பின்வரும் கட்டுரை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திருஅ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால், நவம்பர் 11, 1973 அன்று, டில்லியில் வழங்கப்பட்ட உரையாகும்.
ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே
அஹைதுக்யப்ரதிஹதா யயாத்மா ஸுப்ரஸீததி
புலன்களுக்கு அப்பாற்பட்ட புருஷரின் மீதான பக்தித் தொண்டை எதனால் அடைய முடியுமோ, அதுவே மனித சமுதாயத்திற்கான மிகவுயர்ந்த தொழிலாகும் (தர்மமாகும்). ஆத்மாவை முற்றிலும் திருப்திப்படுத்துவதற்கு, இத்தகைய பக்தித் தொண்டு உள்நோக்கம் இல்லாமல், இடையறாது செய்யப்படுதல் அவசியம். (ஸ்ரீமத் பாகவதம் 1.2.6)
உண்மையான ஆனந்தத்தின் தொடக்கம்
நாம் அனைவரும் ஆத்ம–ஸுப்ரஸாத அல்லது பூரணமான ஆத்ம திருப்திக்காக ஏங்கிக் கொண்டுள்ளோம்; ஆனால் ஆத்மா என்றால் என்ன என்பதை முதலில் முறையாக அறிய வேண்டும். ஆத்மா அல்லது “நான்” என்னும் வார்த்தை, உடல், மனம், ஆத்மா ஆகியவற்றைக் குறிக்கிறது. உண்மையில், நாம் இரண்டு விதமான ஆடைகளால் மூடப்பட்டுள்ளோம். எவ்வாறு ஒரு மனிதன் மேல் சட்டையினாலும் (கோட்டினாலும்) சட்டையினாலும் மூடப்படுகின்றானோ, அவ்வாறே ஆத்மாவாகிய ‘நான்’ ஜடப் புலன்களாலான ஸ்தூல உடலாலும், மனம், புத்தி, மற்றும் அஹங்காரத்தினால் ஆன சூட்சும உடலாலும் மூடப்பட்டுள்ளேன். அஹங்காரம் அல்லது பொய்த் தன்னுணர்வினால் மூடப்பட்ட ஒருவன் தன்னை தன் உடலுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறான். அவனிடம், “நீ யார்?” என்று வினவினால், “நான் ஓர் அமெரிக்கன்,” அல்லது “நான் ஓர் இந்தியன்” என்று கூறுவான். ஆனால் இவையனைத்தும் உடல் சம்பந்தப்பட்ட அடையாளங்கள், உண்மையான அடையாளங்கள் அல்ல.
அஹம் ப்ரஹ்மாஸ்மி, “நான் பிரம்மன், ஆன்மீக ஆத்மா” என்று ஒருவன் நினைக்கும்போது, அவன் தன்னுடைய உண்மையான அடையாளத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறான் என்று வேத இலக்கியங்கள் கற்பிக்கின்றன. எனவே, அதாதோ ப்ரஹ்ம–ஜிஜ்ஞாஸா, “தற்போது ஆன்மீக ஆத்மாவைப் பற்றிக் கேட்டறிய வேண்டும்,” என்று வேதாந்த சூத்திரம் கூறுகிறது. மனித உருவிலான நமது வாழ்க்கை, ஆத்மாவைப் பற்றிய ஞானத்தில் முன்னேறுவதற்கானதாகும்; மேலும், இந்த ஞானமே உண்மையான ஆனந்தத்தின் தொடக்கம்.
மகிழ்ச்சிக்கான பிரயத்தனம்
நாம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடைவதில் மிகுந்த ஆவல் கொண்டவர்களாக உள்ளோம்; ஏனெனில், இயற்கையாகவே நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவர்கள் (ஆனந்த–மயோ ’ப்யாஸாத்) ஆன்மீக ஆத்மா என்ற நிலையில் நாம் இயற்கையாகவே மகிழ்ச்சியானவர்கள், பேரின்பமுடையவர்கள். ஆனால், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பௌதிக ஸ்தூலப் பொருள்களால் மூடப்பட்டிருப்பதால், நாம் துன்பப்படுகிறோம். மேலும், மனம், புத்தி, அஹங்காரம் என்னும் மூன்று சூட்சும மூலகங்களாலும் நாம் மூடப்பட்டுள்ளோம். இந்த உறைகளோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள பௌதிகவாதிகள், உடலின் இந்த ஸ்தூல, சூட்சும மூலகங்களின் வழியாக திருப்தியடைய முயற்சி செய்கின்றனர். வேறு விதமாகக் கூறினால், அவர்கள் வெறும் புலன் திருப்தியை, உடலின் சந்தோஷத்தை நாடுகின்றனர். ஜடவுலகிலுள்ள ஒவ்வொருவரும் இந்த சந்தோஷத்திற்காகவே உழைக்கின்றனர். சிலர் தங்களின் ஜடப் புலன்களைத் திருப்திப்படுத்திக் கொள்வதால் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்கின்றனர்; சிலர் கலை, கவிதை, தத்துவம் போன்ற துறையில் ஈடுபட்டு தங்களது மனதைத் திருப்திப்படுத்திக்கொள்ள முயற்சி செய்கின்றனர். ஆனால் ஸ்தூல புலனுகர்ச்சி, சூட்சும புலனுகர்ச்சி–இதில் எதுவுமே நமக்கு உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்க முடியாது; ஏனெனில், உண்மையான மகிழ்ச்சி ஆத்மாவைச் சார்ந்தது. இவ்வுலகம் முழுவதும் உள்ள மக்கள், புலன் திருப்திக்காக உடல் சம்பந்தப்பட்ட வசதிகளைப் பெருக்கிக் கொள்ள பிரயத்தனப்படுவதை நாம் பார்க்கின்றோம்; ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மகிழ்ச்சிக்கான அடிப்படைக் கொள்கை அங்கு இல்லை என்பதே அதற்கு காரணம்.
உதாரணமாக, உங்களிடம் ஓர் அழகிய மேல் சட்டை (கோட்) இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் அதை அழகுபடுத்தி, இஸ்திரி போட்டு மிகவும் ஜாக்கிரதையாக வைத்துக் கொண்டிருந்தால் மட்டும் மகிழ்ச்சியடைய முடியாது. அதுபோலவே, உடல் என்னும் மேல்சட்டையை திருப்தி செய்வதால் மகிழ்ச்சியடையலாம் என்று தற்போது முயற்சி செய்கிறீர்கள்; ஆனால் அது சாத்தியமல்ல. ஆத்மாவை மகிழ்ச்சிக்குள்ளாக்கும்பட்சத்தில் மட்டுமே உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும். நீங்கள் ஒரு பறவையைக் கூண்டில் வைத்து வளர்ப்பதாக எடுத்துக் கொள்வோம். அப்பறவைக்கு உணவளிக்காமல், கூண்டினை மட்டும் நீங்கள் மெருகேற்றி வைத்தால், அப்பறவை ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதுபோலவே, இந்த ஜடவுடலானது ஆத்மாவின் கூண்டைப் போன்றது; நாம் உடலை மட்டும் பராமரித்து வந்தால், ஆத்மா ஒருபோதும் மகிழ்ச்சியடைய முடியாது. ஆத்மாவானது உடலினாலும் மனதினாலும் மூடப்பட்டுள்ளது; உடல் சம்பந்தப்பட்ட சௌகரியங்கள் மட்டுமின்றி மனத் திருப்தியும்கூட ஆத்மாவிற்கு ஒருபோதும் மகிழ்ச்சியைத் தர இயலாது. இதைப் புரிந்துகொள்வதே ஆன்மீக ஞானத்தின் தொடக்கமாகும்.
ஆத்மாவின் தர்மம்
அப்படியெனில், ஆத்மா எவ்வாறுதான் மகிழ்ச்சியடைய முடியும்? ஸ்ரீமத் பாகவதத்தின் இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளதுபோல, நாம் நமது உன்னத தர்மத்தின்படி வாழ்க்கையை நடத்தும்போது மட்டுமே ஆத்மா மகிழ்ச்சியடையும். தர்ம என்னும் வார்த்தை, “மதம்” (religion) என்று பொதுவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது; ஆனால் இங்கு கூறப்பட்டுள்ளதுபோல், இதற்கான சரியான பொருள், “ஒருவரின் வாழ்வை என்றும் நிலைநிறுத்துபவை,” அல்லது “ஒருவரின் முக்கியமான குணங்கள்” என்று அறிய வேண்டும். எல்லாவற்றிற்கும் குறிப்பிட்ட குணங்கள் இருக்கின்றன. உதாரணமாக, மிளகாயை எடுத்துக் கொண்டால், காரமான சுவையைத் தருவதே அதன் இயல்பான குணம். மிளகாய் வாங்குவதற்காக நாம் கடைத்தெருவிற்குச் செல்லும்போது, அஃது எவ்வளவு காரமாக உள்ளது என்பதை சோதிக்கின்றோம். அது காரமாக இல்லாவிடில் நிராகரிக்கின்றோம். எனவே, மிளகாயின் தர்மம், மிகவும் காரமாக இருக்க வேண்டும் என்பதே. அதுபோலவே, சர்க்கரையின் தர்மம், இனிப்பாக இருக்க வேண்டும் என்பதே.
ஆத்மாவிற்கான தர்மம் யாது? ஜட இயற்கையில் கட்டுண்டிருக்கும்போது, ஆத்மா தன்னை உடலுடன் தவறாக அடையாளப்படுத்திக் கொண்டு, உடலின் அடிப்படையில் செயற்கையான தர்மங்களைக் கடைப்பிடிக்கின்றான். இந்து குடும்பத்தில் பிறந்தவர் “நான் இந்து” என்றும், முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் “நான் முஸ்லிம்” என்றும், கிருஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர் “நான் கிருஸ்துவன்” என்றும் உரிமை கொண்டாடுகின்றனர். ஆனால் நான் ஏற்கனவே விளக்கியவாறு, ஒருவரின் உண்மையான அடையாளம், அஹம் ப்ரஹ்மாஸ்மி, “நான் ஆன்மீக ஆத்மா” என்பதே. ஆன்மீக அறிவின் இத்தளத்திற்கு வரும்போது, நம்முடைய முக்கியமான இயல்பினை நம்மால் தெளிவாக அறிய முடியும். ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே, ஆத்மாவின் உன்னத தர்மம் பகவானுக்குச் செய்யும் பக்தித் தொண்டே என்று இங்கு விளக்கப்பட்டுள்ளது. அதுவே நம்முடைய முக்கியமான தன்மை. ஒவ்வொருவரும் எப்போதும் பக்தராகவே உள்ளனர்–நாட்டின் பக்தர், சமூகத்தின் பக்தர், குடும்பத்தின் பக்தர், மனைவியின் பக்தர், குழந்தைகளின் பக்தர், புலன்களின் பக்தர் என்று உள்ளனர். “நான் யாருக்கும் சேவை செய்யவில்லை” என்று எவராலும் கூற முடியாது. நீங்கள் சேவை செய்தே ஆக வேண்டும்; ஏனெனில், அதுவே உங்களுடைய தர்மம். சேவை செய்ய யாருமே இல்லை என்றால், ஒருவர் பூனையையோ நாயையோ வைத்துக் கொண்டு அதற்கு சேவை செய்து கொண்டு இருப்பதைக் காண்கிறோம். எனவே, யாருக்காவது அன்புடன் சேவை செய்வது என்பது, நம்முடைய முக்கியமான இயல்பாகும். ஆனால் அச்சேவைகளில் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் தவற விடுகிறோம். பூனைகள், நாய்கள் என பலவற்றிடம் அன்பு செலுத்தினாலும், கடவுளிடம் அன்பு செலுத்துவதைப் பொருட்படுத்தாத காரணத்தினால், நாம் உண்மையான ஆனந்தத்தைப் பெறுவதில்லை. நம்முடைய அன்பை சரியான இலக்கின் மீது செலுத்தினால், அதோக்ஷஜர் எனப்படும் கிருஷ்ணரின் மீது செலுத்தினால், உண்மையான ஆனந்தத்தை நம்மால் அடைய முடியும்.
தர்மம் என்னும் வார்த்தைக்கு “மதம்” என்னும் பொருளை நாம் எடுத்துக்கொண்டால், பகவானுக்கு உன்னத அன்புத் தொண்டு செய்வதே மிக உயர்ந்த மதம் என்பதை ஸ்ரீமத் பாகவதத்தின் இந்த ஸ்லோகத்திலிருந்து புரிந்துகொள்ளலாம். “ஆன்மீக நிலைக்கு ஒருவரை உயர்த்தக்கூடிய சிறந்த மதம் எது?” என்பதே நைமிஷாரண்ய வனத்திலிருந்த முனிவர்கள் எழுப்பிய கேள்வி. சிலர் இந்து மதமே சிறந்தது என்று கூறுவர், சிலர் கிருஸ்துவ மதத்தை சிபாரிசு செய்வர், வேறு சிலர் இஸ்லாமிய மதமே மிகவும் நல்லது என்பர், மற்றொருவர் புத்த மதமே மிகவும் சிறந்தது என்பர். ஆனால் இந்து, கிருஸ்துவம், முஸ்லிம், புத்தம் என்பனவற்றை ஸ்ரீமத் பாகவதம் ஆதரிக்கவில்லை; அதோக்ஷஜரின் (விஷ்ணுவின்) பக்தனாக மாறுவதற்கு உனக்கு எது துணைபுரிகின்றதோ
அதுவே மிகச்சிறந்த மதம்.
அதோக்ஷஜர் எனப்படும் கிருஷ்ணர்
அதோக்ஷஜ என்பது முழுமுதற் கடவுளுக்கான ஒரு சமஸ்கிருத பெயர். அதோக்ஷஜ என்னும் சொல், புலன்களால் பெறப்பட்ட அறிவினால் (அக்ஷ–ஜ) மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளையும் தோற்கடிக்கக்கூடியவர் (அத) என்று பொருள்படும். அதோக்ஷஜ என்னும் இறைவனின் இத்திருநாமம் “கடவுள் யார்?” என்ற கேள்வியை ஆராய்ச்சி செய்து கட்டுக்கட்டாக புத்தகங்களை எழுதும் மனக் கற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் பதிலாகும். “பல்லாயிரக்கணக்கான வருடங்கள் நீங்கள் கற்பனை செய்து கொண்டே போகலாம், ஆனால் அதன் மூலம் உங்களால் பகவானைப் புரிந்துகொள்ள முடியாது,” என்பதை அதோக்ஷஜ என்னும் பெயர் அவர்களுக்கு உணர்த்துகின்றது.
பொதுவாக “கடவுள் மிகப்பெரியவர்” என்று மக்கள் கூறுவர். ஆனால் அவர் எவ்வளவு பெரியவர் என்று அவர்களுக்குத் தெரியாது. கிருஷ்ணர் என்னும் திருநாமத்தில் கடவுளின் பெருந்தன்மை மிகச்சரியாக விளக்கப்படுகிறது. கடவுள் என்னும் வார்த்தைக்குப் பக்குவமான விளக்கம் உங்களுக்கு வேண்டுமெனில், கிருஷ்ணர் என்பதே அவ்விளக்கம்; ஏனெனில், கிருஷ்ணர் என்னும் வார்த்தைக்கு, “எல்லோரையும் வசீகரிக்கக்கூடியவர்” என்று பொருள். ஒருவர் எல்லோரையும் வசீகரிப்பவராக இல்லாவிடில், அவர் எவ்வாறு மிகப்பெரியவராக, கடவுளாக இருக்க முடியும்? ஒருவர் மிகப்பெரியவராக இருக்கும் பட்சத்தில், அவர் வசீகரிப்பவராக இருந்தாக வேண்டும். உதாரணமாக, ஜான் டி. ராக்ஃபெல்லர், ஹென்றி ஃபோர்டு ஆகியோர் மிகப்பெரிய மனிதர்களாக கருதப்பட்டவர்கள். ஏனெனில், அவர்கள் மிகப்பெரிய செல்வந்தர்களாக இருந்தனர்; மேலும், செல்வச் செழிப்பினால் அவர்கள் மற்றவர்களைக் கவரக்கூடியவர்களாக இருந்தனர். செல்வம் என்பது வசீகரத்தின் ஓர் அம்சம் என்பதால், கடவுள் மிகப்பெரிய செல்வந்தராக இருக்க வேண்டும். அழகு என்பது வசீகரத்தின் மற்றொரு அம்சம்; எனவே, கடவுள் எல்லோரைக் காட்டிலும் மிகவும் அழகானவராக இருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள், கிருஷ்ணரின் படத்தைப் பார்க்கும்போது, அவர் சிறிது கருமை நிறத்துடன் காணப்பட்டாலும், இவரைப் போன்ற அழகிய நபரைக் கண்டதில்லை என்று முடிவு செய்கின்றனர். அதுபோலவே மற்றவர்களைக் கவருவதற்கான இதர அம்சங்களான, பலம், அறிவு, புகழ், துறவு ஆகியவற்றையும் கிருஷ்ணர் பூரணமாகப் பெற்றுள்ளார். அளவற்ற செல்வம், அழகு, பலம், அறிவு, புகழ், துறவு ஆகிய ஆறு ஐஸ்வர்யங்களும் அவரை அதிக வசீகரமுடையவராக மாற்றுவதால், அவர் கிருஷ்ணர் என்னும் திருநாமத்தினால் அறியப்படுகின்றார். இத்தகு உயர்ந்த ஐஸ்வர்யங்களின் காரணத்தினால், மிகப்பெரிய செல்வந்தர், மிகவும் அழகானவர், மிகச்சிறந்த பலசாலி, அறிவிற் சிறந்தவர், மிகவும் புகழ் பெற்றவர், துறவில் உயர்ந்தவர் என அனைவரையும் அவரால் வசீகரிக்க முடியும். இந்த எல்லையற்ற கவர்ச்சிகரமான அம்சங்களை புலன்களை அடிப்படையாகக் கொண்ட மனக் கற்பனையினால் புரிந்துகொள்வது சாத்தியமல்ல; எனவே, பாகவதத்தின் இந்த ஸ்லோகத்தில் அதோக்ஷஜ என்று கிருஷ்ணர் அறியப்படுகிறார்.
யாரை ஆன்மீகவாதியாக ஏற்கலாம்?
எனவே, மிகச்சிறந்த மதம் அல்லது தர்மம் என்பதற்கான எளிய வரையறை ஸ்ரீமத் பாகவதத்தில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. கடவுள் மீதான அன்பையும் பக்தியையும் நீங்கள் எதனால் வளர்த்துக் கொள்ள முடியுமோ, அதுவே மிகச்சிறந்த மதம், அல்லது தர்மம் எனப்படுகிறது; இந்த விளக்கம் எவ்வளவு அற்புதமானது! நீங்கள் கிருஸ்துவம், இந்து, புத்தம், இஸ்லாம் என எதைக் கடைப்பிடிப்பவராகவும் இருக்கலாம்–அது பொருட்டல்ல. ஆனால், நீங்கள் கடவுளின் மீதான அன்பை எந்த அளவிற்கு வளர்த்துள்ளீர்கள் என்பதைப் பொறுத்துதான் உங்களது வெற்றிக்கான சோதனை அமையும். நீங்கள் கடவுளின் மீதான அன்பை வளர்த்துக் கொண்டால், மதக் கோட்பாடுகளைச் சரியாகக் கடைப்பிடிக்கின்றீர் என்று பொருள். மதம் என்பது, கோயில், தேவாலயம் அல்லது மசூதிக்குச் சென்று, அங்கு சம்பிரதாயத்திற்காக சில சடங்குகளைச் செய்து தானங்களையும் வழங்கி, பின்னர் வீட்டிற்கு வந்து எல்லா அபத்தங்களிலும் ஈடுபடுவது அல்ல. அது மதம் அல்ல. ஒருவரை பெரிய மனிதன் என்று சொல்வதாக எடுத்துக் கொள்வோம். அவர் பெரியவர் என்பதற்கு என்ன ஆதாரம்? அவரிடம் செல்வம், புகழ், அழகு என ஏதாவது ஒன்று அதிகமாக இருக்க வேண்டும். அதுபோலவே ஒருவர் மதக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவர் என்பதற்கான ஆதாரம் என்ன? அவர் கடவுள்மீதான அன்பை விருத்தி செய்துள்ளாரா என்பதே ஆதாரம், அப்போது அவரை ஆன்மீகவாதி என்று கூறலாம்.
எதையும் எதிர்பார்க்காத அன்பு
“ஆம், நான் கடவுளிடம் அன்பு செலுத்துகிறேன்,” என்று இப்போது யாராவது கூறலாம். ஆனால் அத்தகைய அன்பின் தன்மை யாது? இவ்வுலகில் ஓர் ஆண் ஓர் அழகிய பெண்ணை விரும்புவதை நாம் காண்கிறோம். ஆனால் அந்த அன்பு எவ்வளவு காலம் நீடிக்கும்? அவள் அழகாக இருக்கும் வரை மட்டுமே. ஒரு பெண் ஒரு பையனைக் காதலிக்கின்றாள், அஃது எத்தனை நாள்களுக்கு? அவனுடைய பையில் பணம் இருக்கும்வரை. இஃது அன்பு அல்ல, காமம். “நான் உன்னுடைய தோலைக் காதலிக்கிறேன், நான் உன்னுடைய பணத்தைக் காதலிக்கிறேன்”–இவை அன்பு அல்ல. கடவுள்மீதான அன்பானது, அஹைதுகி, எந்த சுயநல நோக்கமும் இல்லாததாக இருக்க வேண்டும் என்று இங்கு ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. அவ்வாறு இல்லாமல், “பகவானே நீங்கள் எனக்கு தினமும் ரொட்டி தருவதால் நான் உங்களை நேசிக்கிறேன்” என்று கூறுவது அன்பல்ல. அது தேவாலயமானாலும் சரி, கோயிலானாலும் சரி, மசூதியாக இருந்தாலும் சரி; மக்கள் பொதுவாக இது போன்றுதான் வேண்டுகிறார்கள்: “கடவுளே, எனக்கு என்னுடைய தினசரி உணவைத் தாருங்கள்.” இந்தியாவிலுள்ள மக்கள் பொதுவாக கோயிலுக்குச் சென்று, “எனதருமை கிருஷ்ணரே! நான் கஷ்டத்தில் உள்ளேன். தயவுசெய்து இதிலிருந்து எனக்கு விடுதலையளியுங்கள்” என்றோ, “எனக்குச் சிறிது செல்வம் தேவைப்படுகிறது, தயவுசெய்து ஒரு கோடி ரூபாய் தாருங்கள்,” என்றோ வேண்டுகிறார்கள். இது கடவுள்மீதான அன்பு ஆகாது.
இருப்பினும், இதுபோன்ற மதம் நாத்திகத்தைவிட எவ்வளவோ மேலானது. பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் (7.16) கூறுகிறார், சதுர்–விதா பஜந்தே மாம் ஜனா: ஸுக்ருதினோ கடவுளிடம் சென்று சில நன்மைகளை வேண்டுபவன் புண்ணியவானாக ஏற்கப்படுகிறான். ஆனால் அவன் பக்தனல்ல. அவன் பகவானின் உயர்நிலையை ஏற்றுக்கொள்வதால், அவனை புண்ணியவான் என்று கருதலாம்; ஆனால் மதத்தின் உயர்ந்த கோட்பாடாகக் கருதப்படும் இறையன்பை அவன் வளர்த்துக் கொள்ளவில்லை.
தூய அன்பின் உணர்ச்சிகள்
இறைவனின் மீதான அன்பினை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தனது சிக்ஷாஷ்டகத்தில் (7) விளக்குகிறார்:
யுகாயிதம் நிமேஷேணச க்ஷுஷா ப்ராவ்ருஷாயிதம்
ஷூன்யாயிதம் ஜகத் ஸர்வம் கோவிந்த–விரஹேண மே
“எனதருமை கோவிந்தனே! தங்கள் பிரிவு ஒரு கணம் என்றாலும் அதனை நான் பல யுகங்களாக உணர்கிறேன்.” ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற உணர்ச்சிப்பூர்வமான அனுபவங்கள் உண்டு. நீங்கள் யாரிடமாவது அன்பு செலுத்தினால், அவர் எந்த நேரத்திலும் வரலாம் என்று எதிர்பார்த்தால், நீங்கள் காத்திருக்கும் ஒவ்வொரு நொடியையும் ஒருநாளைப் போல உணர்வீர்கள். கிருஷ்ணரைக் காண முடியாத சைதன்ய மஹாபிரபு, சக்ஷுஷா ப்ராவ்ருஷாயிதம், தனது கண்களில் கண்ணீர் மழைபோல் பெருகுகிறது; ஷூன்யாயிதம் ஜகத் ஸர்வம், இந்த முழு உலகத்தையும் வெற்றிடமாக உணர்கிறேன் என்கிறார். இவையனைத்தும் கிருஷ்ணர் அல்லது கோவிந்தனின் பிரிவினால் ஏற்பட்டது, கோவிந்த–விரஹேண மே. நீங்கள் கோவிந்தனின் பிரிவைத் தாங்க முடியாமல் இருந்தால், அதுவே பகவானின் மீதான தூய காரணமற்ற அன்பாகும்.
அன்பின் ஆறு அறிகுறிகள்
ஸ்ரீமத் பாகவதத்தின் தற்போதைய ஸ்லோகத்தில் பகவானின் மீதான தூய பக்தியைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள அடுத்த வார்த்தை, அப்ரதிஹதா–அதாவது, எந்தவொரு காரணத்தினாலும் தடைபடாதது என்று பொருள். சில நேரங்களில், “நான் ஓர் ஏழை, என்னால் கிருஷ்ணரை நேசிக்க முடியாது” என்றும், “நான் படிப்பறிவு இல்லாதவன், வேதாந்தத்தைப் படிக்கத் தெரியாதவன்–அதனால் கிருஷ்ணரை நேசிக்க என்னால் முடியாது” என்றும் மக்கள் கூறுகின்றனர். இல்லை. கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துவதற்கு எந்த பௌதிகத் தேவையும் அவசியமில்லை. ஏதேனும் ஒரு பழம் அல்லது மலரைக் கோயிலுக்குக் கொண்டுவந்து கிருஷ்ணரின் விக்ரஹத்திற்கு அர்ப்பணிப்பதன் மூலம், நீங்கள் கிருஷ்ணருக்கான அன்பை வளர்த்துக் கொள்ளத் தொடங்கலாம். இதனை அன்பின் ஆறுவித அறிகுறிகளில் ஒன்று என்று ஸ்ரீல ரூப கோஸ்வாமி தன்னுடைய உபதேஷாம்ருதத்தில் (4) கூறியுள்ளார்.
ததாதி பிரதிகிருஹ்ணாதி குஹ்யம் ஆக்யாதி ப்ருச்சதி
புங்க்தே போஜயதே சைவ ஷட்–விதம் ப்ரீதி–லக்ஷணம்
முதலில், நீங்கள் யாரிடம் அன்பு செலுத்துகிறீர்களோ, அவருக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டும், பின்னர் அவரிடமிருந்து ஏதாவது பரிசை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எதையும் கொடுக்காமல். தொடர்ந்து பரிசுகளை ஏற்றுக் கொண்டே இருந்தால், அங்கு அன்பு இல்லை. அடுத்ததாக, குஹ்யம் ஆக்யாதி ப்ருச்சதி, நீங்கள் உங்கள் மனதில் எதையும் இரகசியமாக வைத்திருக்கக் கூடாது, உங்களுடைய அன்பிற்குப் பாத்திரமானவரும் எந்த இரகசியத்தையும் மனதில் வைத்திருக்கக் கூடாது. மேலும், புங்க்தே போஜயதே, சைவ, நாம் அன்பு செலுத்தும் நபருக்கு உணவளிக்க வேண்டும், அவரிடமிருந்து உணவை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆறு வித அன்புப் பரிமாற்றங்களை கிருஷ்ணருடன் நாம் பழக்கப்படுத்தினால், கடவுளின் மீதான தூய அன்பை நாம் வளர்த்துக் கொள்வோம். அந்த அன்பானது எவ்வித உள்நோக்கமும் தடைகளும் இல்லாது இருக்க வேண்டும்.
நீங்கள் கடவுளின் மீது அத்தகைய அன்பை வளர்த்துக் கொண்டால், ஸுப்ரஸீததி, பூரண திருப்தியை அடைவீர்கள். அதற்கு மேல், எந்த கவலையும் இல்லை, அதிருப்தியும் இல்லை. முழு உலகமுமே பூரண மகிழ்ச்சியுடன் இருப்பதாக நீங்கள் உணர்வீர்கள் (விஷ்வம் பூர்ண–ஸுகாயதே). எனவே, கடவுளின் காதலராக மாறுவதற்குக் கற்றுக் கொடுக்கும் மதமே மிகச்சிறந்த மதம்; மேலும், இந்த ஞானத்தை விநியோகம் செய்வதே மிகச்சிறந்த சமூக சேவை. இவையே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம். இவ்வாறு கிருஷ்ண உணர்வு என்பது அழகானதாகும். இஃது எந்தவிதமான பௌதிக உடைமைகளைப் பொறுத்தும் அமைவதல்ல; இது எந்தவித தடைகளாலும் பாதிக்கப்படக்கூடியதும் அல்ல. உலகத்தின் எந்தப் பகுதியிலும், வீட்டிலோ வீட்டிற்கு வெளியிலோ, நீங்கள் இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்தை பரவசத்துடன் உச்சரித்து வெகு விரைவில் இறையன்பை அடையலாம்.
(தமிழாக்கம்: ஜெய கோவிந்தராம தாஸ்)