தன்னுணர்விற்கான இயக்கம்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

கனவான்களே, தாய்மார்களே, பக்தர்களே, ஜகந்நாதரின் ரத யாத்திரையில் கலந்து கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவிலுள்ள ஜகந்நாத புரியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ரத யாத்திரை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஜகந்நாதர் என்னும் இப்பெயர், “ஜகத்திற்கு நாதர்” என்று பொருள் தருகிறது, பிரபஞ்சம் முழுவதற்கும் அவரே பகவான். ரத யாத்திரையும் ஹரே கிருஷ்ண இயக்கமும் பிரபஞ்சத்தின் பகவானைப் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதற்கானவை. பிரபஞ்சம் என்பது இந்த ஒன்று மட்டும் அன்று, எண்ணற்ற பிரபஞ்சங்கள் உள்ளன என்பதை நாம் வேத இலக்கியங்களிலிருந்து அறிகிறோம்.

யஸ்ய ப்ரபா ப்ரபவதோ ஜகத்-அண்ட-கோடி-
கோடீஷ்வஷேஷ-வஸுதாதி-விபூதி-பின்னம்
தத் ப்ரஹ்ம நிஷ்கலம் அனந்தம் அஷேஷ-பூதம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி

“எண்ணற்ற வைபவங்களைக் கொண்ட கோடிக்கணக்கான பௌதிக பிரபஞ்சத்திலிருந்து வேறுபடுத்தி உணரப்படக்கூடிய பிரம்மன், பிரிக்க முடியாததும் எல்லையற்றதும் முழுமையானதும் உண்மையானதுமாகும்; உபநிஷதங்களில் கூறப்படும் அந்த மாறுபாடற்ற பிரம்மனுக்கு எவருடைய திருமேனியிலிருந்து வரும் பிரகாசமான ஒளி ஆதாரமாக உள்ளதோ, அந்த ஆதி புருஷரான கோவிந்தரை நான் வணங்குகின்றேன்.” (பிரம்ம சம்ஹிதை 5.40)

பூரண உண்மை

சூரியன் எவ்வாறு சூரிய ஒளிக்கு ஆதிமூலமாக உள்ளாரோ, அவ்வாறே முழுமுதற் கடவுள் எல்லா பிரபஞ்சங்களின் ஆதாரமான அருவ ஜோதிக்கு ஆதிமூலமாகத் திகழ்கிறார். ஸ்ரீமத் பாகவதம் (1.2.11) கூறுகிறது,

வதந்தி தத் தத்த்வ-விதஸ்
தத்த்வம் யஜ் க்ஞானம் அத்வயம்
ப்ரஹ்மேதி பரமாத்மேதி
பகவான் இதி ஷப்த்யதே

பூரண உண்மையை மூன்று கோணங்களில் நோக்கும்போது, மூன்று வேறுபட்ட தன்மைகளில் உணரலாம் என்று இந்த ஸ்லோகம் தெரிவிக்கிறது. அவற்றுள் ஒன்று அருவ பிரம்மன், மற்றொன்று உள்ளிருக்கும் பரமாத்மா. ஆயினும், பூரண உண்மையின் இறுதி நிலைப்பாடு முழுமுதற் கடவுளாகிய கிருஷ்ணரே.
பகவத் கீதையில் (7.7) கிருஷ்ணர் கூறுகிறார், “என்னைவிட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளதுபோல, அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன.” இவ்வாறாக, பூரண உண்மை என்னும் இறுதி இலக்கு தாமே என்று முழுமுதற் கடவுள் கூறுகிறார். பூரண உண்மையைப் பற்றிய புரிந்துணர்வில் முன்னேற உதவுவதற்காக கிருஷ்ண பக்தி இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பௌதிக உலகம், சார்பு உண்மைகளால் ஆனது. இந்த சார்ந்த உண்மைகளைத் தனியாக அறிந்துகொள்ள வேண்டியதில்லை; ஏனெனில், யஸ்மின் விஜ்ஞாதே ஸர்வம் ஏவம் விஜ்ஞாதம் பவந்தி, “பூரண உண்மையை அறிந்துகொண்டால் சார்ந்த உண்மைகள் தானாகவே அறியப்படும்,” என்று வேத இலக்கியங்களில் ஒன்றான உபநிஷதத்தில் கூறப்பட்டுள்ளது. பௌதிக உலகம் சார்ந்த உண்மைகளால் ஆனது, ஆனால், ஆன்மீக உலகமானது பூரண உண்மை ஆகும்.

நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளதைப் போல, அனைத்தும் கிருஷ்ணரைச் சார்ந்துள்ளன.

கலி யுகம்

சண்டையும் தவறான புரிதலும் நிறைந்த இக்கலி யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளதால், பூரண உண்மையை அறிதல் மிகவும் கடினமானதே. ப்ராயேணால்பாயுஷ: ஸப்ய கலாவ் அஸ்மின் யுகே ஜனா:. இந்த யுகத்தின் ஓர் அறிகுறி என்னவென்றால், ஏறக்குறைய அனைவரும் குறைந்த ஆயுளைக் கொண்டுள்ளனர். வேத சாஸ்திரங்களின்படி, இந்த யுகத்தில் ஒருவர் நூறு ஆண்டுகள் வாழலாம்.

ஸத்ய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என நான்கு யுகங்கள் உள்ளன. ஸத்ய யுகத்தில் நாம் 1,00,000 ஆண்டுகள் வாழ்ந்தோம். (நாம் நித்திய
மானவர்கள் எனினும், ஓருடலிலிருந்து மற்றொன்றிற்கு மாறிக் கொண்டே உள்ளதால், “வாழ்ந்தோம்” என்று இங்கு நான் குறிப்பிடுகிறேன்.) அடுத்த யுகமான திரேதா யுகத்தில் நமது ஆயுள் 10,000 ஆண்டுகளாகவும், அதற்கடுத்த துவாபர யுகத்தில் ஆயுள் 1,000 ஆண்டுகளாகவும் குறைக்கப்பட்டு விட்டது. தற்போதைய கலி யுகத்தில் நமது ஆயுள் 100 ஆண்டுகள் வரை உள்ளது. ஆயினும், துரதிர்ஷ்டவசமாக, நாம் வீழ்ச்சியடைந்துள்ளதால் நமது உடல் வலிமை, கருணை, நினைவாற்றல், நற்குணங்கள் என அனைத்தும் குறைக்கப்பட்டு, நாம் 100 ஆண்டுகள்கூட வாழ்வதில்லை. உதாரணமாக, எனக்கு எண்பது வயதாகிறது. நான் நீண்ட காலம் வாழ்ந்துள்ளதாக மக்கள் நினைக்கின்றனர். ஆனால், எண்பது ஆண்டுகள் என்பது ஒரு பொருட்டல்ல. உண்மையில், நாம் நூறு ஆண்டுகள் வாழ வேண்டியவர்கள். நமது பாவகரமான வாழ்க்கையினால், இருபது அல்லது முப்பது ஆண்டுகள் வாழ்ந்தாலே ஒருவரை வயோதிகன் என்று கருதக்கூடிய நாள் விரைவில் வரப் போகிறது.

எனவே, பெளதிக வாழ்க்கை நமக்கு சுகமானதாக இல்லாத காரணத்தினால், ஆன்மீக உலகின் ஆன்மீக வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்வதற்காகவே கிருஷ்ண பக்தி இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்மீக உலகம் ஒன்று உள்ளது என்னும் தகவலை நாம் பகவத் கீதையிலிருந்து பெறுகிறோம். பகவத் கீதையைப் படித்தோர் இதனை அறிவர். எனவே, “பகவத் கீதை உண்மையுருவில்” என்னும் எமது நூலைப் படிக்க வேண்டுமென்று உங்கள் அனைவரையும் வேண்டுகிறோம். நானூறுக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட சுமார் 20 நூல்களையும், 1,100 பக்கங்களைக் கொண்ட பகவத் கீதையையும் நாங்கள் வெளியிட்டு உள்ளோம். இருப்பினும், கிருஷ்ண பக்தி இயக்கத்தை முழுமையாக விளக்க சுமார் 80 நூல்களை நாங்கள் வெளியிட வேண்டியுள்ளது.

இங்குள்ள அமெரிக்க கனவான்களும் தாய்மார்களும் கற்றறிந்த புத்திசாலிகள் என்பதை நான் அறிவேன். இந்த இயக்கத்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்து
வதில் எனக்கு உதவிபுரிந்த அமெரிக்கர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். ஹரே கிருஷ்ண இயக்கத்தை முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தபோது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறினார்,

பாரத-பூமிதே ஹஇல மனுஷ்ய ஜன்ம ஜார
ஜன்ம ஸார்தக கரி’கர பர-உபகார
(சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 9.41)

அதாவது, யாரெல்லாம் பாரத பூமியில் மனிதப் பிறவி எடுத்துள்ளார்களோ, அவர்கள் தங்களுடைய வாழ்வை வெற்றிகரமானதாக ஆக்கிக் கொண்டு, இதர மக்கள் அனைவரின் நன்மைக்காகவும் உழைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் மேலும் கூறினார்,

ப்ருதிவீதே ஆசே ஜத நகராதி-க்ராம
ஸர்வத்ர ப்ரசார ஹஇபே மோர நாம
(சைதன்ய பாகவதம், அந்திய காண்டம் 4.126)

கிருஷ்ண பக்தி இயக்கமானது உலகம் முழுவதிலுமுள்ள எல்லா கிராமங்களிலும் நகரங்களிலும் அறியப்படும் என்பது முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இயக்கத்தைப் பரப்ப உதவும் அமெரிக்க இளைஞர்களான உங்களுடைய ஒத்துழைப்புடன், தற்போது இஃது உண்மையிலேயே உலகம் முழுவதும் நன்றாக அறியப்படுகிறது. சமீபத்தில் நான் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரத்திற்குச் சென்றிருந்தேன். அங்கும் இதுபோன்ற திருவிழாவினை நாங்கள் கொண்டாடினோம். அத்திருவிழாவில் ஆயிரக்
கணக்கான மக்கள் எங்களுடன் சேர்ந்து நடனமாடி பாடினார்கள். பின்னர், நான் சிகாகோவிற்குச் சென்றேன், அங்கும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். இன்று காலை நான் இங்கு வந்துள்ளேன். நீங்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளதைக் காண்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தன்னுணர்விற்கான இயக்கம்

கிருஷ்ண பக்தி இயக்கமானது உலகளாவிய இயக்கமாகும். இஃது இந்தியர்கள் அல்லது இந்துக்களுக்கு மட்டுமானது என்று எண்ண வேண்டாம். இஃது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. கிருஷ்ணர் மிகவுயர்ந்த உயிர்வாழியாவார். நாம் கீழான உயிர்வாழிகள். நாம் கிருஷ்ணரின் அம்சம் என்பதால், தன்மையில் கிருஷ்ணருடன் ஒன்றானவர்கள். ஆயினும், நாம் கொண்டுள்ள பௌதிகத் தொடர்பினால், நாம் கிருஷ்ணரை ஒத்த தன்மையைப் பெற்றுள்ளோம் என்பதை மறந்த நிலையில் உள்ளோம். ஒரு துளி கடல் நீரானது ஒட்டுமொத்த கடல் நீருடன் தன்மையில் ஒத்திருந்தாலும், அளவில் சொற்பமானது; அதைப் போல, நாமும் கிருஷ்ணருடன் தன்மையில் ஒத்தும் அளவில் வேறுபட்டும் உள்ளோம். நாம் கடவுளின் அம்சம். கடவுள் மிகவுயர்ந்தவர், நாம் மிகச்சிறியவர்கள்; கடவுள் பராமரிப்பவர், நாமோ பராமரிக்கப்படுபவர்கள்; கடவுள் ஆளுநர், எஜமானர், நாமோ ஆளப்படுபவர்கள், சேவகர்கள்.

கடவுள் மிகவுயர்ந்தவர்; நாம் அவரது சேவகர்கள்; இதைப் புரிந்துகொள்வதே தன்னையுணர்தலின் சாரம். தன்னையுணர்தல் என்றால் தன்னை அடையாளம் காணுதல் என்று பொருள். “நான் யார்?” என்னும் வினாவிற்கான விடையை அறிந்தவரே தன்னை உணர்ந்தவராகிறார். கிருஷ்ண பக்தி இயக்கம் இந்த அறிவினைப் பெறுவதற்கு உதவுவதால், இது தன்னையுணர்வதற்கான இயக்கமாகும். எனவே, நீங்கள் இந்த இயக்கத்தில் பங்குகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு துளி கடல் நீரும் மொத்த கடல் நீரும் தன்மையில் சமமாக இருந்தாலும், அளவில் வேறுபட்டவை; அதைப் போலவே, நாமும் கிருஷ்ணரும் தன்மையில் ஒன்றுபட்டும் அளவில் வேறுபட்டும் விளங்குகிறோம்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…

உலகளாவிய வரவேற்பு

ஆண்டுதோறும் நாங்கள் ரத யாத்திரை திருவிழாவினை கொண்டாடுகிறோம். 1967இல் இந்த சான்பிரான்சிஸ்கோ நகரத்தில்தான் ரத யாத்திரையினை நான் தொடங்கி வைத்தேன். அது முதல் உங்களது நாட்டில் இத்திருவிழாவானது தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இலண்டன் போன்ற இதர நகரங்களிலும் இத்திருவிழாவினை நாங்கள் கொண்டாடுகிறோம். கடந்த வருடம் நான் இலண்டனில் இருந்தபோது, பிக்காடில்லி சர்க்கஸ் என்னும் இடத்திலிருந்து ட்ரஃபல்கர் சதுக்கம் வரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ரத யாத்திரை ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். எங்களது ரத யாத்திரை நல்ல வரவேற்பைப் பெற்றது. உண்மையில், இலண்டனில் நெல்சன் (நினைவு)தூண் என்னும் மாபெரும் வரலாற்று சின்னம் உள்ளது. எங்களது ஜகந்நாதரின் ரதம் மிகவும் உயரமாக இருந்ததால் அந்த நினைவு சின்னத்திற்குப் போட்டியாக இருந்தது என்று இலண்டனிலிருந்து வெளியாகும் “தி கார்டியன்” என்ற செய்தித்தாள் கருத்து வெளியிட்டிருந்தது.

கிருஷ்ண பக்தி இயக்கம் ஐரோப்பா, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் எங்கும் நன்கு வரவேற்கப்படுவதால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரில் நாங்கள் நடத்திய கூட்டத்தில், மெல்போர்ன் பிஷப்பும் இதர பாதிரியார்களும் இவ்வியக்கத்தை வெகுவாகப் பாராட்டினர். உண்மையில், இவ்வியக்கத்தின் வாயிலாக சிறந்த விஷயங்களைக் கற்றுக்கொள்ள இயலும் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

எனவே, இந்த இயக்கத்தை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கானது என்றோ, உங்களது நாட்டில் புகுத்தப்படும் இந்திய கலாச்சாரம் என்றோ கருத வேண்டாம்; இஃது எல்லா மனிதர்களுக்குமானது. மனித குலத்தினை பிரம்ம பூத நிலைக்கு, அதாவது தன்னுணர்வு நிலைக்கு உயர்த்துவதற்கான கல்வியை வழங்குவதே இதன் குறிக்கோள் ஆகும்.
பகவத் கீதை (18.54) கூறுவதைப் போல, தன்னையுணர்ந்த நிலை அல்லது பிரம்ம-பூத நிலையை அடைந்தால் நீங்கள் எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பீர். ஆனந்தமாக இருப்பதே நமது ஸ்வரூப நிலை. எனவே, ஜடத்துடனான தொடர்பினால் நாம் விரக்தியுறும்போதிலும், எப்போதும் மகிழ்ச்சிக்காக ஏங்கிக் கொண்டுள்ளோம். எப்போதும் இன்புற்றிருக்க, நாம் ஜடத் தொடர்பிலிருந்து வெளியேறி, நம்மை உணர வேண்டும். நீங்கள் உங்களை உணர்ந்துவிட்டால், உங்களுக்கு ஆசைகளோ ஏக்கங்களோ இருக்காது. மேலும், “இப்போது என்னிடம் எல்லாம் இருக்கின்றது. நான் முழுமையான திருப்தியுடன் உள்ளேன்,” என்று நீங்கள் உணர்வீர்கள். இங்குள்ள கிருஷ்ண பக்தர்கள் உங்களது நாட்டைச் சார்ந்தவர்கள். முன்னர் அவர்களும் வாழ்வில் விரக்தியுற்றிருந்தனர். ஆயினும், தற்போது அவர்கள் முழுமையை உணர்வதால் பாடி ஆடுகின்றனர்.

பரவச நடனம்

இந்த நடனமானது நாய்களின் நடனத்தைப் போன்றதல்ல; உணர்வுபூர்வமான நடனம். நடனமாடும் அனைவரும் கடவுளைப் புரிந்துகொண்டு அவருடனான தமது உறவை உணர்ந்தவர்கள். எனவே, அவர்களது நடனம் சாதாரணமானதன்று, இஃது இறையன்பின் நடனம். இந்த நடனம், “ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே” என்னும் மஹா மந்திரத்தை உச்சரிக்கும் அனைவருக்கும் பொதுவானதாகும்.

நீங்கள் இளைஞர்கள் நானோ எந்த நேரமும் மரணிக்கக்கூடிய வயோதிகன். எனவே, இந்த இயக்கத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, உங்களது நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த இயக்கத்தைப் பற்றி பிரச்சாரம் செய்யுங்கள் என்று உங்களை வேண்டுகிறேன். பொதுவாக அமெரிக்கரின் செயலை பிற நாட்டினர் நகல் செய்வது வழக்கம். நான் உலகம் முழுவதும் பயணம் செய்து வருகிறேன். மற்ற நாடுகள் வானுயர்ந்த கட்டிடங்கள் மற்றும் இதர விஷயங்களில் உங்களது நாட்டை நகல் செய்வதைக் காண்கிறேன். எனவே, நீங்கள் கிருஷ்ண பக்தராகி, பகவத் பிரேமையில் ஆடிப் பாடினால், உலகம் முழுவதும் உங்களைப் பின்பற்றும். இவ்வாறாக, ஒட்டுமொத்த உலகமும் எந்தவிதத் துன்பமும் அல்லாத ஆன்மீக உலகமாக, வைகுண்டமாக மாறும்.
மிக்க நன்றி!

(தமிழாக்கம்: இராம கிங்கர தாஸ்)

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives