யுதிஷ்டிரர் கூறிய பொய்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

மகாபாரதத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்று, துரோணரின் மரணம். அஸ்வத்தாமன் மரணமடைந்து விட்டதாக யுதிஷ்டிரர் கூறிய பொய் அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. யுதிஷ்டிரர் பொய் பேசியதற்கு கிருஷ்ணரே காரணம் என்று கூறி கிருஷ்ணரையும் யுதிஷ்டிரரையும் பற்றி அவதூறாக பேசுவோர் பலர். இதுகுறித்த சில தகவல்கள் இங்கே அலசப்பட்டுள்ளன.

துரோணரைக் கொல்வதற்கான திட்டம்

மகாபாரதப் போர்க்களத்தில் பாண்டவர்களின் மீது துரோணர் கருணை காட்டுவதாக துரியோதனன் அவரைச் சாடினான். அதனால் வெகுண்ட துரோணர் பாண்டவ சேனையை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கத் தொடங்கினார். தெய்வீக அஸ்திரங்களை சாதாரண வீர்ர்களின் மீது பிரயோகித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தினார். அவரைத் தடுப்பதற்கு எந்தவொரு வழியும் இல்லாமல் இருந்தது.

போரின் ஆரம்பத்தில் தனது குருவான துரோணரிடம் ஆசி பெறச் சென்ற யுதிஷ்டிரர், அவரை எவ்வாறு கொல்வது என்பதையும் வினவினார். குரு என்ற முறையில் தனது சீடனான யுதிஷ்டிரரிடம் தன்னைக் கொல்வதற்கான வழியை அவர் கூறினார். தனது மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டால், அந்த சோகத்தில் தனது பலம் குறைந்துவிடும் என்பதும், அச்சமயத்தில் தன்னைக் கொன்றுவிடலாம் என்பதுமே அவரது பதில். அதன் பின்னர், அஸ்வத்தாமனை அணுகிய யுதிஷ்டிரர், அவரிடமும் அதே கேள்வியைக் கேட்க, அவரோ தன்னை யாராலும் கொல்ல முடியாது என்று பதிலளித்திருந்தார். அதன்படி, அஸ்வத்தாமனைக் கொல்ல முடியாது என்னும்பட்சத்தில், துரோணரையும் கொல்ல முடியாது என்ற நிலை இருந்து வந்தது.

துரோணரால் ஏற்படும் பேரழிவைத் தடுப்பதற்கு கிருஷ்ணர் ஒரு திட்டத்தைத் தீட்டினார். அஸ்வத்தாமன் என்ற பெயரில் பாண்டவ படையில் இருந்த யானை ஒன்றினைக் கொன்று விட்டு, அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாக அறிவித்து துரோணரைக் கொல்லலாம் என்பதே அத்திட்டம். இதனை அறிந்த பீமன், உடனடியாக அந்த யானையைக் கொன்று, துரோணரின் அருகில் சென்று, “அஸ்வத்தாமன் இறந்துவிட்டான், அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்,” என்று கூக்குரல் எழுப்பினான். பீமனின் வார்த்தைகளை நம்ப முடியாது என்று நினைத்த துரோணர், யுதிஷ்டிரரைத் தவிர வேறு யாரையும் நம்பக் கூடாது என்ற எண்ணத்துடன், செய்தியை உறுதி செய்யும் பொருட்டு யுதிஷ்டிரரை அணுகினார்.

யுதிஷ்டிரர் கூறிய பொய்

யுதிஷ்டிரரும் அந்த பொய்யை சொல்ல வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்பினார். தனது வாழ்வில் பொய்யே கூறாத யுதிஷ்டிரர் மிகவும் தயங்கினார். அதுவும் தனது குருவின் மரணத்திற்கு காரணமாக அமையவிருக்கும் பொய்யை தனது வாயினால் கூறுவதா, நிச்சயம் முடியாது என்று நினைத்தார். ஆனால், கிருஷ்ணரோ பொய் சொல்லாவிடில் பாண்டவ சேனை முழுவதும் அழிந்துவிடும் என்றும், ஆபத்தான சூழ்நிலையில்  பொய் சொல்வதில் தவறு இல்லை என்றும் அறிவுறுத்தினார்.

இருப்பினும், “அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்” என்று சொல்வதற்கு பதிலாக, “யானை அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்” என்ற உண்மையான வாக்கியத்தில், “யானை” என்பதை சற்று மெல்லிய குரலில் கூறிவிட்டு, “அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்” என்பதை யுதிஷ்டிரர் பலமாகக் கூறினார். போரில் யாரேனும் மாவீரர்கள் மரணமடைந்தால், உடனடியாக கொம்புகளும் முரசுகளும் முழங்கப்பட்டு, அச்செய்தி அனைவருக்கும் அறிவிக்கப்படுவது வழக்கம். “யானை” என்று யுதிஷ்டிரர் கூறியபோது, இசைக் கருவிகளின் ஒலியினால், அது துரோணரின் காதில் துளியும் விழவில்லை. அதன் விளைவாக, மகனின் மரணத்தைக் கேட்டதால் வலுவிழந்த துரோணரை திருஷ்டத்யும்னன் எளிதில் கொன்றான்.

 

யுதிஷ்டிரருக்கு ஏற்பட்ட அவப்பெயர்

யுதிஷ்டிரர் வெளிப்படையாக பொய் கூறவில்லை, ஆனாலும் அதனை உண்மை என்று எடுத்துக் கொள்ள இயலாது. தர்மத்தின் கொள்கைகளைச் சீராக கடைப்பிடித்து வந்த காரணத்தினால், மகாபாரதப் போர்க்களத்தில் யுதிஷ்டிரரின் ரதம் பூமியைத் தொடாமல் சற்று மேலே பயணம் செய்து வந்தது. ஆனால் யுதிஷ்டிரர் பொய் கூறிய அந்த தருணத்திலிருந்து அவரது ரதம் கீழிறங்கி, சாதாரண ரதம் போன்று பூமியில் பயணம் செய்யத் தொடங்கியது. இதனால் யுதிஷ்டிரரின் ஈடுஇணையற்ற நற்பெயருக்கு மாபெரும் களங்கம் உண்டாயிற்று.

 

கிருஷ்ணருக்கு ஏற்பட்ட அவப்பெயர்

அதுமட்டுமின்றி, யுதிஷ்டிரரை பொய் உரைக்கச் சொன்ன காரணத்தினால், கிருஷ்ணரும் பல்வேறு நிந்தனைகளுக்கு ஆளாகின்றார். பரம பூரண உண்மையான கிருஷ்ணர் எவ்வாறு பொய் கூறச் சொல்லலாம்? அதுவும் தர்மராஜரின் மகனான யுதிஷ்டிரரை எவ்வாறு பொய் கூறச் சொல்லலாம்? யுதிஷ்டிரரின் புண்ணியமெல்லாம் கிருஷ்ணரால் வீணாகிவிட்டதே! மகாபாரதத்தின் இந்த நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டும் கர்மிகள், அயோக்கியர்கள், அசுரர்கள், மற்றும் நாத்திகர்கள் கிருஷ்ணரையும் யுதிஷ்டிரரையும் பற்றி இவ்வாறுதான் அவதூறாகப் பேசுகின்றனர். அவர்கள் கிருஷ்ணரை பூஜிக்கும் பக்தர்களிடம் சென்று, “பாருங்கள், உங்களின் கிருஷ்ணர் செய்யும் அநியாயத்தை. பொய் சொல்லச் சொல்கிறார், திருடுகிறார், பெண்களுடன் நடனம் ஆடுகிறார். எத்தனையோ தவறுகளை அவர் செய்துள்ளார், இவர் பரிபக்குவமானவர் அல்ல. இவரையா நீங்கள் வழிபடுகிறீர்கள்?” என்று குதர்க்கமான முறையில் கேள்வி எழுப்புகின்றனர்.

தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அவதரித்த கிருஷ்ணரின் செயல்களில் அதர்மம் இருப்பதாக நினைப்பது முட்டாள்தனம்.

கிருஷ்ணர் அதர்மம் செய்வாரா?

கிருஷ்ண பக்தர்களில் சிலர் இத்தகு நாத்திகர்களின் வாதங்களுக்கு பதிலளிக்க விரும்புவதில்லை, சிலர் இவர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பதும் இல்லை. ஆனால் உண்மையான பக்தர்கள் இத்தகு வாதங்களை அறிந்து, அவற்றிற்கு சாஸ்திர பூர்வமான பதில்களை ஆச்சாரியர்களின் மூலமாக உணர முயற்சி செய்ய வேண்டும். இல்லையெனில், நடுநிலையில் இருப்பவர்களை பக்தர்களாக மாற்ற இயலாது, நாத்திகர்களின் வளர்ச்சியும் அதிகமாகிவிடும். பக்தர்கள் என்பவர்கள் சித்தாந்தத்தை அறிவதில் சோம்பேறிகளாக இருக்கக் கூடாது.

கிருஷ்ணர் செய்யும் செயல்கள் அதர்மமாக இருக்க முடியுமா என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். தர்மத்தை நிலைநாட்டி அதர்மத்தை அழிப்பதற்காக தோன்றியவர் கிருஷ்ணர்; அவரது எல்லா செயல்களும் தர்மமே, அதர்மத்திற்கு வாய்ப்பே இல்லை. தர்மத்தை நிலைநாட்ட அவதரித்த கிருஷ்ணரின் செயல்களில் அதர்மம் இருப்பதற்காக நினைப்பது முற்றிலும் முட்டாள்தனம்.

அவ்வாறு அவரது செயல்கள் அதர்மமாக இருந்திருந்தால், ஆச்சாரியர்கள் பலரும் பல நூறு ஆண்டுகளாக அவரைப் புகழ்ந்து வருவது ஏன்? தர்மத்தின் சீரிய வாழ்வினை பயிற்சி செய்த ஆச்சாரியர்கள் அவரைப் புகழ்கிறார்கள் என்னும் பட்சத்தில், நாம்தான் கிருஷ்ணரைப் பற்றி முறையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை எளிதில் உணர முடியும். கிருஷ்ணரின் பல்வேறு திருநாமங்களில் ஒன்று, அலோப-லீலர், அதாவது அவரது செயல்களில் அவதூறு பேசுவதற்கு ஏதுமில்லை என்று பொருள். வியாஸதேவராலும் பல்வேறு ஆச்சாரியர்களாலும் பரம உண்மையாக ஏற்கப்பட்டுள்ள கிருஷ்ணரின் செயல்களில் தவறுகள் இருக்க முடியாது என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

அவ்வாறு அவரது செயல்களில் நாம் ஏதேனும் தவறினைக் கண்டால், அஃது உண்மையில் நமது பார்வையில் உள்ள குறைபாடாகும். வேறு விதமாகக் கூறினால், கிருஷ்ணர் அதர்மத்தைப் பின்பற்றுவதாக நாம் நினைத்தால், அத்தகு எண்ணமே உண்மையான அதர்மம். ஏனெனில், அவர் செய்பவை அனைத்தும் தர்மமே.

கிருஷ்ணர் நமது சட்டங்களுக்கு உட்பட்டவர் அல்ல

கிருஷ்ணர் செய்பவை அனைத்தும் தர்மமே என்பதை ஏற்பதற்கு ஆழமான அறிவும் தர்மத்தைப் பற்றிய ஆழமான புரிந்துணர்வும் அவசியம். அதன்படி அலசிப் பார்த்தால், கிருஷ்ணர் எந்தவொரு விதிமுறைக்கும் உட்பட்டவர் அல்ல என்பதை நம்மால் உணர முடியும். அவரே பரம்பொருள் என்பதால் அவரிடம் குறைபாடுகள் ஏதும் இருக்க முடியாது, அவ்வாறு இருப்பதாக யாராலும் சொல்லவும் முடியாது. அவரே எல்லா உயிர்வாழிகளுக்கும் உற்ற நண்பர் என்பதால் அவர் செய்யும் அனைத்து செயல்களும் நன்மையாகவே இருக்கும். கிருஷ்ணர் யாரையேனும் கொலை செய்தால்கூட, அதுவும் அவர்களின் நன்மைக்காகவே. இந்த தத்துவபூர்வமான உண்மையை நாம் ஒவ்வொருவரும் உணர முயற்சி செய்ய வேண்டும்.

இந்த தத்துவ உண்மையினை பகவத் கீதை, பாகவதம், வேதாந்த சூத்திரம் போன்ற சாஸ்திரங்களில் வியாஸதேவர் நிலைநாட்டியுள்ளார். கிருஷ்ணரிடம் ஏதேனும் தவறுகள் இருந்திருந்தால், வியாஸர் அதனை ஏன் பதிவு செய்திருக்க வேண்டும்? சில நேரங்களில், கிருஷ்ணரின் உயர்நிலையை விளக்க இயலாதவர்கள் மேலோட்டமான முரண்பாடுகளை விளக்க இயலாததால் அவற்றைத் தவிர்க்க முயல்கின்றனர். அது முற்றிலும் தவறு. தவிர்க்க வேண்டுமெனில் வியாஸதேவரே தவிர்த்திருப்பாரே? ஆச்சாரியர்களும் தவிர்த்திருப்பார்களே? அதற்கு மாறாக, அவர்கள் முரண்பாடுகள் அனைத்தையும் தத்துவபூர்வமாக விளக்கியுள்ளனர். அவற்றை அறிய முயற்சிப்பது அறிவாளித்தனம், அல்லாதது அறிவிலித்தனம்.

கிருஷ்ணரைப் பற்றிய தத்துவ உண்மையினை பகவத் கீதை, பாகவதம், வேதாந்த சூத்திரம் போன்ற சாஸ்திரங்களில் நிலைநாட்டியுள்ள வியாஸதேவர்.

தர்மத்தின் நிலைகள்

பொதுவாக தர்மம் என்பது, உண்மையாக இருத்தல், பொய் பேசாமல் இருத்தல், நல்லது செய்தல், ஏமாற்றாமல் இருத்தல் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். இருப்பினும், ஒவ்வொரு குறிப்பிட்ட சூழ்நிலையில், எது தர்மம் என்பதை அவ்வளவு எளிதாக கூறிவிட முடியாது. சில நேரங்களில், உயர்ந்த தர்மத்தைக் காப்பதற்காக தாழ்ந்த தர்மத்தைக் கைவிட வேண்டிவரும். அவ்வாறு கைவிடுவது அதர்மமாகாது. மகாபாரதத்தில் கிருஷ்ணர் கூறிய கீழ்காணும் நிகழ்ச்சி இதற்கு நல்ல உதாரணமாக அமைகிறது.

ஒரு பிராமணன் தனது வாழ்நாள் முழுவதும் பொய் கூறக் கூடாது என்று உறுதி பூண்டிருந்தான். ஊருக்கு சற்று ஒதுக்குபுறமாக வாழ்ந்து வந்த அவனது குடிலை நோக்கி ஒருமுறை ஒரு வியாபாரி ஓடி வந்தான். தன்னை சில திருடர்கள் விரட்டுவதாகவும் தன்னிடம் தங்க நாணயங்கள் இருப்பதாகவும் கூறி, ஒளிந்து கொள்ள இடம் காட்டும்படி வேண்டினான். அருகிலிருந்த மரங்களுக்குப் பின்னால் மறைந்துகொள்ளும்படி வியாபாரிக்கு பிராமணன் வழிகாட்டிய சில நிமிடங்களில், அங்கு வந்த திருடர்கள், “இங்கு யாரேனும் ஓடி வந்ததைப் பார்த்தீர்களா?” என்று பிராமணனிடம் வினவினர். பொய் சொல்லக் கூடாது என்ற தனது தர்மத்தில் உறுதியாக இருந்த பிராமணன், “ஆம்” என்று பதிலளிக்க, “அவன் எங்கே?” என்ற மறுகேள்விக்கும் பதிலளித்து, வியாபாரியின் மரணத்திற்கும் திருடர்கள் கொள்ளையடிப்பதற்கும் காரணமாக அமைந்தான். தனது வாழ்நாள் முழுவதும் தனது நிலையில் உறுதியாக இருந்த அந்த பிராமணன் மரணத்திற்குப் பிறகு நரகத்திற்குச் சென்றான்.

பொய் சொல்லக் கூடாது என்பது தர்மம். ஆயினும், பொய் சொல்லாமல் இருந்ததற்காக இந்த பிராமணன் நரகத்திற்குச் சென்றான். தன்னை அண்டி வந்தவர்களை காப்பாற்றுவதும் தர்மம். உயிரைக் காப்பாற்றுதல் என்னும் தர்மத்தைப் பின்பற்றுவதற்காக, பொய் சொல்லாமல் இருத்தல் என்னும் தர்மத்தைக் கைவிடுவதில் எந்த தவறும் இல்லை. வேறு விதமாகக் கூறினால், உயர்ந்த தர்மத்திற்காக தாழ்ந்த தர்மத்தைப் புறக்கணித்தல் என்றுமே அதர்மமாகாது. கீழ்காணும் வள்ளுவரின் குறளும் இதில் முற்றிலும் பொருந்தக் கூடியது.

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்த்த

நன்மை பயக்கு மெனின்

துரோணரின் அதர்மம்

துரோணர் அதர்மத்தின் பக்கம் நின்றதால் அவரது மரணம் தர்மத்தை நிலைநாட்டுவதற்கு அவசியமானதாயிற்று. வழி சற்று தவறாக இருப்பதைப் போல தோன்றலாம், ஆனால் இறுதி முடிவு நன்றாக அமையும் பட்சத்தில் அதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. கிருஷ்ணர் விரும்பியிருந்தால், துரோணரை மட்டுமின்றி கௌரவப் படை முழுவதையும்  தனது விருப்பத்தினாலேயே அழித்திருக்க முடியும். ஆனால் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகச் செய்யப்படும் தந்திரங்கள் அதர்மமல்ல என்பதை கிருஷ்ணர் மகாபாரதப் போர்களத்தில் நிலைநாட்டினார்.

எப்படிப் பார்த்தாலும் தர்மத்திற்கும் கௌரவர்களுக்கும் துளியும் தொடர்பு இல்லையே. கௌரவர்களுடன் இணைந்து அதர்ம வழியில் அபிமன்யுவைக் கொன்றதில் துரோணருக்கு பெரும் பங்கு உள்ளதே! கௌரவர்களிடம் தர்மத்தைப் பற்றி பேசுவது என்பது, திருடர்கள் கூட்டமாக சேர்ந்து கொள்ளையடித்த பணத்தை நேர்மையாக பங்கிட்டுக் கொள்வதைப் போன்றதாகும். கொள்ளையடித்தல் என்பதே நேர்மையற்ற செயல், அதில் நேர்மையாக நடந்துகொள்வது என்பது எந்த விதத்தில் நியாயம்? கௌரவர்களின் மொத்த நிலையே அதர்மமாக இருக்கும்பட்சத்தில், அவர்களிடம் தர்மத்தைப் பற்றி என்ன பேச முடியும்?

 

தர்மம் என்பது என்ன?

கிருஷ்ணரை எது திருப்திப்படுத்துமோ அதுவே உயர்ந்த தர்மம் என்று ஸ்ரீமத் பாகவதம் (6.3.19) தெளிவுபடுத்துகிறது. பொதுவாக மக்கள் கீழ்நிலை தர்மங்களின் மீது பற்று கொண்டு, அந்நிலையிலேயே சிக்கிக் கொள்கின்றனர். கிருஷ்ணரிடம் சரணடைதல் என்னும் உயர்நிலை தர்மத்தை நோக்கி வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். அந்த உயர்நிலை தர்மத்தை அவர்கள் அடைந்துவிட்டால், அப்போது அவர்களால் இதுபோன்ற நிகழ்வுகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும். எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு தன்னிடம் சரணடையும்படி கிருஷ்ணர் கீதையின் இறுதியில் (18.66) அறிவுறுத்துகிறார். நம்மால் புரிந்துகொள்ள முடியாவிட்டால்கூட, கிருஷ்ணர் என்ன செய்தாலும் அது நமது நன்மைக்காகவே என்பதில் முழு நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அதுவே சரணாகதி, எல்லாவற்றிலும் மிகவுயர்ந்த தர்மம்.

 

ரதம் இறங்கியது ஏன்?

யுதிஷ்டிரர் பொய் சொன்னதில் தவறில்லை என்றால், அவரது ரதம் ஏன் சாதாரண ரதம் போன்று இறங்கியது? அவர் அதர்மத்திற்கு துணை போனார் என்பதாலும், பொய் கூறினார் என்பதாலும் அவரது ரதம் இறங்கிவிட்டதாக பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் அந்த எண்ணம் முற்றிலும் தவறானதாகும். கிருஷ்ணரே பொய் சொல்லும்படி கூறிய பின்னர், அஃது எவ்வாறு அதர்மமாகும்? நிச்சயம் அதர்மம் அல்ல. பின்னர், ஏன் ரதம் கீழே இறங்கியது? கிருஷ்ணரின் கட்டளையை உடனடியாக ஏற்பதற்கு யுதிஷ்டிரர் தயங்கினார் என்பதே உண்மையான காரணமாகும். எப்போதும் கிருஷ்ணரிடம் சரணடைந்த ஜீவனாக விளங்கிய யுதிஷ்டிரர், அத்தருணத்தில் அவரது கட்டளையைப் பின்பற்றுவதற்கு தயங்கினார்; அதாவது, சரணடைந்த நிலையிலிருந்து விலகினார், அவரது ரதமும் தரையில் இறங்கியது.

கிருஷ்ணரின் கட்டளையை உடனடியாக பின்பற்றுவதில் யுதிஷ்டிரருக்கு எழுந்த தயக்கமே அவரது ரதம் இறங்கியதற்கான காரணம்; கிருஷ்ணரின் கட்டளையைப் பின்பற்றியது அல்ல. வேறு விதமாகக் கூறினால், பொய் சொன்னதால் இறங்கவில்லை, பொய் சொல்ல தயங்கியதால் இறங்கியது. அஸ்வத்தாம ஹத (அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்) என்று நேரடியாக கூறுவதற்குப் பதிலாக, அஸ்வத்தாம ஹத இதி கஜ (அஸ்வத்தாமன் என்னும் யானை இறந்துவிட்டான்) என்று கூறியது, கிருஷ்ணரின் கட்டளையைப் பின்பற்றுவதில் யுதிஷ்டிரரின் தயக்கத்தினை தெளிவாக காட்டுகிறது.

இருப்பினும், யுதிஷ்டிரர் உண்மையில் கிருஷ்ணரின் தூய பக்தர். அவர் கிருஷ்ணரின் கட்டளையைப் பின்பற்ற தயங்கியதும் நிச்சயமாக கிருஷ்ணரின் தெய்வீக ஏற்பாடுதான். தன்னிடம் சரணடைந்துள்ள பக்தர்கள் தனது கட்டளையைப் பின்பற்றுவதில் தயக்கம் காட்டக் கூடாது என்பதை யுதிஷ்டிரரின் மூலமாக கிருஷ்ணர் நம் எல்லோருக்கும் எடுத்துரைக்கின்றார்.

சாஸ்திரங்களை முறையாக கற்போம்

மக்கள் பொதுவாக சாஸ்திரங்களை ஆழ்ந்து படிப்பதில்லை, மேலோட்டமாகவே பார்க்கின்றனர். அதனால்தான் இதுபோன்ற சந்தேகங்கள் எழுகின்றன. கிருஷ்ணரின் லீலைகளைப் புரிந்துகொள்வது ஒன்றும் கடினமானதல்ல. கிருஷ்ணரே முழுமுதற் கடவுள், அவரே உன்னத அதிகாரி என்பதில் முழு நம்பிக்கை கொண்டவர்களால் இவற்றை எளிதில் புரிந்துகொள்ள முடியும். குறைந்தபட்சம், கிருஷ்ணர் தன்னைப் பற்றி பகவத் கீதையில் கூறியுள்ள தகவல்களைப் படித்து அவரை அறிய நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். நவீன காலத்தின் தலைசிறந்த ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர் அருளிய பகவத் கீதை உண்மையுருவில் என்னும் புத்தகத்தைப் படியுங்கள், காலப்போக்கில் அனைத்தும் தெளிவாகும்.

யஸ்மின் விஜ்ஞாதே ஸர்வம் ஏவம் விஜ்ஞாதம் பவதி, “கிருஷ்ணரே பரம உண்மை என்னும் எளிய விஷயத்தைப் புரிந்துகொள்வதால், அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும்.” (முண்டக உபநிஷத் 1.3)

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives