளிதானதல்ல. பூனை, நாய் போன்ற விலங்குகளின் பிறவி மிகவும் எளிதானது, ஆனால் மனித வாழ்வோ அதுபோன்று எளிதானதல்ல. 80,00,000 வகையான வேறுபட்ட உடல்களில் பிறந்த பின்னர், நாம் இந்த மனித உடலைப் பெறுகிறோம். இவ்வாறு பாகவதமும் பகவத் கீதையும் ஒரே கருத்தை நமக்கு வலியுறுத்துகின்றன. எல்லா வேத இலக்கியங்களும் ஒன்றையொன்று உறுதிப்படுத்துகின்றன, அவற்றைப் புரிந்துகொள்ளக்கூடிய நபர்கள் அவற்றில் எவ்வித முரண்பாடுகளையும் காண்பதில்லை.
இவ்வாறாக மனிதப் பிறவியானது பற்பல இதர-மனிதரல்லாத பிறவிகளுக்குப் பிறகே ஒருவருக்கு கிடைக்கப் பெறுகின்றது. ஆயினும், இந்த மனிதப் பிறவியில்கூட மையப் பொருளைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதற்குப் பற்பல பிறவிகள் தேவைப்படுகின்றன. ஒருவன் ஆன்மீக ஞானத்தை உண்மையாகவே வளர்த்துக் கொண்டால்–ஒரு பிறவியில் அல்ல, பற்பல பிறவிகளுக்குப் பின்னர்–அவன் காலப்போக்கில் ஞானத்தின் உயர்தளத்தினை அடைந்து, ஞானவான், உண்மை ஞானத்தில் நிலைபெற்றவர்” என்று அழைக்கப்படுகிறான். அதன் பிறகு, கிருஷ்ணர் கூறுகிறார், மாம் பிரபத்யதே, “அவன் என்னிடம் சரணடைகிறான்.” அதாவது, கிருஷ்ணரிடம் அல்லது கடவுளிடம் சரணடைகிறான். (“கிருஷ்ணர்” என்று நான் கூறும்போது, அனைத்தையும் வசீகரிக்கும் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளைக் குறிப்பிடுகின்றேன்.)
ஏன் சரணடைய வேண்டும்?
அடுத்த கேள்வி, ஞானமுடைய மனிதன் கிருஷ்ணரிடம் ஏன் சரணடைய வேண்டும்? வாஸுதேவ: ஸர்வம் இதி, ஏனென்றால், வாஸுதேவராகிய கிருஷ்ணரே அனைத்தும் என்பதை அவன் அறிவான். அதாவது, கிருஷ்ணரே அனைத்து அன்பு உணர்வுகளுக்கும் மையம் என்பதை அறிவான். ஸ மஹாத்மா ஸு–துர்லப:. இங்கே மஹாத்மா என்னும் வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது. பற்பல பிறவிகளாக அறிவை வளர்த்தபின்னர், கடவுளை நேசிக்கும் தளத்திற்கு தனது உணர்வுகளை வளர்த்துக் கொண்டவன் மஹாத்மா, மிகச்சிறந்த ஆத்மா என்று அழைக்கப்படுகிறான். கடவுள் மிகச்சிறந்தவர், அவரது பக்தனும் மிகச்சிறந்தவன். ஆயினும், கிருஷ்ணர் கூறுகிறார்: ஸ மஹாத்மா ஸு–துர்லப:, இத்தகு மஹாத்மாவை காண்பது மிகமிக அரிது. மஹாத்மா என்பதற்கு நாம் கீதையிலிருந்து பெறும் விளக்கம் இதுவே.
தற்போது நாம் நமது அன்பின் உணர்வுகளை பல்வேறு பொருட்களின் மீது விரிவடையச் செய்துள்ளோம். நாம் நமது தேசத்தை நேசிக்கலாம், நமது நாய்களையும் பூனைகளையும் நேசிக்கலாம். எப்படிப் பார்த்தாலும், நம்மிடம் அன்பு என்பது உள்ளது; நாம் அதனை நமது அறிவிற்கு ஏற்ப விரிவடையச் செய்கிறோம். அந்த அறிவு பக்குவமடையும்போது, நாம் கிருஷ்ணரை நேசிக்கும் தளத்திற்கு வருகிறோம். அதுவே பக்குவநிலை. கிருஷ்ணரை நேசிப்பதே எல்லா செயல்களின் குறிக்கோள், வாழ்வின் குறிக்கோள்.
வாழ்வின் குறிக்கோள்
வாழ்வின் குறிக்கோள் கிருஷ்ணரே என்பதை ஸ்ரீமத் பாகவதம் (1.2.8) உறுதிப்படுத்துகின்றது:
தர்ம: ஸ்வனுஷ்டித: பும்ஸாம் விஷ்வக்ஷேன–கதாஸு ய:
நோத்பாதயேத் யதி ரதிம் ஷ்ரம யேவ ஹி கேவலம்
இந்த ஸ்லோகத்தின் முதல் வரிகள், தர்ம: ஸ்வனுஷ்டித: பும்ஸாம். இதன் பொருள், ஒவ்வொருவரும் தத்தமது நிலைக்கு ஏற்ப கடமைகளைச் செயலாற்ற வேண்டும் என்பதே. கிருஹஸ்தர்களுக்கு சில கடமைகள், சந்நியாசிகளுக்கு சில கடமைகள், பிரம்மச்சாரிகளுக்கு சில கடமைகள் என்று உள்ளன. பல்வேறு தொழில்களுக்கு ஏற்ப பலதரப்பட்ட கடமைகள் உள்ளன. ஆயினும், பாகவதம் கூறுவது யாதெனில், உங்களின் கடமைகளை நீங்கள் செவ்வனே செய்தாலும், கிருஷ்ணரைப் புரிந்துகொள்ளக்கூடிய நிலைக்கு நீங்கள் வரவில்லை என்றால், உங்களால் செய்யப்பட்ட அனைத்து கடமைகளும் உபயோகமற்றவை (ஷ்ரம ஏவ ஹி கேவலம்). ஆகவே, பக்குவநிலைக்கு நீங்கள் வர விரும்பினால், நீங்கள் கிருஷ்ணரைப் புரிந்து கொண்டு அவரை நேசிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதன் பின்னர், உங்களுடைய தேச மற்றும் சர்வதேச உணர்வுகளானது அவற்றின் உண்மையான எல்லையினை எட்டும்.
பண்டிதரின் பார்வை
யாரேனும் ஒருவர், “நான் எனது அன்பின் எல்லைகளை மிகவும் விரிவாக வைத்துள்ளேன்,” என்று கூறலாம். அப்படியெனில், அவரது அன்பு உணர்ச்சிகள் எவ்வாறு விரிவடைந்துள்ளன என்பதற்கான அறிகுறிகளை அவர் முதலில் வெளிப்படுத்த வேண்டும். பகவத் கீதையில் (5.18) கிருஷ்ணர் கூறுகிறார்:
வித்யா–வினய–ஸம்பன்னே ப்ராஹ்மனே கவி ஹஸ்தினி
ஷுனி சைவ ஷ்வபாகே ச பண்டிதா: ஸம–தர்ஷின:
ஒருவன் உண்மையிலேயே பண்டிதனாக இருந்தால், அதாவது பக்குவ அறிவின் தளத்திற்கு உயர்த்தப்பட்டவனாக இருந்தால், அவன் அனைவரையும் சம நோக்குடன் பார்க்க வேண்டும் (ஸம–தர்ஷின:). ஏனெனில், பண்டிதரின் பார்வையானது வெறும் உடலை மட்டும் ஆதாரமாகக் கொண்ட பார்வை அல்ல, அவர் பிராமணனை ஆத்மாவாக பார்க்கிறார், நாயை ஆத்மாவாகப் பார்க்கிறார், யானையை ஆத்மாவாகப் பார்க்கிறார், சண்டாளனையும்கூட ஆத்மாவாகவேப் பார்க்கிறார். உயர்குல பிராமணர் முதல் சண்டாளன் வரை, மனித சமுதாயத்தில் எண்ணற்ற சமூகப் பிரிவுகள் காணப்படுகின்றன. ஆனால் கற்றறிந்த பண்டிதர் ஒவ்வொரு ஜீவனையும் சமமான கண்ணோட்டத்தில் நோக்குகின்றார். இதுவே உண்மையான கல்வியின் நிலையாகும்.
நாம் நமது உணர்வுகளை சமூகம், சமுதாயம், தேசம், சர்வதேசம் என்று விரிவடையச் செய்கிறோம். அவ்வாறு உணர்வுகளை விரிவடையச் செய்வது இயற்கையே. ஆனால் எனது கருத்து என்னவெனில், நாம் உண்மையிலேயே நமது உணர்வுகளை எல்லையின்றி விரிவுபடுத்த விரும்பினால், நமது வாழ்வின் உண்மையான மையத்தை நாம் நிச்சயம் கண்டறிய வேண்டும். அந்த மையமே கிருஷ்ணர், அல்லது கடவுள். கிருஷ்ணர்தான் கடவுள் என்பதை நாம் எவ்வாறு உணர்வது? கிருஷ்ணர் பகவத் கீதையில் தன்னையே கடவுளாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கிருஷ்ண பக்தி இயக்கமானது பகவத் கீதையை அதன் உண்மையுருவில் புரிந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை தயவுசெய்து எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நான் பேசுபவை அனைத்தும் பகவத் கீதையில் இருப்பதே. துரதிர்ஷ்டவசமாக, பல்வேறு விரிவுரையாளர்களால் பகவத் கீதை தவறாக விளக்கமளிக்கப்பட்டு, மக்களும் இதனைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். உண்மையில் பகவத் கீதையின் பொருளானது கிருஷ்ண உணர்வை, கிருஷ்ணரின் மீதான அன்பை வளர்ப்பதே; இதனை உபதேசிக்கவே நாங்கள் முயன்று வருகின்றோம்.
பகவத் கீதையை அறிவோம்
கிருஷ்ணர் பகவத் கீதையில் அனைத்தையும் விவரித்துள்ளார். எங்களது கிருஷ்ண பக்தி இயக்கத்தின் குறிக்கோள், எவ்வித அபத்தமான விளக்கங்களும் இல்லாமல், பகவத் கீதையில் உள்ள ஞானத்தை பிரச்சாரம் செய்வதே. அப்போது இந்த ஞானத்தினால் மனித சமூகம் பலனடையும். தற்போதைய சமுதாயத்தின் நிலை சரியாக இல்லை. ஆயினும், மக்கள் பகவத் கீதையைப் புரிந்து கொண்டால், அவர்கள் தங்களது எண்ணங்களை விரிவடையச் செய்தால், அனைத்து விதமான சமூக, தேசிய, சர்வதேச பிரச்சனைகள் அனைத்தும் தானாகவே தீர்வுக்கு வந்துவிடும். அதில் எந்தவொரு சிக்கலும் இருக்காது. ஆனால், நமது வாழ்வின் மையம் என்ன என்பதை நாம் கண்டறியாவிடில், நமது அன்பு உணர்ச்சிகளை விரிவாக்குவதற்கு நமது சொந்த வழிமுறைகளை உருவாக்கினால், அங்கே மோதல்களை மட்டுமே நாம் எதிர்கொள்ள நேரிடும்–தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையில் மட்டுமின்றி, உலக நாடுகளுக்கு இடையில்கூட மோதல்கள் ஏற்படும். நாடுகள் ஒன்றுபட்டு இருக்க முயற்சி செய்கின்றன; உங்களுடைய நாட்டில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டு இருப்பதற்குப் பதிலாக, கொடிகள் இங்கே அதிகரிக்கின்றன.
ஒன்றுபட்டு வாழ்வதற்குப் பதிலாக, நாம் மேன்மேலும் வேறுபட்டுக் கொண்டுள்ளோம். ஏனெனில், மையத்தினை நாம் தவற விடுகின்றோம். ஆகவே, எனது வேண்டுகோள் என்னவெனில், உங்களின் சர்வதேச இயக்கத்திற்கான உண்மையான மையத்தினைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள்; நீங்கள் அனைவரும் பன்னாட்டு மாணவர் களாயிற்றே. கிருஷ்ணரே மையம் என்பதை நீங்கள் உணரும்போது, உண்மையான சர்வதேச உணர்வுகள் சாத்தியமாகும். அதன் பின்னர், உங்களது சர்வதேச இயக்கம் பக்குவமடையும்.
பகவத் கீதையை உள்ளது உள்ளபடி தேவையற்ற விளக்கவுரைகள் ஏதுமின்றி புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். பகவத் கீதையின் வார்த்தைகள் உங்களுக்குத் தேவையான அறிவொளியை வழங்க போதுமானது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மக்கள் பகவத் கீதையின் பிரபலமான நிலையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, பகவத் கீதையின் பெயரில் தங்களது சொந்த கருத்துகளை புகுத்த முயற்சிக்கின்றனர். இஃது உபயோகமற்ற செயல். பகவத் கீதையை உண்மையுருவில் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அப்போது நீங்கள் அறிவொளியைப் பெறுவீர்கள்; கிருஷ்ணரே எல்லா செயல்களுக்கும் மையம் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் கிருஷ்ண உணர்வுடையவராக மாறினால், அனைத்தும் பக்குவமடையும், அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
மிக்க நன்றி.
(தமிழாக்கம்: கந்தர்விகா மோஹினி தேவி தாஸி)