நிகழும் 2012ஆம் வருடத்தின் டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியப் போவதாக சிலர் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இவற்றை நம்புவதா நம்பாமல் விடுவதா என்பதில் மக்கள் குழம்பியுள்ளனர்.
வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி
மயன் நாள்காட்டி
வட அமெரிக்காவின் மெக்சிகோ நகரிலுள்ள புராதனமான மயன் நாள்காட்டியின்படி, உலகம் 2012இல் அழிந்து விடும் என்று கூறுகின்றனர். மயன் நாள்காட்டியின் பல கணிப்புகள் நடந்துள்ளதாகவும் சிலர் வாதிடுகின்றனர். மெக்சிகோவில் உள்ள பழமையான பிரமிட் ஒன்றை அடிப்படையாக வைத்து இந்த கணிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரமிடின் நான்கு புறமும் 91 படிக்கட்டுகள் உள்ளன, இவை (ஒரு நாள் நீங்கலாக) வருடத்தின் 364 நாள்களைக் குறிக்கின்றன. இந்த நாள்காட்டியின் கணிப்புகள் 2012இல் முடிந்துவிடுகிறது, அதற்கு பிறகு விவரங்கள் ஏதுமில்லை என்ற காரணத்தினால், மக்கள் 2012இல் உலகம் அழிந்துவிடும் என்று கருதுகிறார்கள்.
மக்களின் பிரதிபலிப்பு
ஆன்மீகமற்ற மக்கள் உலகம் அழியப் போகிறது என்பதை கேள்விப்படும்போது, எவ்வளவு புலனின்பங்களை அனுபவிக்க முடியுமோ அவ்வளவு அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். நிறைய குடிப்பதும், நிறைய உண்பதும், சுகிப்பதுமாக இருந்து அழிவை எதிர்கொள்கிறார்கள். அதைப் போலவே கொடிய நோய் ஏற்பட்டு எப்படியும் இறந்து விடுவோம் என்ற கட்டத்திலிருப்பவர்களும், சொத்தை பங்கிடுவதிலும் உண்பதிலும் கையில் தொலைக்காட்சி பெட்டியின் ரிமோட் கன்ட்ரோலை வைத்து திரைப்படங்களைப் பார்த்து சுகிப்பதிலும் இருக்கிறார்கள்.
அறிவுள்ள மனிதன் என்ன செய்வான்?
எல்லா கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடை யளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த பகவத் கீதையையும் ஸ்ரீமத் பாகவதத்தையும் கொண்டு அறிவுள்ள மனிதன் செயல்படுவான். இந்த உலகமும் அண்டமும் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய விவரங்கள் நமக்கு பகவத் கீதையிலிருந்தும் ஸ்ரீமத் பாகவதத்திலிருந்தும் கிடைக்கின்றன.
உலகம் தற்போது அழியாது
ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் மற்றும் பன்னிரண்டாம் காண்டங்களில் உலகத்தின் அழிவைப் பற்றிய விவரங்கள் உள்ளன. இவற்றை பகவத் கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் பதினெட்டாம் ஸ்லோகத்திற்கான தனது பொருளுரையில் ஸ்ரீல பிரபுபாதர் சுருக்கமாக கூறுகிறார்.
பௌதிக பிரபஞ்சத்தின் காலம் எல்லைக்கு உட்பட்டதாகும். இது கல்பங்களின் சுழற்சியாகத் தோற்றமளிக்கிறது. கல்ப என்பது பிரம்மாவின் ஒரு பகல். ஸத்ய, திரேதா, துவாபர, கலி எனும் நான்கு யுகங்கள் ஆயிரம் முறை சுழலும்போது, அது பிரம்மாவின் ஒரு பகலாகும். புண்ணியம், விவேகம், மற்றும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட ஸத்ய யுகத்தில் அறியாமையும் பாவமும் கிடையாது, அது 17,28,000 வருடங்கள் நீடிக்கக் கூடியது. திரேதா யுகத்தில் பாவங்கள் ஆரம்பமாயின, அது 12,96,000 வருடங்கள் நீடிக்கின்றது. துவாபர யுகத்தில் புண்ணியமும் தர்மமும் மேலும் சீர்குலைய பாவங்கள் மேலோங்குகின்றன. அந்த யுகம் 8,64,000 வருடங்கள் நீடித்தது. இறுதியாக கலி யுகத்தில் (கடந்த 5,000 வருடங்களாக நாம் அனுபவித்து வரும் யுகத்தில்) போர், அறியாமை, அதர்மம், மற்றும் பாவங்கள் அதிகரித்து, உண்மையான புண்ணியம் என்பது ஏறக்குறைய அழிந்துவிடுகிறது. இந்த யுகம் 4,32,000 வருடங்கள் நீடிக்கின்றது. பாவங்கள் அதிகரித்து எல்லை மீறிப்போகும்போது, கலி யுகத்தின் இறுதியில் கல்கியாக அவதரிக்கும் முழுமுதற் கடவுள், அசுரர்களை அழித்து, பக்தரைக் காத்து, மீண்டும் ஸத்ய யுகத்தைத் தொடக்குகிறார். பின்னர், மீண்டும் அதே சுழற்சி தொடர்ந்து நடைபெறும். இந்த நான்கு யுகங்கள் ஆயிரம் முறை சுழலும்போது, அது பிரம்மாவின் ஒரு பகலாகும். அவரது இரவும் அதுபோன்றதே. இவ்வாறு நூறு வருடங்கள் வாழும் பிரம்மா, அதன்பின் இறக்கின்றார். இந்த நூறு வருடங்கள்” பூலோகக் கணக்கின்படி 3,11,04,000 கோடி வருடங்களாகும். இவ்வாறு பிரம்மாவின் வாழ்நாள் வினோதமாக, முடிவில்லாதது போலத் தோன்றினாலும், நித்திய வாழ்வுடன் ஒப்பிடும்போது, இது மின்னலைப் போன்ற குறுகிய காலமே. அட்லாண்டிக் கடலின் நீர்க்குமிழிகளைப் போல, காரணக் கடலில் எண்ணற்ற பிரம்மாக்கள் தோன்றி மறைகின்றனர். பிரம்மாவும் அவரது படைப்பும், பௌதிக பிரபஞ்சத்தின் பகுதிகள் என்பதால், அவை எப்போதும் மாற்றத்திற்கு உட்பட்டவை.”
இந்த ஆதாரத்தின்படி, இவ்வுலகம் வருகின்ற டிசம்பரில் அழியாது. கலி யுகம் முடிவு பெற இன்னும் 4,27,000 ஆண்டுகள் உள்ளன. அப்போதுதான் இவ்வுலகில் பிரளயம், அல்லது அழிவு ஏற்படும்.
பிரளயங்கள்
சில நேரங்களில் பிரபஞ்சத்தின் சில பகுதிகள் அல்லது கோளங்கள் அழிக்கப்படலாம். பூமியின் ஏதேனும் ஒரு பகுதியில் சுனாமி, பூகம்பம், புயல், எரிமலை போன்றவற்றால் பிரளயம் ஏற்படலாம். ஆனால் நாம் வாழும் பூமி முழுவதும் கலி யுகத்தின் இறுதியில் மட்டுமே அழிக்கப்படும்.
அது மட்டுமின்றி, மஹா பிரளயம் ஏற்படும்போது, நமது பூமிக்கு மேலுள்ள ஸ்வர்க லோகங்கள் உட்பட அனைத்தும் முழுமையாக அழிக்கப்படும். முழுமுதற் கடவுளான மஹாவிஷ்ணு மூச்சு விடும்போது உலகம் படைக்கப்படுகிறது; அவர் தனது மூச்சை உள்ளிழுக்கும்போது உலகம் அழிக்கப்படுகிறது.
மற்றொரு பிரளயம், ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏற்படுகிறது. அந்த பிரளயம், அவரவரின் மரணம். இந்த பிரளயம் நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் நிகழும், அஃது எப்போது நிகழும் என்பதற்கு நம்மில் எவரும் உத்திரவாதம் கொடுக்க முடியாது. அடுத்த நிமிடங்கள் நாம் உயிரோடு இருப்போமா என்பதற்குக்கூட எங்கே உத்திரவாதம்?
பௌதிக உலகின் இயற்கை
பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் (8.15), து:கலாயம் அஷாஷ்வதம், இவ்வுலகம் தற்காலிகமானது, துன்பம் நிறைந்தது என்கிறார். அதற்கு அடுத்த ஸ்லோகத்தில், ஜடவுலகின் மிகவுயர்ந்த கிரகத்திலிருந்து மிகதாழ்ந்த கிரகம் வரை, எல்லா இடங்களும் பிறப்பும் இறப்பும் தொடரும் துன்பக் கோட்டங்களே என்கிறார்.
மேலும், ஸ்ரீமத் பாகவதத்தில் (10.14.58), பதம் பதம் யத் விபதாம் ந தேஷாம், அதாவது இவ்வுலகின் ஒவ்வொரு அடியிலும் துன்பங்களே நிறைந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது. நடைமுறையில் பார்த்தால்கூட ஒவ்வொரு நாளும் மனிதர்கள் சாலை விபத்துகள், நோய்கள், முதுமை, பூகம்பம், போர் என பற்பல காரணங்களால் மரணமடைவதைக் காண்கிறோம். இருந்தும் இதிலிருந்து விடுபடும் மார்கத்தை தேடாமல் இருப்போர் மிருக வாழ்க்கையை வாழ்வதாகவே பொருள்.
அழிவிலிருந்து (மரணத்திலிருந்து) விடுபடுவதற்கான வழியை உணராமல் வாழ்பவர்கள் மனித வாழ்வை முறையாக உபயோகிக்கவில்லை என்று பொருள். அவர்கள் நீண்ட நாள் வாழ்வதாக எடுத்துக் கொண்டால், அதனால் என்ன பலன்? மரங்கள்கூட நீண்ட நாள்கள் வாழ்கின்றனவே? கொல்லனின் துருத்தியும் சுவாசிக்கின்றதே? நம்மைச் சுற்றியுள்ள மிருகங்கள்கூட உண்டு, இனப்பெருக்கம் செய்கின்றனவே? மேலும், பகவானின் திருநாமத்தை கேட்காத காதுகள், பாம்பு புற்றைப் போன்றவை; நாக்குகள் தவளைகளின் நாக்கினைப் போன்றவை.
அரிதான மானிடப் பிறவி
மானுஷ்யம் அர்த்ததம் அநித்யம் அபீய தீரஹ
தூர்நாம் யதே த ந பதேட் அனு மிருத்யூயாவன்
நிஹிஷ்ரேயஸாய விஷயஹ களெவ் ஸர்வதஹ ஷ்யாத்
“பற்பல பிறப்பு இறப்புகளுக்கு பிறகே இந்த அரிதான மனிதப் பிறவியை ஒருவர் அடைகின்றார். இது நிரந்தரமற்றது என்றாலும், மிகவுயர்ந்த பக்குவநிலையை அடைவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. எனவே, அறிவுள்ள மனிதர்கள் இந்த மனித உடல் கீழே விழுந்து மடிவதற்குள், வாழ்வின் குறிக்கோளை அடைய உடனடியாக முயற்சி செய்ய வேண்டும். புலனின்பங்கள் மிகத்தாழ்ந்த உயிரினங்களுக்கு கூட கிடைக்கின்றது, ஆனால் கிருஷ்ண உணர்வோ மனிதப் பிறவியில் மட்டுமே கிடைக்கக் கூடியது.” (ஸ்ரீமத் பாகவதம் 11.9.29)
விரைந்து செயல்படுவோம்
அர்ஜுனனின் பேரனான பரீக்ஷித் மஹாராஜர், தான் இன்னும் ஒரே வாரத்தில் பாம்பு தீண்டி இறக்கப் போகிறோம் என்பதை அறிந்தவுடன், அந்த குறுகிய காலத்தை பூரணமாக பயன்படுத்துவதற்காக சுகதேவ கோஸ்வாமியிடம் சரணடைந்து இரவு பகலாக ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டு முக்தியடைந்தார். இறப்பதற்கு ஒரே ஒரு நிமிடமே உள்ளது என்பதை அறிந்த கட்வாங்க மன்னர் மிக விரைந்து செயல்பட்டு நாராயணரை சரணடைந்து, பிறவிப் பெரும்பயனை அடைந்தார்.
எனவே, உலகப் பிரளயத்தைப் பற்றி கவலைப்படாமல், நமக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறு காலத்தைப் பயன்படுத்தி விரைந்து செயல்படுவோமாக! கலியுக தர்மமான ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை (ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே) உச்சரித்து நமது வாழ்வை உயர்வுபெறச் செய்வோம்.