பகல் கனவு, இரவு கனவு

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

பகல் கனவு, இரவு கனவு

பின்வரும் உரையாடலில், கிருஷ்ண பக்தியில் ஈடுபடாவிடில் நமது செயல்கள் அனைத்தும் பகல் நேரத்தில் காணப்படும் கனவே என்பதை ஸ்ரீல பிரபுபாதர் ஒரு பல்கலைக்கழக மாணவருக்கு எடுத்துரைக்கின்றார்.

மாணவன்: உங்களது புத்தகங்களில் இந்த உலகம் கனவினைப் போன்றது என கூறியுள்ளீர்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். இது கனவுதான்.

மாணவன்: இஃது எவ்வாறு கனவாகும்?

ஸ்ரீல பிரபுபாதர்: ஏனெனில், இதற்கு எந்த மதிப்பும் இல்லை. நேற்று இரவு உங்களுக்கு தோன்றிய கனவிற்கு இப்பொழுது மதிப்பில்லை, அது முடிந்துபோன ஒன்று. அதுபோலவே, இன்று இரவு நீங்கள் உறங்கும்போது உங்களுடைய தற்போதைய செயல்களுக்கு மதிப்பில்லை. நீங்கள் கனவில் வேறு விஷயங்களையே காண்பீர்கள். இரவில் கனவு காணும்பொழுது, “எனக்கு வீடு உள்ளது, மனைவி இருக்கிறாள்” போன்றவற்றை நீங்கள் நினைக்கவே மாட்டீர்கள். எல்லாவற்றையும் நீங்கள் மறந்துவிடுவதால், இவையனைத்தும் கனவே.

மாணவன்: இப்போது நாம் செய்யும் செயல்கள் உண்மையா, இல்லையா?

ஸ்ரீல பிரபுபாதர்: இஃது எப்படி உண்மையாகும்? நீங்கள் இதனை இரவில் மறந்துவிடுகிறீர்களே. நீங்கள் உறங்கும்பொழுது, உங்களுக்கு அருகில் மனைவி இருப்பதையும் நீங்கள் படுக்கையில் உறங்குவதையும் உங்களால் நினைவு கொள்ள முடிகிறதா? மூவாயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று முற்றிலும் வித்தியாசமானதை காண்பீர்கள். அப்போது, உங்களுக்கு ஒரு வசிப்பிடம் உள்ளது என்பது ஞாபகத்திற்கு வருகிறதா?

மாணவன்: இல்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: இதுவே இரவில் நாம் காணும் கனவு. அந்தக் கனவில் நாம் இருக்கும்போது, நமது பகல்நேர செயல்கள் கனவாகி விடுகின்றன. எனவே, இரண்டும் கனவுகளே. நேற்று இரவு நீங்கள் பார்த்தது இன்று கனவானதுபோல், நீங்கள் இப்பொழுது பார்ப்பது இன்று இரவு கனவாகிவிடுகிறது. நீங்கள் வெறும் பார்வையாளர் மட்டுமே. நீங்கள் அந்த கனவையும் காண்கிறீர்கள், இந்த கனவையும் காண்கிறீர்கள். நீங்கள் (ஆத்மா) உண்மையானவர், ஆனால் நீங்கள் காண்பவையோ கனவுகள்.

மாணவன்: ஆனால், என்னுடைய தற்போதைய வாழ்க்கை உண்மையானது என்பதும், கனவு உண்மையல்ல என்பதும் எனது எண்ணம்.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. இந்த அனுபவங்கள் எதுவுமே உண்மையல்ல. இஃது எவ்வாறு உண்மையாக இருக்க முடியும்? இஃது உண்மையானால், இதனை எப்படி இரவில் மறக்க முடியும்? இரவில் இவை அனைத்தும் நினைவில் வருகிறதா?

மாணவன்: இல்லை, எனக்கு நினைவில் வருவதில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், இஃது எப்படி உண்மையாகும்? சென்ற இரவில் நீங்கள் கண்ட காட்சிகளை தற்போது உங்களால் நினைவில் வைக்க முடியவில்லை என்பதால், அதனை கனவு என்கிறோம். அதுபோலவே, தற்போதைய செயல்களை இரவில் மறந்து விடுவதால், இதுவும் ஒரு கனவே.

மாணவன்: ஆனால், என்னுடைய எண்ணம்…

ஸ்ரீல பிரபுபாதர்: இது பகல் கனவு, அஃது இரவு கனவு. அவ்வளவுதான்.

இரவில் கனவு காணும்பொழுது, அந்த கனவினை நீங்கள் உண்மை என்றுதான் நினைக்கிறீர்கள். கனவில் புலியைக் காணும்போது, புலி, புலி என கதறுகிறீர்கள். புலி எங்கே? அப்போது நீங்கள் அதனை உண்மையாக நினைக்கிறீர்கள், புலியைப் பார்க்கிறீர்கள், புலியால் கொல்லப்படப் போவதை உணர்கிறீர்கள். ஆனால் புலி எங்கே? ஓர் அழகான பெண்ணை கட்டித் தழுவுவதுபோல கனவு காண்கிறீர்கள். அந்த அழகிய பெண் எங்கே? ஆயினும், அவளை நீங்கள் கட்டிப்பிடிப்பது உண்மையில் நடக்கின்றது.

மாணவன்: உண்மையில் நடக்கின்றதா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், விந்து வெளிப்படுகிறதே. ஆனால் அந்தப் பெண் எங்கே? அது கனவு இல்லையா? அதே போன்று நிஜ வாழ்க்கை எனப்படும் இந்த அனுபவமும் கனவே. எனவே, இது மாயா-ஸுகாயா, மாயையான மகிழ்ச்சி எனப்படுகிறது. இரவில் ஓர் அழகான பெண்ணை தழுவுவதுபோல் நீங்கள் கனவு காண்கிறீர்கள், ஆனால் உண்மையில் அதுபோன்று ஏதுமில்லை. அதுபோலவே பகலில் நீங்கள் அடையும் எந்த முன்னேற்றமும் கனவே. மாயா-ஸுகாயா, நீங்கள் கனவு காண்கிறீர்கள்: “இந்த வழிமுறை என்னை மகிழ்வூட்டும், அந்த வழிமுறை என்னை மகிழ்வூட்டும்.” ஆனால் எல்லா வழிமுறைகளும் கனவுதான். இந்த பகல் கனவை நீங்கள் உண்மையென கருதுகிறீர்கள்; ஏனெனில், இதன் காலம் நீண்டதாக உள்ளது. இரவில் காணப்படும் கனவு அரைமணி நேரம் நீடிக்கிறது, பகல் கனவோ பன்னிரண்டு மணி நேரத்திற்கு மேலும் நீடிக்கிறது. இதுவே வித்தியாசமாகும். இது பன்னிரண்டு மணி நேர கனவு; அஃது அரை மணி நேர கனவு. ஆனால் உண்மையில் இரண்டும் கனவுகளே. இருப்பினும், இது பன்னிரண்டு மணி நேரம் நீடிப்பதால் இதனை உண்மையாக ஏற்றுக் கொண்டுள்ளோம். இதுவே மாயை.

மாணவன்: மாயை.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். மிருகத்திற்கும் உங்களுக்கும் வித்தியாசம் காண்கிறீர்கள். ஆனால் மிருகம் இறப்பதுபோல நீங்களும் இறப்பீர்கள் என்பதை மறந்துவிடுகிறீர்கள். அப்படியிருக்க அதில் என்ன முன்னேற்றம் உள்ளது? நீங்கள் நிலைத்திருப்பீர்களா? நீங்களும் இறந்துவிடுவீர்கள். எனவே, மிருகத்தைவிட எந்த விதத்தில் நீங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளீர்கள்? இதுவே வேத இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளது: ஆஹார-நித்ர-பய-மைதுனம் ச ஸாமான்யம் ஏதத் பஷுபிர் நராணாம். அதாவது, உண்ணுதல், உறங்குதல், உடலுறவு கொள்ளுதல், தற்காப்பு ஆகிய நான்கும் மிருகங்களின் வேலை. நீங்களும் அவற்றை மட்டுமே செய்வதால், நீங்கள் எவ்வாறு மிருகத்திலிருந்து மாறுபடுகிறீர்கள்?

நீங்களும் இறப்பீர்கள், மிருகமும் இறக்கும். அப்படியிருக்க உங்களது முன்னேற்றம் என்ன? “நான் நூறு வருடங்களுக்குப் பின் இறப்பேன், இந்த எறும்பு ஒரு மணிநேரம் கழித்து இறந்துவிடும்,” என்று நீங்கள் கூறினால், அஃது அறியாமையே. எவ்வளவு நேரம் என்பது பெரிதல்ல. மிகப்பெரிய இந்த பிரபஞ்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள்: உங்களது உடல் அழிவதுபோல இந்த பிரபஞ்சமும் அழிந்துவிடும். இயற்கையின் பாதையில் அனைத்தும் முழுவதுமாக அழிக்கப்படும்.

ஆகையினால் இதுவும் கனவே, ஆனால் இது நீண்ட நேரக் கனவு–இதுவே வேறுபாடு, வேறு எதுவுமில்லை. ஆனால் இதிலிருக்கும் நன்மை யாதெனில், இக்கனவில்கூட உண்மையை அதாவது கடவுளை நம்மால் உணர முடியும். அதுவே நன்மை. ஆகவே இக்கனவை உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை எனில், நீங்கள் அனைத்தையும் தவறவிடுகிறீர்கள் என்றே பொருள்படும்.

மாணவன்: அப்படியெனில், நான் பாதி உறக்கத்தில் உள்ளவனா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். இதனால்தான் வேத இலக்கியங்களில் கூறப்படுகிறது: உத்திஷ்ட ஜாக்ரதா, “எழுந்திரு, விழித்திரு,” பிராப்ய வரான் நிபோதத, “உனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்.” தமஸோமா ஜ்யோதிர் கம, “இருட்டில் இருக்காமல் வெளிச்சத்திற்கு வா.” இவை வேதங்களில் போதிக்கப்பட்டுள்ளவை. நாங்களும் இதையே கற்பிக்கிறோம். கிருஷ்ணர் என்னும் உண்மை இங்குள்ளது, இருட்டிலிருந்து வெளிப்பட்டு இந்த உன்னதமான உணர்வு நிலையை அடையுங்கள்.

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives