புலனின்பமும் மனித வாழ்க்கையும்

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

ஸ்ரீ-பிரஹ்லாத உவாச
மதிர் ந க்ருஷ்ணே பரத: ஸ்வதோ வா
மிதோ ’பிபத்யேத க்ருஹ-வ்ரதானாம்
அதான்த-கோபிர் விஷதாம் தமிஸ்ரம்
புன: புனஷ் சர்வித சர்வணானாம்

“பிரகலாத மஹாராஜர் கூறினார்: பௌதிக வாழ்வின்மீது மிகவும் பற்றுதல் கொண்டுள்ள நபர்கள் தங்களுடைய கட்டுப்பாடற்ற புலன்களின் காரணத்தினால், நரக சூழ்நிலையை நோக்கி முன்னேறுகின்றனர். ஏற்கனவே மென்றதை மீண்டும்மீண்டும் மென்று வருகின்றனர். கிருஷ்ணரை நோக்கிய அவர்களுடைய அறிவானது ஒருபோதும் மற்றோர்களுடைய உபதேசங்களினால் எழுச்சி பெறாது, அவர்களின் சொந்த முயற்சியினாலும் எழுச்சி பெறுவதில்லை, அல்லது அவை இரண்டின் கலவையினாலும் எழுச்சி பெறுவதில்லை.” (ஸ்ரீமத் பாகவதம் 7.5.30)

மக்கள் கிருஷ்ண உணர்வை ஏற்காதது ஏன்?

நாங்கள் கிருஷ்ண உணர்வைப் பரப்புவதற்கு முயற்சி செய்து கொண்டுள்ளோம். ஆனால் மக்கள் பௌதிக இன்பத்தில் மிகவும் மயங்கியிருக்கும் காரணத்தினால், இது மிகவும் கடினமான செயலாக உள்ளது. நமது கிருஷ்ண உணர்வினைப் புதுப்பிப்பதே மனித வாழ்வின் இறுதிக் குறிக்கோள் என்றபோதிலும், இவர்கள் பொதுவாக இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினை விரும்புவதில்லை. கிருஷ்ணரே கடவுள், இதுவே வேத சாஸ்திரங்களின் வாக்கியம்: க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம். கடவுளைத் தேடிய பின்னர், கடவுள் யார் என்பதில் மாபெரும் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பின்னர், எல்லா ஆச்சாரியர்களும் கிருஷ்ணரே கடவுள் என்று முடிவு செய்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, கலி யுகத்தின் தற்போதைய தருணத்தில், பெரும்பாலான மக்கள் கடவுள் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதில்லை. ஏன்? இது பகவான் கிருஷ்ணரால் பகவத் கீதையில் (7.15) குறிப்பிடப்பட்டுள்ளது:

நமாம் துஷ்க்ருதினோ மூடா:ப்ரபத்யந்தே நராதமா:
மாயயாபஹ்ருத-க்ஞானாஆஸுரம் பாவம் ஆஷ்ரிதா:

துஷ்க்ருதின என்னும் சொல்லானது “எப்போதும் பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பவன்” என்று பொருள்படுகிறது. க்ருதி என்றால் “சிறப்புவாய்ந்த” அல்லது “மிகவும் புத்திசாலியான” என்று பொருள். ஆனால் துஷ்க்ருதி என்றால் “தனது தகுதிகளை பாவச் செயல்களுக்காக உபயோகிப்பவன்” என்று பொருள். இத்தகு பாவகரமான மக்கள் ஒருபோதும் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை. அவர்கள் தங்களுடைய அருமையான புத்தியினை வாழ்வினை பக்குவப்படுத்திக்கொள்வதற்காக உபயோகிக்க இயலும், ஆனால் அவ்வாறு செயல்படுவதற்குப் பதிலாக அவர்கள் பாவச் செயல்களில் ஈடுபடுகின்றனர். புலனுகர்ச்சிக்கான செயல்கள் பாவச் செயல்கள் ஆகும். ஒருவன் எப்போது புலனுகர்ச்சிக்கு அடிமையாகின்றானோ, அப்போது அவன் பாவகரமான முறையில் செயல்பட்டே ஆகவேண்டும்.

இந்த அடிமைத்தனத்தின் அறிகுறிகள் இந்த யுகத்தில் தெள்ளத்தெளிவாக எங்கும் காணப்படுகிறது. ஒவ்வொருவரும் புலனுகர்ச்சிக்காக கடினமாக உழைக்கின்றனர். புலனுகர்ச்சியின் வாழ்வினை ஏற்ற மாத்திரத்தில், நீங்கள் பாவச் செயல்களைச் செய்வது உறுதி. உலகெங்கிலும் எத்தனையோ இடங்களில் சாராயம் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் நீங்கள் ஆங்காங்கே விஸ்கி, பிராந்தி, சிகரெட்டுகள் போன்றவற்றிற்கான விளம்பரங்களைக் காணலாம். இவை மட்டுமின்றி உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான கசாப்புக் கூடங்களில் அப்பாவி மிருகங்கள் தேவையின்றி கொல்லப்பட்டு வருகின்றன.

உணவு தானியங்களை உற்பத்தி செய்யுங்கள்

மக்கள் எளிமையான முறையில் தானியங்களைக் கொண்டு மிகவும் அருமையாக வாழ இயலும். பகவத் கீதையில் (3.14) கிருஷ்ணர் கூறுகிறார், அன்னாத் பவந்தி பூதானி, “உணவு தானியங்களை உண்பதன் மூலமாகவே மனிதர்களும் மிருகங்களும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.” உங்களால் உணவு தானியங்களை மிகவும் எளிதில் வளர்க்க இயலும். மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்கள் மிருகங்களுக்கு கொடுப்பதற்காக உணவு தானியங்களை உற்பத்தி செய்கின்றனர். அதன் பின்னர் அந்த மிருகங்கள் மனிதர்களால் உண்ணப்படுகின்றன.
இந்த மொரீசியஸ் தீவில் உங்களுக்குத் தேவையான உணவு தானியங்களை வளர்ப்பதற்குரிய போதுமான நிலம் இங்கு இருப்பதை நான் காண்கிறேன். ஆனால் உணவு தானியங்களை வளர்ப்பதற்குப் பதிலாக, நீங்கள் கரும்பினை வளர்த்து ஏற்றுமதி செய்வதைக் காண்கிறேன். ஏன்? நீங்கள் அரிசி, பருப்பு, கோதுமை போன்ற உணவு தானியங்களைச் சார்ந்துள்ளீர்கள். ஆனால் போதுமான உணவினை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக பணத்தினை சேகரிப்பதற்கு நீங்கள் முயற்சி செய்வது ஏன்? முதலில் நீங்கள் உங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வளர்ப்பீராக. அதன் பின்னர் உங்களுக்கு நேரமிருந்தால், உங்களுடைய மக்களுக்கு போதுமான உணவு தானியம் இருக்குமானால், அப்போது நீங்கள் ஏற்றுமதிக்கான பொருட்களை உற்பத்தி செய்வதற்கு முயற்சி செய்யலாம். நீங்கள் உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்துகொள்பவராக இருக்க வேண்டும் என்பதே முதல் தேவையாகும். அதுவே கடவுளின் ஏற்பாடாகும். உங்களுடைய நாட்டில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் உணவு தானியங்களை உற்பத்தி செய்வதற்குப் போதுமான வசதிகள் எங்கும் காணப்படுகிறது. நான் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளேன்–ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா–எல்லா இடங்களிலும் காலி இடங்கள் அதிகமாக இருப்பதை நான் காண்கிறேன், அவையனைத்தும் உணவு தானியங்களை உற்பத்தி செய்வதற்கு உபயோகிக்கப்படுமெனில், இப்போது இருப்பதைக் காட்டிலும் பத்து மடங்கு மக்களுக்கு உணவினை வழங்கவியலும்.

இங்கே பஞ்சம் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த படைப்பானது பகவான் கிருஷ்ணரால் உருவாக்கப்பட்டது, இங்கிருக்கும் அனைத்தும் பூரணமானதாகும். ஈஷோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது பூர்ணம் அத பூர்ணம் இதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே, “முழுமுதற் கடவுள் பூரணமானவர், இதனால் அவருடைய படைப்பும் பூரணமானதாகும்.” ஒவ்வொருவரும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்குரிய பூரணமான ஏற்பாட்டினை கிருஷ்ணர் ஏற்படுத்தியுள்ளார், ஆனால் நீங்கள் உணவு தானியங்களை உற்பத்தி செய்யாவிடில், தேவையின்றி மனி­­­­­தர்களை பஞ்சத்தில் வைக்கின்றீர்கள், இது பாவகரமானதாகும்.

இங்கே பஞ்சம் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த படைப்பானது பகவான் கிருஷ்ணரால் உருவாக்கப்பட்டது, இங்கிருக்கும் அனைத்தும் பூரணமானதாகும். ஈஷோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது பூர்ணம் அத பூர்ணம் இதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே, முழுமுதற் கடவுள் பூரணமானவர், இதனால் அவருடைய படைப்பும் பூரணமானதாகும்.” ஒவ்வொருவரும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்குரிய பூரணமான ஏற்பாட்டினை கிருஷ்ணர் ஏற்படுத்தியுள்ளார், ஆனால் நீங்கள் உணவு தானியங்களை உற்பத்தி செய்யாவிடில், தேவையின்றி மனிதர்களை பஞ்சத்தில் வைக்கின்றீர்கள், இது பாவகரமானதாகும்.

மென்றதையே மெல்லுதல்

வேத சாஸ்திரங்களில் இருக்கக்கூடிய ஒவ்வோர் உபதேசங்களும் நாம் எவ்வாறு கிருஷ்ண உணர்வில் முன்னேற்றமடைந்து நமது வாழ்க்கையை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக பக்குவமான வாழ்க்கை என்றால் என்ன என்பதை நாம் அறியாமல் உள்ளோம். எனவே, பிரகலாத மஹாராஜர் இங்கே கூறுகிறார், புன: புனஷ் சர்வித சர்வணானாம், “புலனின்பத்தின் பின்னால் இருக்கக்கூடிய இந்த முட்டாள்களும் அயோக்கியர்களும் வெறுமனே மென்றதையே மென்று கொண்டுள்ளனர்.” எனவே, நம்முடைய வாழ்க்கையைப் பக்குவப்படுத்துவது என்றால், மென்றதையே மெல்லக்கூடிய இந்தத் தொழிலை நிறுத்துவது என்று பொருள்படுகிறது.

நாம் தற்போது மனிதப் பிறவியை அடைந்துள்ளோம், நம்முடைய புண்ணியச் செயல்களின் மூலமாக நாம் உயர்ந்த லோகங்களுக்கு ஏற்றம் பெற முடியும். ஆனால் நாம் அங்கு என்ன இலாபத்தை அடையப் போகிறோம்? இங்கு இருப்பதைக் காட்டிலும் உயர்ந்த தளத்தில் புலனுகர்ச்சியை அடைவோம், அவ்வளவுதான். உதாரணமாக, பாலுறவு இன்பம் என்பது நாய்கள் மற்றும் பூனைகளின் சமுதாயத்திலும் காணப்படுகிறது, அது மனித சமுதாயத்திலும் காணப்படுகிறது, ஸ்வர்க லோகங்களிலும் காணப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் சற்று வேறுபடலாம். ஆனால் பாலுறவு இன்பம் என்பது–நீங்கள் நாயாக, மனிதனாக அல்லது தேவராக எந்த ரூபத்தில் அனுபவித்தாலும்–அந்த இன்பம் ஒன்றுதான். பாலுறவின் இன்பம் வேறுபடப் போவதில்லை; அது ஒன்றுதான்.

இந்த பௌதிக உலகில் நாம் நம்முடைய உடலை மாற்றிக்கொண்டிருக்கிறோம், பலதரப்பட்ட புலனின்பங்களை அனுபவித்து வருகிறோம். இது புன: புனஷ் சர்வித சர்வணானாம், மென்றதையே மெல்லுதல் என்று விளக்கப்படுகிறது. நாம் நம்முடைய முந்தைய பிறவியில் புலனுகர்ச்சியை சுவைத்துள்ளோம், இந்த பிறவியிலும் மீண்டும் அதனையே சுவைப்பதற்கு முயற்சி செய்கிறோம். மற்றொரு பௌதிக உடலை ஏற்றல் என்றால் மென்றதையே மெல்லக்கூடிய சூழ்நிலையில் மீண்டும் நாம் வைக்கப்படுவோம். மனித உடல், மிருக உடல் அல்லது தேவர்களின் உடல் என எந்த உடலை நாம் பெற்றாலும், தொழில் ஒன்றுதான், ஆஹார நித்ர பய மைத்துனம் ச— உண்ணுதல், உறங்குதல், பாதுகாத்தல், பாலுறவு. ஸ்வர்க லோகங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று நினைக்க வேண்டாம். தேவேந்திரன் பல்வேறு அசுரர்களினால் தொந்திரவுக்கு உட்படுத்தப்படுவதையும் அங்கும் போர்கள் நிகழ்வதையும் நாம் ஸ்ரீமத் பாகவதத்தில் காண்கிறோம்.

  மக்கள் உணவு தானியங்களின் உற்பத்தியில் ஈடுபட்டால், இந்த பூமியினால் பத்து மடங்கு மக்களுக்கு உணவளிக்க முடியும்.

புலனின்பம் வேண்டாம்

எனவே, நம்முடைய வாழ்க்கையானது புலனுகர்ச்சியினால் நாசமாக்கப்பட்டு வருகிறது, இதனை கிருஷ்ண உணர்வினால் மட்டுமே நிறுத்த முடியும். ஆனால் பிரகலாத மஹாராஜர் இங்கே கூறுகிறார், “க்ருஹ-வ்ரதானாம் என்ற நிலையில் இருப்பவர்களால் கிருஷ்ண உணர்வினை அடைய முடியாது.” க்ருஹ-வ்ரதானாம் என்றால் “குடும்ப வாழ்க்கை அல்லது புலனுகர்ச்சியின் வாழ்வில் அதிகமான ஆர்வம் கொண்டிருப்பவர்கள்” என்று பொருள். அவர்களுக்கு கிருஷ்ண உணர்வினை அடைவது மிகவும் கடினமானதாகும்.

பிரகலாதர் தன்னுடைய தந்தையான ஹிரண்யகசிபுவிடம் இதனைக் பேசிக் கொண்டுள்ளார். பிரகலாதர் ஒரு பக்தர், ஆனால் அவருடைய தந்தையோ பணத்திலும் பெண்ணிலும் ஆர்வம் கொண்டிருந்த பௌதிகவாதியாவார். எனவே, ஹிரண்யகசிபு தனது மகனிடம் சவால் விடுத்தான்: “நீ இந்த கிருஷ்ண உணர்வை எங்கிருந்து கற்றுக் கொண்டாய்?” பிரகலாதர் எளிமையான முறையில் பதிலளித்தார்: மதிர் ந கிருஷ்ணே பரத: ஸ்வதோ வா மிதோ ’பிபத்யேத க்ருஹ-வ்ரதானாம், “பௌதிகமயமான வாழ்விற்கு அடிமையாக இருப்பவர்களால், மற்றவர்களிடமிருந்து கேட்பதினாலோ தங்களுடைய சொந்த கற்பனையினாலோ மாபெரும் மாநாடுகளில் கலந்து கொள்வதாலோ கிருஷ்ண உணர்வின் அறிவைப் பெற இயலாது.” மேலும், பகவத் கீதையில் (2.44) கிருஷ்ணர் கூறுகிறார்,

போகைஷ்வர்ய ப்ரஸக்தானாம்தயாபஹ்ருத சேதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்திஸமாதௌ ந விதீயதே

“பௌதிகமயமான வாழ்க்கை முறையில் மிகவும் பற்றுடையவர்களால் கிருஷ்ண உணர்வில் உறுதியை பெற இயலாது.”
பௌதிகமயமான வாழ்க்கை என்றால் புலனுகர்ச்சி என்று பொருள். ஆன்மீக வாழ்விற்கும் பௌதிக வாழ்விற்கும் என்ன வேறுபாடு? அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சார்ந்த இந்த இளைஞர்கள் ஆன்மீக வாழ்வை ஏற்றுள்ளனர், இவர்கள் புலனுகர்ச்சியின் வழிமுறையினை நிறுத்திவிட்டனர் என்பதே இதன் பொருளாகும். தகாத பாலுறவு, மாமிசம் உண்ணுதல், சூதாட்டம், போதை வஸ்துக்கள்–இதுவே பௌதிக மயமான வாழ்க்கையாகும். ஆன்மீக வாழ்வைப் பயிற்சி செய்பவர்கள் இந்த பாவகரமான பயிற்சிகளை கட்டாயம் விட்டொழிக்க வேண்டும்.

நாம் பௌதிகமயமான வாழ்வினை தொடர்வோ மெனில், அப்போது கிருஷ்ண உணர்வினைப் புரிந்துகொள்வது நமக்கு மிகமிக சிரமமானதாக இருக்கும். ஏன்? ஏனெனில், பிரகலாதர் இங்கே கூறுவதுபோல, பௌதிகவாதியின் புலன்கள் கட்டுப்பாடற்றவை. இன்று காலை நாங்கள் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, அங்கே பற்பல விஷயங்களை பார்த்தோம்–கோகோ கோலா பாட்டில்கள், சிகரெட் பெட்டிகள் மற்றும் இதர பல விஷயங்களைக் கண்டோம். கோகோ கோலாவுக்கு என்ன தேவை இருக்கிறது? எங்களுடைய சமுதாயத்தில் நீங்கள் இதுபோன்ற விஷயங்களைக் காண இயலாது. நாங்கள் கோகோ கோலா குடிப்பதில்லை, பெப்சியும் குடிப்பதில்லை. நாங்கள் சிகரெட்டுகள் பிடிப்பதுமில்லை. பல்வேறு பொருட்கள் சந்தையில் பெருமளவில் விற்கப்படுகின்றன; ஏனெனில், அப்பாவி வாடிக்கையாளர்களை விளம்பரங்கள் சூறையாடுகின்றன. இவ்வெல்லா பொருட்களும் அவசியமற்றவை. ஆனால் மக்களால் தங்களுடைய புலன்களைக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால், உற்பத்தியாளர்கள் இவ்வெல்லா தேவையற்ற பொருட்களையும் உற்பத்தி செய்து பெரிய தொழிலை நடத்துகின்றனர்.

எனவே, நீங்கள் உண்மையான ஆன்மீக வாழ்க்கையை விரும்புவீர்களேயானால், பௌதிக பந்தத்திலிருந்து உண்மையிலேயே விடுதலை பெற விரும்புவீர்களேயானால், புலன்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதுவே மனிதப் பிறவியின் நோக்கமாகும். மனித வாழ்க்கையானது பூனைகள், நாய்கள் மற்றும் பன்றிகளை நகல் செய்வதற்கானது அல்ல.

 புலனின்பத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கிருஷ்ண உணர்வு எழுச்சி பெறாது என்று பிரகலாதர் ஹிரண்யகசிபுவிடம் தெரிவித்தல்.

கட்டுப்பாடற்ற புலனின்பம்

இன்று காலை ஒரு பத்திரிகை நிருபர் எங்களைச் சந்திக்க வந்தார். கிருஷ்ண பக்தி இயக்கத்தைப் பற்றிய சில தகவல்களை பெறுவதற்காக அவர் வந்திருந்தார். மனிதர்களை பூனை மற்றும் நாயினுடைய வாழ்க்கைத் தரத்திலிருந்து மனிதனின் தளத்திற்குக் கொண்டு வருவதற்காக நாங்கள் கிருஷ்ண உணர்வினைப் பரப்பி வருகிறோம் என்பது எங்களுடைய முதல் கருத்தாகும். பூனைகள் மற்றும் நாயின் வாழ்க்கை என்றால் அதாந்த கோபி, கட்டுப்பாடற்ற புலன்களின் வாழ்க்கை என்று பொருள். ஒரு பெண் நாயானது டஜன் கணக்கிலுள்ள ஆண் நாய்களால் சூழப்பட்டுள்ளது. ஏன்? அதாந்த கோபி, அவற்றினால் தங்களுடைய புலன்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. தெருவிலேயே அவை பாலுறவில் ஈடுபடுகின்றன.

எனவே, மனித வாழ்க்கை என்பது புலன்களைக் கட்டுப்படுத்துவதற்கானதாகும். அதுவே மனித வாழ்க்கை. ஆனால் நீங்கள் பூனைகள் மற்றும் நாய்களைப் போன்று இருப்பீர்களேயானால், அதாவது புலன்களைக் கட்டுப்படுத்தாமல் இருப்பீர்களேயானால், அப்போது உங்களுக்கும் நாய்களுக்கும் என்ன வேறுபாடு? எந்த வேறுபாடும் இல்லை. உண்மையில் இக்கருத்தானது இங்கே ஏற்கப்படுகிறது. பெயரளவிலிருக்கும் நவீன கால நாகரிகமானது புலன்களை முடிந்தவரை அனுபவிப்பதற்கு நாம் அனுமதிக்க வேண்டும் என்று கூறுகின்றது. இதுதான் இவர்களுடைய நாகரிக முன்னேற்றம்.

அப்பாவி மிருகங்களை கொன்று உண்பவர்கள் நரக வாழ்வினுள் செல்ல வேண்டும்.

மாமிச உணவு வேண்டாம்

இந்த நாகரிகத்திற்கான பக்குவமான உதாரணம்–மாமிச உணவு. தானியங்களை உண்பதன் மூலமாக நாம் மிகவும் மகிழ்ச்சியாக வாழ முடியும், எப்படி இருந்தாலும் நாம் தானியங்களை உற்பத்தி செய்துதான் ஆக வேண்டும்–நமக்காகவும் இருக்கலாம், மிருகங்களுக்காகவும் இருக்கலாம். தானியங்களை உற்பத்தி செய்யாமல், உங்களால் மாமிசத்தைக்கூட உண்ண இயலாது; ஏனெனில், மிருகங்கள் உயிர் வாழ்வதற்கும் தானியங்கள் தேவைப்படுகின்றன. எனவே, நீங்கள் எப்படி இருந்தாலும் தானியங்களை உற்பத்தி செய்துதான் ஆக வேண்டும். ஆனால் உங்களுடைய புலன்கள் கட்டுப்பாடின்றி இருப்பதால், நீங்கள் தானியங்களை உண்பதற்குப் பதிலாக மிருகங்களை உண்கிறீர்கள். “நான் கொலை செய்து உண்ணக்கூடிய இந்த மிருகங்கள் தானியங்களை உண்டு உயிர் வாழ்கின்றன, என்னாலும் தானியங்களை உண்டு வாழ இயலும். அவ்வாறு இருக்கையில் நான் ஏன் மற்றொரு உயிர்வாழியை கொலை செய்யக்கூடிய பாவகரமான செயலைச் செய்ய வேண்டும்?” இக்கேள்வியினை நீங்கள் கேட்பதில்லை. துரதிர்ஷ்டவசமாக, பாவங்களில் மூழ்கியிருக்கும் நபர்கள் இதுபோன்று ஒருபோதும் நினைப்பதில்லை.

கடவுளின் சட்டப்படி, ஓர் எறும்பினைக் கொல்வதற்குக்கூட நீங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. உதாரணமாக, இங்கே ஒரு பயனற்ற மனிதன் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதாக எடுத்துக் கொள்வோம். இருப்பினும், உங்களால் அவனைக் கொல்ல முடியாது. அப்படி கொலை செய்தால் சட்டம் உங்களை தண்டிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கும். நீங்கள் தூக்கிலிடப்படுவீர்கள். “அந்த மனிதன் பயனற்றவனாக இருந்தான், அவனால் சமுதாயத்திற்கு எந்த பலனும் இருக்கவில்லை. இதனால் நான் அவனைக் கொன்றுவிட்டேன்,” என்று உங்களால் கூற இயலாது. நிச்சயமாகக் கூற இயலாது. மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்களின்படி, உங்களால் சக மனிதர்களை இவ்வாறு கொலை செய்ய இயலாது.

ஆனால் கடவுளால் இயற்றப்பட்ட சட்டங்களின்படி, நீங்கள் எந்த உயிர்வாழியைக் கொலை செய்தாலும், அதற்கு தண்டிக்கப்படுவீர்கள். உங்களுடைய கட்டுப்பாடற்ற புலன்களின் காரணத்தினால் நீங்கள் இதனை அறியாமல் இருக்கிறீர்கள். அப்பாவி மிருகங்களைக் கொலை செய்வதால் நரக வாழ்வின் இருண்ட பிரதேசத்தினுள் நீங்கள் செல்ல வேண்டும் என்பதை அறியாமல் இருக்கிறீர்கள் (விஸதாம் தமிஸ்ரம்).

மறுபிறவியின் துன்பத்தை அறிவோம்

எனவே, வாழ்க்கையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் கடவுளின் சட்டங்களைப் பற்றியும் மக்களுக்கு அறிவினைப் புகட்டுவதற்கு இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் முயற்சி செய்து வருகிறது. நாங்கள் எதையும் புதிதாக தயாரிப்பதில்லை. இவையனைத்தும் வேதங்களில் இருந்து பெறப்படுகின்றன. வேதங்கள் அறிவைப் பெறுவதற்கான நூல்களாகும் (வேதம் என்றால் “அறிவு” என்று பொருள்). நாம் தற்போது பாவச் செயல்களை தொடர்ந்து செய்து வருகிறோம், இவற்றிற்காக மறுபிறவியில் துன்பப்பட நேரிடும். நாம் அனைவரும் நிச்சயம் மரணமடைவோம். கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார், ந ஹன்யதே ஹன்யமானே சரீரே, “உடல் மடியும்போது ஆத்மா மடிவதில்லை.”

நாஸ்திகர்கள் நினைக்கின்றனர்: “உடல் அழியும்போது, அனைத்தும் முடிந்துவிடுகிறது.” ஆனால் இஃது உண்மையல்ல. நாம் வெறுமனே உடையைப் போன்ற இந்த உடலை மட்டுமே மாற்றுகின்றோம். ஆனால் ஆத்மாக்கள் என்ற முறையில், நான் நித்தியமானவன், நீங்கள் நித்தியமானவர்கள். நம்முடைய கட்டுப்பாடற்ற புலன்களின் காரணத்தினாலேயே நாம் பலதரப்பட்ட உடல்களினுள் நுழைகின்றோம். உதாரணமாக, நான் மனிதனாக என்னுடைய வாழ்வினை மிகவும் அருமையாக அனுபவித்து வருகிறேன். ஆனால் என்னுடைய மறுபிறவியில் நான் தெருவில் இருக்கும் ஒரு நாயாக மாறலாம், அப்போது என்னுடைய வாழ்க்கை எவ்வளவு துன்பகரமானதாக அமையும்! அல்லது நான் மிகவும் சக்திபெற்ற ஒரு மிருகமாக ஆகலாம்–ஒரு புலியாக அல்லது சிங்கமாக ஆகலாம்–அப்போதும்கூட வாழ்க்கை துன்பகரமானதாகவே இருக்கும். எப்போதும் துன்பகரமானதாகவே இருக்கும்.

எனவே, நாம் இந்த பௌதிக உலகில் இருக்கும்வரை, உடல்களை மாற்றுதல் என்பதும், வாழ்க்கை என்பதும் துன்பகரமானதாகவே இருக்கும். ஒவ்வோர் உடலும் வலியைக் கொடுக்கக்கூடியது, துன்பகரமானது. பகவான் ரிஷபதேவர் ஸ்ரீமத் பாகவதத்தில் (5.5.4) கூறுகிறார்:

நூனம் ப்ரமத்த: குருதே விகர்ம
யத் இந்த்ரிய பிரீதய ஆப்ருணோதி
ந ஸாது மன்யே யத ஆத்மனோ யம்
அஸன்ன் அபி க்லேஷத ஆஸ தேஹ

மக்கள் எல்லாவிதமான பாவ காரியங்களைச் செய்வதனால் பைத்தியமாகியுள்ளனர். அவர்கள் ஏன் அவ்வாறு செய்கின்றனர்? யத் இந்த்ரிய பிரீதய ஆப்ருணோதி, “வெறுமனே புலனுகர்ச்சிக்காக.” இங்கே உயர்ந்த நோக்கம் ஏதும் இருப்பதில்லை, புலனுகர்ச்சி மட்டுமே உள்ளது. அப்போது ரிஷபதேவர் கூறுகிறார், ஸாது மன்யே, “இது நல்லதாக எனக்குத் தோன்றவில்லை.” ஏன்? ஏனெனில், அவர்களுடைய பாவச் செயல்களின் காரணத்தினால், அவர்கள் ஏற்கனவே பௌதிக உடல் என்னும் துன்பகரமான கட்டுண்ட வாழ்வினை அனுபவித்து வருகின்றனர், அவர்கள் மேலும் தொடர்ந்து பாவ காரியங்களில் ஈடுபடுவார்களேயானால், நிச்சயம் அவர்கள் மீண்டும் ஓர் உடலைப் பெற்று தொடர்ந்து துன்பப்படுவார்கள். இதுவே ஞானமாகும். நாம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக துன்பமின்றி வாழ முயற்சி செய்து கொண்டுள்ளோம், அதுவே வாழ்க்கையின் குறிக்கோளாகும். நாம் அனைவரும் உயிர்வாழிகள், கிருஷ்ணரின் அம்சங்கள், அதன்படி நம்முடைய இயற்கை மகிழ்ச்சியாக ஆனந்தமயமாக இருப்பதேயாகும்

மறுபிறவியின் துன்பத்தை அறிவோம்மனித வாழ்வின் முக்கியத்துவம்

ஆனால் புலனுகர்ச்சிக்காக பாவ காரியங்களைச் செய்வது என்பது மகிழ்ச்சிக்கான பாதையல்ல. அது முறையான வழியல்ல. அதற்கான பாதை வேறுபட்டதாகும். அந்த பாதை கிருஷ்ண உணர்வாகும். எனவே, ஒவ்வொருவரும் கிருஷ்ண உணர்வின் வழிமுறையை ஏற்றுக்கொள்வதில் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும். இதனை நீங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளாமல், மற்றவர்களுக்கும் கற்றுத் தருவது அவசியமாகும். நீங்கள் கிருஷ்ண உணர்வினை உங்களுடைய சமுதாயம், உங்களுடைய நாடு, ஒட்டுமொத்த மனித சமுதாயம் என்று எங்கும் பரப்ப வேண்டும். கிருஷ்ண உணர்வினைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டும். தன்னுடைய வாழ்வினை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கிக்கொள்வதற்கும் நித்தியமான அறிவு நிறைந்த ஆனந்தமயமான வாழ்வினை அடைவதற்கும் அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். எனவே, இந்த கிருஷ்ண உணர்வானது மாபெரும் விஞ்ஞானமாகும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. எனவே, மக்கள் இருளில் உள்ளனர். நாம் மக்களை இருளில் வைத்துக் கொண்டு, முன்னேற்றமடைகிறோம் என்று விளம்பரப்படுத்து வோமேயானால், அஃது ஏமாற்றுவதே. மக்கள் வாழ்க்கையினுடைய மகத்துவத்தினை, வாழ்வின் விஞ்ஞானத்தினைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்–உயிர்வாழிகள் ஏன் பல்வேறு உடலை ஏற்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, நம்முடைய சுற்றுச்சூழலில் இருக்கக்கூடிய மரங்கள் ஓர் அங்குலம்கூட அசைவதில்லை. அத்தகைய வாழ்க்கை நல்ல வாழ்க்கையா? என்னை யாரேனும் ஐந்து நிமிடம் அசையாமல் நிற்கும்படி கேட்டுக் கொண்டால், அது மிகவும் சிரமமானதாக இருக்கும். இங்கே மரங்கள் நூற்றுக்கணக்கான வருடங்கள் அப்படியே நிற்கின்றன. எத்தகைய தண்டனை என்பதைப் பாருங்கள்!

முற்றத்தில் இருக்கக்கூடிய இந்த மரங்கள் துன்பகரமான நிலையில் ஏன் இருக்கின்றன என்பதற்கும் நான் ஏன் அறையில் சௌகரியமாக அமர்ந்துள்ளேன் என்பதையும் விளக்கக்கூடிய விஞ்ஞானம் எங்கே இருக்கிறது? பலதரப்பட்ட வாழ்க்கை நிலைகளை ஏற்பாடு செய்வது யார்? இந்த விஷயங்களை விஞ்ஞானிகளால் விளக்க இயலாது, இவையனைத்தும் பகவத் கீதையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. நீங்கள் கிருஷ்ண உணர்வினை எடுத்துக் கொண்டு பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தைப் படிப்பீர்களேயானால், பூரண ஞானத்தைப் பெறுவீர்கள், உங்களுடைய வாழ்க்கை பக்குவமடையும், வெற்றியடையும். எனவே, ஒவ்வொரு தந்தை, ஒவ்வொரு தலைவர், ஒவ்வொரு பாதுகாவலர், ஒவ்வொரு ஆன்மீக குரு என அனைவரும் தங்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கு கிருஷ்ண உணர்வைப் பற்றி கற்றுத்தர வேண்டும், அதன் மூலமாக பந்தப்பட்ட வாழ்விலிருந்து முக்தி பெற்று பௌதிக வாழ்வின் துன்பகரமான நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மிக்க நன்றி.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment