கொல்லாதிருப்பாயாக

ஸ்ரீல பிரபுபாதர்: “கொல்லாதிருப்பாயாக” என்று ஏசு கிறிஸ்து (பத்து கட்டளைகளில்) கூறினார். அப்படியிருக்க கிறிஸ்துவ மக்கள் எவ்வாறு மிருகங்களைக் கொல்லலாம்?

 

கார்டினல் ஜான் டேனியல்: கிறிஸ்துவ மதம் கொலை செய்வதை அனுமதிப்பதில்லை என்பது சரியே. ஆனால் மனிதனின் உயிருக்கும் மிருகங்களின் உயிருக்கும் வித்தியாசமிருப்பதாக நாங்கள் நம்புகிறோம். கடவுளின் பிம்பமாக மனிதன் உருப்பெற்றிருப்பதால் மனித உயிர் புனிதமானதாகக் கருதப்படுகிறது. எனவே, மனித உயிரைக் கொல்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் பைபிள் மனிதனைக் கொல்லாதே என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. கொல்லாதிருப்பாயாக என்று பொதுவாகச் சொல்கிறது.

 

கார்டினல்: மனித உயிர் மட்டுமே புனிதமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: அஃது உங்களுடைய சொந்த அபிப்பிராயம். கொல்லாதிருப்பாயாக என்பதே கட்டளை.

 

கார்டினல்: உணவிற்காக மனிதன் மிருகங்களைக் கொல்வது அவசியமாகிறது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, மனிதன் தானியங்களையும் தாவரங்களையும் பழங்களையும் பாலையும் உட்கொள்ளலாமே?

 

கார்டினல்: மாமிசம் கூடாதா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: மனிதர்கள் தாவர உணவை உட்கொள்ள வேண்டியவர்கள். புலி பழங்களை சாப்பிடுவதில்லை. அதற்கு விதிக்கப்பட்டுள்ளது மாமிச உணவு. மனிதனுக்கான உணவு காய்கள், பழங்கள், தானியம், பால் பொருட்கள் ஆகியவை. எனவே, மிருகங்களைக் கொல்வது பாவமாகாது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

 

கார்டினல்: அது நோக்கத்தைப் பொறுத்தது என்று நாங்கள் நம்புகிறோம். பசித்திருப்பவருக்காக ஒரு மிருகம் கொல்லப்பட்டால் அது நியாயமான செயலே.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், பசுவை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பாலை நாம் குடிப்பதால், அது நமது தாய். இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

 

கார்டினல்: ஆம். நிச்சயமாக.

 

ஸ்ரீல பிரபுபாதர்: தாயைக் கொல்வதை நீங்கள் எப்படி ஆதரிக்கலாம்? நீங்கள் அதன் பாலைக் குடிக்கிறீர்கள். அதற்கு வயதாகி பால் தர முடியாமல் போகும்போது கழுத்தை அறுக்குறீர்கள். இது மனிதத் தன்மையா? இந்தியாவில் மாமிசம் உண்பவர்கள் ஆடு, பன்றி போன்ற கீழ்நிலை மிருகங்களையும் எருமைகளையும் கூடக் கொல்லலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பசுவை கொல்வது மிகப்பெரிய பாவம். கிருஷ்ண உணர்வைப் பிரச்சாரம் செய்யும் நாங்கள் எவ்வித மாமிசத்தையும் உண்ண வேண்டாம் என்று மக்களுக்குக் கூறுகிறோம். மனிதன் பாவங்களைச் செய்து கொண்டிருக்கும் வரை அவனால் கடவுளைப் புரிந்துகொள்ள முடியாது. மனிதனின் முக்கிய அலுவல் கடவுளை அறிவது, அவரை நேசிப்பது. பாவம் செய்து கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது. அவரிடம் அன்பு செலுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

கார்டினல்: ஆனால் இஃது அவ்வளவு முக்கியமான விஷயமல்ல என்று எண்ணுகிறேன். கடவுளிடம் அன்பு செலுத்துவதே முக்கியமான விஷயம். நடைமுறை பற்றிய கட்டளைகள் மதத்திற்கு மதம் வேறுபடலாம்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: அவ்வாறு, பைபிளின் நடைமுறைக் கட்டளை–கொல்லாதிருப்பாயாக. எனவே, பசுவைக் கொல்வது பாவம்.

 

கார்டினல்: கடவுள் இந்தியர்களிடம் கொல்வது நல்லதல்ல என்று கூறுகிறார். யூதர்களுக்கு அவர் சொல்வது…

 

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லையில்லை. கொல்லாதிருப்பாயாக என்று கிறிஸ்து உபதேசித்தார். உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் ஏன் பொருள் காண்கிறீர்கள்?

 

கார்டினல்: ஆனால் பைபிளில் ஆடு பலியிடப்பட்டதை ஏசு அனுமதித்தார்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் அவர் கசாப்புக் கூடத்தை நடத்தவில்லையே.

 

கார்டினல்: (சிரித்தபடி) இல்லை. ஆனால் அவர் மாமிசம் சாப்பிட்டார்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: வேறு உணவு இல்லாதபோது, பட்டினியாக இருப்பதைத் தவிர்க்க மாமிசம் சாப்பிடலாம். அது வேறு விஷயம். ஆனால் நாவை திருப்திப்படுத்துவதற்காக கசாப்புக் கூடத்தை நடத்துவது மிகவும் பாவம். சிலவேளைகளில் உயிர் வாழ்வதற்காக மிருகங்களைக் கொல்வது அவசியமாகலாம். ஆனால் தாய் மிருகமான பசுவையாவது கொல்லாமல் இருக்க வேண்டும்.

 

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, கீழ்நிலை உயிரினங்களுக்கு மனிதர்களுக்கு இருப்பதுபோல் ஆத்மா இல்லை என்ற அடிப்படை எண்ணத்தில் கிறிஸ்துவ மதம் மாமிசம் உண்பதை அனுமதிக்கிறது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: அது மடமை, முதலாவதாக உடலினுள் ஆத்மா இருப்பதற்கான சாட்சியத்தை நாம் அறிய வேண்டும். அப்போது, மனிதனுக்கு ஆத்மா இருக்கிறதா பசுவிற்கு இல்லையா என்பதை அறியலாம். மனிதனுக்கும் பசுவிற்குமுள்ள வித்தியாசம் என்ன? தன்மைகளில் வேறுபாடிருந்தால் மிருகத்துக்கு ஆத்மா இல்லை என முடிவு செய்யலாம். ஆனால் மனிதனும் மிருகமும் ஒன்று போல நடந்துகொள்ளும்போது மிருகத்திற்கு ஆத்மா இல்லை என்று எப்படிச் சொல்வது? மிருகம் சாப்பிடுகிறது, நீங்களும் சாப்பிடுகிறீர்கள்; அது உறங்குகிறது, நீங்களும் உறங்குகிறீர்கள். இதில் வித்தியாசம் என்ன?

 

கார்டினல்: மனிதனில் இருப்பதைப் போன்ற சில உயிரியல் தன்மை மிருகங்களுக்கும் உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறோம், ஆனால் அங்கு ஆத்மா இல்லை. ஆத்மா என்றால் மனித ஆத்மா என்றே நாங்கள் நம்புகிறோம்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஸர்வயோனிஷு, எல்லா உயிரினங்களிலும் ஆத்மா உள்ளது என்று எங்களுடைய பகவத் கீதை கூறுகிறது. நீங்கள் கறுப்பு உடை அணிந்திருக்கிறீர்கள், நான் காவி உடை அணிந்துள்ளேன். ஆனால், உடைக்குள் நீங்களும் நானும் மனிதர்கள். அது போலவே, வெவ்வேறான உயிரினங்களின் உடல்கள் வெவ்வேறு வகையான உடைகளைப் போன்றவை. ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்து, ஒரு மகன் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கலாம், மற்றவர் சாதாரணத் தொழிலாளியாக இருக்கலாம். ஆனால் தந்தை இருவரையும் தன் மகன்களாக ஏற்றுக்கொள்கிறார். நீதிபதியாக இருக்கும் மகன், “தந்தையே, உங்கள் அடுத்த மகன் உபயோகமற்றவன். எனவே, நான் அவனைக் கொன்று தின்ன அனுமதியுங்கள்” என்று கூறினால், தந்தை அனுமதிப்பாரா?

 

கார்டினல்: நிச்சயமாக மாட்டார். ஆனால் எல்லா உயிரும் கடவுளின் பகுதி என்று ஒப்புக்கொள்வது எங்களுக்குக் கடினமாகும். மனித உயிருக்கும் மிருக உயிருக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: அந்த வித்தியாசம் உணர்வின் வளர்ச்சியில் உள்ளது. மனித உடலில் உணர்வு வளர்ந் துள்ளது. மரத்திற்கும் ஆத்மா உண்டு, ஆனால் மரத்தின் உணர்வு அவ்வளவாக வளர்ச்சியடையவில்லை. மரத்தை வெட்டினால் அஃது எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. உண்மை யில் அதன் எதிர்ப்பு மிகவும் குறைந்தளவில் உள்ளது. மரங்களும் செடிகளும் வெட்டப்படும்போது, அவையும் வேதனையை அனுபவிக்கின்றன என்பதைக் காட்டும் கருவி ஒன்றை ஜெகதீஷ் சந்திரபோஸ் எனும் விஞ்ஞானி உருவாக்கியிருக்கிறார். மிருகத்தை வெட்டும் போது அது பயங்கரமாகக் கூச்சலிடுவதை நாம் காணலாம். எனவே, இது உணர்வில் அடைந்துள்ள வளர்ச்சியைப் பொறுத்த தாகும். ஆனால் எல்லா உயிர்களிடமும் ஆத்மா உள்ளது.

 

கார்டினல்: ஆயினும், மனிதனின் உயிர் புனிதமானது. மிருகங்களைவிட மனிதனின் எண்ணங்கள் உயர்ந்த தளத்தில் உள்ளன.

 

ஸ்ரீல பிரபுபாதர்: எஃது உயர்ந்த தளம்? மிருகம் உண்கிறது, நீங்களும் உண்கிறீர்கள். பசு வயலில் புல்லை உண்கிறது, மனிதனோ நவீன இயந்திரங்கள் நிறைந்த கசாப்புக் கூடத்திலிருந்து வரும் மாமிசத்தை உண்கிறான். உங்களிடம் பெரிய இயந்திரங்களும் கொடிய கசாப்புக் கூடங்களும் இருப்பதால், புல்லைத் தின்னும் மிருகத்திலுள்ள ஆத்மாவை விட நீங்கள் வளர்ச்சியடைந்தவர் என்று எவ்வாறு கூற முடியும்? மிருகத்தின் உடலினுள் ஆத்மா இல்லை என்று எவ்வாறு முடிவு செய்ய முடியும்?

 

கார்டினல்: ஆனால் மனிதனுக்கு மட்டுமே வாழ்வின் பொருளைக் காண்பதற்கான அறிவு உள்ளது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அந்த அறிவை வைத்து, மிருகத்திற்கு ஆத்மா இல்லை என்பதை எப்படி முடிவு செய்தீர்கள் என ஆராய்ச்சி செய்யுங்கள். அதுதானே மனித அறிவு. அதை விடுத்து நீங்களும் ஒரு மிருகத்தைப் போல சிந்தித்தால், உங்களுடைய அறிவினால் என்ன பயன்?

 

கார்டினல்: ஆனால் ஒரு மிருகத்தைத் தின்னும் மற்றொரு மிருகத்தைக் கடவுள் ஏன் படைக்க வேண்டும்? படைப்பில் தவறு இருப்பதாகத் தோன்றுகிறது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: படைப்பில் தவறு ஏதுமில்லை. கடவுள் கருணை மிக்கவர். நீங்கள் மிருகங்களை உண்ண விரும்பினால், அவர் உங்களுக்கு எல்லா வசதிகளையும் ஏற்படுத்தித் தருவார். அடுத்த பிறவியில், கடவுள் உங்களுக்குப் புலியின் உடலைத் தருவார். அப்போது நீங்கள் தாராளமாக மாமிசம் உண்ணலாம். “ஏன் கசாப்புக் கூடம் வைத்து கஷ்டப்படுகிறீர்கள்? நான் உங்களுக்கு விஷப் பற்களும் நகங்களும் தருகிறேன். இப்போது நன்றாகச் சாப்பிடுங்கள்” என்று கடவுள் சொல்வார். மாமிசம் உண்பவர்கள் இத்தகைய தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்கள், மறுபிறவியில் புலிகளாகவும் ஓநாய்களாகவும் பூனைகளாகவும் நாய்களாகவும் அவர்கள் உருவெடுக்கிறார்கள்.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment