வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
சர்க்கரை நோயைத் தீர்க்கும் யோகம், இரத்த அழுத்தத்தை சீரமைக்கும் யோகம், மூட்டு வலியை நீக்கும் யோகம், முதுகு வலியிலிருந்து விடுபடுவதற்கான யோகம், வயிற்று உபாதைகளை தீர்க்கும் யோகம் என பல்வேறு யோகப் பயிற்சிகள்; எல்லாவற்றையும் விட உடல் பருமனை குறைக்கும் யோகம் தற்போதைய நவீன உலகில் மிகவும் பிரபலமாக (குறிப்பாக, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில்) உள்ளது. இவையெல்லாம் யோகப் பயிற்சி அல்ல, வெறும் உடற்பயிற்சியே என்பதை இங்கே ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.
உடற்பயிற்சியின் அவசியம்
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பது பழமொழி. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடலால் செய்யப்படும் அனைத்து காரியங்களையும் ஒழுங்காக செய்ய இயலும், இல்லாவிடில் இயலாது. இதை அனைவரும் அறிவர். உடலை ஆரோக்கியமாக வைப்பதற்காக தூய்மையான குடிநீர், காற்று, உணவு போன்றவை மட்டுமின்றி, சில உடற்பயிற்சிகளும் அவசியமாகின்றன. அதுவும் குறிப்பாக, தற்போதைய உலகில் மனிதர்களின் பெரும்பாலான காரியங் களை இயந்திரங்கள் செய்துவிடுவதால், மனித உடலை பராமரிப்பதற்கென்று தனிப்பட்ட முறையில் சில உடற்பயிற்சிகள் தேவைப்படுகின்றன. ஃபாஸ்ட் புட் கடைகளில் கண்ணால் கண்டதை எல்லாம் சாப்பிடுபவர்கள் உடல் பருமன் அதிகரித்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும்பட்சத்தில், மருந்துகளைக் காட்டிலும் உடற்பயிற்சியே அவர்களுக்கு முக்கிய தேவையாக அமைகிறது.
நவீன விஞ்ஞானிகளின் பல்வேறு கண்டுபிடிப்புகள் மக்களுக்கு ஒருபுறம் உதவுகின்றன என்றபோதிலும், மறுபுறம் பல்வேறு பிரச்சனைகளைக் கொடுக்கின்றன. படிக்கட்டில் ஏறிச் செல்வதற்குப் பதிலாக லிஃப்டில் செல்கிறோம், நடக்கும் தொலைவில் இருக்கும் இடத்திற்குகூட இரு சக்கர வாகனத்தைத் தேடுகிறோம், கைகளையும் கால்களையும் உடலையும் அசைத்து செய்ய வேண்டிய பல்வேறு வேலைகளை இயந்திரங்களைக் கொண்டு விரைவாக எளிதில் முடித்துவிடுகிறோம், அம்மிக் கல்லும் ஆட்டுக் கல்லும் மறைந்து விட்டன–உண்மையில், பட்டியல் போட்டால் நீண்டு கொண்டே செல்லும். இத்தகைய நவீன வாழ்வில் உடல் ஆரோக்கியம் குன்றுதல் என்பது நிச்சயம் எதிர்பார்க்க வேண்டிய ஒன்றே. சிலர் அதனை எதிர்பார்த்து, வருமுன் காப்போம் என்ற பாணியில், சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்; வேறு சிலரோ வியாதிகள் வந்த பின்னர், அந்த வியாதிகளுக்கு ஏற்றாற் போல உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். எப்படிப் பார்த்தாலும், உடற்பயிற்சி என்பது இன்றைய உலகில் ஏறக்குறைய தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது.
யோகப் பயிற்சியின் அவசியம்
உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சியை பயில விரும்புவோர் பலரும் தற்போது யோகா மையங்களை அணுகுகின்றனர். ஆனால் யோகம் என்றால் என்ன? அதன் அவசியம் என்ன?
யோகம் என்ற சொல்லுக்கு இணைத்தல் அல்லது இணைப்பதற்கான வழிமுறை என்று பொருள். கடவுளையும் ஜீவனையும் இணைப்பதற்கான வழிமுறை யோகம் என்று அழைக்கப்படுகிறது. மனித வாழ்க்கை நம்மை உணர்வதற்கும் கடவுளை உணர்வதற்கும் உரியது, அக்குறிக்கோளை அடைவதற்காக மனித உடலை நாம் உபயோகிக்காவிடில், மனிதப் பிறவி பயனற்றதாகும். கார்களைக் கொண்டு பயணம் செய்வதால் மனிதன் தன்னை முன்னேறியவனாக நினைக்கக் கூடாது. தெருவில் திரியும் நாய் நான்கு கால்களில் பயணம் செய்கிறது, நாமோ நான்கு சக்கரம் பூட்டிய காரில் பயணம் செய்கிறோம். இதில் என்ன முன்னேற்றம்? உண்மையான மனித வாழ்க்கையில் நாம் கடவுளுடனான நமது தொடர்பை புதுப்பிக்க வேண்டும். கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவானது நித்தியமானது, தற்போது நாம் மாயையினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த உறவை மறந்து வாழ்ந்து வருகிறோம். அதனைப் புதுப்பிப்பதற்கான பயிற்சியே யோகப் பயிற்சி எனப்படுகிறது.
யோகப் பயிற்சியில் பல வகைகள் உண்டு, அவற்றில் நான்கு வகையான பயிற்சிகள் மிகவும் பொதுவானவை: (1) பல்வேறு சடங்குகளின் மூலமாக கடவுளுடனான உறவை புதுப்பிக்க உதவும் கர்ம யோகம், (2) ஆழ்ந்த சாஸ்திர அறிவினாலும் தவத்தினாலும் கடவுளை அறிய உதவும் ஞான யோகம், (3) எட்டு நிலைகளைக் கொண்ட பயிற்சியின் மூலமாக கடவுளை அறிய உதவும் அஷ்டாங்க யோகம், மற்றும் (4) தூய அன்பின் மூலமாக கடவுளை அறியச் செய்யும் பக்தி யோகம்.
மனிதராகப் பிறந்தவர்கள் மேற்கூறிய யோகப் பயிற்சியில் எது உகந்ததோ அதில் ஈடுபட வேண்டும். இல்லாவிடில், இந்த உடலினால் என்ன பயன்? உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கலாம், ஆனால் அஃது ஒருநாள் அல்லது ஒருநாள் மடிந்துவிடும், அப்போது நமது யோகப் பயிற்சியே அடுத்த பிறவியை தீர்மானிப்பதாக அமையும். உடல் சுவரைப் போன்றது, யோகப் பயிற்சிகள் அந்த உடலினால் வரையப்பட வேண்டிய சித்திரங்களைப் போன்றவை. யோகப் பயிற்சியில் ஈடுபடாத மனித உடல், எவ்வளவு பலமிக்கதாக இருந்தாலும், அது மனித வாழ்வின் குறிக்கோளை அடைவதற்கு உதவாது. சிங்கம், புலி, யானை போன்ற மிருகங்கள் எந்த பயிற்சியும் இன்றி பலமாக உள்ளனவே. மனிதன் என்றாவது தனது உடற்பயிற்சியின் மூலமாக அந்த மிருகங்களைக் காட்டிலும் பலசாலியாகி விட முடியுமா? மனித வாழ்வின் குறிக்கோள் பலசாலியாவது அல்ல, கடவுளை உணர்வதே. எனவே, கடவுளை உணர்வதற்கான யோகப் பயிற்சியில் ஈடுபடுதல் மிகவும் அவசியம்.
பொதுவாக அறியப்படும் யோகப் பயிற்சி
யோகப் பயிற்சியின் நான்கு வகைகளையும் அஃது எதற்காகச் செய்யப்பட வேண்டும் என்பதையும் படிக்கும் பலரது மனதில், இயற்கையாக எழும் கேள்வி: “யோகா கற்றுத் தருகிறோம் என்று கூறும் பல இயக்கங்களில் இவற்றை யாரும் கற்றுக் கொடுப்பது இல்லையே?” ஆம். யாரும் யோகத்தைக் கற்றுக் கொடுப்பதில்லை, வெறும் உடற்பயிற்சியையே கற்றுத் தருகின்றனர். நான்கு யோகங்கள் உள்ளபோதிலும், பொதுவாக யோகம் என்பது அஷ்டாங்க யோகத்தைக் குறிப்பதாக மக்கள் எடுத்துக் கொள்கின்றனர்; அதிலும், எட்டு அங்கங்களை பயிற்சி செய்வதற்குப் பதிலாக, பிராணாயாமம், ஆசனம் ஆகிய இரண்டு அங்கங்களை மட்டுமே பயிற்சி செய்கின்றனர். யோகம் என்பது கடவுளுடன் இணைப்பதற்கான வழிமுறை என்பதை அனைவரும் மறந்துவிட்டனர், அன்றாட வாழ்வில் மக்கள் படும் துன்பங்களிலிருந்து ஓரளவு விடுபடுவதற்கு உதவும் உடற்பயிற்சியாகவே நினைக்கின்றனர்.
சில மூச்சுப் பயிற்சிகள் (பிராணாயாமம்), பல்வேறு வகையான ஆசனங்கள்–இவை இரண்டுமே யோகா வகுப்பில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன, அதிகபட்சம் சில தியானப் பயிற்சிகள். இவற்றால் விளையும் பலன்: உடல் ஆரோக்கிய மேம்பாடு மட்டுமே. ஆன்மீக நன்மைகளில் யாருக்கும் ஆர்வம் இல்லை, அதைப் பற்றி யாரும் பேசுவதும் இல்லை.
அஷ்டாங்க யோகத்தின் இதர விஷயங்கள்
பிராணாயமமும் ஆசனங்களும் அஷ்டாங்க யோகத்தின் இரண்டு அங்கங்கள் மட்டுமே, அதில் மொத்தம் எட்டு அங்கங்கள் உள்ளன. அவையாவன: (1) யம, செய்யக்கூடாத செயல்களைத் தவிர்த்தல், (2) நியம, செய்ய வேண்டிய செயல்களைச் செய்தல், (3) ஆசன, பல்வேறு ஆசனங்களை பயிற்சி செய்தல், (4) பிராணாயாம, மூச்சுப் பயிற்சி, (5) ப்ரத்யாஹார, புலனின்பப் பொருள்களிலிருந்து விலகுதல், (6) தாரணா, மனதை ஒருமுகப்படுத்துதல், (7) த்யான, தியானம் செய்தல், மற்றும் இறுதியாக (8) ஸமாதி, ஸமாதி நிலையை அடைதல்.
அஷ்டாங்க யோகத்தின் முக்கிய குறிக்கோள் தியானத்தின்
மூலமாக பரமாத்மாவை உணர்வதே, இதன் எட்டு நிலைகளும் படிப்படியாக பயிற்சி செய்யப்பட வேண்டியவை. அதை விட்டுவிட்டு வெறும் பிராணாயாமத்தையும் ஆசனத்தையும் மட்டும் பயிற்சி செய்தால், அது பரமாத்மாவை உணர உதவாது, உடல் ஆரோக்கியத்திற்கு வேண்டுமானால் உதவலாம். வேறு விதமாகக் கூறினால், யோகப் பயிற்சிக்கு உதவாது, உடற்பயிற்சிக்கு வேண்டுமானால் உதவலாம்.
உண்மையில், ஆசனத்தையும் பிராணாயாமத்தையும் பயிற்சி செய்வதற்கு முன்பாக, பன்னிரண்டு வகையான யம, மற்றும் பன்னிரண்டு வகையான நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். (ஸ்ரீமத் பாகவதம் 11.19.34-35) உதாரணமாக, மாமிசம் உண்ணும் பழக்கத்தை உடையவர்கள் ஆசனத்தையும் பிராணாயாமத்தையும் பயிற்சி செய்யும் தகுதியை முற்றிலுமாக இழந்து விடுகின்றனர். தினமும் மூன்று வேளை வயிறு முட்ட உண்பவர்கள், காலை 7 மணி வரை தூங்குபவர்கள், நினைத்தபோதெல்லாம் உடலுறவில் ஈடுபடுபவர்கள் என இன்றைய சராசரி மனிதர்களில் பலரும் அஷ்டாங்க யோகத்தைப் பயிற்சி செய்வதற்குத் தகுதியற்றவர்கள். (பகவத் கீதை 6.16-17) இவ்வாறு இருக்கும் பட்சத்தில், வெறும் உடல் ஆரோக்கியத்திற்காக சில ஆசனங்களையும் மூச்சுப் பயிற்சியையும் மேற்கொள்பவர்கள், அதனை யோகப் பயிற்சியாக நினைப்பது தகுமோ!
இவற்றை நம்மால் பயில இயலுமா?
மாமிசம், சூது, போதைப் பொருட்கள், தகாத பாலுறவு போன்றவற்றை தவிர்த்தல் யோகப் பயிற்சியின் அடிப்படை. இருப்பினும், அஷ்டாங்க யோக வழிமுறையானது இன்றைய உலகத்திற்கு பொருத்தமற்றதாகும். அஷ்டாங்க யோகத்தைப் பயிற்சி செய்ய விரும்புபவர்கள் முதலில் தனிமையான புனித ஸ்தலத்திற்குச் சென்று அங்கு அதனைப் பயில வேண்டும் என்று பகவத் கீதை (6.11) கூறுகின்றது. ஹரித்வார், ரிஷிகேஷ், விருந்தாவனம், பிரயாகை போன்ற புனித ஸ்தலங்களுக்குச் சென்று அங்கே யோகத்தைப் பயிலுதல் என்பது இன்றைய உலகில் அனைவருக்கும் சாத்தியமா? சற்று யோசித்துப் பாருங்கள். புனித ஸ்தலங்கள்கூட வியாபார ஸ்தலங்களாக மாறி வருகின்றன, தனிமை என்பது அங்கும் கடினமாகி வருகிறது.
அது மட்டுமின்றி, கட்டுப்படுத்தப்பட்ட மனதுடன், குளிர், மழை, வெப்பம், காட்டு விலங்குகள் என எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, முழு பிரம்மசரியத்தைக் கடைப்பிடித்து தியானம் செய்ய வேண்டும். (பகவத் கீதை 6.14) மனம், வார்த்தை, செயல் ஆகிய மூன்றிலும் எல்லா சூழ்நிலையிலும் எல்லா இடங்களிலும் ஒருவன் பிரம்மசரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அஷ்டாங்க யோகப் பயிற்சியின் மூலமாக பக்குவநிலையை அடைவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும். தற்போதைய கலி யுகத்தில் அத்தகைய பயிற்சிகளுக்குத் தேவையான ஆயுளும் நம்மிடம் இல்லை, உடல் பலமும் இல்லை, மன பலமும் இல்லை, சூழ்நிலையும் இல்லை, முறையாக கற்றுக் கொடுப்பவரும் இல்லை.
அர்ஜுனனால் நிராகரிக்கப்பட்ட யோகம்
அஷ்டாங்க யோகப் பயிற்சியின் மூலமாக பக்குவத்தை அடைதல் என்பது மனிதர்கள் அனைவரும் சுமார் ஒரு இலட்சம் வருடங்கள் வாழ்ந்த ஸத்ய யுகத்திற்கு உரியதாகும். (ஸ்ரீமத் பாகவதம் 12.3.52) பகவத் கீதையில் கிருஷ்ணர் பரிந்துரை செய்வது பக்தி யோகமே. கிருஷ்ணர் கீதையில் கர்ம யோகம், ஞான யோகம், அஷ்டாங்க யோகம், பக்தி யோகம் என நான்கு யோகங்களையும் விளக்குகிறார். இருப்பினும், பக்தி யோகமே தன்னால் பரிந்துரை செய்யப்படுகிறது என்றும், அதுவே எல்லா யோகப் பயிற்சிகளிலும் உயர்ந்தது என்றும் அவர் தெளிவாக கூறியுள்ளார். (பகவத் கீதை 18.55, 6.47) மற்ற யோகப் பயிற்சிகளை அவர் விளக்கியதன் குறிக்கோள், பக்தி யோகத்தின் உயர்நிலையை தெளிவுபடுத்தவே.
சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு துவாபர யுகம் நடைபெற்ற காலத்தில், மக்களின் ஆயுள், அறிவு, பலம், திறன் என அனைத்தும் தற்போதைய கலி யுகத்தைக் காட்டிலும் சிறப்பாக இருந்து வந்தது. அச்சமயத்தில் பகவத் கீதையை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்தார். கீதையில் அஷ்டாங்க யோகத்தைப் பற்றிய குறிப்புகளை கிருஷ்ணரிடமிருந்து கேட்ட அர்ஜுனன், அந்த வழிமுறையின் மூலமாக மனதைக் கட்டுப்படுத்துதல் வீசும் காற்றைக் கட்டுப்படுத்துவதைக் காட்டிலும் கடினமானது என்று வெளிப்படையாக தெரிவித்தான். (பகவத் கீதை 6.34) அர்ஜுனனின் திறனை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. மனதைக் கட்டுப்படுத்துவதிலும் ஒருமுகப்படுத்துவதிலும் அர்ஜுனன் எவ்வளவு திறமைசாலியாக இருந்தான் என்பதை மஹாபாரதம் அறிந்தவர்கள் அறிவர். துரோணர் நடத்திய தேர்வில் பறவையின் கண்ணை மட்டுமே கவனிக்கும் அளவிற்கு திறமைசாலியாக இருந்தவன் அர்ஜுனன்.
அந்த அர்ஜுனன் அஷ்டாங்க யோகத்தைப் பயில முடியாது என்று மறுத்துள்ளான். அதுமட்டுமின்றி, அர்ஜுனனின் மறுப்பை கிருஷ்ணரும் ஏற்றுக் கொண்டார். மனதைக் கட்டுப்படுத்துவது நிச்சயம் கடினம் என்பதை அவரும் ஆமோதித்துள்ளார். (பகவத் கீதை 6.35) அனைத்தும் சிறப்பாக விளங்கிய ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே அர்ஜுனனால் நிராகரிக்கப்பட்டு கிருஷ்ணராலும் கடினம் என்று ஆமோதிக்கப்பட்ட வழிமுறையை அனைத்தும் அபத்தமாக இருக்கக்கூடிய இன்றைய கலி யுகத்தில் நம்மைப் போன்றவர்களால் கடைப்பிடிக்க முடியுமா? சற்று யோசியுங்கள்.
கலி யுகத்திற்கு உகந்த யோகப் பயிற்சி
அஷ்டாங்க யோகத்தின் மூலமாக மனதைக் கட்டுப்படுத்துதல் நிச்சயம் கடினமே என்பதை ஒப்புக் கொண்டபோதிலும், முறையான பயிற்சியினாலும் பற்றின்மையினாலும் மனதைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார். அந்த முறையான பயிற்சி என்பது என்ன?
காலத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல மருத்துவர்கள் வெவ்வேறு மருந்துகளை சிபாரிசு செய்வதுபோல, சாஸ்திரங்களும் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றாற் போல வெவ்வேறு யோக வழிமுறைகளை சிபாரிசு செய்கின்றன. ஸத்ய யுகத்திற்கு அஷ்டாங்க யோகத்தையும், திரேதா யுகத்திற்கு யாகங்களையும், துவாபர யுகத்திற்கு கோயில் வழிபாட்டையும் சிபாரிசு செய்துள்ள சாஸ்திரங்கள், கலி யுகத்தில் நாம ஸங்கீர்த்தனமே தீர்வு என்றும் இதுவே எளிமையானது என்றும் இதுவே யுக தர்மம் என்றும் போற்றுகின்றன. இக்கருத்து ஸ்ரீமத் பாகவதம் (12.3.52), விஷ்ணு புராணம் (6.2.17), பத்ம புராணம் (உத்தர காண்டம் 72.25), பிருஹன் நாரதீய புராணம் (38.97), ஸ்கந்த புராணம், கலி ஸந்தாரண உபநிஷத் என எல்லா சாஸ்திரங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
காலத்திற்குத் தகுந்த யோகப் பயிற்சியை மேற்கொள்வதால் யோகத்தின் பக்குவநிலையை அடைய முடியும். காலத்திற்கு ஒத்துவராத அஷ்டாங்க யோகத்தை ஏற்று காலத்தை விரயம் செய்யக் கூடாது.
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தின் வடிவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரித்தல் சாலச் சிறந்ததாகும். இவ்வாறு உச்சரித்து, கிருஷ்ணரைப் பற்றி கேட்டு, அவருக்குத் தொண்டு செய்தல் பக்தி யோகம் எனப்படுகிறது. இந்த மஹா மந்திரத்தினை 108 மணிகளைக் கொண்ட மாலையில் தொடர்ந்து உச்சரித்தல், ஜபம் அல்லது ஜப தியானம் எனப்படுகிறது. இந்த ஜப தியானம் மௌனமாக செய்யப்படுவது அல்ல; குறைந்தபட்சம் நமது காதுகளுக்கு கேட்குமளவிற்கு நாவினால் நாமத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மஹா மந்திர ஜபமானது முழுமுதற் கடவுளான கிருஷ்ணருடன் நம்மை நேரடியாக இணைக்கும் வழியாகும். கிருஷ்ணரின் திருநாமத்திற்கும் அவருக்கும் வேறுபாடு இல்லை என்பதால், இது நம்மை உடனடியாக ஆன்மீகத் தளத்திற்கு கொண்டு செல்கின்றது. இந்த ஜப தியானம் அல்லது நாம உச்சாடனத்தில் ஈடுபடுவதற்கு எந்தவொரு முன்தகுதியும் அவசியமில்லை; யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சொல்லலாம்.
உடற்பயிற்சி யோகப் பயிற்சி அல்ல
நம்மை கடவுளுடன் இணைப்பதற்கான வழிமுறையே யோகம், இதை தெளிவாக உணர்தல் அவசியம். கலி யுகத்திற்கு உகந்த யோகப் பயிற்சி, பகவானின் திருநாமங்களை உச்சரிப்பதன் மூலமாக செய்யப்படும் பக்தி யோகமே. இதற்கு மாறாக, உடல் ஆரோக்கியத்திற்காக கையையும் காலையும் ஆங்காங்கே நீட்டி மடக்கிவிட்டு அதனை யோகம் என்று சொல்லுதல் சரியல்ல. உடற்பயிற்சி வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை; உடற்பயிற்சியுடன் இணைந்து பகவானின் திருநாமங்களை உச்சரித்தல் என்னும் யோகப் பயிற்சியில் ஈடுபடுங்கள் என்றும், இதுவே மிகவும் முக்கியமானது என்றும் கூறுகின்றோம். வெறும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு யோகப் பயிற்சியில் ஈடுபடுவதாக எண்ணிவிட வேண்டாம். உடலும் மனமும் சற்று ஆரோக்கியமான நிலைக்கு வந்தவுடன் அதனையே ஆன்மீக நிலை என்று பலர் எண்ணி விடுகின்றனர். ஆனால் ஆன்மீக நிலையானது உடல், மனம், மற்றும் புத்திக்கு அப்பாற்பட்ட நிலை என்பதை ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பவர்கள் எளிதில் உணர முடியும். ஆன்மீகம் என்றாலே ஆத்மா சம்பந்தப்பட்டது, இஃது உடலுக்கு அப்பாற்பட்டது. எனவே, உடற்பயிற்சி வேறு யோகப் பயிற்சி வேறு என்பதை உணர்ந்து, கலி யுகத்திற்கு உகந்த யோகப் பயிற்சியில் ஈடுபட உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம்.