தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.

இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் முதல் அத்தியாயத்தையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் இரண்டாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.

கீதையின் உட்பொருள் சுருக்கம்

முதல் அத்தியாயம் – சில வரிகளில்

போரிடுவதற்காக குருக்ஷேத்திரத்தில் கூடியவர்கள் என்ன செய்தனர் என்ற திருதராஷ்டிரரின் கேள்வியுடன் பகவத் கீதை தொடங்குகின்றது. இருதரப்பு சேனைகளின் பலத்தை துரியோதனன் மதிப்பிட, பீஷ்மர் தனது சங்கை முழங்கி அவனை மகிழ்வித்தார். வெற்றிக்கான அனைத்து அறிகுறிகளும் பாண்டவர்களின் பக்கமிருக்க, தனது பக்தனுக்காக தேரோட்டியின் பணியை ஏற்றிருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் ரதத்தை இருதரப்பு சேனைகளுக்கு மத்தியில் நிறுத்துமாறு அர்ஜுனன் வேண்டினான். சேனைகளுக்கு மத்தியில் வந்த அர்ஜுனன், உறவினர்களைக் கண்டு, பாசத்தால் மூழ்கி, தன்னால் போரிட இயலாது என்பதற்குப் பல்வேறு காரணங்களைக் கூறி, சோகத்தால் மூழ்கியபடி ரதத்தில் அமர்ந்துவிட்டான்.

அர்ஜுனனின் இதர சந்தேகங்களும் சரணடைதலும்

இரண்டாம் அத்தியாயத்தின் தொடக்கத்தில், கண்ணீர் மல்க அமர்ந்திருந்த அர்ஜுனனைக் கண்ட ஸ்ரீ கிருஷ்ணர் தனது உபதேசத்தை மெல்ல ஆரம்பித்தார். கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் பேசும்போதெல்லாம், ஸ்ரீ பகவான் உவாச என்று கூறப்பட்டுள்ளது. பிரம்மன், பரமாத்மா, பகவான் என்று மூன்று நிலைகளில் உணரப்படும் பரம்பொருளின் இறுதிநிலை பகவான் எனப்படுகிறது. செல்வம், புகழ், பலம், அழகு, அறிவு, தியாகம் ஆகிய ஆறு ஐஸ்வர்யங்களையும் முழுமையாக பெற்றிருப்பதால், ஸ்ரீ கிருஷ்ணர், இங்கே பகவான் என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு சமமாகவோ அவரைவிட உயர்வாகவோ யாரிடமும் இந்த ஐஸ்வர்யங்கள் இல்லை என்பதால், கிருஷ்ணரே பகவான், முழுமுதற் கடவுள்ஶிஇவ்வுண்மை, கீதை முழுவதும் வியாபித்துள்ளது.

அர்ஜுனனிடம் திடீரென்று எழுந்துள்ள இத்தகு களங்கங்கள் பண்புள்ள மனிதனுக்கு உகந்தவை அல்ல என்றும் அவமானத்தைக் கொடுப்பவை என்றும் கூறிய ஸ்ரீ கிருஷ்ணர், அற்பமான பலவீனத்தை விட்டுவிட்டு போரிடும்படி அறிவுறுத்தினார். ஆனால் அர்ஜுனனோ தனது வாதத்தைத் தொடர்ந்தான்: எதிரில் நிற்பவர்கள் எனது வழிபாட்டிற்குரிய பீஷ்மரும் துரோணரும். எதிரிகளைக் கொல்லும் கிருஷ்ணா, நீ உமது ஆசிரிய ரான சாந்திபனி முனிவரையும் பாட்டனா ரான உக்ரசேனரையும் கொல்வாயா?” மேலும், இந்த மஹாத்மாக்களைக் கொன்று வாழ்வதைக்காட்டிலும் பிச்சை யெடுப்பதே மேல் என்றும், அவர்கள் கொல்லப்பட்டால் தாம் அனுபவிப்பவை அனைத்திலும் இரத்தக்கறை படிந்திருக் கும் என்றும் உரைத்தான்.

இவ்வளவு காரணங்களைக் கண்டபோதிலும், போரிடுதல் தனது கடமை என்பதையும் உணர்ந்திருந்த காரணத்தால், என்ன செய்வதென்று தனக்குப் புரியவில்லை என்று கூறி, தன் குழப்பத்திற்குத் தீர்வு கொடுங்கள் என்று மன்றாடியவண்ணம் அர்ஜுனன் தன்னை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சீடனாக ஒப்படைத்தான். அர்ஜுனனைப் போன்ற மிகச்சிறந்த தகுதிவாய்ந்த நபராக இருந்தாலும், வாழ்வின் குழப்பங்களுக்குத் தீர்வு ஏற்பட பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அல்லது அவரது முறையான பிரதிநிதியிடம் சீடனாக சரணடைவது அவசியம் என்பதை இச்செயலிலிருந்து நாம் அறியலாம். கோவிந்தா, நான் போரிட மாட்டேன்,” என்று கூறி அமைதியான அர்ஜுனனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் புன்சிரிப்புடன் கீதையை உபதேசிக்கத் தொடங்கினார்.

நீ இந்த உடலல்ல, ஆத்மா

அர்ஜுனன் தன்னிடம் சரணடைந்த சீடன் என்பதால், நட்பு ரீதியிலான அனைத்து வார்த்தைகளையும் கைவிட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், உடனடியாக குருவின் ஸ்தானத்தை ஏற்று, பண்டிதனைப் போல நீ பேசினாலும், வருத்தப்பட வேண்டாதவற்றிற்காக வருத்தப்படுவதால், உண்மையில் நீ ஒரு முட்டாள்; அறிஞர்கள் இருப்பவர்களுக்காகவும் இறந்தவர்களுக்காகவும் வருந்துவதில்லை” என்று தனது சீடனைக் கண்டிக்கின்றார். போரினால் உறவினர்கள் இறந்துவிடுவர் என்று நினைத்த அர்ஜுனனிடம், நீயோ, நானோ, இங்குள்ள மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை, இனி இருக்கப்போவதும் இல்லை,” என்று கூறி, உடல் மட்டுமே அழிவிற்கு உட்பட்டது என்றும், உடலுக்குள் இருக்கும் ஆத்மா அழிவற்றது என்றும் விளக்கினார்.

இதுவே ஆன்மீக ஞானத்தின் முதல் பாடமாகும். இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவரும் தன்னை இந்த உடலாக நினைத்து, உடல் சம்பந்தமுடைய விஷயங்களை தன்னுடையதாக நினைத்துக் கொண்டுள்ளனர். அதன்படி, ஒவ்வொருவரும் தனது வீடு, மனைவி, மக்கள், உறவினர், நிலம், நாடு, ஜாதி, மதம் என்று தங்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். ஆனால் இத்தகு அடையாளங்கள் அனைத்தும் உடலைச் சார்ந்தவை. நாம் இந்த உடலே அல்ல என்னும்பட்சத்தில், இவ்வடையாளங்கள் அனைத்தும் போலியான அடையாளங்களே. ஆத்மாவை யாராலும் கொல்ல முடியாது, உடல் அழியும்போது ஆத்மா அழிவதில்லை. எந்த ஆயுதத்தினாலும் ஆத்மாவை வெட்டவோ, எரிக்கவோ, உலர்த்தவோ, நனைக்கவோ முடியாது.

உடலினுள் இருக்கும் ஜீவன், சிறுவயது, இளமை, முதுமை என பல பருவங்களைக் கடந்துசெல்வதைப் போல, மரணத்தின்போது வேறு உடலை அடைகிறான். இந்த உடல் மாற்றம், நாம் நமது பழைய கிழிந்துபோன ஆடையைத் துறந்து புதிய ஆடையை உடுத்திக் கொள்வதைப் போன்றதே. பிறந்தவர் அனைவருக்கும் மரணம் நிச்சயம்; மரணமடைந்தோர் அனை வருக்கும் மறுபிறவியும் நிச்சயம். நிதான புத்தியுடையோர் இந்த உடல் மாற்றத் தினால் பாதிக்கப்படுவதில்லை.

ஆத்ம ஞானத்தைப் பற்றிய இவ்விளக்கம், உறவினர்களின் மீதான அர்ஜுனனின் பாசத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணர் அளித்த பதிலாகும்.

குழம்பிய நிலையில் சீடனாக சரணடைந்த அர்ஜுனனிடம் கிருஷ்ணர் புன்சிரிப்புடன் உபதேசிக்கத் தொடங்குதல்

கடமையைச் செய்தால் இன்பமடையலாம்

அடுத்ததாக, கடமையைச் செய்வதால் மகிழ்ச்சியடையலாம் என்னும் கர்ம காண்ட கொள்கையை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விளக் கினார். சத்திரியனான அர்ஜுனனின் கடமை தர்மத்திற்காகப் போர் புரிவதே, அதைவிட சிறந்த கடமை அவனுக்கில்லை என்றும், அவன் போர் புரியத் தயங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். அவ்வாறு கடமையைச் செய்வதன் மூலம் ஸ்வர்க லோகத்தின் கதவுகள் திறக்கப்படும். மாறாக, கடமையைச் செய்யாவிடில், அதற் கான பாவத்தை அனுப விக்க வேண்டும்; சிறந்த போர்வீரன் என்னும் நற்பெயர் கெட்டுவிடும்; கோழை என்று மக்கள் அவதூறு செய்வர்; அவமானம் மரணத்தை விடக் கொடியது. போர்க் களத்தில் மடிந்தால் ஸ்வர்கம் செல்லலாம், வென்றால் இவ்வுலகை ஆளலாம்ஶீஎனவே, உறுதியுடன் எழுந்து போர்புரிவாயாக என்று அர்ஜுனனுக்கு பகவான் ஊக்கமளித்தார்.

ஆத்ம ஞானத்தை விளக்கிய பின்னர், கடமையைச் செய்து ஸ்வர்கத்தில் இன்பமடையலாம் என்னும் கீழ்நிலைக் கொள்கையை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுறுத்தியது சற்று ஆச்சரியத்தைத் தரலாம். நாம் இந்த உடலல்ல என்று முடிவான பின்னர், உடலால் கிடைக்கும் ஸ்வர்க லோக இன்பங்களை கிருஷ்ணர் எதற்காகப் பரிந்துரைக்க வேண்டும்?

போருக்குப் பின் தன்னால் மகிழ்ச்சியடைய முடியாது என்று அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கூறியிருந்தான்; அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் போரினால் எவ்வாறு இன்பமடையலாம் என்பது பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கினார். மேலும், தனது கடமையைச் செய்தால் (போர் புரிந்தால்) பாவம் வரும் என்று கூறிய அர்ஜுனனின் வாதத்தை கடமையைச் செய்யாவிடில் (போர் புரியாவிடில்) நிச்சயம் பாவம் வரும் என்று கூறியதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் முறியடித்தார்.

இருப்பினும், புலனின்பத்திற்காக கடமையைச் செய்தல் என்னும் இந்நிலையினை, புத்தி யோகம் என்னும் உயர்நிலையை எடுத்துரைத்ததன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் உடனடியாக கண்டிக்கின்றார்.

பாவத்தில் சிக்காமல் செயல்படுதல்

இன்பமடைவதற்காக கடமையைச் செய்தல் என்னும் நிலைக்கு அடுத்தபடியாக, கர்ம பந்தத்திலிருந்து முற்றிலும் விடுபடுவதற்குரிய புத்தி யோகத்தை இறைவன் விளக்குகின்றார். பக்தி யோகத்தின் பயிற்சி நிலையே புத்தி யோகம் எனப்படுகிறது. புத்தி யோகத்தின்படி செயல்பட்டால் பாவ விளைவுகள் ஒருவனை அண்டாது; இம்முயற்சியில் சற்றும் இழப்பு கிடையாது; சிறிதளவு முன்னேற்றமும் மிகப்பெரிய பயத்திலிருந்து காப்பாற்றும். மேலும், இவ்வழியில் உள்ளவர்கள் ஒரே இலட்சியத்துடனும் திடமான உறுதியுடனும் இருப்பர்.

ஆனால் சிற்றறிவுடைய மனிதர் களோ பக்தி யோகத்தில் செயல்படாமல், வேதங்களின் மலர்ச் சொற்களால் கவரப் பட்டு ஸ்வர்க லோகங்களுக்கு ஏற்றம் பெறுவதையும் புலனின்பத்தையுமே விரும்புகின்றனர். அத்தகு மக்களின் இதயத்தில் பக்தித் தொண்டிற்கான திடமான உறுதி உண்டாவதில்லை. எனவே, வேதங்களின் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவனாக ஒருவன் மாற வேண்டும். இலாப நஷ்டம், இன்ப துன்பம், வெற்றி தோல்வி போன்ற இருமைகளிலிருந்து விடுபட்டு பக்தி யோகத்தில் ஈடுபட வேண்டும்.

கிணற்றின் தேவைகள் அனைத்தும் பெரும் நீர்த்தேக்கத்தினால் பூர்த்தி செய்யப்படுவதுபோல, வேதங்களின் நோக்கங்கள் அனைத்தும் அதனை அறிந்த பக்தனால் அடையப்படுகின்றன. வேதங்களைப் பயில்வதன் நோக்கம் கிருஷ்ணரை அறிவதே; எனவே, கிருஷ்ணரின் திருநாமத்தைச் சொல்பவன் எப்படிப்பட்ட இழிந்த குலத்தில் பிறந்திருந்தாலும், அவன் எல்லா புனித ஸ்தலங்களில் நீராடி, எல்லா வேத இலக்கியங்களையும் பன்முறை கற்று, யாகங்கள், தவங்கள் என எல்லாவற்றையும் ஏற்கனவே செய்தவனாவான். மேலும், அனைத்து மோசமான செயல்களையும் பக்தித் தொண்டின் உதவியால் தூரமாக வைத்துவிட்டு, அவன் கிருஷ்ணரிடம் சரணடைகிறான். அவ்வாறு சரணடைந்து பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவன் பாவ புண்ணியங்களின் விளைவுகளிலிருந்து விடுபடுகிறான்; முக்தி பெற்று, முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் திருத்தலமான வைகுண்டத்தை அடைகிறான்.

புத்தி யோகம் எனப்படும் பக்தி யோகத்தை விளக்கியதன் மூலம், பாவ விளைவுகளைக் கண்ட அர்ஜுனனின் பயத்தை கிருஷ்ணர் அகற்றினார். புத்தி யோகத்தைப் பயிற்சி செய்பவன், வேதச் சடங்குகளுக்கு அப்பாற்பட்டவன் என்று கூறியதன் மூலம், குலம் நாசமடையும் என்னும் அர்ஜுனனின் வாதமும் முறியடிக்கப்பட்டது. மேலும், புத்தி யோகத்தில் நிலைபெற்றவனிடம் குழம்பிய நிலை என்ற கேள்விக்கே இடமில்லை.

அர்ஜுனன் எடுத்துரைத்த அனைத்து வாதங்களும் இத்துடன் (இரண்டாம் அத்தியாயத்தின் 53ஆவது ஸ்லோகத்துடன்) கிருஷ்ணரால் முறியடிக்கப்பட்டுவிட்டன. இனி தொடர்பவை அர்ஜுனனின் சந்தேகங்களும் ஸ்ரீ கிருஷ்ணரின் விடைகளுமே.

சிறுவயது, இளமை, முதுமை ஆகிய பருவங்களைக் கடந்து செல்லும் ஆத்மா, மரணத்தின் போது மற்றொரு உடலை அடைகிறான்.

புத்தி யோகத்தில் நிலைபெற்றவனின் அறிகுறிகள்

புத்தி யோகத்தில் நிலைபெறும்படி கிருஷ்ணர் அறிவுறுத்த, அவ்வாறு நிலைபெற்றவனின் அறிகுறிகள் யாவை, அவனது மொழி என்ன, எவ்வாறு பேசுவான், எவ்வாறு அமருவான், எவ்வாறு நடப்பான் என்ற கேள்விகளை அர்ஜுனன் எழுப்பினான்.

மனக் கற்பனையில் எழும் புலனின்பத்திற்கான எல்லா ஆசைகளையும் துறந்து, தூய்மையடைந்த மனதுடன் தன்னில் திருப்தியடைந்து வாழ்வதே ஸ்தித-பிரக்ஞனின் (தன்னில் நிலைபெற்றவனின்) அறிகுறி என்று விளக்கமளித்த ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனின் இதர கேள்விகளுக்கும் தொடர்ந்து பதிலளிக்கின்றார்.

பேசும் விதம்: பேசுதல் என்பது மற்றவர்களின் செயல்களுக்கு ஒருவன் எவ்வாறு பிரதிபலிக்கின்றான் என்பதைக் காட்டும். உடலாலும் மனதாலும் எழும் துன்பங்கள், இதர உயிர்களால் எழும் துன்பங்கள், இயற்கையினால் எழும் துன்பங்கள் ஆகிய மூவகைத் துன்பங்கள் அவனை நெருங்கும்போது அவன் பாதிக்கப்பட மாட்டான். பற்றுதல், பயம், கோபம் போன்றவை அவனைத் தாக்கினாலும், அவன் அவற்றிலிருந்து விடுபட்டு வாழ்வான். நன்மை தீமை, புகழ்ச்சி இகழ்ச்சி என எது நேர்ந்தாலும் பாதிக்கப்படாமல் இருப்பான்.

அமரும் விதம்: அமருதல் என்பது புலன்களை எவ்வாறு ஒருவன் செயல்படுத்தாமல் உள்ளான் என்பதைக் குறிக்கும். ஆமை எவ்வாறு தன் அங்கங்களை கூட்டிற்குள் இழுத்துக் கொள்ளுமோ, அதுபோல ஸ்தித-பிரக்ஞன் தனது புலன்களை அபாயகரமான நேரங்களில் (புலனின்பப் பொருள்களின் தொடர்பு கிட்டும்போது) உள்ளிழுத்துக் கொள்கிறான். பக்தித் தொண்டினால் உயர்ந்த சுவையை அவன் அடைவதால், ஜடவுலகின் தாழ்ந்த சுவைகளில் அவன் விருப்பம் காட்டுவதில்லை. சக்தியுடைய புலன்கள் யோகியையும் திசைதிருப்பக்கூடியவை என்பதால், ஸ்தித-பிரக்ஞன் தனது புலன்கள் அனைத்தையும் கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுத்துகிறான். அவ்வாறு ஈடுபடுத்தாமல், புலனின்பப் பொருள்களை தியானிப்பவன், அவற்றில் பற்றுதல் கொள்கிறான்; பற்றுதலிலிருந்து காமமும், காமத்திலிருந்து கோபமும், கோபத் திலிருந்து மயக்கமும், மயக்கத்திலிருந்து நினைவிழப்பும், நினைவிழப்பிலிருந்து அறிவு இழப்பும், அதிலிருந்து வீழ்ச்சியும் ஏற்படுகிறது.

நடக்கும் விதம்: நடத்தல் என்பது புலன்களை ஒருவன் எவ்வாறு செயல்படுத்துகிறான் என்பதைக் குறிக்கும். விருப்பு வெறுப்பின்றி முக்திக்கு உகந்த வழியில் அவன் புலன்களை செயல்படுத்துகிறான். படகை கடுங்காற்று அடித்துச் செல்வதைப் போல, அலைபாயும் ஒரே ஒரு புலன்கூட மனிதனின் அறிவை அடித்துச் சென்றுவிடும் என்பதை உணர்ந்த பக்தன், பொதுமக்களின் இரவில் (அதாவது, ஆன்மீக விஷயங்களில்) விழித்தும், அவர்களது பகலில் (அதாவது, புலனின்ப விஷயங்களில்) உறங்கியும் வாழ்கிறான். அவன் அவ்வாறு வாழ்வதால், எத்தனையோ நதிகள் கலந்தாலும் சஞ்சலமின்றி இருக்கும் கடலைப் போன்று, எத்தனையோ ஆசைகள் அவனை அணுகினாலும், அவன் சஞ்சலமின்றி இருக்கின்றான்.

பொதுவாக, ஸாங்கிய யோகம் எனும் தலைப்பில் அறியப்படும் இந்த அத்தியாயம், கீதையின் அனைத்துக் கருத்துக்களையும் சுருக்கமாக உரைப்பதால், கீதையின் உட்பொருள் சுருக்கம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அர்ஜுனனுக்கு எழுந்த சந்தேகம் குறித்து அடுத்த இதழில் (மூன்றாம் அத்தியாயத்தில்) காண்போம்.

மேலும் பக்கத்தை பார்க்க :-

அறிமுகம், அத்தியாயம் : – ஒன்றுஇரண்டு,  மூன்றுநான்கு,  ஐந்து,  ஆறு,  ஏழு,  எட்டு,  ஒன்பது,  பத்து.  பதினொன்று,  பன்னிரண்டு, பதின்மூன்றுபதினான்குபதினைந்துபதினாறுபதினேழுபதினெட்டு