கிருஷ்ண பக்தி சர்வாதிகாரமா, பூரண அதிகாரத்தை ஏற்பது நல்லதா, கிருஷ்ண பக்தன் அதிபரானால் மற்ற மதங்களுக்கு அனுமதி உண்டா முதலியவற்றை ஸ்ரீல பிரபுபாதரும் அவரது சீடர்களும் இங்கே விவாதிக்கின்றனர்.
சீடர் 1: ஸ்ரீல பிரபுபாதரே, மக்கள் நம்மீது வைக்கக்கூடிய விமர்சனங்களைப் பற்றி நேற்று கேட்டீர்கள். நமது இயக்கம் சர்வாதிகார தன்மையுடன் செயல்படுகிறது என்பது அவர்களது குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும். உங்களிடம் இருக்கும் பூரண அதிகாரம், நமது கோயில் தலைவர்களிடம் உள்ள பூரண அதிகாரம் முதலியவற்றை அவர்கள் நல்ல மனநிலை அல்ல என்று கருதுகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் ஏன் இங்கே உங்களுடைய அதிகாரத்தைக் கொண்டு வருகிறீர்? அதிகாரம் நல்லதல்ல என்று கூறும் அவர்கள் ஏன் தங்களது அதிகாரத்தை நம்மீது காட்ட முயல்கின்றனர்?
சீடர் 1: ஆனால் பூரண அதிகாரியாக எங்களை ஏற்க வேண்டும் என்று யாம் கூறவில்லையே? என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், உங்களது பேச்சு அபத்தமானது. பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவன், தனது வாடிக்கையாளரிடம், நீங்கள் இந்த பொருட்களையெல்லாம் வாங்க வேண்டியதில்லை”என்று கூறுவதைப் போலுள்ளது உங்களின் வாதம். உங்களை நான் அதிகாரியாக ஏற்க வேண்டிய தேவையில்லை எனில், உங்களது அறிவுரைகளை நான் ஏன் பின்பற்ற வேண்டும்?
சீடர் 1: ஆன்மீக குருவிடம் சரணடைவதை அவர்கள் அபாயமாக நினைக்கின்றனர். அதிகமான மக்கள் அவ்வாறு சரணடைந்தால், அவர்களிடம் சிந்திக்கும் திறன் இருக்காது என்பது அவர்களின் எண்ணம்.
ஸ்ரீல பிரபுபாதர்: சிந்திக்கும் திறன் அவசியமே. ஆனால் நீங்கள் என்னை உங்களிடம் சரணடையும்படி கூறுகிறீர்களே? சரணடையும் இடத்தை மட்டும் மாற்றக் கூறுகிறீர்கள்.
சீடர் 2: விருப்பம் போல் வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். பல அதிகாரிகளிடமிருந்து சிறந்தவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர். உங்களது தத்துவத்திலிருந்து சிலவற்றை ஏற்பேன், மற்ற தத்துவங்களிலிருந்தும் சிலவற்றை ஏற்பேன். எனக்கு எது சிறந்தது என்று தோன்றுகிறதோ, அதை நான் எடுத்துக் கொள்வேன்.”
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் ஒரே இடத்தில் எனக்கு மிகச்சிறந்த பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்போது, நான் ஏன் சிரமப்பட வேண்டும்? நீங்கள் ஏன் என்னை அங்கும்இங்கும் அலைய வைக்கின்றீர்?
சீடர் 3: நீங்கள் கூறுபவை அனைத்தும் எனக்குப் பிடித்திருந்தால், நான் ஏன் அவற்றை ஏற்கக் கூடாது? ஓர் அதிகாரியிடம் சரணடைவதற்கு அவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? அங்குமிங்கும் அலைதல் என்னும் அவர்களது கொள்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால் நம்மீது பொறாமை கொள்கின்றனர்.
சீடர் 1: ஒருவர் என்னிடம், இத்தகைய பூரண அதிகாரம் ஹிட்லரின் ஜெர்மனியை நினைவூட்டுவதாகவும், இவ்வாறு குருட்டுத்தனமாகப் பின்பற்றுதல் நல்லதல்ல என்றும் கூறினார்.
ஸ்ரீல பிரபுபாதர்: அதிகாரி தவறானவராக இருக்கும்பொழுதே அதிகமான அதிகாரம் தவறானதாக அமையும். ஆனால், அதிகாரி நல்லவராக இருக்கும்போது, அது நன்மை பயப்பதே. ஏனெனில், ஓரிடத்தில் உங்களை ஒப்படைப்பதன் மூலம் நீங்கள் அனைத்தையும் அடைகிறீர்கள். இது பல்பொருள் அங்காடிக்குச் சென்று அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்குவதைப் போன்றதாகும்.
சீடர் 1: நமது இயக்கம் என்றாவது ஒருநாள் சக்தியுடையதாக மாறினால், நாம் மற்ற மதங்களைப் பின்பற்றுவதற்கு மக்களை அனுமதிக்க மாட்டோம் என்றும், நம்மிடம் சகிப்புத்தன்மை இருக்காது என்றும் பேராசிரியர் ஒருவர் என்னிடம் கூறினார். மேலும், நீங்கள் இப்போது சிறியவர்களாக உள்ளபோதிலும், உங்களைக் கண்டு நான் அஞ்சுகிறேன்,” என்றார்.
ஸ்ரீல பிரபுபாதர்: அவர் நம்மை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.
சீடர் 1: கிருஷ்ண பக்தர் அரசராக அல்லது அதிபராக இருக்கும்பொழுது, பக்தனாக இருக்க விரும்பாத ஒருவனின் நிலை என்னவாகும்?
ஸ்ரீல பிரபுபாதர்: ஒருவனை தண்டிக்கும் உரிமை அரசருக்கு உண்டு. ஒரு குழந்தை தனது தந்தையிடம், நான் படிக்க விரும்பவில்லை, விளையாடுகிறேன்,” என்று கூறினால், தந்தை அதை அனுமதிக்க மாட்டார். அதுபோலவே, குடிமக்களை வழிநடத்தும் பொறுப்பு மன்னருக்கு உள்ளது.
சீடர் 3: கிருஷ்ண பக்தரின் ஆட்சியில், ஒருவன் கிறிஸ்துவனாக இருக்க விரும்பினால், அவன் அதற்காக தண்டிக்கப்படுவானா?
ஸ்ரீல பிரபுபாதர்: தவறிழைக்கும்போது மட்டுமே தந்தையானவர் மகனை தண்டிக்கிறார், எல்லா நேரத்திலும் அல்ல. கிறிஸ்துவ மதத்தை ஒருவன் பின்பற்ற விரும்பினால், அவன் கடவுளின் மீது நம்பிக்கை கொண்டுள்ளான், அவன் பைபிளின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும். கிருஷ்ண பக்தனின் ஆட்சியில் நேர்மையான கிறிஸ்துவன் தண்டிக்கப்பட மாட்டான்.
சீடர் 1: கிறிஸ்துவர்கள் பைபிளைப் பின்பற்றுவதற்கு அனுமதிப்பீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: நிச்சயமாக. பைபிளைப் பின்பற்றுவதும் மதமே. இன்றைய கிறிஸ்துவர்கள் பைபிளைப் பின்பற்றுவதில்லை. கொல்லாதிருப்பாயாக” என்று பைபிள் கூறுகின்றது. ஆனால் இவர்களோ ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொன்று மாமிசத்தை உண்கின்றனர். இஃது எத்தகைய கிறிஸ்துவம்?
சீடர் 1: அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அதுவே அரசனின் கடமை. இந்த மதத்தைதான் பின்பற்ற வேண்டும் என்று மக்களை மன்னன் ஆணையிட இயலாது. ஆனால், ஏதேனும் ஒரு மதத்தைப் பின்பற்றும்படி ஆணையிடும் அதிகாரம் அவனுக்கு உள்ளது. ஏனெனில், மதமற்றவன் மிருகமாவான். ஆகவே, மதத்தைப் பின்பற்றாதவன் தண்டிக்கப்பட வேண்டும். கடவுளால் வழங்கப்பட்ட அறிவுரைகளே மதம் எனப்படுகின்றன. கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவரிடம் அன்பு செலுத்துவதற்கே மதம் என்று பெயர். ஆகவே, எந்த மதத்தைப் பின்பற்றி ஒருவன் கடவுளை அறிகிறான் என்பதைவிட, கடவுளிடம் அன்பு செலுத்தி அவரது கட்டளைகளை அவன் ஏற்கின்றானா என்பதே முக்கியமானது. ஆனால் உங்களுக்கு கடவுளைப் பற்றி தெரியவில்லை அல்லது கற்பனையான கடவுளைக் கொண்டுள்ளீர்கள் எனில், கடவுள் யார் என்பதை நீங்கள் அறிய வேண்டியது அவசியம். அவ்வாறு அறிவதற்கு மறுக்கும்போது, நீங்கள் தண்டிக்கத்தக்கவர்.
சீடர் 3: எனக்கு கடவுளைத் தெரியும் என்று ஒருவன் கூறினால், அவன் அதன்படி நடக்கிறானா என்பதை எவ்வாறு அறிவது?
ஸ்ரீல பிரபுபாதர்: கடவுளைப் பற்றி எடுத்துரைக்கும் திறன் அவனிடம் இருக்க வேண்டும். அதுவே அதற்கான சோதனை. கடவுள் என்றால் என்ன என்று நீங்கள் அவனை விளக்கச் சொல்ல வேண்டும்.
சீடர் 3: கடவுள் என்பவர் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், நீங்கள் கடவுளைப் பற்றி அறியவில்லை என்றே அர்த்தம். இந்த சக்திக்கு பின்னால் இருப்பவர் யார்? சக்தி என்று ஒன்று இருக்கும்போது, அதை இயக்கக்கூடிய சக்திமானும் (எஜமானரும்) நிச்சயமாக இருக்க வேண்டும். அவ்வாறு அச்சக்தியை இயக்குபவர் யார்?
சீடர் 3: அதைக் காணும் நிலையில் நான் இல்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: பரவாயில்லை, அதைப் பற்றி என்னிடமிருந்து அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் மறுத்தால், தண்டனைக்கு உட்படுவீர். குடிமக்கள் கடவுள் உணர்வோடு இருப்பதை உறுதி செய்ய வேண்டியது மன்னரின் கடமையாகும்.
சீடர் 4: அவ்வாறெனில், கிருஷ்ண பக்தியுடன் செயல்படும் ஆட்சியாளர் ஒரு தந்தையைப் போன்று செயல்படுகிறார்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். பகவான் இராமசந்திரர் இந்த குணத்தை வெளிப்படுத்தினார். பிரஜைகளை அவர் தமது சொந்த குழந்தைகளைப் போல பாவித்தார். அவர்களும் அவரை தந்தையாகவே பாவித்தனர். மன்னருக்கும் பிரஜைகளுக்கும் இடையிலான உறவானது தந்தைக்கும் குழந்தைக்குமான உறவைப் போன்று இருக்க வேண்டும்.
சீடர் 4: மன்னர் அளிக்கும் தண்டனை…
ஸ்ரீல பிரபுபாதர்: அஃது அன்பின் காரணமாக எழுந்தவையே தவிர பகைமையினால் அல்ல, திருத்துவதற்காகவே தண்டனை அளிக்கப்படுகிறது. குடிமகன் தவறாக நடந்தால், அவனைத் திருத்த வேண்டியது அவசியம். பகைவர்களை அழித்து பக்தர்களைக் காத்து தர்மத்தை நிலைநாட்டுவது பகவான் கிருஷ்ணரின் செயல். இது பகவான் கிருஷ்ணரின் நோக்கம். அந்த நோக்கத்தை நாம் நிறைவேற்ற வேண்டும். கிருஷ்ண பக்தர்கள் படிப்படியாக நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்று மனித சமுதாயம் முழுவதையும் சரிபடுத்த வேண்டும்.
(தமிழாக்கம்: வேங்கடேஷ்);