இறைவனைக் காணுதல்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்

மெல்போன், ஆஸ்திரேலியா–ஜுன் 29, 1974

இறைவனைக் காணுதல்

ஒரு பத்திரிகை நிருபருடன் நடந்த கீழ்காணும் உரையாடலில் கடவுள் என்பவர் எந்தவொரு மதத்தையும் சார்ந்தவரல்ல என்றும் அவரைக் காண்பது எவ்வாறு என்றும் ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: மதம் என்றால் இறைவனது சட்டதிட்டங்களுக்கு கீழ்படிந்து நடத்தல், அவ்வளவே. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் என்று அஃது இருக்க முடியாது. ஒரு நாட்டின் சட்டத்தை எடுத்துக் கொள்வோம். நாட்டில் பலதரப்பட்ட குடிமக்கள் உள்ளனர், ஆனால் சட்ட மானது, கிருஸ்தவர்களுக்கு யூதர்களுக்கு கருப்பு மனிதர்களுக்கு வெள்ளை மனிதர்களுக்கு என்று பிரிக்கப்படுவதில்லை. சட்ட விதிகள் அனைவருக்கும் ஒன்றே. இது கருப்பன் சட்டம்  இது வெள்ளையன் சட்டம் என்று நீங்கள் கூற முடியாது. அவ்வாறு இருக்க முடியாது. அது விஞ்ஞானப் பூர்வமானதுமன்று. விஞ்ஞானரீதியாக புரிந்துகொள்வது என்றால், கடவுள் இருக்கின்றார், நாம் அனைவரும் அவரது சட்டத்தின் கீழ் உள்ளோம், அவர் மிகப்பெரியவர், நாம் அனைவரும் அவருக்குக் கீழ்படிந்தவர்கள், அவரது கட்டளையை நாம் மதித்து நடக்க வேண்டும். அதுவே உண்மையான மதம், நான் கூறுவது சரியா, தவறா?

பத்திரிகை நிருபர்: சரியே.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆகையால், நீங்கள் கிருஸ்தவ மதம் இந்து மதம் முஸ்லிம் மதம் என்று கூற முடியாது. மதம் என்றால் மதமே. கடவுள் கிருஸ்தவரோ இந்துவோ முஸ்லிமோ அல்ல, கடவுள் என்பவர் கடவுளே. கடவுள் ஒருவரே. ஆனால் நாம் அவரை வெவ்வேறு கோணத்திலிருந்து புரிந்துகொள்கிறோம். வெவ்வேறு கோணத்திலிருந்து காணும் அத்தகைய பார்வையை, கிறிஸ்தவர்களின் பார்வை இந்துக்களின் பார்வை யூதர்களின் பார்வை அல்லது முகம்மதியர்களின் பார்வை என்று கூறலாம். ஆனால் அது வெறும் பார்வையே. சூரியனை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோம். இங்கே, ஆஸ்திரேலியாவில் ஜுன் ஒரு குளுமையான மாதம், அதனால் நாம் சூரியனின் வெப்பத்தன்மையை அவ்வளவு அதிகமாக காண்பதில்லை. ஆனால் நீங்கள் ஆப்பிரிக்க நண்பனை அழைத்து சூரியன் வெப்பமாக உள்ளதா என்று கேட்டால் அதற்கு அவன், ஆம், மிகவும் வெப்பமாக உள்ளது. என்று கூறுவான். ஆகவே, சூரியனை அவன் மதிப்பிடும் விதமும் இங்கிருந்து நீங்கள் மதிப்பிடும் விதமும் வேறுபடுகின்றது. ஆனால், உண்மையில் சூரியன் என்பது ஒன்றுதான், ஆஸ்திரேலிய சூரியன் ஆப்பிரிக்க சூரியன் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. அதே போல இந்து மதம் முஸ்லிம் மதம் கிறிஸ்தவ மதம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த எண்ணங்கள் எல்லாம் நமது சிக்கலான மனதிலிருந்து வந்தவையே, கடவுள் என்பவர் ஒருவர் என்பது போலவே, மதமும் ஒன்றே. நீங்கள் முதலில் கடவுள் என்றால் என்ன என்பதை அறிய வேண்டும். மேலும் அவரது கட்டளை என்னவென்று அறிந்திருக்க வேண்டும். அதற்கு நீங்கள் கீழ்படிந்து நடக்க வேண்டும்.

பத்திரிகை நிருபர்: நீங்கள் கூறுவதுபடி பார்த்தால், அவரவர்கள் தமது கருத்துக்களை உருவாக்கிக் கொண்டு முகமதியர் யூதர் இந்து கிருஸ்தவர் என்று பற்றிக் கொண்டுள்ளனரே தவிர, உண்மையில் மக்கள் கடவுளை உணரவில்லை. ஆயினும், மனித வாழ்வின் மிக முக்கியமான நோக்கம் கடவுளை உணர்வதே, சரியா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், அஃது ஒன்றே மனித வாழ்வின் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதைத் தவிர நாம் எதைச் செய்தாலும் அது மிருகத் தனமே. நாய் எவ்வாறு குதிக்கின்றதோ நாமும் அவ்வாறு வெறுமனே குதித்துக் கொண்டிருக்கிறோம், அவ்வளவே.

நாம் கடவுளை உணரவில்லை யெனில், நமது வாழ்விற்கும் நாயின் வாழ்விற்கும் என்ன வித்தியாசம்? நான் கொழுத்த வேட்டை நாய் என்று ஒரு நாய் நினைக்கின்றது, நான் மிகப் பணக்கார டச்சுக்காரன் என்று ஒரு மனிதன் நினைக்கிறான். ஆகவே, நாயிற்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?

பத்திரிகை நிருபர்: நீங்கள் கடவுளை உணர்ந்து விட்டீரா?

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களின் அபிப்பிராயம் என்ன?

பத்திரிகை நிருபர்: என்னால் கூற முடியவில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், நான் ஆம் என்று கூறினால், உங்களுக்கு என்ன புரியும்? நீங்களே கைத்தேர்ந்தவராக இல்லாதபோது, ஆம், நான் கடவுளை உணர்ந்துவிட்டேன் என்று நான் கூறினாலும், அதை எப்படி நீங்கள் உண்மையென ஏற்பீர்? கடவுள் உணர்வு என்றால் என்ன என்பதையே நீங்கள் அறியாதபோது இத்தகைய கேள்வியை எப்படி உங்களால் கேட்க முடிந்தது?

பத்திரிக்கை நிருபர்: நல்லது, கடவுள் உணர்வு என்றால் என்ன?

ஸ்ரீல பிரபுபாதர்: முதலில் இந்த கருத்தை உணர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உதாரணத்திற்கு, மருத்துவத் துறையைச் சார்ந்த ஒருவன் மற்றொருவனைப் பார்த்து, நீங்கள் மருத்துவத் துறையைச் சார்ந்தவரா என்று கேட்டு, அதற்கு அவன் ஆம் என்று கூறினால், அதன் பின்னர் அவர்களுக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் தொழில்நுட்ப வார்த்தைகளிலிருந்து, இரண்டாமவன் உண்மையிலேயே மருத்துவத்துறையைச் சார்ந்தவனா இல்லையா என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஒருவன் தானே மருத்துவத் துறையைச் சார்ந்தவனாக இல்லாதபோது, நீ மருத்துவத் துறையைச் சார்ந்தவனா என்று மற்றொருவனை கேட்பதில் என்ன பிரயோஜனம்?

ஆகையால் நான் கூறும் பதிலை ஏற்பதற்கு நீங்கள் தயாராக இல்லாவிடில், எனது கடவுள் உணர்வினை பற்றி கேட்பதில் பயனில்லை. எனது பதிலை ஏற்கத் தயாரா?

பத்திரிகை நிருபர்: சரி.

ஸ்ரீல பிரபுபாதர்: மிகவும் நல்லது. நான் கடவுளை உணர்ந்தவன். நான் கடவுளை ஒவ்வொரு கணமும் காண்கிறேன்.

பத்திரிக்கை நிருபர்: கடவுளை உணர்வதற்கு தியானத்தை ஒரு வழிமுறையாகக் காண்கிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். தியானமும் ஒரு வழிமுறையே. ஆனால் தற்போது உம்மால் தியானிக்க முடியாது; ஏனெனில், உமக்கு கடவுள் என்றால் என்ன என்பதே தெரியாது. தியானம் என்றால் ஏதேனும் ஒன்றில் மனதை லயித்திருப்பது அல்லது எவரேனும் ஒருவரை தியானிப்பது. ஆனால் கடவுள் யார் என்று நீ தெரிந்து கொள்ளாமல், யார் மீது நீ தியானம் செய்வாய்?

முதலில், நீங்கள் கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, எங்களுக்கு கடவுள் கிருஷ்ணரை தெரியும், பகவத்கீதையில், மன்மனா பவ மத் பக்த; எப்போதும் என்னையே நினைத்து கொண்டிரு என்று கிருஷ்ணர் கூறுகிறார். ஆகையால் நாங்கள் கிருஷ்ணர் மீது தியானம் செய்கிறோம். அதுவே பக்குவமான தியானம்–ஏனென்றால் தியானம் என்றால் கடவுளைப் பற்றி நினைப்பது. ஆனால் கடவுளைப் பற்றி உனக்குத் தெரியவில்லையெனில், எவ்வாறு அவரை பற்றி நினைப்பாய்?

பத்திரிகை நிருபர்: பல்வேறு வேத புத்தகங்களில் கடவுள் என்பவர் ஒளியாக எழுதப்பட்டுள்ளாரே!

ஸ்ரீல பிரபுபாதர்: கடவுளே எல்லாம். இருள் கூட கடவுளே. கடவுளைப் பற்றிய வர்ணனை ஸ்ரீமத் பாகவதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது, இருப்பவை  எல்லாம் எவரிடமிருந்து தோன்றியதோ அவரே கடவுள் ஒளி இருப்பது போல இருளும் இருக்கின்றது. ஆகவே கடவுளிடமிருந்து ஒளி எவ்வாறு தோன்றுகிறதோ, அவ்வாறே இருளும் அவரிடமிருந்துதான் தோன்றுகிறது.

பத்திரிகை நிருபர்: தியானம் என்பது உமக்குள்ளே கடவுளைப் பார்ப்பதற்கான வழிமுறையா ?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், அதுவே தியானத்திற்கு தகுந்த வர்ணனை. தியானாவஸ்தித-தத்-கதேன-மனஸா பஷ்யந்தி யம் யோகின:, மனதைக் கடவுளின் மீது ஒருமுகப்படுத்துவதன் மூலம் யோகிகள் அவரை தங்களது இதயத்தில் காண முயற்சிக்கின்றனர்.

ஆனால், கடவுளை இறுதியில் காண்பதற்கு, முதலில் அவர் யார் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, எமது இயக்கத்திலுள்ள மாணவர்கள், கடவுள் யார், கடவுளின் குணநலன்கள் யாவை என்பதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்கின்றனர். அதன் மூலம் அவர்கள் கடவுளை நினைக்க முடியும். ஆனால் கடவுளைப் பற்றிய எந்தவொரு கருத்தும் உம்மிடம் இல்லையெனில், நீங்கள் எவ்வாறு அவரைப் பற்றி நினைக்க முடியும்?

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives