சாது சங்கம்

கிருஷ்ணரின் மீதான கவர்ச்சியை எழுச்சி பெறச் செய்யும் பக்த சங்கம்

வழங்கியவர்: ஜெய கோபிநாத தாஸ்

பக்தித் தொண்டின் அறுபத்தி நான்கு அங்கங்களை ஸ்ரீல ரூப கோஸ்வாமி அவர்கள் தனது படைப்பான பக்தி ரஸாம்ருத சிந்துவில் குறிப்பிட்டுள்ளார், அவற்றிலுள்ள ஐந்து அங்கங்கள் (திருநாம உச்சாடனம், ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டல், வைஷ்ணவர்களின் சங்கம், விக்ரஹ ஆராதனை, மதுராவில் வசித்தல் ஆகியவை) மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும், அவற்றின் மீதான ஓரளவு பற்றுதலும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்ற இதழ்களில், திருநாம உச்சாடனம், ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டல், விக்ரஹ ஆராதனை, மதுராவில் வசித்தல் ஆகியவற்றைக் கண்டோம். தற்போது, வைஷ்ணவர்களின் சங்கம் என்பது குறித்து அறியலாம்.

‘ஸாது-ஸங்க ’ஸாது-ஸங்க-   ஸர்வ-ஷாஸ்த்ரே கய

லவ-மாத்ர ஸாது-ஸங்கே     ஸர்வ-ஸித்தி ஹய

“தூய பக்தரின் சங்கத்தை ஒரு க்ஷணம் பெற்றாலும் எல்லா சித்திகளையும் அடைய முடியும் என்று எல்லா வேத சாஸ்திரங்களும் உறுதியளிக்கின்றன.”

யார் சாது?

பல போலி நபர்கள் காவி உடை தரித்து தன்னைத்தானே சாது/சந்நியாசி என்று பறைசாற்றிக் கொண்டு தகாத காரியங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் சாது சங்கத்தைப் பற்றிப் பேசினால் மக்கள் ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். சாதுக்களின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை சிதைந்து போயிருக்கும் இத்தருணத்தில் யார் சாது என்பதை உணர்த்த வேண்டியது மிகவும் அவசியமாகும். சாது என்பவர், காவி உடை அணிந்தவரோ, நீளமான தாடியுடையவரோ, ஊர் ஊராக சுற்றித்திரிபவரோ, பல நாள்கள் சாப்பிடாமல் உடல் ஒட்டிப் போயிருப்பவரோ, வாயிலிருந்து லிங்கம் எடுப்பவரோ, தொடுவதினால் நோயை குணப்படுத்துபவரோ அல்ல. யார் சாது என்பதை முறையாக அறியாமல், யாராவது ஒருவரை சாது என்று ஏற்றுக் கொண்டு, அதன்பின் அவரையே கடவுள் என்றும் ஏற்றுக் கொண்டு நாம் ஏமாற்றம் அடைந்தால், அதற்கு நாமே பொறுப்பாளிகள் ஆவோம். சாது சங்கம் மகத்தானதாக இருப்பினும், அதனை எடுத்துக்கொள்வதற்கு முன், ’யார் சாது’ என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வைரம் மகத்தானதுதான், ஆனால் அதனை வாங்குவதற்கு முன் அதுபற்றி தெரிந்து கொண்டு வாங்கச் செல்ல வேண்டும். இல்லையெனில், நாம் ஏமாற்றப்படுவது நிச்சயம். மக்கள் ஏமாறத் தயாராக இருக்கும் வரை ஏமாற்றுவதற்கு ஆட்கள் உருவாகுவார்கள். ஆகையால், யார் சாது என்பதை சாஸ்திரங்களிலிருந்து தெரிந்து கொள்ளுதல் அவசியம். ஒரு சாதுவானவர் (1) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீது அசையாத நம்பிக்கையுள்ளவர் (2) திடமான பக்தித் தொண்டில் ஈடுபடுபவர் (3) கிருஷ்ணரைப் பற்றிய விஞ்ஞானத்தில் நிபுணர் (4) அங்கீகரிக்கப்பட்ட குரு சீடப் பரம்பரையில் வருபவர் (5) தன்னை கிருஷ்ணருடைய சேவகனாக பாவிப்பவர், மேலும். 6) தானே கடவுளென்று ஒருபோதும் பிரகடனப்படுத்தாதவர்.

ஸ்ரீமத் பாகவதத்தில் (3.25.21) சாதுவின் அடையாளங்கள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன:

திதிக்ஷவ: காருணிகா:   ஸுஹ்ருத: ஸர்வ-தேஹினாம்

அஜாத-ஷத்ரவ: ஷாந்தா: ஸாதவ: ஸாது-பூஷனா:

“பொறுமை, கருணை, எல்லா உயிரினங்களிடமும் நட்பு, எதிரிகளில்லாமை, சாஸ்திரங்களின்படி நடத்தல், அமைதி போன்றவை சாதுவின் அடையாளங்களாகும்.” இவை மட்டுமின்றி சாது என்பவர், பகவானின் அன்புத் தொண்டில் இடைவிடாமல் எப்பொழுதும் ஈடுபடுபவராக இருத்தல் மிகவும் அவசியம். இதுவே சாதுவிற்கு உண்டான பரிட்சையாகும். (மேலும் விபரங்களுக்கு, பசுத்தோல் போர்த்திய புலிகள் என்னும் கட்டுரையைப் படிக்கவும்)

சங்கம் எவ்வாறு எடுத்துக் கொள்வது

சங்கம் எடுத்துக் கொள்ளும்பொழுது நாம் நமது உணர்வுகளையும் அனுபவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். சாது சங்கத்தை ஏற்றுக்கொள்ளும்போது சாதுக்களின் உணர்வுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். சங்கம் என்றால் மற்றவருக்கான அன்பை வளர்த்துக் கொள்ளுதல் என்று பொருள். குருவின் சங்கத்தை எடுத்துக் கொள்ளும் ஒரு சீடன், அந்த சங்கத்தை திடப்படுத்துவதற்கு நல்ல உறவு தேவை. நல்ல உறவை ஏற்படுத்துவதற்கான ஆறு விஷயங்களை மிகச்சிறந்த கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியரான ஸ்ரீல ரூப கோஸ்வாமி பிரபுபாதர் தனது படைப்பான உபதேசாமிருதத்தில் (ஸ்லோகம் 4) அழகாக கூறியிருக்கிறார்.

ததாதி ப்ரதிக்ருஹ்ணாதி குஹ்யம் ஆக்யாதி ப்ருச்சதி

புங்க்தே போஜயதே சைவ     ஷட்-விதம் ப்ரீதி-லக்ஷ்ணம்

“தானம் அளித்தல், தானம் பெற்றுக் கொள்ளுதல், மனதில் உள்ள இரகசியங்களை வெளிப்படுத்துதல், இரகசியங்களைக் கேட்டல், பிரசாதம் ஏற்றல், பிரசாதம் அளித்தல் ஆகிய ஆறுவிதமான செயல்கள், அன்பை வெளிப்படுத்தும் செயல்களாகும்.”

குருவிற்கும் சீடனுக்கும் உண்டான உறவில், ஒரு மாணவன் ஏதேனும் பொருளை அன்பளிப்பாக வழங்குகிறான், ஆனால் ஆசிரியர் ஏதேனும் அன்பளிப்பினை திருப்பித் தர வேண்டும் என்று அவன் எதிர்பார்ப்பதில்லை. ஆசிரியர் எப்படி, எதை மாணவனுக்குத் தருகிறார்? அவர் ஞானத்தை மாணவனுக்குத் தருகிறார்.

குரு சிஷ்ய உறவில் சீடன் குருவிற்கு பிரசாதம் கொடுக்க, அதனை குரு ஏற்றுக் கொள்கிறார். குரு தனது கருணையை மஹாபிரசாதமாக (குரு சாப்பிட்ட மீதம்) வழங்க, அதனை சீடன் ஏற்கிறான். தனது வாழ்வின் இரகசியங்களை குருவிடம் எடுத்துக்கூறி அதற்குண்டான தீர்வை சீடன் குருவிடமிருந்து பெறுகிறான். சீடனிடம் திருப்தியடைந்த குரு, சாஸ்திரத்தின் இரகசியங்களை சீடனுக்கு வெளிப்படுத்துகிறார். இதுவே உண்மையான சாது சங்கம்.

அன்பளிப்புகளை அளித்தல், அன்பளிப்புகளை பெற்றுக் கொள்ளுதல், பிரசாதம் ஏற்றல், பிரசாதம் அளித்தல், இரகசியங்களை (சாஸ்திர விஷயங்களை) கேட்டல், இரகசியங்களை வெளிப்படுத்துதல் ஆகிய ஆறு வழிகளில் சாது சங்கத்தை ஒருவரால் பெற்றுக் கொள்ள முடியும்.

எப்படிப்பட்ட சாது சங்கத்தை நிராகரிப்பது

ஸ்ரீமத் பாகவதத்திலுள்ள துருவ சரிதம் ஓர் அற்புதமான பகுதியாகும். ஐந்து வயது பாலகனாக இருந்த துருவன், தனது தந்தையின் மடியில் அமருவதற்கு விரும்பியபோது சிற்றன்னையினால் நிராகரிக்கப்பட்டான். மிகவும் சஞ்சலமடைந்த துருவன், தனது தந்தையைக் காட்டிலும் பாட்டனாரான பிரம்மாவைக்காட்டிலும் மாபெரும் இராஜ்ஜியத்தை அடைய வேண்டும் என்று உறுதி பூண்டான். அத்தகு இராஜ்ஜியத்தை அடைய தனது தாய் சுனிதியின் அறிவுரையின்படி, கடவுளைத் தேடி காட்டிற்குள் புகுந்தான். துருவனின் முயற்சியை கேள்விப்பட்ட நாரதர் அவனது உறுதியை பரிசோதிக்க விரும்பினார். “நீ சிறுவனாக இருக்கின்றாய். இந்த காட்டிற்குள் அலைந்து திரியாமல் உன் வயதுச் சிறுவர்களோடு விளையாடச் செல். நீ இராஜ புத்திரன், உனது உடல் மிருதுவானது. காட்டில் கடவுளைத் தேடி அலைவது மிகவும் கடினமானது. நீண்ட தவம் செய்ய வேண்டியது அவசியம். வயது முதிர்ந்த பின்னர் நீ காட்டிற்கு வரலாம். இப்பொழுது வீட்டிற்குச் செல்,” என்று நாரதர் துருவனிடம் கூறினார். அதற்கு துருவன், “கடவுளை எப்படிக் காண்பது என்பதை உங்களால் எனக்கு உபதேசிக்க முடிந்தால், கூறுங்கள். இல்லையெனில் என்னை மன்னியுங்கள்” என்று கூறினான். இதன் மூலம் நாம் அறிவது என்னவெனில், சாதுவிடம் சங்கம் கொள்ளும்பொழுது, முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் நாமம், ரூபம், குணம், மற்றும் லீலைகளை கேட்டறிந்து கொள்ள வேண்டும். அத்தகு வசதியை ஏற்படுத்தாத சங்கத்தை தவிர்க்க வேண்டும். சாது சங்கத்தின் மூலம் நாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பார்ப்பதில் அதிக ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உண்மையான சாது சங்கத்தில் துருவனின் ஆர்வத்தை உறுதி செய்த நாரதர், துருவனுக்கு ஓம் நமோ பகவதே வாஸுதேவாய என்னும் மந்திரத்தை வழங்கினார்.

பாகவதத்தில் கொடுக்கப்பட்டுள்ள மற்றொரு நிகழ்ச்சியில், பிராமண சிறுவனின் வேடத்தில் வந்த பகவான் விஷ்ணுவிற்கு மூன்றடி நிலத்தை தானமளிக்க பலி மகாராஜர் முடிவு செய்த போது, அவர் தனது குருவான சுக்ராசாரியரால் தடுக்கப்பட்டார். பகவானின் சேவையிலிருந்து தன்னைத் தடுத்த காரணத்தினால், மாமன்னர் பலி தனது குருவையே நிராகரித்தார். எனவே, பகவானின் சேவையில் நம்மை ஈடுபடுத்தாமல், நானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் போலி சாதுக்களையும் அவர்களது சங்கத்தையும் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டியது அவசியம்.

சாது சங்கத்தின் மகிமை

சாது சங்கத்தினால் எல்லா வித பக்குவத்தையும் அடைவோம் என்று அனைத்து வேத சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக, ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பல்வேறு உதாரணங்களை நாம் காணலாம். பக்திவேதாந்திகளுக்கு (பக்தியில் சிறந்த பக்தர்களுக்கு) சேவை செய்த காரணத்தினால் வேலைக்காரியின் மகனாக இருந்த ஐந்து வயது சிறுவன், பக்தியில் மிகவுயர்ந்த நிலையை அடைந்து, தனது அடுத்த பிறவியில் நாரதராக அவதரித்தார். சாது சங்கத்தை கருவிலேயே கிடைக்கப்பெற்ற பிரகலாதர், பிற்காலத்தில் மாபெரும் பக்தராக உருவெடுத்தார். சமீப காலத்தில்கூட, அதாவது, 1960களில் ஹிப்பிகள் என்று அறியப்பட்ட அமெரிக்க இளைஞர்கள், சந்தோஷத்தை தேடி அலைந்த வண்ணம் இன்னவென்று சொல்ல முடியாத பல விதமான தீய செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் சில அதிர்ஷ்டசாலிகள், தற்காலத்தின் மாபெரும் ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் தொடர்பை பெற்றதால், இன்று சிறந்த பக்தர்களாக திகழ்வதையும், நமது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை வழிநடத்திச் செல்வதையும் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

வேலைக்காரியின் மகனாக இருந்த ஒரு சிறுவன், பக்தியில் சிறந்த வேதாந்திகளுடன் சங்கம் கொண்டதால், தனது அடுத்த பிறவியில் நாரதராக உயர்வு பெற்றார்.

அன்றாட வாழ்வில் சாது சங்கம்

சாதுக்களின் சங்கமில்லையெனில் ஒருவர் பக்தியில் முன்னேற்றம் அடைவதென்பது இயலாத காரியம். இஸ்கான் கோவில்களில் தினசரி நடைபெறும் ஸத்சங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதன் மூலம் மிகச்சிறந்த பலனை அடைய முடியும். கோவிலிலிருந்து தொலைவில் வசிப்பவர்கள் குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது கோவிலுக்குச் சென்று அங்கு வசிக்கக்கூடிய பக்தர்களுடனும் வருகை தரும் இதர பக்தர்களுடனும் சங்கம் பெற்று ஆன்மீக வாழ்வில் முன்னேற்றமடைய முடியும்.

About the Author:

ஜெய கோபிநாத தாஸ், அவர்கள் இஸ்கானின் பெரம்பூா் கிளையில் முழு நேர பிரம்மச்சாரியாக தொண்டாற்றி வருகிறார்.

Leave A Comment