ஸ்ரீல பிரபுபாதருக்கும் அவர்களது சீடர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் உள்ள
ஜோகன்னஸ்பர்க்கில் நிகழ்ந்த உரையாடல்.
சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, “வேத பண்பாடு இந்தியாவில் மிகவும் வலுவாக நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்தியா மேற்கத்திய நாடுகளைவிட ஏழ்மையானதாகவும் அதிர்ஷ்டமற்றதாகவும் கருதப்படுகிறது. எனவே, வேத பண்பாட்டை ஏன் மதிக்க வேண்டும்?” என்று சிலர் குறை கூறுகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: மேலை நாட்டினரான நீங்கள் இந்தியாவிற்குச் சென்றபோது, மூல வேத பண்பாட்டை சீர்குலைத்தீர்கள். எனவே, இந்தியா தனது சொந்த பண்பாட்டை இழந்துவிட்டது. இருப்பினும், இந்தியர்களால் மேற்கத்திய பண்பாட்டை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இஃது இந்தியாவின் துரதிர்ஷ்டம். ஆங்கிலேயர்கள் மேற்கத்திய பண்பாட்டை எவ்வாறு பின்பற்றுவது என்பதை இந்தியர்களுக்குக் கற்றுத் தரவில்லை, அதே சமயத்தில், அவர்கள் இந்திய பண்பாட்டை அழித்துவிட்டனர். புரிகிறதா?
சீடர்: ஆம்.
ஸ்ரீல பிரபுபாதர்: இப்போது இந்தியாவிற்கென்று குறிப்பிட்ட பண்பாடு ஏதுமில்லை. இந்தியாவினால் மேற்கத்திய பண்பாட்டினை முழுமையாக ஏற்க இயலாது, அவள் தனது சொந்த பண்பாட்டையும் இழந்துவிட்டாள். இஃது இந்தியாவின் துரதிர்ஷ்டமாகும். முழுமையான மேற்கத்திய பண்பாட்டினை ஆங்கிலேயர்கள் ஒருபோதும் இந்தியர்களுக்குக் கற்றுத் தரவில்லை.
இந்தியர்களுக்கு உயர்கல்வி வழங்குவதை ஆங்கிலேயர்கள் எதிர்த்து வந்தனர். மூன்றாம் தர அல்லது நான்காம் தர ஆண்களை சில கடைநிலை அரசு பணிகளுக்காக வேலையில் அமர்த்திக்கொள்ளவே அவர்கள் விரும்பினர். “இந்தியர்கள் ABCD மட்டும் கற்றுக் கொண்டு ஐம்பது, அறுபது ரூபாய் ஊதியம் பெற்றுக்கொள்ளட்டும். நகருக்கு வெளியில் வசித்து தினசரி ரயிலில் வேலைக்கு வந்து செல்லட்டும். எங்களது நகரத்தில் கடுமையாக உழைக்கட்டும், பராமரிப்பிற்குத் தேவையான சிறிதளவு பணத்தை மட்டும் அவர்களுக்கு வழங்கினால் போதும்,” என்று ஆங்கிலேயர்கள் எண்ணினர்.
அதற்கு மேல் எதுவுமில்லை. இந்தியர்களுக்கு பணமில்லை, கல்வியில்லை, தொழிற்சாலைகளைப் பற்றிய உண்மையான அறிவில்லை. அமெரிக்காவில் தொழிற்சாலைகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவின் தொழிற்சாலைகளுக்குச் சென்று பாருங்கள், நரகமாக இருக்கும். ஆங்கிலேயர்கள் இந்தியர்களைச் சுரண்டினர். இந்திய முதலாளிகளும் எவ்வாறு சுரண்டுவது என்பதையே கற்றுக் கொண்டனர்.
சீடர்: சொந்த மக்களையே சுரண்டுகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். முன்பு இந்தியர்களை மான்செஸ்டர் மக்கள் சுரண்டினர். தற்போது எவ்வாறு சுரண்டுவது என்பதை அகமதாபாத் மக்களே கற்றுக் கொண்டனர். அரசாங்கமோ அவர்களிடம் வரி வசூல் செய்வதில் திருப்தியடைகிறது. தொழிலாளர்கள் தொடர்ந்து துன்புறுவதைப் பற்றி அரசாங்கம் கவலைப்படுவதில்லை. இந்தியர்கள் தங்களது பண்பாட்டை இழந்துவிட்டனர். மது அருந்துவதற்கும். மாமிசம் உண்பதற்கும் அவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, மேற்கத்தியர்களைப் போல இந்தியர்களால் கடுமையாக உழைக்க முடியாது, இந்தியாவின் தட்பவெப்பம் அதனை அனுமதிப்பதில்லை. இந்தியா அமைதியான வாழ்விற்கும் குறைந்த உழைப்பிற்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்காக மூளையைப் பயன்படுத்துவதற்கும் உகந்தது. இஃது இந்தியாவின் பொக்கிஷம். இந்தியர்கள் கடும் உழைப்பிற்கு ஏற்றவர்கள் அல்லர்.
உண்மையில், யாருமே கடுமையாக உழைக்கத் தேவையில்லை. கடுமையாக உழைத்தல் மிருக நாகரிகமாகும். மிருகத்தைப் போல மனிதன் கடுமையாக உழைத்தால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வேறுபாடு? மேலை நாடுகளில் தொழிற்சாலைகளுக்குத் தகுந்த தட்பவெப்பம் நிலவுகிறது. மிருகங்களைப் போல கடுமையாக உழைப்பதற்கு அங்குள்ள மக்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களும் கடுமையாக உழைத்து பெயரளவு பெளதிக நாகரிகத்தில் முன்னேறியுள்ளனர்; ஆயினும், ஆன்மீகத்தில் முற்றிலும் மடிந்தவர்களாக உள்ளனர். உண்மைதானே?
சீடர்: ஆம், உண்மைதான்.
ஸ்ரீல பிரபுபாதர்: பெளதிக முன்னேற்றம், ஆன்மீக தற்கொலை. நான் கூறுவது சரியா தவறா?
சீடர்: சரியே. மக்கள் தங்களது பெளதிக வாழ்வின் தரத்தை முன்னேற்ற விரும்பினால், அவர்கள் பாலுறவு வாழ்வை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீமத் பாகவதத்தின் பொருளுரையில் தாங்கள் எழுதியுள்ளீர்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். பாலுறவு இல்லாவிடில், பெளதிக வாழ்வில் உற்சாகம் பெற இயலாது. அதே சமயத்தில், பாலுறவை நிறுத்திவிட்டால், ஆன்மீக வாழ்வில் முன்னேறலாம். இதுவே இரகசியம். மேற்கத்திய பண்பாட்டிற்கும் கிழக்கத்திய பண்பாட்டிற்கும் இதுவே வேறுபாடு. கிழக்கத்திய பண்பாடு முழுவதும் பாலுறவை நிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேற்கத்திய நாடுகளோ பாலுறவை அதிகரிப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளன. மக்கள் மாமிசம், முட்டை முதலியவற்றை உண்டு மது அருந்துகின்றனர். இவை பாலுறவின் மீதான விருப்பத்தை அதிகரிக்கின்றன. திருப்தியான பாலுறவைப் பெற்றவுடன், நீங்கள் கடுமையாக உழைப்பதற்கு உற்சாகமடைகிறீர்கள். எனவே, இத்தகு கர்மிகளுக்கு (பெளதிகவாதிகளுக்கு) திருமணம் அவசியமானதாகும். பாலுறவின்றி அவர்களால் உழைக்கவியலாது. ஆனால் ஆன்மீக முன்னேற்றத்தை விரும்பும் ஞானிகள், யோகிகள் மற்றும் பக்தர்களுக்கு பாலுறவு தடை செய்யப்படுகிறது.
உண்மையில், மேற்கத்திய பண்பாட்டிலுள்ள மக்கள் வாழ்வின் விஞ்ஞானத்தை அறியாதவர்கள். அவர்களைப் பொறுத்தவரையில் வாழ்க்கை என்றால், இந்த உடல் மட்டுமே. தங்களது விஞ்ஞான முன்னேற்றம்குறித்து அவர்கள் மிகவும் பெருமைப்படுகின்றனர். ஆனால் மரணத்தின்போது உடலை விட்டுச் செல்லும் நபர் யார் என்பதை அவர்கள் அறிவார்களா? அவர்களால் விளக்க இயலாது. எனவே, அவர்களது பெயரளவு பண்பாட்டின் அடிப்படைக் கொள்கை அறியாமையே.
சீடர்: எனவே, அவர்கள் தங்களது அறிவு வளரவளர பாலுறவு வாழ்க்கையை அதிகரித்துக்கொள்கின்றனர். ஆனால், அறிவில் உண்மையிலேயே முன்னேறியிருந்தால், பாலுறவு வாழ்வைக் குறைத்துக் கொண்டிருப்பார்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அறிவு என்றால் என்னவென்பதை அவர்கள் அறியார். இந்த முட்டாள்களுக்கும் அயோக்கியர்களுக்கும் அறிவு என்றாலே பாலுறவுதான். அறிவு வளர்ச்சி என்பதன் பொருள் பாலுறவை எவ்வாறு அனுபவிப்பது என்பதே: எவ்வாறு கருக்கலைப்பு செய்வது, சிசுவதை செய்வது, கருத்தடை முறையைப் பக்குவப்படுத்துவது. இதைத் தவிர வேறு எதையும் அவர்கள் அறிவதில்லை. பாலுறவுக்குப் பின்பு ஏராளமான தொல்லைகள் இருப்பதை அவர்கள் அறிவர்; ஆயினும், அவர்களால் பாலுறவைக் கைவிட இயலாததால், கருக்கலைப்பு, கருத்தடை முதலிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
ஆனால், யன் மைதுனாதி-க்ருஹமேதி-ஸுகம் ஹி துச்சம் கண்டூயனேன கரயோர் இவ து:க-து:கம், பாலுறவு என்பது அரிப்பைப் போக்கிக்கொள்ள இரண்டு கைகளைத் தேய்த்துக்கொள்வதைப் போன்றதாகும். உண்மையில், ஆரம்பம் முதல் முடிவு வரை அச்செயல் துன்பம் நிறைந்தது. மிகவும் கீழ்த்தரமானது என்றபோதிலும், ஆன்மீக அறிவற்ற நபர்கள் இந்த அரிப்பை மாபெரும் இன்பமாகக் கருதுகின்றனர்.
அஃது இன்பமானதா? முன்னேறியுள்ளதாக எண்ணிக் கொண்டுள்ள இந்த அயோக்கியர்கள் சிறுநீர் கழிக்கும் துவாரங்களை இணைப்பதை இன்பம் என்று நினைக்கின்றனர். இஃது எத்தகைய இன்பம்? மூன்றாம் தர, நான்காம் தர இன்பம். யன் மைதுனாதி-க்ருஹமேதி-ஸுகம் ஹி துச்சம், பாலுறவு மிகவும் கீழ்த்தரமானது, துச்சம், என்று வேத இலக்கியம் கூறுகின்றது. இருப்பினும், இந்த முட்டாள்கள் இதனை மிகவுயர்ந்த இலக்காக ஏற்று, இந்த கீழ்த்தர இன்பத்திற்காக மிகவுயர்ந்த ஏற்பாடுகளைச் செய்கின்றனர்.
பாலுறவு இன்பம் உண்மையில் கீழ்த்தரமானது என்பதைப் புரிந்துகொள்வதற்கு அவர்கள் நூற்றுக்கணக்கான பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும். ஆகவே, பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார், பஹூனாம் ஜன்மனாம் அந்தே, “ஓர் அயோக்கியன் பற்பல பிறவிகளுக்குப் பின் என்னிடம் சரணடைவதற்கான அறிவைப் பெறுகிறான்.” பகவத் கீதையின் உபதேசத்தைக் கேட்பதன் மூலம் மக்கள் இந்த கீழ்த்தரமான இன்பத்தைக் கைவிடுவர்.
மேலை நாட்டினர் கடின உழைப்பில் ஈடுபடுகின்றனர், ஆனால் ஆன்மீக விஞ்ஞானத்தை அறியாமல், பாலுறவில் மட்டும் நாட்டமுடையவராக உள்ளனர்.