வாழ்வின் உண்மையான நோக்கத்தினை அறிவோம்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

இந்த உரையாடலில், மனித வாழ்வின் உயர்ந்த நோக்கத்தையும், கட்டுப்பாடான வாழ்வின் அவசியத்தையும், கொலைகார நாகரிகத்திலிருந்து விடுபடுவதையும் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரிடம் விவாதிக்கின்றார்.

(மே 30, 1974—ரோம், இத்தாலி)

ஸ்ரீல பிரபுபாதர்: பகவான் கிருஷ்ணர், “என்னிடம் சரணடையுங்கள்,” என்று வலியுறுத்துகிறார். சாஸ்திரங்களும், “கிருஷ்ணரின் பிரதிநிதியிடம் சரணடையுங்கள்,” என்று கூறுகின்றன. மக்கள் இந்த உபதேசங்களைப் பின்பற்றவில்லையெனில், என்ன செய்ய முடியும்? இந்தச் சிட்டுக்குருவியைப் பாருங்கள். அஃது எப்போதும் துணையுடன் உள்ளது. எந்த நேரத்திலும் அஃது உடலுறவிற்கு தயாராக உள்ளது. புறாக்களும் எந்த நேரத்திலும் உடலுறவிற்கு தயாராக உள்ளன. விஷய: கலு ஸர்வத: ஸ்யாத். இந்த ஜடவுலகத்தின் மீதான நமது ஒரே பற்றுதல் விஷய, ஜடப் புலனுகர்ச்சியே. உலகிலுள்ள மக்கள் அனைவரும் இந்த ஜடப் புலனுகர்ச்சிக்காகக் கடுமையாகப் போராடுகின்றனர். “நான் நன்றாகச் சாப்பிட வேண்டும்; நன்றாகத் தூங்க வேண்டும்; நன்றாக உடலுறவுகொள்ள வேண்டும். நான் அதிகமான வங்கி இருப்பு, இராணுவ வீரர்கள், சக்திவாய்ந்த காவல்துறை மற்றும் அணு ஆயுதங்களால் பாதுகாக்கப்பட வேண்டும்.” உலகம் முழுவதும் இந்த தற்காப்புச் சிந்தனையைக் காண்கிறோம். இத்தனை பாதுகாப்பு நடவடிக்கை
களைக் கையாண்டாலும், இந்த வாழ்க்கையின் முடிவில் உடலை மாற்றி, தொடர்ந்து துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்; மீண்டும் அதே புலனின்பமும் துன்பமும் வேறு வழியில் கிடைக்கும்—இதனை அயோக்கியர்கள் உணர்வதில்லை.

சிறிய எறும்புகள் போதை பிரியர்கள். “வானுயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் சர்க்கரை இருக்கிறது,” என்ற தகவல் கிடைத்தவுடனேயே எறும்புகள் அங்குச் சென்றுவிடுகின்றன. [சிரிக்கின்றார்] சர்க்கரை, சர்க்கரைப் பாகு முதலியவற்றிலிருந்து ஒயின் தயாரிக்கப்படுகிறது. இதில் போதை உள்ளது. சர்க்கரையை ஓரிடத்தில் வைத்தால், புதையலைக் கண்டவர்களைப் போல, உடனடியாக ஆயிரக்கணக்கான எறும்புகள் அங்கு வந்துசேரும்.

ஆராய்ந்துப் பாருங்கள். பெயரளவிலான இந்த மனித நாகரிகத்திற்கும், எறும்பு, நாய், பூனை இவற்றின் நாகரிகத்திற்கும் இடையே ஏதேனும் வேறுபாட்டைப் பார்க்க முடிகிறதா? எந்தவொரு வேறுபாடும் இல்லை, வெளிப்புறத் தோற்றத்தில் மட்டுமே வேறுபாடு உள்ளது.

சீடர்: ஆம். நாங்கள் ஞாயிறு விருந்திற்காக குலாப்ஜாமுன் செய்கிறோம், அதில் சிறிது சர்க்கரை தண்ணீர் மீதமாகிவிடும். அடுத்த நாள், அந்த சர்க்கரை நீரில் பல எறும்புகள் மூழ்கிக் கிடப்பதைக் காண்கிறோம்; ஏனெனில், அவை அதில் குதித்து மூழ்குமளவிற்கு சர்க்கரையின் மீது பைத்தியமாக உள்ளன.

ஸ்ரீல பிரபுபாதர்: வேத இலக்கியங்கள் அறிவுறுத்துகின்றன, “மனிதர்களே, கவனியுங்கள்! நீங்கள் எண்ணற்ற பிறவிகளுக்குப் பின்னர் இந்த மனித உடலைப் பெற்றுள்ளீர்கள். இஃது ஒன்பது இலட்சம் வகையான நீர்வாழிகள், இருபது இலட்சம் வகையான தாவரங்கள் உட்பட மொத்தம் எண்பது இலட்சம் உயிரினங்களைக் கடந்து பெறப்பட்டுள்ளது. இந்த பரிணாம வளர்ச்சியில் நீண்ட நெடுங்காலத்தைக் கழித்துவிட்டு, தற்போது நீங்கள் மனித உடலை அடைந்துள்ளீர். இதுவும் தற்காலிகமானதுதான்; இருந்தாலும், மனித உடலில் உங்களால் உயர்ந்த பக்குவத்தை அடைய முடியும், இந்த தற்காலிகமான துன்பகரமான உலகிலிருந்து விடுபட்டு, பேரின்பமான நித்திய உலகை உங்களால் அடைய முடியும். எனவே, இவ்வுலகில் உங்களுக்கு மீண்டும் மரணம் வருவதற்கு முன்பாக, ஆன்மீகத்தில் முழுமையான பக்குவத்தை அடைவதில் தீவிரமாக இருங்கள்.”

சீடர்: ஆனால், “என்னுடைய புலனின்பம் என்னாவது?” என்று மக்கள் வினவுவர்.

ஸ்ரீல பிரபுபாதர்: கவலைப்பட வேண்டாம். விஷய: கலு ஸர்வத: ஸ்யாத், உங்களுக்கான புலனின்பம் எந்த உயிரினத்திலும் கிடைக்கும். மனித வாழ்க்கையை உயர்ந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துங்கள். வெறும் புலனின்பத்திற்காக இதனை வீணடிக்காதீர்கள். நீங்கள் பூனையாகவோ நாயாகவோ மாறினாலும் புலனின்பத்தை அனுபவிக்கலாம். ஆனால், பூனை அல்லது நாயின் உடலில் இருக்கும்போது, இந்த ஜட இருப்பிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு இல்லை.

நவீன கால மனிதர்கள் மனிதப் பிறவியில் தங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பினைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு உண்மையான கல்வியைப் பெறவில்லை. எனவே, இத்தகைய கல்வியை நாம் வழங்க வேண்டும். அவர்களின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இதற்குரிய ஆன்மீக புத்தகங்களைப் படிக்கும்படி அவர்களைத் தூண்ட வேண்டும். தன்னுணர்வைப் பெறுவதற்கான ஆன்மீக புத்தகங்கள் அவர்களிடம் இல்லை. ஃப்ராய்டின் பாலியல் கொள்கை, டார்வினின் குரங்குக் கொள்கை ஆகியவை மட்டுமே அவர்களிடம் உள்ளன. எல்லாம் வெறும் அயோக்கியத்தனம். எனவே, அவர்கள் இந்த ஆன்மீக புத்தகங்களைப் படிக்கட்டும்.

சீடர்: புலனின்பத்தை அதிகரிப்பதாக உறுதியளிக்கும் கோட்பாடுகளை மக்கள் சாதாரணமாக ஏற்கின்றனர். “நீங்கள் அதிக அளவிலான புலனின்பத்தை அடைவீர்கள்,” என்று யாரேனும் வாக்குறுதி அளித்தால் அதனை விரும்புகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: “நீங்கள் எந்த கோட்பாட்டினையும் ஏற்கலாம்,” என்று அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால், எது உண்மையான மகிழ்ச்சி என்பதை யாரும் அறிவதில்லை. ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும் துராஷயா யே பஹிர்-அர்த-மானின:, மக்கள் புலனின்பத்தின் மூலமாக, ஜடவுடலுக்கான இன்பத்தின் மூலமாக, மகிழ்ச்சியாக வாழ முயல்கின்றனர். ஆனால் துராஷயா, இஃது ஒருபோதும் நிறைவேறாத நம்பிக்கை மட்டுமே. ஆஷயா என்றால் “நம்பிக்கை” என்றும், துர் என்றால் “மிகவும் கடினமானது” அல்லது “சாத்தியமற்றது” என்றும் பொருள்.

கிருஷ்ண உணர்வு உங்களுக்கு எல்லாவற்றையும் சரியான முறையில் வழங்குகிறது, இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தி, ஜட இன்பத்தில் உங்களது நேரத்தை வீணடிக்காமல் ஆன்மீக உணர்வில் முன்னேறலாம். இதுவே தேவை. “சாப்பிடுவதை நிறுத்துங்கள்,” என்று நாங்கள் கூறவில்லை. சாப்பிடுங்கள். அதனை கிருஷ்ண பிரசாதமாக எடுத்துக்கொள்ளுங்கள். “உறங்காதீர்கள்,” என்று நாங்கள் கூறவில்லை. உறங்குங்கள், ஆனால் அதிகாலையில் எழுந்து ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்கும்படி கூறுகிறோம். இதுவே எங்களுடைய கொள்கை. நாங்கள் உணவு, உறக்கம், உடலுறவு முதலியவற்றிற்கு உரிய அனுமதியை வழங்குகிறோம். “உடலுறவு வாழ்க்கை வேண்டாம்” என்று நாங்கள் கூறவில்லை. உடலுறவில் ஈடுபடுங்கள், ஆனால் திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழுங்கள்.

[இராணுவம், காவல்துறை முதலிய] பாதுகாப்பு ஏற்பாடுகளும் நமக்கு தேவையே. இவற்றையெல்லாம் விட்டுவிடுங்கள் என்று நாங்கள் ஒருபோதும் கூறு
வதில்லை. அஃது எங்களுடைய தத்துவமும் அல்ல. அதே நேரத்தில், ஜட இன்பத்தை உங்களுக்குத் தேவையான அளவில் மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும், அளவிற்கு மேல் ஏற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறோம். மேலும், எஞ்சிய நேரத்தை உங்களுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்காக செலவிடுங்கள்.

துரதிர்ஷ்டவசமாக, இன்றைய மக்கள் உண்ணுதல், உறங்குதல், உடலுறவு, தற்காப்பு ஆகியவற்றில் மட்டுமே ஈடுபடுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை கிருஷ்ண பக்திக்கு நேரமில்லை, ஆன்மீக உணர்வுக்கு நேரமில்லை. இதுபோன்ற கண்டிக்கத்தக்க நாகரிகத்தை நிறுத்தியாக வேண்டும். இது கொலைகார நாகரிகமாகும். மென்றதையே மெல்லும் இந்த ஜடக்கட்டிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு மனிதர்களுக்கு உள்ளது. ஆயினும், அவர்கள் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக்
கொள்வதற்குத் தயங்குகின்றனர். அதை விடுத்து, புலனின்பம் எனும் மிருக வாழ்க்கையிலேயே அவர்கள் மேன்மேலும் நாட்டம் செலுத்துகின்றனர். இந்தக் கொலைகார நாகரிகம் மனிதர்களை பிறப்பு இறப்பு சக்கரத்திற்குள் சிக்கவைத்து மேன்மேலும் மிருக இனங்களுக்குள் இழிவடையச் செய்கிறது. ஆனால் கிருஷ்ண உணர்வுச் செயல்களின் மூலமாக—துறவு மற்றும் உன்னத அறிவின் மூலமாக—பலரும் தூய்மையடைந்து, ஆன்மீக உலகிற்கு, கடவுளின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்கின்றனர்.

இதற்கான எல்லா தகவல்களும் சாஸ்திரத்தில் உள்ளன. இருப்பினும், மக்கள் முறையாக பயிற்றுவிக்கப்படுவதில்லை. எனவே, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கமாகும்.

(தமிழாக்கம்: கந்தர்விகா மோஹினி தேவி தாஸி)

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives