வேதம் தொடங்கிய காலத்தை அறிய முயற்சித்தல்
இந்த உரையாடல் ஸ்ரீல பிரபுபாதருக்கும் பிரிட்டிஷ் மாணவனுக்கும் இடையே காலை நடைப் பயிற்சியின்போது நிகழ்ந்ததாகும்.
ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ண பக்தியின் செய்தி ஆன்மீக உலகிலிருந்து வருவதாகும், இஃது இந்த பௌதிக உலகைச் சார்ந்ததல்ல. மக்கள் சில நேரங்களில் இதனைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். எனவே, நாம் இதனைச் சரியாக விளக்க வேண்டும். அவர்கள் பெரிய விஞ்ஞானிகளாகவும், பெரிய தத்துவவாதிகளாகவும் இருக்கின்றனர், இருப்பினும் அவர்களால் ஆத்மாவைக்கூட புரிந்துகொள்ள இயலவில்லை. ஆத்மாவைப் பற்றியோ ஆன்மீக உலகைப் பற்றியோ அவர்களிடம் எந்தத் தகவலும் இல்லை. ஆகவே, இதனைப் புரிந்துகொள்வது அவர்களுக்கு மிகவும் சிரமமானதாக உள்ளது.
விருந்தினர்: வேதங்களின் தொடக்க காலம்குறித்த ஆராய்ச்சியில் தற்போது நான் ஈடுபட்டு வருகின்றேன். மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் கிடைத்த தடயங்களை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கூறுவது யாதெனில், வேதங்கள் மிகவும் பழங்காலத்தைச் சார்ந்தவை என்று எண்ணியிருந்தோம், ஆனால் கிடைத்த தடயங்களின்படி அவை பிற்காலத்தைச் சார்ந்தவை.” அவர்களின் இந்த முடிவு வேதங்களின் அதிகாரத் தன்மையை இழக்கச் செய்கிறது. ஏனெனில், உலகின் பழம்பெரும் காலத்தைச் சார்ந்த சமய நூல் என அவற்றை இனிமேல் கருத முடியாது.
ஸ்ரீல பிரபுபாதர்: வேதம் என்றால் சமயம் என்று பொருளல்ல. வேதம் என்றால் அறிவு என்று பொருள். அறிவுகுறித்த வரலாற்றை உங்களால் கண்டறிய முடிந்தால், பிறகு நீங்கள் வேதங்களின் வரலாற்றையும் கண்டறிய முடியும். அறிவு எப்போது தோன்றியது என்பதை உங்களால் கண்டறிய இயலுமா? உங்களால் இயலுமா?
விருந்தினர்: இயலும் என்று தோன்றவில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: பிறகு எவ்வாறு உங்களால் வேதங்களின் வரலாற்றை ஆராய இயலும்? வேதம் என்றால் அறிவு. ஆகவே, அறிவு எப்போது தோன்றியது என்பதன் காலத்தைக் கணியுங்கள், பிறகு வேதங்களின் காலத்தைக் கணிக்கலாம். வேதங்களின் காலமானது இப்பௌதிக உலகின் படைப்போடு தொடங்குகிறது. படைப்பு எப்பொழுது தொடங்கியது என்பதை யாராலும் கூற இயலாது. படைப்பானது பிரம்மாவின் பிறப்போடு தொடங்குகிறது. பிரம்மாவின் ஒரு நாளைக்கூட உங்களால் கணக்கிட இயலாது. பிரம்மாவின் இரவில் படைப்பின் ஒரு பகுதியானது அழிவிற்கு உள்ளாகிறது. அவரது பகல் பொழுது தொடங்கும்போது மீண்டும் படைப்பு தொடங்குகிறது. இருவித அழிவுகள் உள்ளன. ஓர் அழிவானது பிரம்மாவின் ஒவ்வோர் இரவிலும் நிகழ்கின்றது, மற்றோர் அழிவானது இறுதியானது. அப்போது ஒட்டுமொத்த படைப்பும் அழிவிற்கு உள்ளாகின்றது. இந்த அற்ப மனிதர்கள் வேதங்களின் காலத்தைப் பற்றி கற்பனை செய்கின்றனரே, இது மிகவும் நகைப்பிற்குரியது.
மாலைப் பொழுதில் பிறந்து மறுநாள் விடியும் முன்னர் மடியக்கூடிய நுண்ணுயிர்கள் பல உள்ளன. அவற்றின் வாழ்வுக் காலம் ஓர் இரவுப் பொழுதே. நம் வாழ்க்கையும் அதைப் போன்றதே. இதில் எங்கிருந்து நம்மால் வரலாற்றை எழுத இயலும்? ஆகவே, வேத அதிகாரிகளிடமிருந்து நாம் வேத அறிவைப் பெறுகின்றோம். தவளை தத்துவவாதியாக ஒருவன் இருக்கக்கூடாது.
தவளை தத்துவம்குறித்து உங்களுக்குத் தெரியுமா? டாக்டர் தவளையானது அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கண்டதேயில்லை. ஒரு தவளை அந்தப் பெரிய தவளையிடம், நான் மிகப்பெரும் நீர்த்தேக்கத்தைக் கண்டேன்,”என்று கூறியது. அதற்கு அந்தப் பெரிய தவளை, ஓ, அஃது இந்தக் கிணற்றைவிட பெரியதா?” என்று வினவியது.
விருந்தினர்: இது தவளையின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட விஷயமாயிற்றே!
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். இந்த அறிஞர்களும் அந்த கிணற்றுத் தவளையைப் போன்றவர்களே. வேத அறிவைப் பற்றி அவர்களால் எவ்வாறு அறியவியலும்?
விருந்தினர்: ஆம் சரியே. மற்றொரு கேள்விக்கு வருவோம். நாங்கள் எங்களது தற்போதைய நகரமயமான வாழ்வில் இயற்கைக்கு எதிராகச் செயல்படுகிறோம். ஆனால் இயற்கையோடு ஒன்றிய தூய்மையான வாழ்வே வாழ்க்கையின் உண்மையான வடிவம் என்று வேதங்கள் வலியுறுத்துவதாக நீங்கள் கருதுகிறீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். உடல்சார்ந்த செயல்களைக் குறைத்து எஞ்சிய நேரத்தை ஆன்மீகச் செயல்களில் ஈடுபடுத்துவதே உண்மையான வாழ்க்கை. தற்போதைய நாகரிகமானது உடல்சார்ந்த மிருக வாழ்க்கையைச் சார்ந்துள்ளது, இது நாகரிகமல்ல. அதாதோ ப்ரஹ்ம-ஜிஜ்ஞாஸ, ஆத்மாவைப் பற்றி வினவும்பொழுதே நாகரிகம் தொடங்குகிறது. மக்கள் ஆத்மாவைப் பற்றி வினவாதபோது, அவர்கள் நாய்களையும் பூனைகளையும் போல வாழ்கின்றனர்.
வேத வாழ்க்கையானது உடல் சார்ந்த தொந்தரவுகளிலிருந்து முடிந்தளவு விடுபட்டிருப்பதற்குக் கற்பிக்கின்றது. வேத வாழ்க்கை பிரம்மசரிய வாழ்வுடன் ஆரம்பமாகின்றது. இந்த அயோக்கியர்களால் பாலியல் வாழ்வைக் கட்டுப்படுத்த இயலவில்லை. பாலியல் வாழ்வை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும், கர்ப்பம் தரித்துவிட்டால் கருவிலேயே குழந்தையை அழித்து விட வேண்டும், இதுவே இவர்களது கொள்கை.
விருந்தினர்: ஆம்.
ஸ்ரீல பிரபுபாதர்: இது முற்றிலும் அயோக்கியத்தனமானது. பயிற்சியின் மூலம் ஒருவன் பாலியல் வாழ்வை மறக்கலாம் என்பதை அவர்கள் அறியார்கள். அவ்வாறு பாலியல் வாழ்வை மறந்தால் கருக்கலைப்பிற்கு இடம் ஏது? ஆனால் அவர்களால் அதைச் செய்ய இயலாது. ஆகவே, அதாந்த-கோபிர் விஷதாம் தமிஸ்ரம், கட்டுப்பாடற்ற புலனின்பம் மிருக வாழ்வின் நிலைக்கு ஒருவனை அழைத்துச் செல்கிறது.
கருவில் இருக்கும் குழந்தையைக் கலைத்து அதனைக் கொலை செய்பவன், தனது மறுவாழ்வில் அதே போன்று கருவில் வைத்தே கொல்லப்படுவான். எத்தனை குழந்தைகளைக் கொன்றானோ அத்தனை முறை அவனும் அதே போன்று கொல்லப்படுவான். இவ்வாறாக, அவன் பல நூறு ஆண்டுகளுக்கு சூரிய ஒளியையே காண இயலாமல், கருவில் வைத்தே கொலை செய்யப்படுகிறான். மக்கள் இயற்கையின் இத்தகைய நியதிகளை அறியார்கள். நாட்டின் சட்டதிட்டங்களை மீறுவதுபோல இயற்கையின் சட்டதிட்டங்களை மீற இயலாது. ஒருவனைக் கொலை செய்துவிட்டு சூழ்ச்சியின் மூலம் நாட்டின் சட்டத்திலிருந்து தப்பித்து விடலாம். ஆனால் இயற்கையின் சட்டங்களிலிருந்து அவ்வாறு தப்பிக்க இயலாது. எத்தனை முறை கருவிலுள்ள குழந்தைகளைக் கொல்கிறீர்களோ அத்தனை முறை நீங்களும் கருவில் கொல்லப்படுவது நிச்சயமே. இதுவே இயற்கையின் விதியாகும்.
விருந்தினர்: இலண்டனின் பிரபல மருத்துவமனையின் கருக்கலைப்பு பிரிவில் பணியாற்றும் செவிலியிடம் கடந்த வாரம் உரையாடினேன். கேட்பதற்கே மிகவும் கொடூரமாக இருந்தது, உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்ட முதிர்ச்சி அடைந்த கருவும் கூட அங்கே கலைக்கப்படுகின்றது.
ஸ்ரீல பிரபுபாதர்: உயிரின் சாத்தியக்கூறு என்ற கேள்விக்கே இடமில்லை. பாலுறவின் ஆரம்பத்திலேயே உயிரானது அங்கே தோன்றிவிடுகிறது. உயிர்வாழி மிகச் சிறியது. இயற்கை நியதியின்படி, ஆத்மா தந்தையின் விந்துவின் மூலமாக தாயின் கருப்பைக்கு அனுப்பப்படுகிறான். அந்த உயிர்வாழியின் கர்மத்திற்கு ஏற்ப தந்தையின் விந்துவாகிய உயிரணுவின் மூலம் தாயின் கருப்பையில் செலுத்தப்படுகிறான். ஆண் பெண்ணின் விந்துவும் கருமுட்டையும் இணைந்து, பட்டாணி போன்ற ஒரு சதைப்பற்று உருவாகின்றது. பின்னர், அது படிப்படியாக வளர்ச்சி பெறுகிறது. இவை அனைத்தும் வேத இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. காது, கண், நாசித் துவாரம், வாய், பாலுறுப்பு, குதம் ஆகிய ஒன்பது துளைகள் முதலில் உருவாகின்றது. பின்னர், படிப்படியாக புலன்கள் உருவாகி ஆறு மாதங்களில் முழு வளர்ச்சி அடைந்தவுடன் உயிர்வாழி உணர்வு நிலைக்குத் திரும்புகிறான். உடலமைப்பு உருவாவதற்கு முன் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதுபோல உயிர்வாழி உணர்வற்ற நிலையில் இருக்கிறான். இவ்வாறாக, படிப்படியாக உணர்வு நிலைக்குத் திரும்புகிறான். அங்கிருந்து வெளிவர அவன் விரும்பாவிடினும், இயற்கையானது அவனை வெளியே தள்ளுகிறது. அந்த முறையே பிறப்பு என்று அழைக்கப்படுகின்றது.
இதுவே வேத அறிவு. வேத இலக்கியங்களில் அனைத்தும் பக்குவமாக விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்க, வேதங்கள் எவ்வாறு காலத்திற்கு உட்படும்? பிரச்சனை என்னவெனில், நாம் ஆன்மீக விஷயங்களைப் பேசுகிறோம், இதனை பௌதிகத்தில் ஆழ்ந்துள்ள பௌதிகவாதிகளால் புரிந்துகொள்ள இயலாது. அவர்கள் மழுங்கிய புத்தி உடையவர்கள், அவர்களால் இதனைப் புரிந்துகொள்ள இயலாது.