சைதன்ய மஹாபிரபுவை அறிவோம்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

ஜய ஜய மஹாபிரபு ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய

தாங்ஹார சரணாஷ்ரித சேய் பட தன்ய

பரம புருஷ பகவானான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கு நான் என் பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன். எவரொருவர் அவரின் பாதங்களை சரணடைகின்றாரோ அவர் போற்றுதலுக்குரியவராகிறார். (சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 7.2)

சைதன்ய மஹாபிரபு சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ணரே.

நமோ மஹாவதான்யாயக்ருஷ்ணப்ரேமப்ரதாய தே

க்ருஷ்ணாயக்ருஷ்ணசைதன்யநாம்னே கௌர த்விஸே நம:

மிகவும் கருணை வாய்ந்த அவதாரமே! நீர் சாக்ஷாத் கிருஷ்ணரே. இப்பொழுது சைதன்ய மஹாபிரபுவாக தோன்றியுள்ளீர். ஸ்ரீமதி ராதையின் பொன்னிற மேனியை ஏற்று, கிருஷ்ணரின் மீதான பூரண அன்பினை வெகுவாகப் பரப்பியுள்ளீர்கள். எங்களின் பணிவான வணக்கங்களை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்,” என்று ஸ்ரீல ரூப கோஸ்வாமி கூறியுள்ளார்.

பகவான் சைதன்யர் கிருஷ்ணரே, இக்கலி யுகத்தில் கிருஷ்ணரே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக நேரடி அவதாரமாகத் தோன்றினார். இவ்வுண்மையினை வேத இலக்கியங்களான மஹாபாரதம், புராணங்கள் மற்றும் உபநிஷத்கள் உறுதி செய்கின்றன. வேத இலக்கியங்களின் சாரமான ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என ஏற்றுக்கொண்டுள்ளது.

கலி யுகத்தில் கிருஷ்ணரின் அவதாரமாக வருபவர் அக்ருஷ்ண, அதாவது கிருஷ்ணரின் நிறத்தினை ஏற்று வருவதில்லை என ஸ்ரீமத் பாகவதம் (11.5.32) கூறுகின்றது. சமஸ்கிருதத்தில் க்ருஷ்ண என்றால்கறுமைஎன்று பொருள்படும். கிருஷ்ணர் நான்கு யுகங்களிலும் நான்கு வேறுபட்ட நிறத்துடன் தோன்றுகிறார் என்று சாஸ்திரங்களில் (ஸ்ரீமத் பாகவதம், 10.8.13) கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் பெயர் சூட்டு விழாவில் கற்றறிந்த பிராமணரான கர்கமுனி, வெண்மை, சிவப்பு, மஞ்சள் என மூன்று வண்ணங்களில் முன்பு தோன்றிய உங்களது குழந்தை (கிருஷ்ணர்) தற்பொழுது கருமை நிறத்தில் தோன்றியுள்ளான் என்று கூறினார்.

வேத நாகரிகத்தில் குழந்தை பிறந்தவுடன் ஜாதகத்தைக் கணித்து அக்குழந்தையின் முந்தைய பிறவி மற்றும் எதிர்காலத்தினைக் கணக்கிடுவர். ஆனால், இன்று வறுமை மற்றும் வேறு பல காரணங்களால் இப்பழக்கம் இல்லையெனினும், மனித வாழ்வின் புனிதப்படுத்தும் காரியங்களில் (சம்ஸ்காரங்களில்) இதுவும் ஒன்று. மனித உடல் பத்து விதமான சம்ஸ்காரங்களால் தூய்மைப்படுத்தப்படுகின்றது.

அனைவரும் தாய் தந்தையின் மூலம் பிறவியெடுக்கின்றனர். நாய்களுக்கும் பூனைகளுக்கும்கூட தாய்தந்தையர் உண்டு. நாம் எப்பிறவியினை எடுத்தாலும் தாய்தந்தையர் உண்டு.

ஜன்மே ஜன்மே சபே பிதா மாதா பாய்

கிருஷ்ண குரு நஹி மிலே பஜே ஹரி யேய்

ஒவ்வொரு பிறவியிலும் தாய்தந்தையர் கிடைப்பர், ஆனால் ஒவ்வொரு பிறவியிலும் கிருஷ்ணரோ அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவோ கிடைக்கமாட்டார் என்று பிரேம விவர்தம் கூறுகின்றது. மனித வாழ்வு கிருஷ்ண ருடைய கருணையினாலும் குருவின் கருணையினாலும் பக்குவமடைகின்றது. அக்கருணை மனித வாழ்வில் மட்டுமே அடையப்படும், நாய்கள் மற்றும் பூனைகளின் வாழ்வில் அல்ல.

சைதன்ய மஹாபிரபு, குருவாகவும் கிருஷ்ணராகவும் செயல்புரிகின்றார். சைதன்ய சரிதாம்ருதத்தின் ஆசிரியரான கவிராஜ கோஸ்வாமி, “கதியற்றவர்களின் ஒரே நம்பிக்கைஎன்று முதல் ஸ்லோகத்தில் பகவான் சைதன்யரைப் பற்றிக் கூறிய பிறகு, இங்கு இரண்டாவது ஸ்லோகத்திலும் தம் வணக்கங்களை அர்ப்பணிக்கிறார்: ஜய ஜய மஹாபிரபு ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய.

பிரபு, மஹாபிரபு

நித்யானந்த பிரபு, அத்வைத பிரபு என பகவானின் பக்தர்கள் அனைவரும் பிரபு என்று அழைக்கப்படுவர். ஆனால் பகவான் சைதன்யர், மஹாபிரபு எனப்படுகிறார். அனைவரிலும் உயர்ந்த பிரபுவாக, தலைமைப் பிரபுவாக அவர் அறியப்படுகிறார்; மற்ற அனைவரும் சேவகப் பிரபு ஆவார்கள். உதாரணமாக, நீங்கள் ஓர் அலுவலகத்தில் பணிபுரிந்தால், உங்களின் மேற்பார்வையாளரை உயர் எஜமானராக நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் அவர் எஜமானர் அல்ல, மேலாண் இயக்குநரோ உரிமையாளரோ தான் அலுவலகத்தின் தலைவர் ஆவார். இருப்பினும், எவரெல்லாம் அவரின் கீழ் பணிபுரிகிறார்களோ அவர்களும் பிரபு என்று அழைக்கப்படுவர். அனைத்து வைஷ்ணவர்களும் பிரபு என்று அழைக்கப்பட வேண்டும். அதுதான் பண்பு, ஆனால் சைதன்ய மஹாபிரபு, மஹாபிரபு எனப்படுகிறார்; ஏனெனில், அவர் அனைவரிலும் சிறந்த பிரபுவாவார்.

ஏகலே ஈஸ்வர க்ருஷ்ண, ஆர ஸப ப்ருத்ய

யாரே யைசே நாசாய, ஸே தைசே கரே ந்ருத்ய

கிருஷ்ணரே பரம ஆளுநர், மற்ற அனைவரும் அவரின் சேவகர்கள். அவர் சொன்ன வண்ணமே இவர்கள் செயல்புரிகின்றனர். ஜடவுலகின் ஆளுநராகும் எண்ணத்துடன் நாம் செயல்புரிகின்றோம். ஜட சக்திகளைப் பயன்படுத்தி அவற்றின் ஆளுநராக நாம் அனைவரும் எண்ணுகின்றோம். இதுவே வாழ்வின் போராட்டமாகும். ஜடவுலகின் ஆளுநராக நானும் எண்ணுகிறேன், நீங்களும் எண்ணுகின்றீர்கள், எனவே, போராட்டம் ஏற்படுகின்றது. நீ ஏன் எஜமானராக இருக்கின்றாய் என நானும், நான் ஏன் எஜமானராக இருக்கின்றேன் என நீங்களும் சவால் விடுகிறோம். இது தொடர்ந்து கொண்டே இருக்கும். இதுதான் ஜடவுலகின் இயற்கை. நாம் எஜமானர்கள் அல்ல என்றும், கிருஷ்ணர் அல்லது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவே எஜமானர் என்றும் நாம் எப்போது உணர்கின்றோமோ, அப்போது நமது அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

