விரும்பியதைச் செய்வதே சுதந்திரம்

விரும்பியதைச் செய்வதே சுதந்திரம்

ஸ்ரீல பிரபுபாதருக்கும் தத்துவ பேராசிரியர் ஜான் மைஸ் அவர்களுக்கும் இடையிலான உரையாடலின் ஒரு பகுதி.

ஸ்ரீல பிரபுபாதர்: உங்களால் விரும்பியதைச் செய்ய முடிந்தால் அதுவே சுதந்திரம். யதேச்சஸி ததா குரு என்று பகவத் கீதை (18.63) கூறுகிறது. பகவத் கீதை முழுவதையும் அர்ஜுனனுக்கு உரைத்த பின்னர், கிருஷ்ணர் அவனுக்கு சுதந்திரத்தை வழங்கினார்: “தற்போது நீ விரும்பியதைச் செய்யலாம்.” பகவத் கீதையின் உபதேசங்களை ஏற்றுக்கொள்ளும்படி கிருஷ்ணர் ஒருபோதும் வற்புறுத்தவில்லை. விரும்பியதைச் செய்யலாம் என்ற சுதந்திரத்தைக் கொடுத்தார். “எனது மயக்கம் தீர்ந்தது, உங்களது சொல்படி செயல்படுவேன்,” என அர்ஜுனன் ஒப்புக் கொண்டான். நமக்கு தற்போது எத்தகைய சுதந்திரம் உள்ளதோ, அதே போன்ற சுதந்திரம் அர்ஜுனனுக்கும் இருந்தது.

நீங்கள் கேட்கலாம், “ஆத்மா ஏன் இவ்வளவு மூடனாக இருக்கிறான்?” அவன் தனது சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியதே இதற்கு காரணம். புத்திசாலி தந்தை புத்திசாலி மகனைப் பெறுகிறார், ஆனால் சில சமயங்களில் அந்த மகன் மூடனாகிவிடுகிறான். காரணம் என்ன? தந்தையின் அங்கமான அவன் தந்தையைப் போலல்லவா இருக்க வேண்டும், ஆனால் அனைவரும் அவ்வாறு இருப்பதில்லை.

அஜாமிளனை எடுத்துக்கொள்ளுங்கள்: அவன் ஒரு பிராமணன், ஆனால் மிகவும் கீழ்நிலைக்கு வீழ்ச்சியுற்றான். எனவே, நமது சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திக் கொள்வதற்கான சுதந்திரம் நம்மிடம் எப்போதும் உள்ளது.

சிஷ்யர்: ஸ்ரீல பிரபுபாதரே, இவ்வுலகில், நாம் பௌதிகத்தால் களங்கமடைந்த நிலையில் முட்டாள் தனமாக செயல்படும்போது, தமோ குணம் நம்மீது செயல்படுகிறது என்பதை அறிவோம். ஆனால் ஆன்மீக வானில்ஶீதூய உணர்வு நிலையில் உயிர்வாழி இருக்கும்போது–அவன் மீது எது செயல்படுகிறது? அவனை மயக்குவதற்கு அச்சூழ்நிலையிலும் அவன் மீது ஏதேனும் ஆதிக்கம் செலுத்துகின்றதா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். வாயிற்காப்பாளர்களான ஜெயன், விஜயனை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் அபராதம் இழைத்தார்கள், நான்கு குமாரர்களை வைகுண்டத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. அதனால் மிகுந்த வருத்தமுற்ற குமாரர்கள், ஜெயன், விஜயன் இருவரையும் சபித்தார்கள், “நீங்கள் இவ்விடத்தில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள்.”

எனவே, சில நேரங்களில் நாம் தவறு செய்கிறோம். அதுவும் நமது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதே. நாம் சிறியவர்களாக இருக்கின்ற காரணத்தினால், வீழ்ச்சியுறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஒரு சிறிய தீப்பொறியும் நெருப்பே என்றபோதிலும், அஃது அணைந்துவிடும் தன்மையைக் கொண்டது; ஆனால் பெரிய நெருப்பு அணைவதில்லை. கிருஷ்ணர் பெரிய நெருப்பு, நாம் அந்த பெரிய நெருப்பின் மிகச்சிறிய அம்சம். ஒரு நெருப்பினுள் பல்வேறு பொறிகள் உள்ளன; ஆனால் அந்த பொறிகள் கீழே விழ நேரிட்டால், அவை அணைந்துவிடும்.

நெருப்பிலிருந்து விழும் பொறியானது, காய்ந்த புற்களின் மீது விழுந்தால் நெருப்பு பற்றிக்கொள்கிறது–அதாவது, கீழே விழுந்தாலும் அது தனது எரிக்கும் தன்மையைத் தக்கவைத்துக்கொள்கிறது. இது ஸத்வ குணமாகும். அதே பொறி பச்சைப் புல்லில் விழுந்தால், அஃது எரிவதில்லை–அந்த பச்சைப் புல் காய்ந்த பின்னர், அந்த பொறி நெருப்பாக ஆவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் அந்த பொறியானது நீரில் விழுந்துவிட்டால், அந்த நிலை மிகவும் சிரமமான ஒன்றாகும். அதுபோல, ஆத்மா பௌதிக உலகத்திற்கு வரும்போது, முக்குணங்களில் விழுகிறான்…

ஆகையால், ஆத்மாவை மீண்டும் பிராமணத் தன்மையான ஸத்வ குணத்திற்குக் கொண்டுவர வேண்டும். அவ்வாறு செய்தால், “நான் ஆத்மா,” அஹம்-ப்ரஹ்மாஸ்மி என்பதையும் தான் ஜடமல்ல என்பதையும் அவனால் புரிந்துகொள்ள முடியும். அதன் பிறகு, அவனது ஆன்மீக வாழ்க்கை ஆரம்பமாகிறது. ஸத்வ குணத்தின் தளத்திற்கு வருவதென்றால், புலால் உண்ணுதல், தவறான பாலுறவு, போதை வஸ்துக்கள், சூதாடுதல் முதலிய ரஜோ குண, தமோ குணச் செயல்களைக் கைவிட வேண்டும். இவ்வாறாக ஸத்வ குணத்தில் நிலைபெற்று, அந்த தளத்திலேயே இருந்தால், ரஜோ, தமோ குணங்கள் தொந்திரவு செய்யாது…

இதுவே ஆன்மீக வாழ்க்கையின் ஆரம்பமாகும். காம ஆசைகளாலும் பேராசைகளாலும் மனம் தொந்திரவாகும்பட்சத்தில், ஆன்மீக வாழ்க்கை என்ற கேள்விக்கே இடமில்லை. எனவே, மனதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதே முதல் பணியாகும். எழுபத்தைந்து வயதுடைய முதியவன் இரவு கிளப்பிற்குச் செல்வதை நான் பாரிசில் பார்த்திருக்கிறேன். ஏன்? ஏனெனில், காமம் அங்கும் இருக்கிறது. கிளப்பில் நுழைவதற்கு ஐம்பது டாலர்கள் செலுத்துகிறான், மற்ற விஷயங்களுக்கு மேலும் கட்டணம் செலுத்துகிறான். எழுபத்தைந்து வயதானாலும் காம ஆசை இருக்கிறது.

பேராசிரியர் மைஸ்: ஆன்மீக உலகிலுள்ள அனைத்து ஆத்மாக்களும் ஒரே சமயத்தில் ஆன்மீக வானிலிருந்து வீழ்ச்சியுறுகிறார்களா? அல்லது வெவ்வேறு நேரங்களில் வீழ்ச்சியுறுகிறார்களா? எப்போதும் வீழ்ச்சியுறாதிருக்கும் ஆத்மாக்களும் உள்ளனரா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆன்மீக வானிலிருந்து எல்லா ஆத்மாக்களும் வீழ்ச்சியடைவதில்லை. பெரும்பாலான ஆத்மாக்கள், அதாவது தொண்ணூறு சதவீத ஆத்மாக்கள் ஒருபோதும் வீழ்ச்சியடைவதில்லை.

பேராசிரியர் மைஸ்: அப்படியெனில், நாம் அந்த பத்து சதவீதத்தைச் சேர்ந்தவர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், அதைவிட குறைந்த சதவீதமாகவும் இருக்கலாம்.  பௌதிக உலகிலுள்ள அனைத்து உயிர்வாழிகளும் சிறைச்சாலையில் இருப்பவர்களைப் போன்றவர்கள். மக்களில் சிலர் சிறையில் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பான்மை யான மக்கள் சிறைக்கு வெளியே வசிக்கிறார்கள். அதுபோலவே, பகவானின் பின்னப் பகுதிகளான உயிர்வாழிகளில் பெரும்பான்மையானோர் ஆன்மீக உலகில் வசிக்கிறார்கள், வெகுசிலரே வீழ்ச்சியடை கின்றனர்.

பேராசிரியர் மைஸ்: ஓர் ஆத்மா வீழ்ச்சியுறுவதற்கு முன்னரே அவன் வீழ்ச்சியுறப் போகிறான் என்பதை கிருஷ்ணர் அறிவாரா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், கிருஷ்ணருக்குத் தெரியும்; ஏனெனில், அவர் அனைத்தும் அறிந்தவர்.

பேராசிரியர் மைஸ்: அதிக அளவிலான உயிர்வாழிகள் எப்பொழுதும் வீழ்ச்சியடைந்து கொண்டுள்ளார்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: எல்லா நேரங்களிலும் இல்லை. ஆனால் விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எல்லாரும் விழுகிறார்கள் என்று சொல்வதில்லை; ஆனால் எல்லாருக்கும் சுதந்திரம் உள்ளது, அந்த சுதந்திரத்தை எல்லாரும் தவறாக பயன்படுத்துவதில்லை. அதே உதாரணம்: அரசாங்கம் நகரத்தை நிர்மாணிக்கின்றது, அதே நேரத்தில் சிறைச்சாலையையும் நிர்மாணிக்கின்றது; ஏனெனில், சிலர் குற்றம் புரிவார்கள், அவர்களுக்கும் ஓர் இடம் தேவை என்பதை அரசாங்கம் அறியும். நூறு சதவீத மக்களும் குற்றம் புரிவர் என்றில்லை. ஆனாலும் சிலர் குற்றம் புரிவர் என்று அரசாங்கத்திற்குத் தெரியும். இல்லையெனில், எதற்காக அவர்கள் சிறைச்சாலையைக் கட்ட வேண்டும்? “நீங்கள் சிறைச்சாலையைக் கட்டுகிறீர்கள், ஆனால் குற்றவாளிகள் எங்கே?” என்று ஒருவர் கேட்கலாம். குற்றம் புரிபவர்கள் இருப்பார்கள் என்று அரசாங்கத்திற்குத் தெரியும். ஒரு சாதாரண அரசாங்கத்திற்கே தெரியும்போது, கடவுளுக்குத் தெரியாதா என்ன? ஏனெனில், அதற்கான மனப்பான்மை எப்போதும் உள்ளது.

பேராசிரியர் மைஸ்: அந்த மனப்பான்மை எங்கிருந்து வருகிறது? அதன் மூலம் என்ன?

ஸ்ரீல பிரபுபாதர்: “மனப்பான்மை” என்றால் சுதந்திரம். சுதந்திரத்தை சரியாகவோ தவறாகவோ உபயோகிக்கலாம் என்பதை அனைவரும் அறிவர். அதுவே சுதந்திரம். ஒரு வழிப்பாதையாக கீழே விழுவதற்கு வாய்ப்பின்றி இருந்தால், அது பலவந்தப்படுத்துவதாக ஆகிவிடும், அது சுதந்திரமாக இருக்காது. எனவே கிருஷ்ணர் கூறுகிறார், யத்தேச்சஸி ததா குரு, “நீ எதை விரும்புகிறாயோ, அதைச் செய்யலாம்.”

 

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment