மஹாபாரதம், நம்பக்கூடியதா?

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

மஹாபாரதம்–பாரதப் பண்பாட்டில் பின்னிப் பிணைந்த ஒன்று. இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இதனை சற்றேனும் அறிவர். நவீன கால கல்வியினால் மஹாபாரதத்தை மறந்துபோன இன்றைய இளைய சமுதாயத்தினரும் அதன் கதையை ஓரளவேனும் தெரிந்து வைத்துள்ளனர். இந்து மதத்தினர் மட்டுமின்றி, அனைத்து மதத்தினரும், ஏன் நாத்திகர்களும்கூட மஹாபாரதத்தை சற்றேனும் அறிவர். வேறு விதமாகக் கூறினால், மஹாபாரதம் பற்றி அறியாமல் இந்தியாவில் வாழ்வது என்பது சாத்தியமல்ல. ஆயினும், அதனை நம்புவதில் பலருக்கு பல விதமான சிக்கல்கள் உள்ளன.

மஹாபாரதத்தின் மீதான மக்களின் ஆர்வம்

அன்றும் இன்றும் என்றும் மஹாபாரதம் மக்களைக் கவரும் ஒரு காவியம், இதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. மஹாபாரதக் கதைகள் தொன்றுதொட்டு பாரதத்தின் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டு வந்தன, ஒவ்வொரு மாலையிலும் மஹாபாரதம் கேட்பது என்பது எல்லா ஊர்களிலும் இருந்துவந்த சராசரி பழக்கம். தொலைக்காட்சியின் வருகையினாலும் நவீன வாழ்க்கை முறையினாலும் அத்தகைய பழக்கம் இன்று ஏறக்குறைய அழிந்துவிட்டது என்று கூறலாம். இருப்பினும், அதே தொலைக்காட்சியில் மஹாபாரதம் ஒளிபரப்பப்படும்போது, அஃது இன்றும் மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் மஹாபாரதத் தொடர் தற்போது புதிதாக வெளிவரத் தொடங்கியுள்ளது. பல்வேறு இதர தயாரிப்பாளர்களும் மஹாபாரதத் தொடரினை தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் யாருமே இதுவரை நஷ்டத்தை சந்தித்தது இல்லை. எல்லாவற்றிலும் குறிப்பாக, சுமார் இருபது வருடங்களுக்கு முன்பாக சோப்ரா அவர்களால் இயற்றப்பட்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான தொடர் மிகவும் பிரபலமான ஒன்று. அச்சமயத்தில் தொலைக்காட்சி என்பது எல்லோரது வீட்டிலும் இருக்கவில்லை, எங்கெல்லாம் தொலைக்காட்சி இருந்ததோ அங்கெல்லாம் மக்கள் வெள்ளம் கூடியது. இந்தியில் ஒளிபரப்பானபோதிலும், இந்தி தெரிந்த சிலரது உதவியுடன் தமிழர்கள் பலரும் அதனை கண்டுகளித்தனர். இந்தியாவின் மற்ற பகுதிகளிலோ, ஞாயிறு காலை வேளையில் தெருவில் யாரையும் பார்க்க முடியாது, அனைவருமே தொலைக்காட்சியின் முன்புதான் அமர்ந்திருந்தனர். ஓர் ஊரில் ஓர் இரயில் ஓட்டுநர் இரயிலை நிறுத்திவிட்டு மஹாபாரதம் காணச் சென்ற நிகழ்ச்சி அப்போதைய சுவாரஸ்யமான செய்திகளில் ஒன்று.

 

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மஹாபாரதம் நாடகத்திலிருந்து ஒரு காட்சி

சந்தேகத்தைத் தூண்டும் காட்சிகள்

மஹாபாரதத்தின் மீதான மக்களின் ஆர்வம் அந்த அளவிற்கு உள்ளபோதிலும். நவீன கால கல்வி மற்றும் அரசியலின் காரணத்தினால், மஹாபாரதம் உண்மையாக நடந்த ஒன்றா, உண்மையுடன் கற்பனை கலந்து சொல்லப்பட்ட ஒன்றா, முற்றிலும் கற்பனை காவியமா போன்ற சந்தேகங்கள் பலரது மனதைப் பற்றிக் கொண்டுள்ளன. அவர்களது சந்தேகங்களுக்கு பல்வேறு காரணங்களை முன்வைக்கலாம். அதில் பிரதானமாக இருப்பது, மஹாபாரதத்தின் அதிசயிக்கத்தக்க காட்சிகளே என்றால் அது மிகையல்ல. மஹாபாரதத்தில் உள்ள பல்வேறு சம்பவங்கள் இன்றைய மனிதனால் யோசித்துக்கூட பார்க்க முடியாத அளவில் அற்புதமாகவும் நம்பவியலாததாகவும் உள்ளன.

உதாரணமாக, ஸ்வர்க லோகத்திற்கு பயணம் மேற்கொள்ளும் அர்ஜுனன், (சூரியன், எமன், வாயு, இந்திரன், அஸ்வினி குமாரர்கள் என) பல்வேறு தேவர்களால் பிறக்கும் குழந்தைகள், குந்தியின் காதிலிருந்து கவச குண்டலத்துடன் பிறந்த கர்ணன், ஆகாயத்திலிருந்து வரும் கட்டளைகள், மரணமடைந்தோர் மீண்டும் உயிருடன் வருவது, மந்திரங்களை வைத்து ஏவப்படும் அஸ்திரங்கள், ஓர் அம்பில் இருந்து பத்து, இருபது, ஐம்பது, அல்லது நூறு அம்புகள் பிரிந்து செல்வது, அஸ்திரத்தினால் வானிலிருந்து நீர், நெருப்பு, பாறைகள் என வேண்டியவற்றை வரவழைப்பது போன்ற பல்வேறு காட்சிகள் காண்பவர்களை மிகவும் கவரும்போதிலும், பலரால் நம்ப இயலாதவையாக உள்ளன.

இத்தகைய அற்புதமான நம்பவியலாத காட்சிகளை நாம் உலகின் எல்லா மதங்களிலும் காண்கிறோம். மரணமடைந்த இயேசு கிருஸ்து மூன்று நாள்களில் உயிர்த்தெழுந்தது, யூத மக்களை எகிப்திலிருந்து மோசஸ் அழைத்துச் சென்றபோது கடல் இரண்டாக பிளந்து வழிவிட்டது, ஆகாய வாணி என பலவற்றை அங்கும் காண்கிறோம்.

கண்ணால் காண்பதை நம்பும் பழக்கம்

மஹாபாரதத்தில் இருப்பதுபோன்ற அற்புத நிகழ்ச்சிகளை இன்றைய மக்கள் பெரும்பாலும் நம்புவதற்கு தயங்குகின்றனர். இன்றைய கல்வி முறையில் பயிற்சி பெற்றவர்கள், தங்களது அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை நம்ப முடியாது என்ற நிலையில் பிடிவாதமாக உள்ளனர். மக்கள் முன்னேற்றமடையாமல் இருந்த முந்தைய நூற்றாண்டுகளில் இக்கதைகளை எல்லாம் நம்பி வாழ்ந்தனர், இப்போது நாங்கள் முன்னேறி விட்டோம், இதையெல்லாம் நம்ப மாட்டோம் என்பதே அவர்களின் எண்ணம்.

ஐரோப்பாவைச் சார்ந்த சில அறிஞர்கள், “எனது கண்களால் பார்க்காவிடில் நான் நம்ப மாட்டேன்,” என்ற எண்ணத்தை பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மக்களிடையே வளர்த்த காரணத்தினால், இன்று மஹாபாரதம், பைபிள் போன்றவற்றின் மீதான நம்பிக்கை குறைந்து விட்டது எனலாம். கண்களால் பார்த்து, காதால் கேட்டு, நாவினால் ருசித்து, மூக்கினால் நுகர்ந்து, ஸ்பரிசத்தில் தொட்டால் மட்டுமே நம்புவோம் என்ற எண்ணம் இப்போது பரவலாக உள்ளது. எல்லாம் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

விஞ்ஞானம் விஞ்ஞானபூர்வமானதா?

விஞ்ஞானம் என்பது மூன்று நிலைகளைக் கொண்டது: ஆராய்ச்சி, கொள்கை, மற்றும் விதி. ஏதேனும் ஒன்றை விஞ்ஞானபூர்வமாக அணுக விரும்புவோர் முதலில் அதுகுறித்து சில ஆராய்ச்சிகளையும் கற்பனைகளையும் வகுக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஒரு கொள்கையை உருவாக்கி, அதனை சோதனையின் மூலமாக நிரூபிக்க வேண்டும், அவ்வாறு அது நிரூபிக்கப்படும்போது, விதி என்று ஏற்கப்படுகிறது. உதாரணத்திற்கு, நியூட்டனின் மூன்று விதிகளை எடுத்துக் கொண்டால், அவற்றை நாம் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முடியும்.

மஹாபாரதம் போன்ற சாஸ்திரங்களை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று விரும்புவோர் மேற்கூறிய அதே வழிமுறையை பின்பற்ற விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் மறந்துவிட்டது என்னவெனில், விஞ்ஞானிகளின் பல்வேறு ஆராய்ச்சிகள்கூட இதுவரை நிரூபிக்கப்படாமல், வெறும் கொள்கையாக இருந்து வருகின்றன என்பதே. உதாரணமாக, பிக் பேங் தியரி எனப்படும் அதிர்வெடிக் கொள்கை இதுவரை யாராலும் நிரூபிக்கப்படவில்லை, டார்வினின் பரிணாமக் கொள்கையும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. உண்மையில், பல்வேறு கொள்கைகள் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படாமல், இன்றும் விஞ்ஞானிகளின் மத்தியில் படிக்கப்பட்டு பேசப்பட்டு ஏற்கப்பட்டு வருவதை அனைத்து விஞ்ஞானிகளும் அறிவர்.

நிரூபிக்கப்படாத ஒன்றை அவர்கள் விஞ்ஞானமாக ஏற்பது ஏன் என்ற கேள்வி எழலாம். பதில் மிகவும் எளிமையானது: இக்கொள்கைகளை நிரூபிப்பதற்கென்று எந்தவொரு வழிமுறையும் இல்லை. அதாவது, யாரேனும் ஒரு விஞ்ஞானி ஏதேனும் ஒரு கொள்கையைக் கொண்டு வந்து, அதனை சரி அல்லது தவறு என்று நிரூபிப்பதற்கு வழி இல்லாதபட்சத்தில், அதனை இன்றைய விஞ்ஞான உலகம் விஞ்ஞானமாக ஏற்று வருகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், மஹாபாரதம் என்று வரும்போது மட்டும் அதனை ஏன் அவ்வாறு ஏற்கக் கூடாது? மஹாபாரதம் உண்மையில் நடைபெறவில்லை என்பதை நிரூபிப்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லாதபட்சத்தில், இதனை ஏற்பதில் என்ன சிக்கல்?

விஞ்ஞானிகள் சொன்னால் அதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வோம், சாஸ்திரங்கள் சொன்னால் அதனை கண்மூடித்தனமாக மறுப்போம் என்று சொல்வது விஞ்ஞானமல்ல.

விஞ்ஞானிகளால் ஏற்கப்பட்டுள்ள பல கொள்கைகள் இன்றுவரை நிரூபிக்கப்படாமல் உள்ளன. உதாரணம்: டார்வினின் பரிணாமக் கொள்கை.

நம்மால் எல்லாவற்றையும் காணவியலுமா?

புறஊதா கதிர்களையும் அகச்சிவப்பு கதிர்களையும் நம்மால் காண முடிவதில்லை, குறிப்பிட்ட அதிர்வலைக்கு அப்பாற்பட்ட ஒலி ஓசைகளை நம்மால் கேட்க முடிவதில்லை. இயந்திரங்களைக் கொண்டு அவற்றை அளக்கலாம், ஆனால் நேரடியாக உணர முடிவதில்லை. மின்சார சக்தி, ரேடியோ கதிர்கள், செல்போன் கதிர்கள் என பலவற்றையும் இயந்திரங்களைக் கொண்டு காண்கிறோம், ஆனால் நேரடியாக உணர முடிவதில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றி எத்தனையோ சக்திகள் வலம் வருகின்றன, அவற்றை நாம் காண்பதுமில்லை, கேட்பதுமில்லை, உணர்வதுமில்லை.

ஏதோ ஒரு சூழ்நிலையில் யாரேனும் ஒரு விஞ்ஞானி அந்த சக்திகளை ஏதேனும் ஓர் இயந்திரத்தினால் கைப்பற்றினால், அதன் பின்னர் நம்மால் அதனை உணர முடிகிறது. உதாரணமாக, எத்தனையோ மைல்களுக்கு அப்பால் நடக்கும் கிரிக்கெட் போட்டியை கதிர்களின் உதவியைக் கொண்டு நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடியும் என்பதை நூறு வருடங்களுக்கு முன்பு யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. செல்போன் மூலமாக எங்கிருந்தாலும் பேச முடியும் என்பதை நாம் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு நினைத்துப் பார்த்துள்ளோமா? இணையத்தின் மூலமாக உலகம் இந்த அளவிற்கு சுருங்கிவிடும் என்பதை கற்பனை செய்துள்ளோமா? நிச்சயம் இல்லை.

நம்மைச் சுற்றி எத்தனையோ சக்திகள் உள்ளன; நமக்கு அது தெரியவில்லை என்பதாலோ நாம் அதனை இன்னும் இயந்திரத்தை வைத்து கைப்பற்றவில்லை என்பதாலோ, அந்த சக்தி இல்லை என்று கூறுவது அறிவாளிகளின் கூற்றல்ல.

நம்மைச் சுற்றி இருக்கும் பல்வேறு சக்திகளை நம்மால் காண முடிவதில்லை, இயந்திரங்களைக் கொண்டு அளக்கின்றோம். நமக்குத் தெரியாமல் மேலும் பல சக்திகள் இருக்கலாம் என்பதை ஏற்பது புத்திசாலித்தனம்.

மனோவியல் நுணுக்கம்

நாம் ஆய்வு செய்யும் விஷயம் எந்தஅளவிற்கு நுண்ணியமானதாக உள்ளதோ, அந்த அளவிற்கு அதனை நிரூபிப்பது கடினம். உதாரணமாக, மனோவியலை எடுத்துக் கொண்டால், அதனை நிரூபிப்பது என்பது ஏறக்குறைய இயலாத ஒன்று என்று கூறலாம். பலமான மனதுடையோரால் பல்வேறு காரியங்களை சாதிக்க இயலும் என்பதையும், தங்களது மன வலிமையால் மற்றவர்களின் மனதை மாற்றவியலும் என்பதையும் பலமுறை கேட்டுள்ளோம், அனுபவத்திலும் உணர்ந்துள்ளோம். ஆனால் அவற்றை நிரூபிக்க வேண்டும் என்று யாரேனும் கேட்டால், அது சாத்தியமா?

மனோவியல் துறையில் பல்வேறு ஆய்வுகள் தினந்தோறும் நடத்தப்படுகின்றன. பலமான மனதுடைய சிலர், தங்களது மன வலிமையினால் தூரத்தில் வைக்கப்பட்டுள்ள குச்சியை வளைப்பது, எங்கோ வசிக்கும் நண்பரை இல்லத்திற்கு வரவழைப்பது போன்ற பல்வேறு சம்பவங்களை அரங்கேற்றுகின்றனர். அவற்றை நாம் நினைப்பதுபோல நிரூபிக்க வைப்பது கடினம். ஆனால் அதற்காக அவற்றை பொய் என்றோ கட்டுக் கதை என்றோ கூறி ஒதுக்கிவிடவும் முடியாது.

ஊரெங்கும் உலாவும் பேய்கள்

நிரூபிக்கவியலாத மறுக்கவியலாத மற்றுமொரு விஷயம்: பேய். பேய்கள் உலகெங்கிலும் வலம் வருவதை அனைவரும் உணர்கின்றனர், ஆனால் அதனை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க இயல்வதில்லை. இதுவரை அதற்கான கருவியை யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆயினும், பேயினால் பாதிக்கப் பட்ட நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான நபர்களை நாம் கண்டு வருகிறோம்.

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவின் முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றாக இருந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட பாதையில் விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டது. காரணம் என்னவெனில், அந்த பாதையில் நிகழ்ந்த ஒரு விபத்தில் மரணமடைந்த பைலட் (திரு, பாப் லாப்ட்), அப்பகுதியில் செல்லும் விமானங்களில் பேயாக வந்து சில அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். உண்மையான பைலட் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் பேயாக வந்த பைலட்டினால் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் பயணிகளை மிகவும் அச்சுறுத்தின. இதுகுறித்து அமெரிக்காவில் எழுதப்பட்ட புத்தகம் (The Ghost of Flight 401) விற்பனையில் சாதனை படைத்தது.

 

நுண்ணியமான விஞ்ஞானத்தை அளப்பது கடினம்

இதனால் நுண்ணியமான விஷயங்களை அளப்பது கடினம் என்பதை உணர வேண்டும். இயற்பியல் விதிகளை நிரூபிப்பது வேதியியல் விதிகளைக் காட்டிலும் கடினமானது என்பதை அனைவரும் அறிவர். ஏன்? ஏனெனில், இயற்பியல் வேதியியலைக் காட்டிலும் நுண்ணியமானது. மனோவியல் இயற்பியலைக் காட்டிலும் நுண்ணியமானது. இயற்பியலில் உள்ள கதிர்களை நிரூபிப்பது மனோவியலில் உள்ள சக்திகளை நிரூபிப்பதைக் காட்டிலும் எளிமையானது.

எனவே, கண்ணால் கண்டு, காதால் கேட்டு, வாயால் சுவைத்து, மூக்கினால் நுகர்ந்து, ஸ்பரிசத்தில் தொட்டால் மட்டுமே ஒரு விஷயத்தை நான் நம்புவேன் என்று கூறுவது, நமது அறிவை நாமே மறைத்துக் கொள்வதாகும். நமக்கு நாமே ஒரு எல்லையை ஏற்படுத்தி, வரம்பை உருவாக்கி வைப்பது அறிவாளிகள் செய்யும் காரியமல்ல. நம்மைச் சுற்றி எத்தனையோ சக்திகள் உள்ளன, நாம் அவற்றை உணராமல் இருக்கலாம், ஆனால் அந்த சக்தியே இல்லை என்று கூறிவிட முடியாது–இதனை நாம் ஏற்க வேண்டியது அவசியம்.

1959இல் இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் ஆன்ட்டி மேட்டர் தியரி என்பதை உருவாக்கியதற்காக நோபல் பரிசைப் பெற்றனர். அவர்கள் கூறிய கருத்து, ஏறக்குறைய யாம் மேற்கூறிய ஒன்றே. அதாவது, நம்மைச் சுற்றி, நமக்குத் தெரியாமல், நம்மால் இதுவரை உணரப்படாமல் பல்வேறு சக்திகள் உள்ளன என்பதே. இதனை யாராலும் நிரூபிக்க முடியாது, மறுக்கவும் முடியாது. ஏனெனில், நம்மைச் சுற்றியுள்ள கதிர்கள் அல்லது சக்திகள் (ரேடியோ கதிர்களைப் போன்று) அவ்வப்போது வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுகின்றனவே.

எறும்பின் உலகம்

நமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உண்மைகளும் உண்டு என்பதை ஏற்காமல் இருப்பது முட்டாள்தனமானதாகும். ஓர் எறும்பின் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். நாம் வாழும் வீட்டில் எத்தனையோ எறும்புகள் வாழ்கின்றன. அவற்றின் வாழ்க்கை தங்களது சிறிய பொந்தினையும் சக்கரைக் கட்டிகளையும் சார்ந்துள்ளது, அவ்வளவுதான். மனிதர்கள் என்பவர்கள் யார், அவர்கள் இந்த வீட்டில் என்ன செய்கிறார்கள், இந்த வீட்டைக் கட்டியவர்கள் யார், இந்த அறையில் இருப்பவர்கள் என்ன பேசுகின்றனர் என எதையும் அந்த எறும்புகள் உணர்வதில்லை. அவர்களின் திறன் அவ்வளவுதான்.

நமது திறன் அந்த எறும்புகளைக் காட்டிலும் உயர்ந்தவையாக இருப்பதால், அவற்றை நாம் அற்பமானதாக கருதுகிறோம். அதுபோல, நம்மைக் காட்டிலும் பல மடங்கு திறன் கொண்டவர்கள் நம்மை எறும்புகளைப் போல பார்க்கலாம் என்ற உண்மையை நம்மால் ஏன் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை? நமது திறனிற்கு உட்பட்ட விஷயங்களை மட்டுமே ஏற்போம் என்று நினைத்தால், எறும்புகளைக் காட்டிலும் நாம் உயர்ந்தவர்கள் அல்ல.

கிணற்றுத் தவளை

கிணற்றுத் தவளையின் உதாரணமும் இதற்கு மிகவும் பொருந்தும். இருபது அடி நீளம், இருபது அடி அகலம் கொண்ட கிணறு ஒன்றில் வசித்த ஒரு தவளை அங்கிருந்த மற்ற தவளைகளைக் காட்டிலும் மிகுந்த அறிவாளியாக கருதப்பட்டது. தவளைகளின் சமுதாயத்தில் அறிஞனாக, முனைவர் பட்டம் பெற்றவனாக அந்த தவளை விளங்கியது. அக்குழுவில் இருந்த ஒரு சிறு தவளை அங்கிருந்து வெளியேறி எப்படியோ இந்தியப் பெருங்கடலை அடைந்து, ஒரு கப்பலில் கடல் முழுவதையும் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் கிணற்றுக்குத் திரும்பியது. அங்கிருந்த முனைவர் தவளை அதனை வரவேற்று விசாரிக்க, குட்டி தவளை கடலைப் பற்றி கூறிய போது, முனைவர் கேள்வி கேட்கத் தொடங்கினார்.

“கடல் என்பது நமது கிணற்றை விட பெரியதா?”

“ஆம், மிகவும் பெரியது.”

“எத்தனை மடங்கு பெரியது? 40 அடிக்கு 40 அடி இருக்குமா?”

“இல்லை, மிகவும் பெரியது.”

“மூன்று மடங்கு, நான்கு மடங்கு?”

“இல்லை, நமது கிணற்றைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு பெரியது.”

குட்டித் தவளையின் கூற்றை துளிகூட நம்பமுடியாத அந்த அறிவாளி கிணற்றுத் தவளை, “கடல் என்று ஒன்று இருக்க முடியாது. இருந்தாலும் நமது கிணற்றைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு பெரியதாக இருக்க முடியாது. எனவே, உண்மையில் நீ எங்குமே செல்லவில்லை, சில நாள்கள் வெளியே திரிந்துவிட்டு இங்குவந்து உன்னை அறிஞனாக காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறாய். உனது ஏமாற்றுக் குணம் புரிந்துவிட்டது. உடனடியாக இந்த இடத்தை விட்டு வெளியேறு,” என்று கூக்குரலிடத் தொடங்கியது.

மஹாபாரதத்தின் விஷயங்களை ஏற்க முடியாமல் தவிப்பவர்கள் இந்த கிணற்றுத் தவளையிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. அவர்கள் இந்த உலகில் அறிஞர்களாக இருக்கலாம், ஆனால் தங்களது குறுகிய அறிவை அடிப்படையாகக் கொண்டு எல்லாவற்றையும் எடைபோடும் அவர்களது மனப்பான்மை இந்த கிணற்றுத் தவளையிடமிருந்து வேறுபட்டதல்ல.

கிணற்றுத் தவளை, சமுத்திரத்தை மறுத்ததைப் போல, தங்களின் அனுபவத்திற்கு அப்பால் யோசிக்கத் தெரியாத மக்கள் மஹாபாரதத்தை மறுக்கின்றனர்.

இங்கிலாந்தில் நடந்த உண்மைச் சம்பவம்

கிணற்றுத் தவளையின் இந்த கதையைக் கேட்பவர்கள் சிரிக்கலாம், மனிதர்களை இந்த அளவு முட்டாள்களாக நினைக்கலாமா என்று கேள்வி கேட்கலாம். ஆனால் இதே போன்ற நிகழ்ச்சி இங்கிலாந்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. இங்கிலாந்து நாட்டினர் உலகெங்கிலும் பயணம் செய்து தங்களது காலணிகளை நிறுவி வந்த காலம் அது. அச்சமயத்தில் ஆப்பிரிக்காவிற்குச் சென்று திரும்பிய சிலர், இங்கிலாந்து மக்களிடம், “ஆப்பிரிக்கா மிகவும் சூடாக உள்ளது, சூரியன் அங்கே வெப்பத்தை கக்குவதாக உள்ளது,” என்று கூறியபோது, இங்கிலாந்து மக்கள் மிகவும் ஆர்வம் கொண்டனர். இங்கிலாந்தில் அவர்கள் சூடான வெயிலைப் பார்த்தது இல்லையே.

ஆப்பிரிக்கா சென்று திரும்பியவர்கள் தொடர்ந்து கூறினர்: “அங்கே மாபெரும் மிருகங்கள் உள்ளன. ஒட்டகச்சிவிங்கி என்னும் மிருகம் பார்ப்பதற்கே மிகவும் விசித்திரமாக இருக்கும், ஒல்லியான அந்த மிருகத்தின் கழுத்து சுமார் பதினைந்து அடி நீண்டு இருக்கும். காண்டாமிருகம் என்னும் மற்றொரு மிருகத்தின் தோல் மிகவும் தடியாக இருக்கிறது, தோட்டாவினால் கூட துளைக்க இயலாததாக உள்ளது. மேலும், யானை என்னும் மிருகம் மிகப் பெரியதாக நீண்ட தந்தத்துடனும் தும்பிக்கையுடனும் உள்ளது.”

இதைக் கேட்ட இங்கிலாந்து மக்களால் அவற்றை துளிகூட நம்ப இயலவில்லை. அங்கே அவர்கள் பார்த்தது, நாய், கோழி, ஆடு, மாடு போன்றவை மட்டுமே என்பதால், “இவர்கள் ஆப்பிரிக்காவிற்குச் சென்று கடும் வெயிலில் சிக்கியதால், மூளை குழம்பி எதையோ உளறுகின்றனர், பைத்தியமாகி இங்கே வந்துள்ளனர்,” என்று முடிவு செய்தனர். ஒட்டகச்சிவிங்கி, காண்டாமிருகம், யானை போன்ற மிருகங்களைப் பார்த்து அவற்றை விவரித்தவர்கள் பைத்தியமா, அல்லது தாங்கள் இதுவரை அதுபோன்று கண்டதில்லை என்பதால் அவ்வாறு எந்த மிருகங்களும் இருக்க முடியாது என்று முடிவு செய்தவர்கள் பைத்தியமா?

நம்மூர் மக்கள் பலரும் இதுபோன்றுதான் பைத்தியங்களாக உள்ளனர். மஹாபாரதத்தில் வரும் நிகழ்ச்சிகள் தங்களது அறிவிற்கும் அனுபவத்திற்கும் அப்பாற்பட்டதாக இருப்பதால், அவை சாத்தியமல்ல என்று வாதிடுகின்றனர்.

 

ஒட்டகச்சிவிங்கி, யானை, காண்டாமிருகம் போன்ற மிருகங்களை ஆப்பிரிக்காவில் கண்டதாகக் கூறியவர்களை இங்கிலாந்து மக்கள் பைத்தியங்கள் என்று கூறி ஒதுக்கியது வரலாறு.

கேள்வியை திருப்பிக் கேட்போம்

எனவே, மஹாபாரதத்தை நம்ப முடியுமா என்ற கேள்வியை திருப்பிக் கேட்கலாம்: ஏன் நம்பக் கூடாது? நமக்கு வினோதமாகத் தோன்றும் விஷயங்கள் மஹாபாரதத்தில் மட்டுமல்ல, இன்றைய விஞ்ஞான உலகிலும் பல உள்ளன. ஏதோ ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டு, பொத்தான்களை அழுத்துவதன் மூலமாக சக்திவாய்ந்த அணுகுண்டுகள் வீசப்படுவதைக் காண்கிறோம். சாதாரண மனிதனின் பார்வையில் இஃது ஒரு வினோதமே. மஹாபாரதத்திலோ அணுகுண்டு களைக் காட்டிலும் சக்திவாய்ந்த பிரம்மாஸ்திரம் ஏவப்படுவதைக் காண்கிறோம். நமது அணுகுண்டுகள் அப்பாவி மக்களைத் தாக்கு கின்றன, ஆனால் மந்திரத்தினால் சக்தியளிக்கப் படும் பிரம்மாஸ்திரமோ, யாரை நோக்கி ஏவப்படுகிறதோ அவரை மட்டுமே தாக்கும் சக்தி பெற்றது. இதனை நம்புவதில் என்ன சிரமம்?

இன்றைய விஞ்ஞானத்தில் எத்தனையோ போர்க் கருவிகள் வித்தியாசமாகச் செயல்படு கின்றன. இக்கருவிகள் யாவும் ஸ்தூலமானவை, மஹாபாரதத்தில் உபயோகிக்கப்பட்ட அஸ்திரங் களோ சூட்சுமமானவை. சூட்சும விஷயங்கள் ஸ்தூல விஷயங் களைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவை என்பதை முன்னரே கண்டோம். அதன்படி, மஹாபாரதத்தின் சூட்சுமமான அஸ்திரங்கள் மந்திரங்களைக் கொண்டு ஏவப்படுவதால், அவற்றிலிருந்து நெருப்பு வருவதும், பாறைகள் வருவதும், நீர் வருவதும், ஓர் அம்பு பல அம்புகளாக பிரிவதும் நிச்சயம் ஏற்கத்தக்கவையே.

மந்திரங்களின் சக்தி மிகவும் சூட்சுமமானது. மந்திரங்களைக் கொண்டு பாம்பின் விஷத்தை அகற்றுவதை இன்றும் நாம் சில கிராமங்களில் காணலாம். விஷம் எவ்வாறு மந்திரத்தினால் வெளியேறுகிறது? நம்மால் விளக்கவோ நிரூபிக்கவோ இயலாமல் போகலாம். ஆனால் பாம்பினால் கடிக்கப்பட்டவன் பிழைத்துக் கொள்கிறானே!

யோக சக்திகள்

கலி யுகத்தில் யோக சக்திகள் என்பது ஏறக்குறைய முற்றிலும் அழிந்துவிட்டது. இருப்பினும், இன்றும்கூட யோகிகளின் சில சக்திகள் நவீன விஞ்ஞானத்திற்கு சவால் விடுவதாக உள்ளன. யோகிகளை காற்றில்லாத பெட்டியில் மணிக்கணக்கில் அடைத்துவைத்து சோதித்த மருத்துவர்கள், தங்களது மருத்துவ விஞ்ஞானம் இவர்களிடம் பொய்த்துப் போவதை ஏற்றுள்ளனர். கங்கையின் ஓர் இடத்தில் மூழ்கி பல மைல்களுக்கு அப்பாலுள்ள கங்கைக் கரையில் எழக்கூடிய யோகிகள் இன்றும் இருக்கின்றனர். தங்களது யோக சித்தியினால் குணப்படுத்த இயலாத நோய்களைத் தீர்ப்பவர்களும் உள்ளனர். பல்வேறு ஆண்டுகளாக எதையும் சாப்பிடாமல், காற்றை மட்டுமே சுவாசித்து வாழ்பவர்களும் உள்ளனர். தண்ணீரில் நடப்பவர்களும், முள்ளில் படுத்து உறங்குபவர்களும், தலையை பூமிக்குள் புதைத்தபடி தியானம் செய்பவர்களும் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர்.

மஹாபாரதம் நிகழ்ந்த காலக்கட்டத்தில் வசித்த மக்கள் இவற்றைக் காட்டிலும் பல மடங்கு யோக சக்திகளைக் கொண்டவர்களாக இருந்தனர். ஓர் உலகத்திலிருந்து மற்றோர் உலகத்திற்குச் செல்ல அவர்களுக்கு எரிபொருள் நிரப்பிய விமானம் தேவைப்படவில்லை. அமைதியான புஷ்பக விமானம் போதும், சிலரிடம் விமானம் ஏதுமின்றி பயணம் செய்யும் தகுதியும் இருந்தது.

சாதாரண மக்களே பல்வேறு யோக சக்திகளுடன் வாழ்ந்துவந்த அந்த காலக்கட்டத்தில், மஹாபாரதத்தின் நாயகர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிக சக்திகளை வெளிப்படுத்தியதை நம்புவதில் என்ன சிரமம்?

பல்வேறு யோக சக்திகளுடனும் மந்திரங்களுடனும் வாழ்ந்த மஹாபாரதத்தின் நாயகர்கள் அதிசயங்களை வெளிப்படுத்தினர் என்பதை நம்புவதில் என்ன சிரமம்?

தகுதியுடையவர்களுக்கு மட்டும்வழங்கப்பட்ட அறிவு

வெறும் மந்திரங்கள் மட்டுமே பாண்டவர்களை நாயகர்களாக்கிவிடவில்லை. இன்றைய உலகில் (குறிப்பாக இன்டர்நெட் உலகில்) யார் வேண்டுமானாலும் தாங்கள் விரும்பும் அறிவைப் பெற முடியும். வெடிகுண்டு தயாரிப்பது எவ்வாறு என்பதை அறிய விரும்புபவன் அதனை எளிதில் பெறலாம். ஆனால் மஹாபாரதத்தின் காலத்தில், நிலைமை வேறு. அறிவானது தகுதியுடைய நபர்களுக்கு மட்டுமே, அதுவும் பல்வேறு சோதனைகளுக்கும் தவங்களுக்கும் பிறகே வழங்கப்பட்டது. அர்ஜுனன் மஹாபாரதத்தின் முக்கிய நாயகன், அவனைப் போன்ற வில்லாளி யாரும் இல்லை என்னும் பெயரைப் பெற்றவன். நல்ல ஒழுக்கம், தவம், சேவை, மற்றும் பணிவினால் தனது குருவான துரோணாசாரியரை திருப்தி செய்த காரணத்தினால் அவனுக்கு அந்த உயர்ந்த வித்தைகள் கற்றுக் கொடுக்கப்பட்டன.

இன்றோ, வெடிகுண்டு தயாரிப்பதும் துப்பாக்கியை எடுத்து சுடுவதும் அனைவராலும் கற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருப்பதால், பொதுமக்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது, தீவிரவாதச் செயல்கள் மலிந்து காணப்படுகின்றன.

வேத அறிவு மிகவும் விரிவானது

வேத அறிவு மிகவும் நுணுக்கமானது, ஆழமானது. பல நேரங்களில் நம்மால் அதனைப் புரிந்துகொள்ள இயலாமல் போகலாம். ஆனால், அதற்காக அதனை ஒதுக்கிவிடக் கூடாது. சில நேரங்களில் நமக்கு புரியவில்லை என்றாலும், வேதங்களில் உள்ளது என்பதற்காக அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் அவசியம். ஏதேனும் ஒரு கூற்றினை மறுப்பு சொல்லாமல் அப்படியே ஏற்க வேண்டும் என்று கூறினால், தொன்றுதொட்டு நமது ஊரில் எல்லோரும் கேட்கும் சாதாரண கேள்வி: இஃது என்ன வேத வாக்கா? அதாவது, வேத வாக்கானது நமக்கு புரியாவிடினும் ஏற்க வேண்டிய ஒன்றாகும்.

உதாரணமாக, பசுஞ் சாணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மலம் அசுத்தமானது என்றும் அதனைத் தொட்டால் நீராட வேண்டும் என்றும் கூறக்கூடிய சாஸ்திரங்கள், பசுவின் மலமாகிய சாணம் தூய்மையானது என்றும் வீட்டினை மொழுகுவதற்கு தினமும் உபயோகிக்கலாம், காய வைத்து சமையலுக்கு எரிபொருளாக உபயோகிக்கலாம், ஏன் கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்வதற்கும் உபயோகிக்கலாம் என்று கூறுகின்றன. இது முரண்பட்டதாகத் தோன்றினாலும், வேத வாக்கு என்பதால் இதனை அப்படியே தொன்றுதொட்டு மக்கள் உபயோகித்து வந்தனர். சமீப காலத்தில், பசுஞ் சாணத்தின் நோய் எதிர்ப்புத் தன்மைகளும் இதர நன்மைகளும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வேத வாக்கினை நம்புவோர் ஆராய்ச்சிக்காகவும் கண்டுபிடிப்பிற்காகவும் காத்திருக்கத் தேவையில்லை, நேரத்தை விரயமாக்க வேண்டியதில்லை. வேதங்கள் கடவுளால் கொடுக்கப்பட்டவை, அவர் படைத்த விஷயங்கள் அவரைக் காட்டிலும் வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அவர் கொடுத்தவற்றை நமக்குப் புரியாவிடினும் அப்படியே ஏற்பதால் நமக்கு எந்தவொரு நஷ்டமும் வந்துவிடாது.

வேதங்களில் பல உப பிரிவுகள் உள்ளன. அவையாவும் மனிதர்களுக்குத் தேவையான பல்வேறு அறிவை வழங்கி வருகின்றன. எந்தவொரு பக்கவிளைவையும் கொடுக்காமல் நமது நோயை குணப்படுத்தும் ஆயுர்வேதம், உலகிலுள்ள பல்வேறு பிரபஞ்சங்களை தொலைநோக்கிகள் ஏதுமின்றி எடுத்துரைக்கும் பிரபஞ்சவியல், அதனை அடிப்படையாகக் கொண்ட சூரிய சித்தாந்தம், ஒருவரது வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளை துல்லியமாக கணிக்கக்கூடிய ஜாதகம், வேத காலத்தின் இசை, கட்டிடக் கலை என எண்ணற்ற விஷயங்கள் இன்றைய நவீன உலகைக் காட்டிலும் மஹாபாரதத்தின் காலத்தில் சீரும் சிறப்புமாக இருந்து வந்துள்ளதை சற்று ஆராய்ந்து பார்த்தால் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

மலம் அசுத்தமானது என்றாலும் பசுஞ்சாணம் தூய்மையானது என்று வேதங்கள் கூறுவதை நாம் அப்படியே ஏற்கிறோம்; இதுவே பண்பாடு.

கட்டுக் கதைகளும் சாஸ்திரங்களும்

சாஸ்திரங்கள் கூறுவதை அப்படியே ஏற்க வேண்டும் என்னும் பட்சத்தில், கட்டுக் கதைகளையும் உண்மையான சாஸ்திரங்களையும் எவ்வாறு வேறுபடுத்துவது? மிகவும் சுலபம். சாஸ்திரங்கள் ஆச்சாரிய பரம்பரையில் வந்தவர்களால் ஏற்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டு வந்துள்ளன. ஆச்சாரியர்களால் ஏற்கப்பட்டவற்றை நாமும் ஏற்கலாம், யாரேனும் ஒருவர் புதிதாக ஏதேனும் ஒரு கதையைச் சொன்னால், அது நேரடியாக சாஸ்திரங்களில் உள்ளதா, ஆச்சாரியர்களால் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை அலசிப் பார்க்க வேண்டும்.

ஆழ்வார்கள், இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், சைதன்ய மஹாபிரபு போன்ற பல்வேறு ஆச்சாரியர்கள் சாதாரண நபர்கள் அல்ல. நமக்கு ஏதோ ஒரு கட்டுக்கதையை வழங்குவதில் அவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அவர்கள் புலனின்பங்களை முற்றிலுமாக துறந்தவர்கள், தங்களின் இன்பத்திற்கென எந்த காரியமும் செய்யாதவர்கள். அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்களை நாமும் ஏற்பது புத்திசாலித்தனம்.

 

நவீன கால நிரூபணங்கள்

மஹாபாரதத்திலுள்ள சில விஷயங்கள் இன்றைய விஞ்ஞானிகளில் கண்டறியப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் வருகின்றன என்பது (யாம் அதனை இங்கே விவரிக்காதபோதிலும்) குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, குஜராத்தின் தற்போதைய துவாரகைக்கு அருகில் மாபெரும் மாட மாளிகைகளும் கோபுரங்களும் கடலினுள் இருந்துள்ளதை பல்வேறு அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மஹாபாரத போர் நடைபெற்ற குருக்ஷேத்திர போர்க்களத்தில் நிச்சயம் மாபெரும் போர் நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதை அங்குள்ள மண்ணை ஆராய்ச்சி செய்தவர்கள் உறுதி செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பண்பாடுகளில் மஹாபாரதம் ஏதோவொரு விதத்தில் மறுவிக் காணப்படுகின்றது. அவை அங்கே தெளிவின்றி உள்ளபோதிலும், நிச்சயம் மஹாபாரதத்தை நிரூபிக்கக்கூடியவையாக உள்ளன. தமிழகத்தின் மன்னர்களில் ஒருவரான பெருஞ்சேரலாதன் பாண்டவர்களுக்கு உதவுவதற்காக போருக்குச் சென்றதை சங்க இலக்கியங்களில் காண்கிறோம்.

மஹாபாரதத்தின் எண்ணற்ற இடங்களில் கூறப்பட்டுள்ள கிரக அமைப்புகளையும் குறிப்பிட்ட திதிகளையும் அடிப்படையாக வைத்து மஹாபாரதம் கற்பனைக் கதையாக இருக்க முடியாது என்பதை ஆணித்தரமாக சமீபத்தில் ஒரு விஞ்ஞானி தனது ஆராய்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளார். பல்வேறு வெளிப்புற ஆதாரங்கள் இருக்கும்போதிலும், மஹாபாரதத்திற்கு மஹாபாரதமே இறுதி சாட்சி. இதில் சந்தேகம் கொள்வது நமது அறிவுப் பற்றாக்குறையையும் குறுகிய மனதையும் காட்டுகின்றது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

திறந்த மனதுடன் அணுகுங்கள்

மஹாபாரதத்தை திறந்த மனதுடன் அணுகுங்கள். நமக்குத் தெரிந்த அறிவை மட்டுமே வைத்து அணுக வேண்டாம். நம்முடைய அனுபவத்தை வைத்து மஹாபாரதத்தை எடை போட்டால், அது பகலில் கண்ணை மூடிக்கொண்டு சூரியனே இல்லை என்று சொல்லும் ஆந்தையின் கொள்கையாகிவிடும். “தெரிந்தது கையளவு தெரியாதது உலகளவு” என்ற எண்ணத்துடன் வாழ முயற்சி செய்ய வேண்டும். எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்களால் எதையும் தெரிந்துகொள்ள முடியாது. ஒரு குறிப்பிட்ட பெட்டியில் மனதை அடக்கியவர்களால் அறிவைப் பெற இயலாது. அதிலிருந்து மாற்றி யோசித்தவர்களே சிறப்படைய முடியும். தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும் கடவுளின் மீது அதீத நம்பிக்கை கொண்டவருமான ஐன்ஸ்டின் சாதாரண விஞ்ஞானிகளிடமிருந்து மாற்றி யோசித்தார், புதிய விஷயங்களை வெளிக் கொணர்ந்தார்.

மஹாபாரதத்தின் பல விஷயங்கள் நமக்குப் புரியாமல் இருக்கலாம், அதற்காக அதனை ஒதுக்கிவிடுதல் நல்லதல்ல. கணிதம் கற்க கல்லூரிக்குச் செல்பவன் முதலில் அங்குள்ள பேராசிரியரை ஏற்று அவர் கூறுவதன்படி படித்தால், காலப்போக்கில் அவனுக்கு கணிதம் புரியும். அவர் கற்றுத் தரும் பாடங்கள் புரியவில்லை, இதுவரை கேள்விப்படாததாக உள்ளது என்று கூறி நிராகரித்தல் சரியல்ல. அதுபோல, மஹாபாரதம் என்னும் உயரிய விஷயத்தை, நமக்குப் புரியவில்லை என்பதற்காக நிராகரித்தால், இழப்பு நமக்கே.

மஹாபாரதத்தை மறுப்பவர்கள் அதிலுள்ள அறிவுப் பொக்கிஷத்தை இழக்க நேரிடுகிறது. குறிப்பாக, மஹாபாரதத்தின் முக்கிய பகுதியான பகவத் கீதையை அறிய முடியாமல் போய் விடுகிறது. எனவே, கணிதம் கற்கும் மாணவன் அடிப்படை நம்பிக்கையுடன் அதனைக் கற்க முனைவதைப் போன்று, குறைந்தபட்சம் ஓர் அடிப்படை நம்பிக்கையுடன் மஹாபாரதத்தை, குறிப்பாக, அதன் முக்கிய பகுதியான பகவத் கீதையைப் படித்தால், படிப்பவர் பயனடைய முடியும். ஆந்தையைப் போன்றும் கிணற்றுத் தவளையைப் போன்றும் ஆரம்ப ஆராய்ச்சிகூட செய்யாமல், இதெல்லாம் பொய் என்று கூறி நிராகரித்தால், இழப்பையே சந்திக்க நேரிடும். சிலர் மஹாபாரதத்தை மறுப்பதால் அது பொய்யாகப் போவதில்லை, மஹாபாரதம் என்றென்றும் மஹாபாரதமாக நிலைத்திருக்கும்.

குறிப்பு: இக்கட்டுரையின் பெரும்பகுதிகள் தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி அவர்கள் வழங்கிய சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டதாகும்.

2016-12-08T14:30:19+00:00November, 2013|ஞான வாள், பொது|0 Comments

About the Author:

mm
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

Leave A Comment