ஜீவ் க்ருஷ்ண தாஸ் விஸ்வாஸ் கோர்லே தோ ஆர் து: நாய், “எப்பொழுது ஆன்மீக ஆத்மாவானது கிருஷ்ணரின் நித்திய தாஸன் என்பதை நீ புரிந்து கொள்கின்றாயோ, அதன்பின்னர் உனக்கு எவ்வித துன்பமும் கிடையாது,” என பக்திவினோத தாகூர் பாடுகின்றார். இதுவே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாகும்.

அனைவரும் எஜமானராக (பிரபுவாக) விரும்புகின்றோம்.நீங்கள்பிரபுவாகலாம், அஃது ஒன்றும் மிகையானதல்ல. ஒருவகையில் பார்த்தால் நாம் அனைவரும் பிரபுக்களே. உதாரணமாக, நான் ஒரு குடும்பஸ்தனாக இருந்தால், என்னுடைய குடும்பம், மனைவி, மக்கள், வேலையாட்கள், என்னைச் சார்ந்துள்ளவர்கள் என அனைவரையும் பராமரிப்பதால் நானும் பிரபுவே; நான் சிறிய அளவிலான பிரபுவாவேன். அதுபோன்றே அனைவரும் பிரபுக்களே. ஆனால் ஓர் உயர்ந்த பிரபு உள்ளார். அவர் அனைத்து பிரபுக்களுக்கும் பிரபுவானவர். அந்த மஹாபிரபு ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரே. அவர் கிருஷ்ணரே.

பிரம்ம சம்ஹிதையில் (5.1) ஈஸ்வர: பரம: க்ருஷ்ண: என குறிப்பிடப்பட்டுள்ளது. ஈஸ்வர: என்பதற்குஆளுநர்அல்லதுகட்டுப்படுத்துபவர்எனப் பொருள்படும். நாம் அனைவரும் ஏறக்குறைய சிறிய ஆளுநர்களே, ஆனால் எவரும் முழுமையான ஆளுநர் அல்ல. முழுமையான ஆளுநர் கிருஷ்ணரே. அதுபோன்று முழுமையான பிரபு, எஜமானர், ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவே.

மஹாபிரபுவிடம் தஞ்சமடைதல்

அனைவருமே பிரபு என்றபோதிலும், எவரொருவர் மஹாபிரபுவின் தாமரைத் திருவடிகளில் சரணடைகின்றாரோ, ஸேய் பட தன்ய, அவர் போற்றுதலுக்குரியவர். வெறுமனே மனைவி, மக்கள், நாடு, போன்றவற்றிற்கு எஜமானர்களாக இருப்பதைவிட மஹாபிரபுவின் சேவகனாக இருப்பதில் திருப்தியடையுங்கள். நீங்கள் பரம பிரபுவான, ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவிடம் சரணடையும்போது உங்கள் வாழ்க்கை வெற்றிகரமானதாகும். நீங்கள் புனிதமடைவீர்கள்.

கடவுள் அல்லது மஹாபிரபுவின் சேவகனாவதென்பது மிகவும் கௌரவமான செயல், இச்செயல் எளிதானதல்ல. எனவே, எவனொருவன் பரம பிரபுவின் சேவகனாக ஆவதற்கு ஒப்புக்கொள்கின்றானோ, அவனது வாழ்வு புனிதமடையும்; மேலும் அது போற்றுதலுக்குரியதாகும்.

நித்தியமாக தொண்டு செய்யும் தளத்திற்கு வருவதே வைஷ்ணவர்களின் கொள்கையாகும். எஜமானராவது அல்ல. எஜமானராவதைவிட எஜமானரின் சேவகனாவதே வைஷ்ணவ தத்துவமாகும். கோபீபர்து: பதகமலயோர் தாஸதாஸானுதாஸ:. பிராமணர்கள் தங்களை சத்திரியர்கள், வைசியர்கள், அல்லது சூத்திரர்களின் எஜமானர்கள் என நினைக்கின்றனர். சந்நியாசிகள் தங்களை வானபிரஸ்தர்கள் (குடும்ப வாழ்விலிருந்து ஓய்வு பெற்றவர்கள்), கிருஹஸ்தர்கள், அல்லது பிரம்மசாரிகளின் எஜமானர்கள் என நினைக்கின்றனர். அதுபோன்றே, குடும்பத் தலைவர்கள், சத்திரிய அரசர்கள் என அனைவரும் தங்களை எஜமானர்களாக நினைக்கின்றனர். நீங்கள் ஓரளவிற்கு எஜமானரே, ஆனால் நீங்கள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை அல்லது கிருஷ்ணரை எஜமானராக ஏற்கும் பட்சத்தில் உங்கள் வாழ்வு வெற்றி பெறும். இதுவே வாழ்வின் வெற்றிக்கான வழி என ஸ்ரீமத் பாகவதம் (1.2.13) பரிந்துரைக்கின்றது.

அர்ஜுனன் ஒரு சத்திரியன், போரிடுவது அவனது தொழில். அவன் குருக்ஷேத்திர போர்க்களத்தில் போரிட்டது ஏன்? நாட்டின் எஜமானராவதற்கே. இருப்பினும் அவன் கிருஷ்ணரின் நித்திய சேவகனாக இருந்தான். இதுவே வாழ்வின் வெற்றியாகும். ஜட வாழ்வில் எஜமானராகி விட்டோம் என்பதில் மட்டும் திருப்தியடையாதீர்கள். முழுமுதற் கடவுளின் தொண்டனாவதற்கு விரும்புங்கள், அப்போதுதான் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

ஏதேனும் சில சூழ்நிலைகளில் மட்டுமே நாம் எஜமானராக முடியும். ஆனால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எவ்வித நிபந்தனைகளுமற்ற எஜமானராவார், நமோ மஹாவதான்யாய க்ருஷ்ண ப்ரேம ப்ரதாய தே. அவர் எஜமானர் என்பதால் அவரால் இந்த கிருஷ்ண பிரேமையினை எளிதாக விநியோகிக்க முடியும். பொதுவாக, கிருஷ்ண பிரேமை என்பது அடைவதற்கு மிகவும் கடினமாகும். அவ்வளவு ஏன், கிருஷ்ணரைப் பற்றி தெரிந்து கொள்வதே கடினமாகும்.

அவர் (சைதன்ய மஹாபிரபு) கிருஷ்ணரை மட்டும் தரவில்லை, கிருஷ்ண பிரேமையினையும் அளித்துள்ளார். நீங்கள் ஓர் உயர்ந்த நபரைக் காணலாம், ஆனால் அந்த உயர்ந்த நபரோடு அன்பான உறவினை ஏற்படுத்திக் கொள்வது எளிதல்ல. ஆனால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவோ, கிருஷ்ணரை மட்டுமின்றி கிருஷ்ணருடனான அன்பான உறவையும் அனைவருக்கும் அளித்துள்ளார். இதுவே மனித குலத்திற்கு ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு வழங்கிய வரப்பிரசாதமாகும். நீங்கள் சைதன்ய மஹாபிரபுவின் தாமரைத் திருவடிகளின் கீழ் தஞ்சமடையும்போது, கிருஷ்ண பக்தி எளிதில் அடையப் பெறுகின்றது. சைதன்ய மஹாபிரபுவின் தாமரைத் திருவடிகளின் கீழ் நீங்கள் வந்துவிட்டால், கிருஷ்ணரைப் பெற்றுவிட்டீர்கள் என்று பொருள். இதுவே சைதன்ய சரிதாம்ருதத்தின் கூற்றாகும். சைதன்ய மஹாபிரபு வேறெதையும் வழங்கவில்லை, கிருஷ்ணர் மீதான அன்பினை மட்டுமே வழங்கியுள்ளர்.

பெருமைமிகு நவத்வீபம்

இவ்வுயரிய வரத்தினை நமக்கு அளிப்பதற்காக சைதன்ய மஹாபிரபு தனது 24ஆம் வயதில், இந்த நவத்வீபத்தில் சந்நியாசம் ஏற்றுக் கொண்டார். இது மிகவும் புண்ணியம் நிறைந்த இடமாகும், இது சாதாரண இடமல்ல. வைஷ்ணவ பக்தரும் கவியுமான நரோத்தம தாஸ தாகூர், கௌட மண்டல பூமி, யேபே ஜனே சிந்தாமணி தர ஹோய் விரஜபூமே வாஸ், என்று பாடுகின்றார். எவரொருவர் நவத்வீபத்தின் மகிமைகளைப் புரிந்து கொண்டுள்ளாரோ, அவர் பகவான் கிருஷ்ணரின் விருந்தாவனத்தில் வசிப்பவராகின்றார். விருந்தாவனத்திற்கும் நவத்வீபத்திற்கும் வேறுபாடு இல்லை என்பது சாஸ்திரங்களின் கூற்றாகும்.

எனவே, நரோத்தம தாஸ தாகூர் அருளிய பிரார்த்தனை என்னும் நூலையும், பக்திவினோத தாகூர் அருளிய நூல்களையும் படியுங்கள். அவை, குறிப்பாக நரோத்தம தாஸ தாகூரின் பிரார்த்தனை, பக்தியில் நாம் முன்னேறுவதற்கு மிகவும் உதவியாக அமையும். அவற்றைப் படித்து, புரிந்து கொள்வதன் மூலம், கிருஷ்ணரை எளிதில் புரிந்துகொள்ளலாம். இல்லையெனில், கிருஷ்ணரைப் புரிந்துகொள்வது எளிதல்ல. மிகப்பெரிய பண்டிதர்களாலும் சந்நியாசிகளாலும் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. தங்களைப் போன்றே கிருஷ்ணரும் ஒரு சாதாரண நபர் என்றும், அரசியல்வாதி என்றும், வரலாற்று நபர் என்றும் எண்ணுகின்றனர். மேலும், கோபியர்களுடன் தொடர்பு கொண்டிருந்த தாலும், 16,000 ராணியரை மணம் புரிந்ததாலும். கிருஷ்ணரை ஒரு பெண்பித்தன் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

நாம் நம்முடைய சொந்த வழியைப் பின்பற்றினால், கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதில் தவறிவிடுவோம். மஹா பிரபுவின் வழியில் நாம் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள வேண்டும்.

யாரே தேக, தாரே கஹக்ருஷ்ணஉபதேஷ

ஆமார அக்ஞாய குரு ஹனா தார ஏய் தேஷ்

கிருஷ்ணரின் உபதேசங்களான பகவத் கீதையையும் பாகவதத்தினையும் பின்பற்றும்படி அனைவரிடமும் கூறுங்கள். இதன்படி ஆன்மீக குருவாக மாறி அனைவரையும் விடுவியுங்கள்,” (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை, 7.128) என்று சைதன்ய மஹாபிரபு நமக்குக் கூறுகின்றார். சைதன்ய மஹாபிரபு மனித உருவில் வந்ததால், அவரை ஒரு சாதாரண மனிதர் என்று எண்ணுகின்றனர். ஆனால், மஹாபிரபு, மனித உருவில் வந்தாலும் மனிதரல்ல. அவர் மனிதர்களுக்கெல்லாம் தலைவர்.

கிருஷ்ணரின் அம்சங்களாகிய நாம் தர்மத்தின் சட்டங்களை மீறியதால், துன்பத்தில் உழல்வதைக் கண்டு மிகவும் இரக்கப்பட்ட கிருஷ்ணர், தாமே அவதரிக்கின்றார். யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி. தர்மஸ்ய க்லானி என்பது, “தர்மத்தின் பாதையிலிருந்து பிறழ்தல்என்று பொருள்படும். தர்மம் என்றால் என்ன? தர்மம் து சாக்ஷாத் பகவத் ப்ரணீதம். தர்மம் என்பது கடவுளின் சட்டங்களாகும். கடவுளால் கொடுக்கப்பட்ட விதிமுறைகள், சட்டங்கள் இவையே தர்மம் எனப்படும். உதாரணமாக, அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் விதிமுறைகளே நாட்டின் சட்டங்களாகின்றன, நாட்டின் சட்டங்களை உங்களால் உருவாக்க முடியாது. அதுபோல கடவுளின் சட்டங்களான தர்மத்தையும் உங்களால் உருவாக்க இயலாது. தற்போது கலி யுகத்திலுள்ள அயோக்கியர்கள் தங்களுக் கென்று புதிதாக பல்வேறு தர்மங்களை உருவாக்குகின்றனர். ஆனால் அத்தகு தர்மங்களால் என்ன பலன்?

தற்போதைய ஆன்மீகவாதிகள் தங்களையே கடவுளாக கூறிக்கொள்கின்றனர். ஆனால் சைதன்ய மஹாபிரபு தன்னை ஒருபோதும், கிருஷ்ணர் என்று கூறியதில்லை. அவர் விருந்தாவனத்தில் இருந்தபோது, அவரைப் புகழும் பொருட்டு, “நீங்கள் கிருஷ்ணரேஎன ஒருவர் கூறியதற்கு, தன் காதுகளை மூடிக்கொண்டு, “இல்லை, இல்லை. அவ்வாறு கூறாதீர்கள்என்று கூறினார். தன்னையே கடவுளாகக் கூறிக்கொள்வது முட்டாள்தனத்தின் உச்சகட்டம் என்பதனை அவர் இதன் மூலம் உணர்த்தினார்.

சில மாயாவாதிகள், “எல்லாரும் கடவுளே. நானும் கடவுள், நீங்களும் கடவுளே,” எனக் கூறுகின்றனர். அவர்கள் அனைவரும் மூடர்களே. நமக்கு இத்தகு மலிவான கடவுள்கள் தேவையில்லை. நாம் கிருஷ்ணரை ஏற்றுக் கொண்டுள்ளோம். மேலும், சாஸ்திரங்கள் மற்றும் ஆச்சாரியர்களின்படி சைதன்ய மஹாபிரபுவினை கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளோம். நாம் ஆச்சாரியர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோமாக. க்ருஷ்ணாய க்ருஷ்ண சைதன்ய நாம்னே, “எம்பெருமானே, நீங்கள் கிருஷ்ணரே, கிருஷ்ண சைதன்யர் என்ற பெயரில் எழுந்தருளி, மிகுந்த கருணையுடன் கிருஷ்ண பக்தியினை வழங்குகின்றீர்கள்,” என்று ரூப கோஸ்வாமி கூறுகின்றார்,

கிருஷ்ணரை கிருஷ்ணரால் மட்டுமே வழங்க முடியும். வேறு யாரால் முடியும்? கோடீஸ்வரனாக இல்லாமல் கோடிகளை தானமாக வழங்க இயலுமா? சைதன்ய மஹாபிரபு கிருஷ்ணரை (தன்னை) மிகுந்த கருணையுடன் விநியோகம் செய்தார். எனவே, கிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவிடம் சரணாகதி அடைவீராக.

நீங்கள் அனைவரும் வெகு தூரத்திலிருந்து இங்கு (மாயாபுருக்கு) வந்துள்ளீர்கள். நிறைய பொருட்செலவும் செய்து வந்துள் ளீர்கள். இந்த பயணத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு நித்யானந்த ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீ வாஸாதி கௌர பக்த விருந்த என்னும் மந்திரத்தினை அனைவரும் உச்சரியுங்கள். நீங்கள் நிச்சயம் கிருஷ்ணரை அடைவீர்கள். இது சைதன்ய மஹாபிரபு பிறந்த இடம். யாரெல்லாம் சைதன்ய மஹாபிரபுவிடம் சரணாகதி அடைகின்றாரோ, அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives