விஞ்ஞானிகளின் குருட்டுத்தனம்

விஞ்ஞானிகளின் குருட்டுத்தனம்

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

 

பக்தர்–விஞ்ஞானிகள் “கடவுள் என்று யாருமில்லை” என தங்களுடைய அறிவு சக்தியை வைத்து கூறுகின்றனர். கடவுளின் மீது நம்பிக்கை வைப்பவர்கள் வெறும் நம்பிக்கையின் பெயரிலேயே அவ்வாறு நினைக்கின்றனர் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: இது நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. கடவுள் இருக்கிறார் என்பது உண்மையான விஷயம்.

பக்தர்:– உண்மை என்று கூறப்படும்போது, விஞ்ஞானிகள் தங்களது புலன்களால் உணரப்படும் விஷயத்தை விரும்புகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம், கிருஷ்ண உணர்விலும் நீங்கள் கடவுளை புலன்களின் மூலமாக உணர முடியும். நாம் நம்முடைய புலன்களை பக்தித் தொண்டில் எந்த அளவிற்கு உபயோகப்படுத்துகின்றோமோ, அந்த அளவிற்கு நம்மால் அவரை உணர முடியும். ஹ்ருஷீகேண ஹ்ருஷீகேஷ ஸேவனம் பக்திர் உச்யதே, “ஒருவன் தனது புலன்களை பரம புருஷரின் தொண்டில் ஈடுபடுத்தும்போது, அந்த உறவு பக்தி எனப்படுகிறது.” உதாரணமாக, நாம் நம்முடைய கால்களை கோயிலுக்குச் செல்வதில் பயன்படுத்துகிறோம், நாவினை கடவுளைப் புகழ்வதற்கும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாதத்தினைச் சுவைப்பதற்கும் பயன்படுத்துகிறோம்.

 பக்தர்–ஆனால், விஞ்ஞானிகள் இவற்றை நம்பிக்கையின் செயல்கள் என்று கூறுகின்றனர். நாம் உணவினை கடவுளுக்கு அர்ப்பணிக்கும்போது, கடவுள் அதனை ஏற்கிறார் என்று நாம் நினைப்பதற்கு நம்பிக்கையே காரணம் என்றும், கடவுள் உண்பதை தங்களால் காண முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்களால் காண முடியாது, ஆனால் என்னால் காண முடியும். நான் அவர்களைப் போன்ற முட்டாள் அல்ல. அவர்கள் ஆன்மீகத்தில் குருடர்களாக உள்ளனர், அறியாமை என்னும் கண் புரை நோயினால் துன்பப்பட்டுக் கொண்டுள்ளனர். அவர்கள் என்னிடம் வந்தால், நான் அறுவை சிகிச்சை செய்வேன், அப்போது அவர்களாலும் கடவுளைக் காண முடியும்.

பக்தர்–விஞ்ஞானிகள் கடவுளை இப்போதே காண விரும்புகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் கிருஷ்ணர் இப்போது தன்னை உங்களிடம் வெளிப்படுத்த மாட்டார்; ஏனெனில், நீங்கள் அயோக்கியர்களாக, மாபெரும் விலங்குகளாக உள்ளீர்கள். ஷ்வ-விட்-வராஹோஷ்ட்ர-கரை: ஸம்ஸ்துத: புருஷ: பஷு:, “யாரொருவன் இறைவனின் பக்தனாக இல்லையோ, அவன் மிகப்பெரிய விலங்காகக் கருதப்படுகிறான், பெரிய ஒட்டகம், பெரிய நாய் அல்லது பெரிய பன்றி. அத்தகு மக்களை யாரெல்லாம் போற்று கின்றார்களோ அவர்களும் அதைப் போன்றவர்களே.”

பக்தர்: கடவுளைப் பற்றியும் ஆன்மீக உலகத்தைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருக்கும் நம்மை அவர்கள் கற்பனை செய்பவர்கள் என்று கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஏன் அவ்வாறு கூற வேண்டும்? அவர்களிடம் இதனைப் புரிந்துகொள்வதற்கான அறிவு இல்லை. அதனால் அவர்கள் நம்மை கற்பனை செய்பவர்கள் என்று கூறுகின்றனர்.

பக்தர்:–புலன்களால் எதை உணர முடியுமோ அதை மட்டுமே ஏற்பது என்பதே அவர்களின் நிலையாக உள்ளது.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், அவர்களால் கடவுளை புலன்களின் மூலமாகவும் உணர முடியும். புலன்களைக் கொண்டு மணலையும் கடலையும் பார்க்கும்போது, இவற்றை உருவாக்கியவர் யார் என்று ஏன் இந்த முட்டாள்கள் நினைப்பதில்லை?

பக்தர்:– இந்த பொருட்களை கடவுள் உருவாக்கியிருந்தால், தங்களால் எவ்வாறு கடலைப் பார்க்க முடிகிறதோ அதே போல கடவுளையும் பார்க்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்களிடம் நான் கூறுவது யாதெனில், “ஆம், நீங்களும் கடவுளைக் காண முடியும். ஆனால் முதலில் கடவுளைக் காண்பதற்கான கண்கள் உங்களுக்கு அவசியம். நீங்கள் குருடர்களாக உள்ளீர்கள், உங்களுடைய கண்களில் புரை உள்ளது. என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு அறுவை சிகிக்சை செய்கிறேன். அதன் பின்னர் உங்களால் கடவுளைக் காண முடியும்.” இதனால்தான் வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன, தத்-விஞ்ஜார்தம் ஸ குரும் ஏவாபிகச்சேத், “கடவுளைக் காண்பதற்கு நீங்கள் உண்மையான ஆன்மீக குருவை அணுக வேண்டும்.” இல்லாவிடில், குருட்டுக் கண்களை வைத்துக் கொண்டு அவர்களால் எவ்வாறு கடவுளைக் காண முடியும்?

பக்தர்:–எவ்வாறு பார்ப்பது என்பதுகுறித்த தங்களின் கூற்றின் மீது விஞ்ஞானிகளுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அவர்கள் தங்களது கண்களைக் கொண்டு நுண்நோக்கியினாலும் தொலைநோக்கியினாலும் எதைக் காண முடியுமோ அதில் மட்டுமே நம்பிக்கை வைக்கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் இப்போது வானைப் பார்த்தால், அதனை வெற்றிடமாக நினைக்கலாம், ஆனால் அது வெற்றிடமல்ல. உங்களுடைய கண்களில் குறைபாடு உள்ளது. வானில் எண்ணற்ற கிரகங்களும் நட்சத்திரங்களும் உள்ளன, உங்களுடைய கண்கள் அவ்விஷயத்தில் குருடாக உள்ளன. உங்களால் இந்த நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பார்க்க முடிவதில்லை என்பதால், அவை இல்லை என்று ஆகிவிடுமா?

பக்தர்:– சில விஷயங்கள் தங்களுக்கும் தெரியாது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கின்றனர். ஆயினும், தங்களுடைய கண்களால் கடவுளை ஏன் பார்க்க முடியாது என்பதற்கான உங்களுடைய விளக்கத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: ஏன் ஏற்றுக்கொள்வதில்லை?

பக்தர்:–ஏனெனில், நீங்கள் கூறுவது தவறாக இருக்கலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: அஃது அவர்களுடைய துரதிர்ஷ்டம். நம்முடைய ஸ்தூல புலன்களால் கடவுளை அணுக முடியாது. அவரைத் தெரிந்துகொள்வதற்கு, நாம் அதிகாரியிடமிருந்து கேட்க வேண்டும். இதுவே உயர்ந்த அறிவைப் பெறுவதற்கான வழிமுறையாகும்.

பக்தர்:– ஆனால் அந்த வழிமுறைக்கு நம்பிக்கை அவசியமாகிறது. குருவின் மீதான நம்பிக்கையும் தேவையே.

ஸ்ரீல பிரபுபாதர்: இதனை நம்பிக்கை என்று கூற வேண்டிய அவசியமில்லை, பொது அறிவு என்று கூறலாம். நீங்கள் மருந்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினால், அறிவு வாய்ந்த மருத்துவரிடம் சென்று அதனை அறிந்துகொள்ள வேண்டும், நீங்களே கற்றுக்கொள்ளுதல் என்பது சாத்தியமல்ல.

பக்தர்:– ஸ்ரீல பிரபுபாதரே, நீங்கள் கூறியதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகப் புலப்படுகின்றது. நீங்கள் கூறக்கூடிய கருத்துகளை நாங்கள் ஆதரிக்கலாம், நாஸ்திக விஞ்ஞானிகளின் கருத்துகளை அவர்கள் ஆதரிக்கலாம். ஆனால் சமுதாயம் அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளதே. அவர்களே சமுதாயத்தைக் கட்டுப்படுத்துபவர்களாக உள்ளார்களே.

ஸ்ரீல பிரபுபாதர்: கட்டுப்படுத்துகிறார்களா! (சிரிக்கிறார்) கிருஷ்ணருடைய பௌதிக சக்தியான மாயை ஓர் உதைவிட்டால் போதும், அவர்களுடைய எல்லா கட்டுப்பாடுகளும் நிமிடத்தில் முடிந்துவிடும். அவர்கள் மாயையினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர், ஆனால் தங்களை சுதந்திரமானவர்கள் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். இஃது அவர்களது முட்டாள்தனம்.

 

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment