எளிய வாழ்வும் உயர்ந்த சிந்தனையும்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

நவீன உலகின் தேவையற்ற பொருட்களின்றி எளிமையான முறையில் உயர்ந்த சிந்தனையுடன் வாழ்வது குறித்து ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடர்களுடன் மேற்கொண்ட ஓர் உரையாடல்.

ஸ்ரீல பிரபுபாதர்: மேற்கத்திய நாகரிகம் மிகவும் மோசமான நாகரிகம், வாழ்வின் தேவைகளை செயற்கையாக அதிகரிக்கச் செய்கிறது. உதாரணமாக, மின்விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். மின்விளக்கு எரிவதற்கு ஜெனரேட்டர் தேவை, ஜெனரேட்டர் ஓடுவதற்கு பெட்ரோலியம் தேவை. பெட்ரோலியம் தீர்ந்துவிட்டால் எல்லாம் நின்று விடும். ஆனால் அந்த பெட்ரோலியத்தை எடுப்பதற்காக மிகுந்த இன்னல்களுடன் அதனை நீங்கள் தேட வேண்டியுள்ளது, பூமிக்கடியில் மட்டுமின்றி சிலசமயங்களில் கடலின் நடுவிலும் மிகவும் ஆழமாக தோண்ட வேண்டியுள்ளது. இஃது உக்ரகர்ம, அல்லது பயங்கரமான தொழில் எனப்படுகிறது.

 

இதே தேவையினை சில ஆமணக்கு விதைகளை வளர்த்து, செக்கிலிட்டு எண்ணைய் எடுத்து, ஒரு அகலில் ஊற்றி, திரியை வைத்தால் பூர்த்தி செய்து கொள்ளலாம். மின்சாரத்தைக் கொண்டு ஒளியமைப்பை நீங்கள் முன்னேற்றி உள்ளீர்கள் என்பதை நாங்கள் ஏற்கிறோம், ஆனால் விளக்கெண்ணெயில் இருந்து மின்விளக்கிற்கு முன்னேறுவதற்காக நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. நடுக் கடலுக்குச் சென்று, பூமியில் துளையிட்டு பெட்ரோலியத்தை எடுக்க வேண்டியுள்ளது, இதனால் உங்களது வாழ்வின் உண்மையான குறிக்கோள் இழக்கப்படுகிறது.

 

உங்களுடைய நிலை மிகவும் அபாயகரமாக உள்ளது, மீண்டும்மீண்டும் மடிந்து பல்வேறு உயிரினங்களில் தொடர்ந்து பிறவியெடுக்கின்றனர். இந்த பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவது உங்களுடைய உண்மையான பிரச்சனை. இப்பிரச்சனை மனித வாழ்வில் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். உங்களிடம் தன்னுணர்வை அடைவதற்கான முன்னேறிய புத்தி உள்ளது. ஆனால் நீங்களோ உங்களின் புத்தியை தன்னுணர்விற்கு உபயோகிப்பதற்குப் பதிலாக, விளக்கெண்ணெயிலிருந்து மின்விளக்கிற்கு முன்னேறு வதற்காக உபயோகித்து வருகிறீர்கள். இதுவே நிலை.

 

சீடர்: உங்களின் அறிவுரை நடைமுறைக்கு ஒத்துவராதது என்று மக்கள் சொல்வார்கள். மின்சாரம் விளக்கு எரிப்பதற்கு மட்டுமன்றி, வேறு எத்தனையோ பலன்களைக் கொடுக்கிறது. நம்முடைய பெரும்பாலான நவீன வசதிகள் ஏறக்குறைய மின்சாரத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.

 

ஸ்ரீல பிரபுபாதர்: இப்பிறவியில் நீங்கள் மிகவும் வசதியாக வாழலாம், ஆனால் மறுபிறவியில் நீங்கள் ஒரு நாயாக மாறலாம்.

 

சீடர்: மக்கள் இதனை நம்புவதில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், இதுவே உண்மை. உதாரணமாக, ஒரு பாலகன் தான் ஓர் இளைஞனாக வளரப் போகிறேன் என்பதை அறியாமல் இருக்கலாம், ஆனால் அவனது தாய் தந்தையர் அதனை அறிவர். “இல்லை, நான் இளைஞனாக வளர மாட்டேன்,” என்று பாலகன் கூறினால், அது குழந்தைத்தனம். பாலகன் இளைஞனாக வளர்வான் என்பதை தாய் தந்தையர் அறிவர். மேலும், அவன் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக அவனுக்கு கல்வியளிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் அறிவர். இதுவே பொறுப்பாளிகளின் கடமை.

 

அதுபோல, ஆத்மாவின் பல்வேறு பிறவிகளைப் பற்றி நாம் பேசும்போது, ஓர் அயோக்கியன், “எனக்கு இதில் நம்பிக்கை இல்லை,” என்று சொல்லலாம், ஆயினும் அஃது உண்மையே. மறுபிறவி உண்மையல்ல என்று அயோக்கியனும் பைத்தியக்காரனும் சொல்லலாம், ஆனால் அவனது வாழ்வின் செயல்களுக்கு ஏற்ப அவன் வேறோர் உடலை ஏற்க வேண்டும் என்பதே உண்மை: காரணம் குணஸங்கோ ஸத்அஸத்யோனிஜன்மஸு.

 

சீடர்: “ஆமணக்கு விதையை வளர்ப்பதும் விவசாயம் செய்வதும் மிகவும் கடினமான வாழ்க்கை. தொழிற்சாலைக்குச் சென்று அங்கே எட்டு மணி நேரம் பணி புரிந்து, பணத்துடன் வீட்டிற்கு வந்து அனுபவிப்பதே சுலபமானது,” என்று யாரேனும் கூறினால்?

 

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் அனுபவிக்கலாம், ஆனால் அவ்வாறு அனுபவிப்பதால், நீங்கள் வாழ்வின் உண்மையான குறிக்கோளை மறந்துவிடுகிறீர்கள். இதுவா புத்திசாலித்தனம்? உங்களது அடுத்த பிறவியை முன்னேற்றிக் கொள்வதற்காக இந்த மனித உடல் உங்களுக்கு தரப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் உங்களது மறுபிறவியில் நாயாகப் பிறக்க நேர்ந்தால், அது வெற்றியா? கிருஷ்ண உணர்வின் விஞ்ஞானத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அப்போது, நாயாக (Dog) மாறுவதற்குப் பதிலாக, கடவுளைப் (God) போன்று மாறுவீர்கள்.

 

சீடர்: ஒருமுறை, இலண்டனில் உள்ள ஜான் லேனனின் எஸ்டேட்டில், இன்றைய பல்வேறு பிரச்சனைகளுக்கு டிராக்டரே காரணம் என்று நீங்கள் கூறினீர்கள். இஃது இளைஞர்களின் வேலைகளைப் பறித்துக் கொண்டு, அவர்களை வேலைக்காக நகரத்தை நோக்கி விரட்டுகின்றது, அவர்களோ புலனுகர்ச்சியில் மாட்டிக் கொள்கின்றனர். கிராம வாழ்க்கை எளிமையாகவும் மிகவும் அமைதியாகவும் இருப்பதை நான் கவனித்துள்ளேன். அங்கே ஆன்மீகத்தைப் பற்றி சிந்திப்பது எளிது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். கிராமங்களில் இடர்பாடுகள் குறைவு, மூளைக்கும் வேலை குறைவு. உங்களின் உணவிற்காக சற்று வேலை செய்தால்போதும், மீதமுள்ள நேரத்தில் உங்களை கிருஷ்ண உணர்வில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இதுவே சீரான வாழ்க்கை.

 

(ஒரு பூவைக் கையில் எடுத்தபடி) இந்த மலரிலுள்ள மெல்லிய இதழ்களைப் பாருங்கள். இதனை யாராவது எந்த தொழிற்சாலையிலாவது உற்பத்தி செய்ய முடியுமா–எவ்வளவு மெல்லிய இதழ்கள்! இதன் நிறம் எவ்வளவு கவர்ச்சிகரமாக உள்ளது! ஒரே ஒரு மலரைப் பற்றி ஆராய்ந்தால் போதும், உங்களுக்கு இறையுணர்வு கிட்டும். இயற்கை என்னும் ஓர் இயந்திரம் உள்ளது, அந்த இயந்திரத்திலிருந்து அனைத்தும் வருகின்றன. ஆனால் இந்த இயந்திரத்தை உருவாக்கியது யார்?

 

சீடர்: மலர்கள் கிருஷ்ணரால் சிந்தித்து வண்ணம்

தீட்டப்பட்டுள்ளன என்பதை மக்கள் அறியாமல் இருப்பதாக நீங்கள் இலண்டனில் கூறினீர்கள்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். ஓவியரின் உதவியின்றி மலர்கள் இவ்வளவு அழகாக தோன்ற முடியும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? இது முட்டாள்தனம். இயற்கை என்றால் என்ன? அது கிருஷ்ணரின் இயந்திரம். அனைத்தும் கிருஷ்ணரின் இயந்திரத்தினால் செய்யப்படுகின்றன.

 

எனவே, நியூ விருந்தாவனத்தில் உங்களது வாழ்க்கை முறையை முன்னேற்றுங்கள். திறந்த வெளியில் வாழுங்கள், தேவையான உணவு தானியங்களைப் பயிரிடுங்கள், தேவை யான பாலை உற்பத்தி செய்யுங்கள், நேரத்தை மிச்சப்படுத்தி ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரியுங்கள். எளிமையான வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை–இதுவே சீரான வாழ்க்கை. ஆனால் உங்களது வாழ்வின் அவசியமற்ற தேவை களை நீங்கள் அதிகரித்தால், கிருஷ்ண உணர்வு என்னும் உண்மையான வேலையை மறந்துவிட வேண்டியதுதான்–அது தற்கொலைக்கு ஒப்பானது. இத்தகு தற்கொலையை நிறுத்த நாம் விரும்புகிறோம். அதே சமயத்தில் நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தை மக்கள் நிறுத்த வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தவில்லை. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவினால் வழங்கப்பட்ட எளிய வழிமுறையான ஹரே கிருஷ்ண மந்திரத்தை நாங்கள் அளிக்கிறோம். உங்களது நுட்பமான தொழிற்சாலையிலும் நீங்கள் இதனை உச்சரிக்கலாம். இதிலென்ன சிரமம்? அங்குள்ள பட்டன்களைத் தட்டிவிட்டுக் கொண்டே, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று நீங்கள் உச்சரிக்கலாம்.

 

சீடர்: மக்கள் இந்த நாம உச்சாடனத்தை ஏற்றுக் கொண்டால், படிப்படியாக அவர்கள் தொழில்நுட்பத்தைக் கைவிட்டு விடுவார்களோ?

 

ஸ்ரீல பிரபுபாதர்: நிச்சயமாக.

 

சீடர்: அப்படியெனில், நீங்கள் அவர்களின் அழிவிற்கான விதையை விதைக்கிறீர்கள்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, அழிவிற்காக அல்ல, ஆக்கத்திற்காக. மீண்டும்மீண்டும் பிறந்து இறப்பதும் தொடர்ச்சியாக உடலை மாற்றிக் கொண்டே இருப்பதுமே அழிவாகும். ஆனால் நமது முறையில், நீங்கள் என்றும் வாழ்வீர்கள்–த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி (பகவத் கீதை 4.9): நீங்கள் மற்றுமொரு ஜடவுடலை அடையப் போவது இல்லை. ஆனால் கிருஷ்ண உணர்வு இல்லையேல், ததா தேஹாந்தரப்ராப்தி:, நீங்கள் மற்றொரு உடலை ஏற்றாக வேண்டும், துன்பப்பட்டே தீர வேண்டும். எனவே, எது சிறந்தது? ஒன்றன்பின் ஒன்றாக ஜடவுடலை ஏற்பதா, அல்லது ஜடவுடல் அற்ற நிலையைப் பெறுவதா? நாம் நமது துயரங்களை இப்பிறவியுடன் முடித்துக் கொண்டால், அது புத்திசாலித்தனம். ஆனால் மற்றொரு உடலைப் பெற்று துன்புறுவோமானால், அது புத்திசாலித்தனம் அல்ல. நீங்கள் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ளாவிடில், மற்றொரு உடலை கண்டிப்பாக ஏற்றேயாக வேண்டும். இதற்கு மாற்றுவழியே இல்லை.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives