எந்த வருடமும் இல்லாத அளவில் இந்த வருடம் இந்தியாவில் பருவமழை பொய்த்துவிட்டது. தீர்வு என்ன?
வழங்கியவர்: திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ்
இந்த வருடம் பருவமழை ஏறக்குறைய பொய்த்துவிட்டது. விளைவு: கடும் தண்ணீர் பஞ்சத்தையும், அதனைத் தொடர்ந்து உணவுப் பற்றாக்குறை அல்லது உணவுப் பொருட்களின் கடும் விலை உயர்வினையும் இந்தியர்கள் விரைவில் சந்திக்க உள்ளனர். இதனால், மழை வேண்டி பலரும் பல்வேறு வழிமுறைகளைக் கையாள்கின்றனர். கடந்த ஜுலை மாதத்தின் 27ஆம் நாளன்று கர்நாடக அரசின் சார்பில் சுமார் 17.5 கோடி ரூபாய் செலவில் அங்குள்ள 35,000 கோவில்களில் சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டன. ஆயினும், எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. இப்பிரச்சனையைத் தீர்க்க உண்மையிலேயே ஆர்வம் கொண்டோருக்கு இங்கு சில அதிகாரப்பூர்வமான தகவல்கள்.
யாகம் செய்ய வேண்டும்
யஜ்ஞாத் பவதி பர்ஜன்யோ, அதாவது, யாகங்களைச் செய்வதால் மழை வரும் என்று பகவத் கீதையில் (3.14) கிருஷ்ணர் கூறுகிறார். கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதாலும் அவரே உயர் அதிகாரி, எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவர் என்பதாலும் அவரின் வார்த்தைகளை நாம் கவனமாகப் பின்பற்றினால், நிச்சயமாக மழையைப் பெற முடியும். மழையானது தேவர்களான இந்திரன், சூரியன், சந்திரன் போன்றவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவர்கள் அனைவரும் முழுமுதற் கடவுளான விஷ்ணுவின் தொண்டர்கள் என்பதால், யாகத்தின் மூலமாக விஷ்ணுவைத் திருப்தி செய்தால், அவர்கள் மனமகிழ்ந்து நிச்சயம் மழையைப் பொழிவர்.
யாகம் நமக்கு சாத்தியமா?
யாகம் செய்ய வேண்டும்–இதனைப் பெரும்பாலான மக்கள் அறிவர். ஆனால் என்ன யாகம் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதைத்தான் அறியாமல் உள்ளனர். யாக குண்டத்தில் நெய்யை ஊற்றி, நெருப்பை மூட்டி, புகையைக் கிளப்பி, கண்கள் எரிச்சலடைந்தால்தான் யாகம் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் அது தவறு. நெருப்பை மூட்டி செய்ய வேண்டிய யாகம் நாம் தற்போது வாழும் கலி யுகத்திற்கு ஏற்றதல்ல, திரேதா யுகத்தைச் சார்ந்ததாகும். அத்தகு யாகத்தைச் செய்ய வேண்டுமானால், நம்மிடம் தூய்மையான பசு நெய், யாகத்தில் அர்ப்பணிப்பதற்கென்று தூய்மையான தானியங்கள் போன்றவை மட்டுமின்றி, முக்கியமானதாக வேத மந்திரங்களை துளியும் தவறின்றி துள்ளியமாக உச்சரிக்கத் தெரிந்த தகுதி வாய்ந்த பிராமணர்களும் அவசியம். பிராமணர்கள் மந்திரங்களை உச்சரிக்கும்போது சிறிதேனும் தவறு செய்தால், விரும்பிய பலனை அடைய முடியாது, சில நேரங்களில் விளைவுகள் எதிராகவும் அமையலாம். இப்போது கூறுங்கள்: இத்தகு யாகங்கள் நமக்கு சாத்தியமா? நிச்சயமாக சாத்தியம் இல்லை.
எந்த வகையான யாகம் சாத்தியம்?
ஸ்ரீமத் பாகவதம் (11.5.32) நமக்குக் கூறுவது யாதெனில், யஜ்ஞை: ஸங்கீர்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸு-மேதஸ:, அதாவது, கலி யுகத்தைச் சார்ந்த பேரறிவு படைத்த நல்லோர்கள், பகவானை ஸங்கீர்த்தன யாகத்தின் மூலமாக வழிபடுவர் என்பதே. நாம ஸங்கீர்த்தனமே கலி யுகத்திற்கு உகந்த யாகம். மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, பகவானின் திருநாமத்தை உரத்த குரலில் பாடி ஆடுவதே நாம ஸங்கீர்த்தனம் எனப்படுகிறது. இந்த ஸங்கீர்த்தன யாகமே கலி யுகத்திற்கு உகந்தது.
இதைச் செய்வதற்கு எந்த முன் தகுதியும் அவசியமில்லை; பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் போன்ற ஜாதி பேதங்கள் ஏதுமின்றி அனைவரும் இதில் கலந்துகொள்ளலாம். இதற்கென்று எந்த செலவும் இல்லை; தூய்மையான நெய் தேவையில்லை, தூய்மையான தானியங்கள் தேவையில்லை, எதுவும் தேவையில்லை. குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டிய தேவையில்லை, குறிப்பிட்ட இடத்தில் செய்ய வேண்டிய தேவையில்லை, குறிப்பிட்ட சூழ்நிலையில் செய்ய வேண்டிய தேவையில்லை. ஜாதி, மதம், இனம், மொழி, கல்வி, செல்வம் போன்ற எந்த பேதமும் இன்றி, யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நாம ஸங்கீர்த்தனத்தில் ஈடுபடலாம்.
நாம் செய்ய வேண்டியது மிகவும் எளிமையானதாகும்: நாக்கை உபயோகித்து, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் திருநாமத்தின் ஒலியை எழுப்ப வேண்டும். நாக்கை அசைப்பதற்குக்கூட சோம்பேறியாக இருக்கலாமோ!
தமிழக அரசிடம் ஒரு பணிவான வேண்டுகோள்
ஹரி நாம ஸங்கீர்த்தனம் நிச்சயம் மழையை வரவழைக்கும், இதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இதனை நாங்கள் உறுதியாகக் கூற முடியும். தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஆர்வமுடையோர் சற்றும் தயங்காமல் இதனை முனைப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழகத்திலுள்ள எல்லா நகரங்களிலும் கிராமங்களிலும் (குறைந்தபட்சம் மாவட்ட தலைநகரங்களில் மட்டுமாவது) நாம ஸங்கீர்த்தனத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு இத்துடன் தமிழக அரசை வேண்டிக் கொள்கிறோம். இதற்கு கர்நாடக அரசைப் போன்று 17.5 கோடி ரூபாய் செலவழிக்கத் தேவையில்லை. மக்கள் அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்று ஓர் அறிக்கை விட்டால் போதும். பொதுமக்களில் ஒரு சதவிகித மக்கள் கூடினால்கூட போதும். அந்தந்த ஊர்களில் அவர்கள் அனைவரும் இணைந்து எளிமையான ராகத்தில், ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை மிருதங்கம் மற்றும் கரதாளங்களைக் கொண்டு பாட வேண்டும். இசைக் கருவிகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அனைவரும் இணைந்து கைகளைத் தட்டி பாடினால் போதும். இச்செயல் நிச்சயம் பகவான் விஷ்ணுவைத் திருப்தி செய்யும். மேலும், இது தொடர்ந்து நடைபெற்றால், மழைப் பொழிவு மட்டுமின்றி, நாட்டின் எல்லா பிரச்சனைகளும் படிப்படியாக தீரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
இந்தியா மதச்சார்பற்ற நாடு, இங்கு இஃது எவ்வாறு சாத்தியம் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் மழை என்பது எல்லாருக்கும் அவசியமான ஒன்று; பசியில் இருப்பவனுக்கு உணவு கொடுக்கும்போது, அதில் மத பேதம் பார்த்தல் முறையல்ல. அதுபோல, வறட்சியில் இருக்கும் மக்களுக்கான அவசியத் தேவை, மழை. இதைப் பெறுவதில் மத பேதம் பார்க்காமல் நாம ஸங்கீர்த்தனத்திற்கு ஏற்பாடு செய்தல் சாலச் சிறந்ததாகும்.
நாம ஸங்கீர்த்தனத்தின் உண்மையான குறிக்கோள் கிருஷ்ணரின் மீதான தூய அன்பை வளர்ப்பதே, மழையைப் பெறுவதல்ல. இருப்பினும், இதுவே கலி யுகத்திற்கான யாகம் என்பதால், குறைந்தபட்சம் மழையைப் பெறுவதற்காகவாவது மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவுடன் தெரிவிக்கின்றோம்.
1973இல் இரண்டு வருடங்களாக மழையின்றி வறட்சியில் தவித்துவந்த ஹைதராபாத் நகரில் ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்கள் நிகழ்த்திய ஹரி நாம ஸங்கீர்த்தனத்தில் நன்மழைப் பொழிந்தது என்பது வரலாற்று உண்மை.
நாம ஸங்கீர்த்தனத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்! மழை நிச்சயம் வரும்! இஃது எமது உறுதியான தகவல்!