நாங்கள் ஹரே கிருஷ்ண பக்தர்கள்
1975ஆம் ஆண்டின் மார்ச் 5ஆம் நாள், நியூயார்க்கின் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீல பிரபுபாதருக்கும் நிருபர்களுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்.
நிருபர் 1: சுவாமிஜி, உங்களது இயக்கத்தைப் பற்றி ஏதுமறியாதவர்களுக்கும் உங்களது இயக்கத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் தாங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
ஸ்ரீல பிரபுபாதர்: எங்களது இயக்கம் ஆன்மீக இயக்கம் என்பதால் அதனைப் பற்றி அறிந்துகொள்வது சற்று சிரமமே. ஏனெனில், துரதிர்ஷ்டவசமாக மக்களிடம் ஆன்மீகம் அல்லது ஆன்மீக இயக்கம்குறித்த தகவல்கள் இல்லை. உடல் இருக்கிறதுஶீஉடல் ஓர் இயந்திரம். அதனை இயக்குவதற்கு ஒரு நபர் தேவை, அதுவே ஆத்மா. இந்தத் தளத்திலிருந்து எங்களது இயக்கம் தொடங்குகிறது. இதனை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். மக்கள் உடலென்னும் இயந்திரத்திலேயே ஆழ்ந்துள்ளனர். ஆனால் இந்த இயந்திரத்தை இயக்கும் நபரைப் பற்றிய தகவல் அவர்களிடம் இல்லை. அதனையே நாங்கள் கற்பிக்கின்றோம்.
நிருபர் 1: உங்களைப் பின்பற்றுவோர் அணியும் வழக்கத்திற்கு மாறான உடையினால் மக்களிடம் உங்களது இயக்கம் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. உங்களது சீடர்கள் வழக்கத்திற்கு மாறாக உடை அணியும்படியும், தெருக்களில் டிரம்ஸ் வாசிக்கும்படியும் நீங்கள் கூறுவதற்கு காரணமென்ன?
ஸ்ரீல பிரபுபாதர்: இஃது எங்களது பிரச்சார யுக்திஶீமக்களின் கவனத்தை எப்படியேனும் பெற வேண்டும், அதன்மூலம் இறைவனுடனான தங்களது நித்திய உறவை புதுப்பித்துக்கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிட்டுகிறது.
நிருபர் 1: உங்களது சீடர்கள் தெருக்களில் இதுபோன்று நடந்துகொள்வதால் மக்களால் விசித்திரமாகப் பார்க்கப்படுகின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், ஆன்மீகச் செயல்களில் ஈடுபடுவதால் அவர்கள் கட்டாயம் மக்களுக்கு விசித்திரமாகத்தான் தெரிவார்கள். பௌதிகவாதிகளுக்கு நிச்சயம் நாங்கள் விசித்திரமானவர்களே.
நிருபர் 1: இவ்வாறு தோற்றமளிப்பதுதான் ஆன்மீகமாக இருப்பதற்கு ஒரே வழியா?
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, இல்லை. இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, நாங்கள் தவறான உடலுறவில் ஈடுபடுவதில்லை, மாமிசம் உண்பதில்லை, போதை பொருட்களைத் தவிர்க்கிறோம், சூதாடுவதுமில்லை.
நிருபர் 1: இல்லை, சுவாமிஜி. இந்தத் தோற்றம்ஶீவித்தியாசமாக ஆடை அணிதல், டிரம்ஸ் வாசித்தல், வீதிகளில் நடனமாடுதல் இவையே ஆன்மீகமாக இருப்பதற்கு ஒரே வழியா?
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. நாங்கள் ஏறத்தாழ எழுபது புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். விஞ்ஞான ரீதியாகவும் தத்துவ ரீதியாகவும் இந்த இயக்கத்தினை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், இந்த புத்தகங்களைப் பெற்று பயன் பெறலாம். எங்களது புத்தகங்களை நீங்கள் பார்த்துள்ளீர்களா?
நிருபர் 1: பார்த்திருக்கிறேன். இவ்விதமாக ஆடை அணியாமலும், வீதிகளில் ஆடாமலும் ஆன்மீகமாக இருக்க இயலாதா?
ஸ்ரீல பிரபுபாதர்: நிச்சயமாக. நீங்கள் தற்போது அணிந்திருக்கும் ஆடையிலேயே ஆன்மீகத்தைப் பயிற்சி செய்யலாம். ஆன்மீக வாழ்வைப் பற்றி எங்களது புத்தகங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம். ஆடை முக்கியமானதல்ல. இருப்பினும், பௌதிக உலகில் ஒருவர் ஒரு மாதிரியான உடையை உடுத்துகிறார், மற்றொருவர் வேறுவிதமான உடையை உடுத்துகிறார்.
நிருபர் 1: எங்களைப் போன்று ஆடை அணிந்தவர்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர், ஆனால் உங்களது சீடர்கள்…
ஸ்ரீல பிரபுபாதர்: விஷயம் என்னவெனில், குறிப்பிட்ட பணியை ஒருவர் செய்கிறார் என்பதைத் தெரிவிப்பதற்காக அவர் வித்தியாசமாக ஆடை அணிகிறார். உதாரணத்திற்கு, காவல்துறை அதிகாரிகள் வேறுவிதமாக உடை உடுத்துவதன் மூலம் மக்கள் அவர்களை போலீஸ் என்று அடையாளம் காண்கிறார்கள். அதுபோல, நாங்கள் வித்தியாசமாக ஆடை அணிவதன் மூலம், மக்கள் எங்களை ஹரே கிருஷ்ண பக்தர்கள் என்று அடையாளம் காண்கின்றனர்.
நிருபர் 2: சுவாமி, உங்களது இயக்கம் பற்றிய நிகழ்ச்சி ஒன்றினை தொலைக்காட்சியில் கண்டேன். அதில் ஆண்கள் வழிகாட்டுகிறார்கள், பெண்கள் பின்பற்றுகிறார்கள் என்று கூறினார்கள். அஃது உண்மையா?
ஸ்ரீல பிரபுபாதர்: அது கட்டாயமில்லை. நாங்கள் பகவத் கீதையிலிருந்து கிருஷ்ணரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுகிறோம். அஃது ஆண்-பெண் இருவருக்கும் பொருந்தக்கூடியதுதான்.
நிருபர் 2: பெண்களைவிட ஆண்கள் உயர்ந்தவர்கள் என நீங்கள் கருதுகிறீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், அதுவே இயற்கை. இயற்கையாகவே ஆண்களின் பாதுகாப்பு பெண்களுக்குத் தேவைப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் தந்தையாலும், பின்னர் கணவனாலும், முதுமையில் பிள்ளைகளாலும் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். அஃது இயற்கையே.
நிருபர் 2: இக்கருத்து அமெரிக்க மக்களின் எண்ணத்திற்கு எதிராக உள்ளதை அறிவீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: அமெரிக்கர்களுக்கு எதிராக இருக்கலாம். ஆனால் அதுவே இயற்கையின் நிலை. பெண்களுக்குப் பாதுகாப்பு தேவைப்படுகிறது.
நிருபர் 3: சுவாமி, உங்களது சீடர்கள் உயர்ந்த உண்மையை உணருவதற்கு வாய்ப்புள்ளதா?
ஸ்ரீல பிரபுபாதர்: அவர்கள் ஏற்கனவே உணர்ந்துள்ளார்களே.
நிருபர் 3: உணர்ந்துள்ளார்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: நிச்சயமாக, நீங்கள் விரும்பினால், அதை நான் விளக்குகிறேன். உயர்ந்த உண்மை என்னவெனில், கடவுள் உங்களையும் என்னையும் போல ஒரு நபர். அவருக்கும் மீதியிருக்கும் நம் அனைவருக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? நம் அனைவரையும் அவர் பராமரிக்கிறார், நாம் அவரால் பராமரிக்கப்படுகிறோம். ஆயினும், அவரும் நம்மைப் போல ஒரு நபரே. புரிகிறதா?
நிருபர் 3: புரிகிறது.
ஸ்ரீல பிரபுபாதர்: எனது சீடர்கள் இந்த உயர்ந்த உண்மையை உணர்ந்திருக்கிறார்கள். இல்லையெனில், அவர்கள் ஏன் என்னைப் பின்பற்ற வேண்டும்? நான் ஓர் ஏழை இந்தியன். அவர்கள் அமெரிக்கர்கள்ஶீசெல்வந்தர்கள், அவர்கள் ஏன் என்னைப் பின்பற்ற வேண்டும்? உயர்ந்த உண்மையை அவர்கள் உணராவிடில், எவ்வாறு என்னைப் பின்பற்றுவார்கள்?
நிருபர் 4: சுவாமி, மற்றொரு கேள்வி. நடுநிலையிலிருந்து பார்ப்பவர்களுக்கு நீங்கள் உங்களுடைய ஆன்மீக குழந்தைகளுக்கு வெளிப்புற உலகைத் துறந்து, சில குறிக்கோள்களையும் இலக்குகளையும் வகுத்து அவற்றை அடைவதற்காக கடினமாக உழைக்கும்படி தூண்டுவதாகத் தெரிகிறது. மனித சமுதாயத்திற்கான இதர சேவைகள் எதையும் நீங்கள் ஏன் செய்வதில்லை?
ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் செய்வதே மனித சமுதாயத்திற்கான மிகச்சிறந்த சேவை. மக்கள் அனைவரும் முட்டாள்களாகவும் அயோக்கியர்களாகவும் உள்ளனர், நாங்கள் அவர்களுக்கு ஆன்மீக அறிவை வழங்குகிறோம். நான் இந்த உடல்,” என்று எவரேனும் நினைத்தால், அவர் ஒரு நாய் அல்லது பூனையை விடச் சிறந்தவர் அல்லர்.
நிருபர் 4: நான் எனது வினாவை சரியாகக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன். நான் அறிந்தவரை உங்களுடைய சீடர்கள் மக்களுக்கு கிருஷ்ணரைப் பற்றி பிரச்சாரம் செய்கின்றனர், பிரசாத விநியோகம் செய்கின்றனர்; மற்றபடி, மக்களுக்கான இதர சேவைகளை அவர்கள் புரிவதில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் செய்யும் சேவை அனைத்தையும் உள்ளடக்கியது. மக்களை கிருஷ்ண உணர்விற்குக் கொண்டு வந்தால், அதுவே பக்குவநிலையாகும். மரத்தின் வேருக்கு நீரூற்றுவதால், அதன் கிளைகள், இலைகள் என எல்லா பகுதிகளும் வளம் பெறுகின்றன. இதர சேவைகள் ஒரு குறிப்பிட்ட துறையைச் சார்ந்த சேவைகள், ஆனால் எங்களுடைய சேவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய சேவை.
நிருபர் 4: ஆயினும், எனது வினா வெளியுலக மக்களுக்கு நீங்கள் செய்வது என்ன என்பதே.
ஸ்ரீல பிரபுபாதர்: அதற்கான பதிலையே நான் வழங்கினேன், உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. வயிற்றிற்கு உணவளித்தால் உடலின் எல்லா பாகங்களும் வளம் பெறுகின்றன. அதுபோல, அனைத்திற்கும் மையமாக இருக்கும் கடவுளை நீங்கள் உணர்ந்து கொண்டால், நீங்கள் அனைத்தையும் உணர்ந்தவராக ஆவீர்கள். நீங்கள் ஒரு மருத்துவமனை திறப்பதாக வைத்துக்கொள்வோம். உங்களால் சில நோய்களை குணப்படுத்த இயலும். ஆனால் உங்களது நோயாளி மரணமடைய மாட்டார் என்ற உத்திரவாதத்தை உங்களால் வழங்க இயலுமா? பெரியபெரிய மருத்துமனைகளால் மனித சமுதாயத்தை பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க இயலுமா?
நிருபர் 4: பௌதிகமாக நிச்சயம் இயலாது, ஆன்மீகத்தினால்தான் சாத்தியம்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆகவே, நாங்கள் அதனை வழங்குகிறோம். இந்த வழிமுறையின் மூலம் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் போன்றவை இல்லாத கடவுளின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்.