வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

பகவத் கீதையில் ஆர்வம் காட்டும் பெரும்பாலான நபர்களிடம், “கீதையின் முக்கிய உபதேசம் என்ன?” என்று கேட்டால், “கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே–இதுதான் கீதையின் முக்கிய உபதேசம்” என பதிலளிப்பது வழக்கம். இவர்களில் யாரும் அநேகமாக பகவத் கீதையைப் படித்தவர்கள் அல்ல, அப்படியே படித்திருந்தாலும், கீதையை தன் மனம்போனபோக்கில் விளக்கமளித்தவரின் உரையை அவர்கள் படித்திருப்பர். வேறு விதமாகக் கூறினால், பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய் எனும் உபதேசம் கீதையில் கொடுக்கப்பட்டுள்ளபோதிலும், அதுவே கீதையின் முக்கிய உபதேசம் அல்ல. ஏன், எப்படி? தொடர்ந்து படியுங்கள்.

கீதையின் முக்கிய உபதேசம்

பற்பல நபர்கள் தங்களது சொந்த அபிப்பிராயங்களை, கீதையின் முக்கிய உபதேசம் இதுதான், அதுதான் என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். கீதையை நாம் உண்மையாக தெரிந்துகொள்ள வேண்டுமெனில், கீதையிலேயே கூறப்பட்டுள்ளபடி, முறையான குரு சீடப் பரம்பரையிலிருந்து தேவையற்ற விளக்கங்கள் ஏதுமின்றி முழுமையாக பெற வேண்டும். அதன்படி, கீதையின் ஒன்பதாவது அத்தியாயத்தில், கிருஷ்ணர் தனக்குச் செய்யப்படும் பக்தித் தொண்டினை மிகவும் விரிவாக எடுத்துரைத்து, அதன் பெருமைகளைப் போற்றுகிறார். அந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில், அதனை கீதையின் மிக இரகசியமான அறிவு என்றும் கூறுகிறார். வேறு விதமாகக் கூறினால், பகவான் கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டாற்றுவதே கீதையின் மிக முக்கியமான உபதேசமாகும்.

இதனை மேலும் வலுவாக்கும் பொருட்டு, கீதையின் இறுதியில் கிருஷ்ணர் கூறுகிறார்:

ஸர்வ-குஹ்யதமம் பூய:ஷ்ருணு மே பரமம் வச:

இஷ்டோ மே த்ருடமிதிததோ வக்ஷ்யாமி தே ஹிதம்

“நீ எனக்கு மிகவும் பிரியமான நண்பன் என்பதால், என்னுடைய அறிவுரைகளில் மிகவும் உன்னதமான, எல்லாவற்றிலும் மிகமிக இரகசியமான ஞானத்தை நான் உனக்கு மீண்டும் கூறுகின்றேன். இஃது உனது நன்மைக்காக என்பதால் என்னிடமிருந்து கேட்பாயாக.” (பகவத் கீதை 18.64)

அதாவது, பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தில், மிக இரகசியமான அறிவு என்று கூறி கிருஷ்ணர் எந்த விஷயத்தைக் கூறினாரோ, அதே விஷயத்தினை அவர் தற்போது மீண்டும் அர்ஜுனனுக்குக் கூறுகிறார். ஒன்பதாம் அத்தியாயத்தின் இறுதியில் கூறிய அதே ஸ்லோகத்தினை சிறிய மாற்றத்துடன் கிருஷ்ணர் இங்கே அடுத்த ஸ்லோகத்தில் கூறுகிறார்.

மன்-மனா பவ மத்-பக்தோமத்-யாஜீ மாம் நமஸ்குரு

மாம் ஏவைஷ்யஸி ஸத்யம் தேப்ரதிஜானே ப்ரியோ  மே

“எப்போதும் என்னைப் பற்றி நினைத்து, எனது பக்தனாக ஆகி, என்னை வழிபட்டு, உனது வணக்கங்களை எனக்கு சமர்ப்பிப்பாயாக. இவ்வாறு நீ என்னை வந்தடைவாய் என்பதில் ஐயமில்லை. நீ எனக்கு மிகவும் பிரியமான நண்பன் என்பதால், இந்த சத்தியத்தை நான் உனக்கு அளிக்கின்றேன்.” (பகவத் கீதை 18.65)

அதாவது, கிருஷ்ணரிடம் சரணடைந்து அவருக்கு அன்புடன் பக்தித் தொண்டு செய்வதே கீதையின் மிக இரகசியமான அறிவுரை. இதனை அடுத்த ஸ்லோகத்தில் கிருஷ்ணர் மேலும் வலியுறுத்துகிறார்:

ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய

மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ

அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ

மோக்ஷயிஷ்யாமி மா ஷுச:

“எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து, என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன். பயப்படாதே.” (பகவத் கீதை 18.66)

எனவே, கீதையின் முக்கிய உபதேசம், கிருஷ்ணருக்கு பக்தி செய்வதே என்பதில் ஒருவர் எள்ளளவும் ஐயம் கொள்ளத் தேவையில்லை.

பலரும் கூறுகின்றனரே!

சிலர் நினைக்கலாம்: கீதையின் முக்கிய உபதேசம் கடமையைச் செய்வதே என்று நாங்கள் பல இடங்களில் கேள்விப்பட்டுள்ளோம், பலரும் அதனைக் கூறுகின்றனர், அதனால் அஃது உண்மையாகத்தான் இருக்கும்.

யாரேனும் சிலர் ஒரு பொய்யை மீண்டும்மீண்டும் கூற நேர்ந்தால், அதனைக் கேட்பவர்கள் படிப்படியாக அதனை நம்பத் தொடங்குவர். அஃது உண்மையா பொய்யா என்பதை சற்றும் அலசிப் பார்க்காமல், அது தங்களுக்கு சாதகமானதாக இருந்தால், அதனை மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பர். அதன் பின்னர், ஆயிரக்கணக்கானோர் அந்த பொய்யினை உண்மை என்று நம்பி ஏற்றுக்கொள்வர், அவர்களும் மற்றவர்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்குவர். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக பொய்யானது ஏறக்குறைய உண்மையைப் போன்று நம்பப்படும் நிலை ஏற்படலாம்.

இதே நிலைதான், “கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே” என்ற உபதேசத்தின் நிலையும். கீதையை உண்மையாகப் படிக்கும் எந்தவொரு சாதாரண மனிதனும், கீதையின் இறுதி உபதேசம் இதுவல்ல என்பதை எளிதில் உணரலாம். ஆனால் கீதையின் உண்மையான இறுதி உபதேசத்தைக் கடைப்பிடிக்க மனமில்லாத நபர்கள், அயோக்கியத்தனமான முறையில், தங்களுடைய வசதிக்காக அந்த இறுதி உபதேசத்தினை திரித்துள்ளனர். தங்களுக்குப் பிடித்த உபதேசத்தினை இறுதி உபதேசமாக பரப்பியுள்ளனர். ஜடவுலகிலுள்ள பெரும்பாலான மக்கள் கிருஷ்ணரிடம் சரணடைவதற்கு விருப்பமின்றி இருப்பதாலும் புலனின்பம் என்னும் மாய வலையில் வீழ்ந்துகிடப்பதாலும், அவர்களும் இந்த மாற்று உபதேசங்களை தயக்கமின்றி ஏற்றுக்கொள்கின்றனர்.

எனவே, கீதையினை உண்மையாக உணர்வதில் யாரேனும் ஆர்வமுடையவராக இருப்பின், இத்தகைய தவறான தகவல்களை யார் கூறினாலும் நம்பிவிடக் கூடாது. அஃது உண்மையா என்று சோதித்துப் பார்த்தல் சிறந்தது. (இதனால்தான் ஸ்ரீல பிரபுபாதர் எப்போதும் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள் காட்டியே பேசுவது வழக்கம்.)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

“எந்தக் கருத்தை யாரிடமிருந்து கேட்டாலும், அந்தக் கருத்து உண்மையா என்பதை ஆராய்ந்து அறிய வேண்டியது அறிவு.” (திருக்குறள் 423)

மக்களை திசைதிருப்பக் கூடாது

யாரேனும் ஒருவர் கடமையைச் செய்வதுதான் முக்கியம் என்று உங்களிடம் கூறினால், நீங்கள் உடனே அவரிடம் கேள்வி கேட்க வேண்டும்: “அப்படி கீதையில் எங்கே கூறியுள்ளது?” கீதையின் ஏதாவது ஒரு இடத்தில் கடமையைச் செய்வதே மிகவுயர்ந்த தர்மம், அதற்கு இணையான தர்மம் ஏதுமில்லை என்று கூறப்பட்டிருந்தால், அவர்கள் எம்மிடம் வரலாம். கீதையின் எந்தவோர் இடத்திலும் கடமையைச் செய்வதே மிகவுயர்ந்தது என்று கூறப்படவில்லை–இதனை எம்மால் எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க இயலும், யாரிடம் வேண்டுமானாலும் நிலைநாட்ட முடியும். கீதைக்கு தவறாக விளக்கமளிக்கும் நபர்கள் அத்தகைய விவாதத்திற்கு தயாரா? எம்மால் சவால் விட முடியும், அவர்கள் நிச்சயம் வர மாட்டார்கள்; ஏனெனில், அவர்கள் கீதையைப் படித்ததே இல்லை. கீதையைப் படித்துவிட்டு அவ்வாறு யாரேனும் கூறினால், அவர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்று நாம் தைரியமாக உரைக்கலாம். ஏனெனில், கீதையில் எங்குமே அதுபோன்று சொல்லப்படாத தருணத்தில், அவ்வாறு உளறுவதும் (ஏதேனும் உள்நோக்கத்தை வைத்துக் கொண்டு) மக்களை தவறாக திசைத்திருப்புவதும் அயோக்கியத்தனம்தானே!

கீதையைத் தேடி வரும் நபர்களை திசைதிருப்புதல் நிச்சயம் ஏமாற்று வேலையே. கொஞ்சங்கூட மனசாட்சி இல்லாமல், “வெறுமனே உங்களது கடமையைச் செய்யுங்கள் போதும், இதுவே கீதையின் உபதேசம்” என்று கூறி, மக்களை கிருஷ்ணரிடமிருந்து திசைத்திருப்புவோர் மிகவும் மோசமான எதிரிகளாவர். யாரையும் கடமைகளைச் செய்ய வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை, ஆனால் அதுவே போதும் என்று நினைப்பதும் அதுவே மிகவுயர்ந்த அறிவுரை என்று நினைப்பதும் தவறுகள் என்பதையே சுட்டிக் காட்டுகிறோம்.

கர்ம யோகத்தை சற்று அறிவோம்

இறைவனுடன் நம்மை இணைப்பதற்கான வழிமுறை யோகம் எனப்படுகிறது. நமது கடமைகளை உரிய விதிமுறைகளுடன் செய்து இறைவனை வழிபட்டு, அதன் மூலமாக பெறப்படும் இணைப்பு, கர்ம யோகம் எனப்படுகிறது. கர்ம யோகமானது யோகத்தின் ஆரம்பநிலை என்றாலும், அதுவும் இறைவனை அடைவதற்கான ஒரு வழிமுறையே.

கர்ம யோகத்தின்படி, ஒவ்வொருவரும் வேத சாஸ்திரங்களில் தமக்கென்று விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டும். கர்ம யோகத்தில் இரண்டு நிலைகள் உண்டு: பலனை எதிர்பார்த்து செயல்படுதல் (ஸகாம கர்ம யோகம்), பலனை எதிர்பார்க்காமல் செயல்படுதல் (நிஷ்காம கர்ம யோகம்). பலனை எதிர்பார்ப்பதைக் காட்டிலும் பலனை எதிர்பார்க்காமல் செய்தல் சிறந்ததாகும். இந்த இரண்டிலுமே ஒருவர் கவனிக்க வேண்டிய முக்கிய அறிவுரை: அதன் பலனானது கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். அதாவது, கர்ம யோகம் என்பது வெறுமனே கடமைகளைச் செய்வது மட்டுமல்ல, அதனால் கிடைக்கும் பலனானது கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். இல்லாவிடில், அது யோகமாக அமையாது.

யஜ்ஞார்தாத் கர்மணோ ’ன்யத்ரலோகோ  கர்ம பந்தன:

தத் அர்தம் கர்ம கௌந்தேயமுக்த-ஸங்க ஸமாசர

“கடமைகள் விஷ்ணுவிற்கு அர்ப்பணமாக செய்யப்பட வேண்டும், மற்ற செயல்கள் இந்த பௌதிக உலகத்தோடு பந்தப்படுத்துபவை. எனவே, குந்தியின் மகனே, உனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை அவரது திருப்திக்காக செய். இவ்விதமாக நீ எப்போதும் பந்தத்திலிருந்து விடுபட்டு வாழ்வாய்.” (பகவத் கீதை 3.9)

கடமைகளைச் செய்பவர்கள், அதன் விளைவுகளில் பற்றுதல் கொள்ளாமல், அந்த விளைவுகளை கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கும்போது, அது முறையான கர்ம யோகமாகிறது.

கடமையை அறிவோம்

கர்ம யோகத்தை நிறைவேற்றுவதற்கு, கடமை என்றால் என்ன என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளுதல் அவசியம். இவ்வுலகில் பெரும்பாலான மக்கள் கடமைகுறித்து தத்தமது சொந்த அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளனர். உதாரணமாக, கசாப்புக் கடை வைத்திருப்பவன்கூட, மிருகங்களை வெட்டுவது தன்னுடைய கடமை என்றும் அதன் மூலமாகவே தான் முக்தியடையலாம் என்றும் ஏமாற்றப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளான்.

கர்ம யோகத்தை நிறைவேற்றுவதற்கு முறையாக பகுக்கப்பட்ட சமுதாயம் அவசியம், அதை வைத்துதான் கடமைகள் விதிக்கப்படுகின்றன. வேதங்கள் படித்தல், யாகங்கள் புரிதல், வேத கல்வி கற்றுக் கொடுத்தல், பூஜை தொடர்புடைய செயல்களில் ஈடுபடுதல், மக்களுக்கு ஆன்மீக அறிவொளி வழங்குதல் போன்றவை பிராமணர்களின் (அறிவில் சிறந்தவர்களின்) கடமைகளாகும். மக்களைப் பாதுகாத்தல், பராமரித்தல், நீதி வழங்குதல், தானமளித்தல், ஆட்சி செய்தல் போன்றவை சத்திரியர்களின் (ஆட்சியாளர்களின்) கடமைகளாகும். பசுக்களைப் பராமரித்தல், விவசாயம் செய்தல், வியாபாரத்தில் ஈடுபடுதல் போன்றவை வைசியர்களின் (வணிகர்களின்) கடமைகளாகும். பிறருக்கு உடலால் சேவை செய்தல் சூத்திரர்களின் (தொழிலாளர்களின்) கடமைகளாகும். மேலும், கற்புடன் வாழ்தல், குழந்தைகளைப் பேணுதல், வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொள்ளுதல் போன்றவை பெண்களுக்குரிய கடமைகளாகும்.

இவை மட்டுமின்றி, தந்தையின் கடமை, தாயின் கடமை, சகோதரனின் கடமை, கணவனின் கடமை, மனைவியின் கடமை, குலத்திற்கான கடமை, சமுதாயத்திற்கான கடமை, இதர உயிரினங்களுக்கான கடமை என பல கடமைகள் உள்ளன. இவையாவும் இன்றைய சமுதாயத்தில் திரிபடைந்த நிலையில் காணப்படுகின்றன. இக்கடமைகள் யாவும் பல்வேறு விதிமுறைகளுடன் செய்யப்பட வேண்டும், அந்த விதிமுறைகள் மீறப்படும்போது, அவர்கள் கடமையிலிருந்து தவறியவர்களாவர். ஒருவன் எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய கடமையிலிருந்து பிறழக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறான். (மேற்கூறிய கடமை என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஜாதியைச் சார்ந்தது அல்ல என்பதை கவனத்தில் கொள்ளுதல் அவசியம்)

கடமையின் குறிக்கோள்

ஒருவர் செய்யும் கடமையானது அவரை படிப்படியாக முழுமுதற் கடவுளுக்கு அருகில் கொண்டு வர வேண்டும். இறைவனின் மீது அன்பை ஏற்படுத்தாத கடமை வெறும் கால விரயமே என்று ஸ்ரீமத் பாகவதம் (1.2.8) கூறுகின்றது.

தர்ம: ஸ்வனுஸ்டித: பும்ஸாம்விஷ்வக்ஷேன-கதாஸு ய:

நோத்பாதயேத் யதி ரதிம்ஷ்ரம ஏவ ஹி கேவலம்

“ஒருவனால் செய்யப்படும் கடமைகள் முழுமுதற் கடவுளைப் பற்றிய விஷயங்களின் மீது அவனுக்கு ஆர்வத்தைக் கொடுக்காவிடில், அவன் செய்யும் செயல்கள் அனைத்தும் கால விரயமே.”

இதன்படி பார்த்தால், ஒருவருடைய கடமையின் குறிக்கோள் முழுமுதற் கடவுளை அறிவதே. முந்தைய காலத்தில் அனைத்து வேலைகளும் அதற்கு தகுந்தாற் போல வடிவமைக்கப்பட்டிருந்தன. நவீன உலகில் மக்கள் செய்யும் தொழில்கள் அனைத்தும் கடவுளை மறக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன. அத்தகைய தொழில்களை தன்னுடைய கடமையாக நினைத்து செய்வதால், எந்த ஒரு உயர்ந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.

கடமைகளைச் செய்து கிருஷ்ணரை வழிபடும் நிலைக்கு வராவிடில், அனைத்தும் கால விரயமே.

நடைமுறைக்கு சாத்தியமா?

இன்றைய தொழில்களில் பெரும்பாலான தொழில்கள் உக்ர-கர்மம் என்னும் பிரிவினைச் சார்ந்ததாக உள்ளன. அதாவது, மனிதர்களுக்கு, மனித சமுதாயத்திற்கு, இதர சமுதாயத்திற்கு என யாராவது ஒருவருக்கு (அல்லது அனைவருக்கும்) தீமை பயக்கக்கூடிய தொழில்கள் உக்ர-கர்மங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இன்றைய கலி யுகத்தில், எந்தவொரு தொழிலை எடுத்தாலும், அதில் கொடூரச் செயல்கள் மறைந்து காணப்படுகின்றன. உதாரணமாக, யாரேனும் ஒருவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அலுவலகத்தில் பணிபுரிகிறார் என்றால், அங்கே அவருடைய கடமை என்பது வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. மேலும், தெரிந்தோ தெரியாமலோ அவர் பல்வேறு பாவச் செயல்களுக்கு உள்ளாகிறார். வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளானது பாவங்களற்றவை. இன்றைய உலகில் பாவங்களற்ற தொழில் என்று எதையும் கூற முடியாத சூழ்நிலை நிலவுகிறது. பாவகரமான தொழிலை நிறைவேற்றுவது “கடமையைச் செய்தல்” என்னும் பிரிவினுள் வராது.

மக்கள் அனைவரிடமும் நற்பண்புகள் இருக்கும்பட்சத்தில் மட்டுமே, கர்ம யோகத்தினை செயல்படுத்த முடியும். உதாரணமாக, தற்போதைய கலி யுகத்தில் யாரேனும் ஒருவர் பிராமணரின் கடமையைச் செய்ய விரும்பி, வெளி வேலைகள் ஏதும் செய்யாமல், வேத பாராயணத்தில் மட்டும் தனது நேரத்தைச் செலவிட்டால், அவர் வெகு விரைவில் பட்டினியினால் வாடுவது உறுதி. பெரும்பாலான கோயில்களின் பூஜாரிகள் இன்று வெளியே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்; ஏனெனில், பிராமணர்களுக்கு வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்யும் சத்திரியர்கள் தற்போதைய காலத்தில் இல்லை. பல்வேறு கோயில்களில் உள்ள பூஜாரிகள் “பணம், பணம்” என்று கோயில்களுக்கு வருபவர்களை நச்சரிக்கின்றனர். அதாவது, க்ஷத்திரியரும் தனது கடமையைச் செய்வதில்லை, பிராமணரும் தனது கடமையைச் செய்வதில்லை.

ஒருவன் பலனை எதிர்பார்க்காமல் தனது கடமையை நிறைவேற்ற விரும்பினால், அவன் சம்பளம் எதையும் தனது எஜமானரிடமிருந்து கேட்கக் கூடாது. பண்டைய பாரம்பரியத்தில், வேலைக்காரன் சம்பளம் கேட்காவிட்டால்கூட, எஜமானர் அவனது எல்லா தேவைகளையும் பார்த்துக்கொள்வார். அதாவது, வேலைக்காரன் தனது கடமையைச் செய்கிறான், எஜமானரும் தனது கடமையைச் செய்கிறார். இன்றைய உலகத்தில் இது நடைமுறைக்கு சாத்தியமா? நிச்சயம் இல்லை. நீங்கள் உங்களது அலுவலகத்திற்குச் சென்று, “நான் சம்பளத்தை எதிர்பார்க்கவில்லை, வேலை செய்வது மட்டுமே எனது கடமை” என்று அறிவித்துவிட்டால் போதும், கூடிய விரைவில் நீங்கள் நடுரோட்டில் நிற்க வேண்டிவரும்.

மேலும், கர்ம யோகத்தைப் பயிற்சி செய்வதற்கு அடிப்படையாகத் திகழும் வர்ணாஷ்ரம தர்மம் கலி யுகத்தில் இல்லை என்ற காரணத்தினால், கடமையைச் செய், பலனை எதிர்ப்பார்க்காதே என்பது கலி யுகத்தின் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாகும்.

நடைமுறைக்கு ஒத்துவராததை கிருஷ்ணர் ஏன் கீதையில் உபதேசித்திருக்கிறார் என்று கேட்கலாம். கர்ம யோகம் என்றைக்கும் நடைமுறைக்கு ஒத்துவராது என்று யாம் கூறவில்லை. நம்முடைய தற்போதைய தருணத்தில் (கலி யுகத்தில்) கர்ம யோகம் நடைமுறைக்கு ஒத்துவராதது என்றுதான் கூறப்படுகிறது. வெவ்வேறு மருந்துகள் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளப்படுவதைப் போல, கலி யுகத்தின் சூழ்நிலைக்கு நாம ஸங்கீர்த்தனத்தினை அடிப்படையாகக் கொண்ட பக்தியே மருந்தாக கூறப்படுகிறது; இதர மருந்துகளான கர்ம யோகம், ஞான யோகம், அஷ்டாங்க யோகம் போன்றவை தற்போதைய நிலைக்கு ஒத்துவராதவை.

நான் சம்பளத்தை எதிர்பார்க்கவில்லை, வேலை செய்வது மட்டுமே எனது கடமை” என்று நீங்கள் அலுவலகத்தில் கூற முடியுமா?

அர்ஜுனன் கடமையைச் செய்தானா?

கீதை முழுவதையும் கேட்ட பின்னர், அர்ஜுனன் கடமையைத்தானே செய்தான் என்று சிலர் வாதிடலாம். ஆம், ஒரு விதத்தில் உண்மையே. ஆனால் அர்ஜுனன் அந்த கடமையினை “இஃது என்னுடைய கடமை” என்று நினைத்து செய்யவில்லை, அவன் கிருஷ்ணரின் அறிவுரைப்படி போரிட்டான். அர்ஜுனன் போரிட்டதற்கான முக்கிய காரணம் அதுவே. “என்னிடம் சரணடை” என்பதே கீதையின் இறுதி வாக்கியம் என்பதை முன்னரே கண்டோம். அதன்படி, அர்ஜுனன் கிருஷ்ணரிடம் பூரணமாக சரணடைந்தான். அர்ஜுனன் போரிட வேண்டும் என்பது கிருஷ்ணரின் கட்டளை, அந்த கட்டளையினை நிறைவேற்றுவதற்காகவே அர்ஜுனன் போரிட்டான். வெறுமனே தன்னுடைய கடமையை நிறைவேற்றுவதற்காக அல்ல.

அர்ஜுன உவாச

நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர் லப்தா

த்வத்-ப்ரஸாதான் மயாச்யுத

ஸ்திதோ  கத-ஸந்தேஹ:

கரிஷ்யே வசனம் தவ

“அர்ஜுனன் கூறினான்: எனதன்பு கிருஷ்ணரே, வீழ்ச்சியடையாதவரே, எனது மயக்கம் தற்போது நீங்கிவிட்டது. தங்களது கருணையால் நான் எனது நினைவை மீண்டும் பெற்று விட்டேன். எல்லா சந்தேகங்களிலிருந்தும் விடுபட்டு, நான் தற்போது உறுதியுடன் உள்ளேன். தங்களது உபதேசங்களின்படிச் செயல்பட தயாராக உள்ளேன்.” (பகவத் கீதை 18.73)

“எனது கடமையைச் செய்ய நான் தயாராக உள்ளேன்” என்று அர்ஜுனன் கூறவில்லை. மாறாக, “நீங்கள் கூறியபடி செய்ய தயாராக உள்ளேன்” என்று கூறுகிறான். எனவே, கீதையைக் கேட்ட பின்னர், அர்ஜுனன் கடமையைச் செய்தான் என்று கூறுதல் முற்றிலும் அபத்தமானதாகும்.

கீதையைக் முழுமையாகக் கேட்ட பின்னர், அர்ஜுனன் கிருஷ்ணரின் கட்டளைகளை நிறைவேற்ற தயாராக இருப்பதாக அறிவித்தான், கடமையைச் செய்வதாக அல்ல.

இறுதி அறிவுரையைப் பின்பற்றுவோம்

கிருஷ்ணரிடம் சரணடைந்து அவருக்கு பக்தி செய்தல் என்பது கர்ம யோகத்தைக் காட்டிலும் உயர்ந்தது மட்டுமின்றி, எளிமையானதும் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடியதுமாகும். இதுவே கீதையில் கிருஷ்ணர் வழங்கும் இறுதி அறிவுரை. இதனை நாம் பின்பற்றினால், நம்மை விடுவிப்பதற்கு கிருஷ்ணர் தயாராக உள்ளார். அவர் தாமே சுயமாக தன்னுடைய பக்தனுக்கு உதவி செய்வதாக கீதையின் பல இடங்களில் (உதாரணம்: 7.14, 9.22, 9.30, 10.10, 10.11, 12.7) கூறக் காண்கிறோம். கிருஷ்ணரின் உதவியினால் பக்தி யோகம் என்பது மிகவும் எளிதான வழிமுறையாகிறது.

நமது கடமைகள் எதையும் நாம் துறக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவை எல்லாவற்றையும் கிருஷ்ணரை மையமாக வைத்து கிருஷ்ணருக்காக செயல்படுத்த வேண்டும். இதுவே பக்தி யோகம். கிருஷ்ணரிடம் சரணடைந்து அவரது வழிகாட்டுதலின் கீழ் (அல்லது அவரது பிரதிநிதியின் வழிகாட்டுதலின் கீழ்) செயல்பட்டால் நிச்சயம் நாம் பக்குவமடையலாம். அதனை விடுத்து, பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்கிறேன் என்று எண்ணிக் கொண்டு, சம்பளத்தை எதிர்பார்க்காமல் வேலை செய்து சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.